அழகிய சிற்றம்பலமுடையான் எழுதி அருளிய

உயிர் மலரும் தமிழ் வேதம்

திருவாசகம்

(மறைந்திருக்கும் பிரமஞான இரகசியம்)

           நூல் சிறப்பு

நேரிசை வெண்பா

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை

மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவா சகம்என்னும் தேன்

பொழிப்புரை : மனித வாழ்வில் பிறப்பினால் ஏற்படும் இன்னல்கள் மனித தேகத்தை எப்பொழுதும் வேலியில் படரும் கொடி போன்றே என்றும் சூழ்ந்தே காணப்படுகிறது.  இதன் காரணம் பிறவிப் பெரும்பாடு. அத்தகைய மனிதப் பிறப்பினால் ஏற்படும் விலங்காகிய தடைகளை நீக்கியும் துன்பங்களை ஒழித்தும் (அறுத்தும்) மனிதனுக்கு ஆனந்த வாழ்வை அருளிக் கொண்டிருக்கும் மீண்டும் பிறவாமல் இருப்பதற்கான பிரம ஞானத்தை (மருவா நெறி) அருளும் வாதவூரில் இருக்கக் கூடிய எம் தலைவன் வாசம் செய்யும் இடமாகிய மணிவாசலைப் பற்றிக் கூறும் ஆனந்த நூல்தான் இந்த மணிவாசகரால் பாடப்பட்ட திருவாசகம் என்னும் தேன்.

ஞான மெய்ப்பொருளுரை : மனிதனுக்குத் தொல்லைகளையும் தடைகளை யும் கொடுப்பது அவன் ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கும் இரும்பிறவிதான்.  பிறவி எதனால் ஏற்படுகிறது?  அவனின் எண்ணப் பதிவுகளால்.

எண்ணப் பதிவுகள் இருவகையாகும்.  ஒன்று நல்ல எண்ணங்களை சுமந்து கொண்டிருக்கும் நல்வினைப் பதிவுகள்.  மற்றொன்று தீய எண்ணங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் தீவினைப் பதிவுகள். பதிவுகள் என்றாலே அது சிந்தனைகள் மற்றும் எண்ணங்களின் உச்சம்தான்.

பதிந்தவைகள் தொடர்ந்து எண்ணங்களாக மலர்ந்து கொண்டே இருக்கும்.  எண்ணங்கள் மலர மலர புதுப்புது சிந்தனைகள் மனிதனுக்குள் பூத்துக் கொண்டே இருக்கும். பூப்பதை நிறுத்தாமல் யாக்கையின் பிறப்பை தடுக்கவே முடியாது.  மனிதன் தனக்குள் மலராமல் இருப்பதால்தான் அவன் இப்பிறவியிலாவது மலர்ந்து மணம் வீசிவிட வேண்டும் என்று ஒவ்வொரு பிறவியையும் எடுத்துக் கொண்டு, தனக்குள்ளே போராடிப் போராடி தன் வாழ்நாட்களை தொலைத்துக் கொண்டே இருக்கின்றான்.

இந்த மனித தேகம் சென்ம சென்மமாய் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் யாக்கைக்கு பழம்பொருள் என்ற பெயருண்டு. அந்த பழம்பொருளில் ஒரு உறுபொருள் இருக்கிறது.  அதுதான் சிவப்பழம்பொருள்.  இந்த சிவப்பழம்பொருளே மனிதனுக்கு ஞானத்தையும் பிரணவ தேகத்தையும் பிராண தேகத்தையும் ஞான தேகத்தையும் இறுதியாக ஒளி தேகத்தையும் வழங்கக் கூடியது.

அந்த சிவப்பொருள் பழமையாய் நம் தேகத்திற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காணும் வழியை – மார்க்கத்தை – தந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதுதான் பிரமஞானம்.

பிரமஞானச் செல்வங்களை அடைய வேண்டுமென்றால் அதற்கு அவன் அருளாலே அவன் தாள்களை வணங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வணங்குவதற்கு தடைகளாக இருக்கக் கூடியது, ஞானத்தை மறைத்துக் கொண்டிருக்கக் கூடிய மணிவாசலில் திரைகளாக மூடியிருக்கும் மும்மலங்களே.

மணி வாசல்தான் ஞான வாசல். ஞான வாசலில்தான் ஞான மணிக்கான இரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இறை வாசம் செய்யும் ஞான மணி வாசலை அகத்தில் நின்று பாடியதால், இந்நூல் மணிவாசகம் என்றும் திருவாசகம் என்றும் அழைக்கப்படலாயிற்று. கடவுள் கேட்க மனிதன் பாடியதுதான் இத் திருவாசகம் என்னும் தேன். மனிதன் தன்னை மறந்த கதைதான் இத்திருவாசகம்.  மலைத் தேன் உடலை வளர்க்கும் ; திருவாசகத் தேன் உயிரை வளர்க்கும்.

தனக்குள் தன்னைத் தேடி முத்தெடுக்கும் தன்னிரிகல்லா ஞானக் கல்விதான் திருவாசகம் என்னும் பிரம ஞானம்.

திருவாசகத்தை பத்தி நூலாகவோ தோத்திர நூலாகவோ பார்க்காமல் அதை ஞான நூலாகப் பார்த்து பயன் அடைய வேண்டும்.

            கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

             நற்றாள் தொழாஅர் எனின்”                                (திருக்குறள் – 02)

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

             தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

             தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

             தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே”      (தி.ம.2355)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

திருச்சிற்றம்பலம்