
மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழி அடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந்து அருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறைஉறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே.
(கோயில் திருப்பதிகம்-1)
குறைவிலா நிறைவும் கோதிலா அமுதும்
“யாரிடமும் எதையும் வேண்டாத பூரணப் பொருளே! குற்றமற்ற அமுதமே ! எல்லையிலா சோதிப் பிழம்பே ! வேதங்களுமாகி, வேதங்களில் அருளப்படும் பெரும்பொருளுமாகி எழுந்தருளி வந்து அடியேன் மனத்தில் இடம் கொண்ட அரசே ! அணையில்லாத வெள்ளம் போல என் மனச்சிந்தையில் வந்து பாய்கின்ற, அழகிய இருதயக் கமலமாம் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள பரமேசுவரனே ! எம் இறைவனே ! நீ அடியேனுடைய தேகத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு இடம் கொண்டாய் ! இனி யான் உன்னிடம் எதை வேண்டி யாசிக்கக் கூடும்? எதுவும் உம்மிடம் இனி கேட்கமாட்டேன்”. இதன் பாடல் இதோ.
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்துஎன்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபொறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே
இறைவனே நீஎன் உடலிடங் கொண்டாய்
இனிஉன்னை என் இரக்கேனே. (கோயில் திருப்பதிகம்-5)
இறைவனை இளமையிலேயே காதல் செய்க
மாணிக்கவாசகர் அந்த சிவனடியார்களிடம், “நீங்கள் உயிரோடு இருக்கும் இக்கணத்திலேயே இறைவனிடத்தில் காதல் செய்து உங்கள் உயிர் உடலைவிட்டு நீங்காதபடி பிழைத்துக் கொள்ளுங்கள். நினைத்தற்கு அரிய, உலகத்தை உண்ட திருமாலோடு, பிரமன், மற்றைய தேவர்களும் எளிதில் பெற இயலாத, நஞ்சத்தை அமுதாக உண்ட, பரவிந்து சொரூபனான பாண்டிப்பெருமானாகிய இறைவனை, அவன்தன் மெய்யடியார்களுக்கு, மூலபண்டாரமாகிய அவனது அருள் கருவூலத்தைத் திறந்து அள்ளி அள்ளி வழங்குகின்றான்; இந்த நினைத்தற்கரிய நல்லகாலம் கிடைத்திருக்கும் போதே அன்பு செய்து சரீரத்தை காலத்தோடு பிணைத்திடச் செய்து ஈடேறிவிடுங்கள். திருவடிகளைக் கொண்டு ஞானக் கர்மத்தைச் செய்யும் ஞானச் சாதகர்களுக்கு பரவிந்து சொரூபனான சிவன் உலக வாழ்விற்கும் ஞான வாழ்க்கைக்கும் வேண்டிய நிதியினை பிரணவக் குகையைத் திறந்து அளிக்கின்றான். விரைந்து வந்து முயலுங்கள்” என்று தாயுள்ளம் கொண்ட கருணையோடு சொன்னார் மாணிக்கவாசகர்.
காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின் கருது அரிய
ஞாலம் உண்டானொட நான்முகன் வானவர் நண் அரிய
ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான் தன் அடியவர்க்கு
மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே. (திருப்பாண்டிப் பதிகம்-5)
இறைவனிடம் அன்புகாட்டி வாழ்வதுதான் மனிதப்பிறவி எடுத்ததன் நோக்கமே. அதனால் இறைவனை ‘காதல் செய்து உய்ம்மின்’ என்றார். அதனை இளமையிலே தொடங்கினால் மட்டும்தான் போதிய காலம் கிடைக்கும் என்பதால், ‘காலம் உண்டாகவே’ என்றார். இளமையில் இறைச் சிந்தனை தேவையில்லை; இளமையில் பொருள் மட்டும் தேடிக் கொள்வோம்; ஓய்வு பெற்றபின் இறைப்பேற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் பலரும், முதுமையில் கண், காது முதலிய பொறி புலன்கள் ஆற்றலற்றுப் போய், பல்வகை நோயில் அவதியுற்று, பிறவிப்பயனாகிய இறைச் சிந்தை எழவொட்டாமல், படுக்கையில் கிடந்து துன்புறுவதை நாம் அனைவரும் கண்டுகொண்டுதான் வருகிறோம்.
எனவேதான் காலம் உள்ளபோதே, இளமையிலேயே, பொருள் சேர்க்கும்போதே, அருளையும் சேர்க்க வேண்டும் என்றெண்ணி இறைவனிடம் ‘காதல் செய்து உய்ம்மின்’ என்றார் மாணிக்கவாசகப் பெருமான். கொடியநஞ்சை உண்டு, நாம் வாழ அமுதம் வழங்கிய சிவபெருமானிடம் தாம் பெற்ற பிரமஞானப் பேரின்பத்தை நாமும் பெற வேண்டும் என்ற தாயுள்ளத்தினால், ‘மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே’ என்றார். மூலபண்டாரம் என்பது திருவருள் கருவூலமாகும். அதில் உள்ள நிதி, வீடுபேறுப் பேரின்பத்தை நமக்கு குறைவில்லாமல் வழங்கும் கற்பக விருட்சம் போன்றது. கிடைத்த காலத்தை வீணாக்காமல் அதை சிக்கெனப் பிரமஞானத் தவத்தைச் செய்து, இப்பிறவியிலேயே நாம் இறையருளாம் பிரமஞானத்தை இன்பத்தைப் பெற வேண்டும் என்பதே திருவாசகத்தின் நோக்கம்.
இறைவன் சொற்பதம் கடந்து நிற்பவனா?
திருவாசகம் என்பதற்கு தேவ நாதச் சொற்களால் மனித உயிர்களை மலர வைக்கும் தமிழின் வேத நூல் என்பார் எமது சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்கள். அழகிய, தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய பாடல் என்பார் தமிழ்க்கடலான மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள். எல்லையற்ற பெருங் கருணையாளனான பரம்பொருளாம் பரமேசுவரனை – சிவபெருமானை, மனித உயிர்கள் ஐம்புலன்கள்களாலும் மனதினாலும் மொழியினாலும் அறிந்து கொண்டுவிட இயலாது என்பது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் ஞானக் கூற்று. அப்படிப்பட்ட பரவிந்து சொரூபனான ஈசனாம் இறைவனை, திருவாசகத்தை ஊனும் என்பும் உருகும்படி மெய்யுணர்வு கொண்டு ஓதுவதால் உணரலாம்; அவனோடு புணர்ந்து இரண்டற கலந்திடவும் செய்யலாம். இறை உணர்வு பெறாத மனித உடலிலுள்ள ஊனக் கண்களைக் கொண்டு இறைவனைக் காண இயலாது ; அதனால் பிரமஞானத் தவத்தைச் செய்து மூன்றாம் கண்ணைப் பெற்று உயிர்க்கண்ணில் இருக்கும் சிவக்கண்களோடு ஒன்று கலந்திட வேண்டும் என்பதுதான் திருவாசகம் சொல்லும் ஞான மெய்ப்பொருள். அப்போது இறைவன் சொற்கள் காட்டும் பொருளைத் தாண்டி இருப்பான் ; கண் முதலான ஐம்பொறிகளால் காணவும் உள்ளத்தையும் உணர்வுகளையும் தாண்டியும் காணப்படுவான் என்பதைத்தான்,
சொற்பதம் கடந்த தொல்லோன்
கண் முதற் புலனால் காட்சியும் இல்லோன் ;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படான் (திருவாசகம் : 3:111-113)
என்றார் மாணிக்கவாசகர். பிரமஞானத் தவத்தினால் திருவடிகளில் இருக்கும் மும்மலக் குற்றங்களை எப்போது நாம் சுட்டெரிப்போமோ அப்போதுதான் நம் முகத்தில் மூன்றாம் திருவடியான நெற்றிக்கண்ணைப் பெறுவோம். அதன்பின் இறைவனை உணரவோ, காணவோ, சேரவோ நம்மால் முடியும். அதைவிடுத்து, உலக மாயா காரியங்களில் நாயினைப் போல பெரும்பற்று கொண்டு வீணே வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்தால் ‘இறைஉணர்வு’ என்னும் மாபெரும் ஆற்றலை மனித உடலில் வாழும் சாதாரண மனிதன் யாரும் பெறவே இயலாது.
எல்லையற்ற இறையின்பமாம் அமுதத்தைப் பெற்று, பின் பிரமஞானத் தவத்தால் அருட்கண்ணைப் பெற வேண்டும் என்ற மாணிக்கவாசகரின் வாழ்நாள் ஏக்கங்களை வெளிப்படுத்தும் தெய்வப் பாடல்களாக திருவாசகம் மலர்ந்தது. அவரின் ஞானக்கண்ணின் வழி அமுதமழை பொழிந்ததால் நமக்கு இத்திருவாசகம் கிடைக்கப் பெற்றது. தவத்தால் இறையருட் கண்ணைப் பெற முடியாத நம்மைப் போல் அறியாமையில் வாழ்பவர்களும் அருட்கண்ணைப் பெற வேண்டும் என்று மாணிக்கவாசகரால் அருளப்பட்டதே திருவாசகமாகும்.
உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே!
யான் உன்னை உரைக்குமாறு உணர்த்தே! (திருவாசகம் : 22-3)
திருவாசகத் தேனை சுவைக்க மொழி ஆளுமையும் பத்தியும் தமிழ் அறிவும் போதுமா? திருவாசகம் குறித்த பதவுரை, விளக்கவுரை, தெளிவுரை என்று பல அறிஞர்களின் நீண்ட விளக்க நூல்களைப் படித்த பின்னும் நம் அறியாமைகள் நம்மைவிட்டு நீங்கிவிட்டனவா? இப்பாடல்களால் நம் மனமும் என்பும் உருக மறுக்கின்றனவே, அது எதனால்? என்பதை நாம் என்றாவது ஆராய்ந்தும் சிந்தித்தும் பார்த்திருக்கிறோமா? இல்லையே. திருவாசகம் கற்பதற்கான நூல் அல்ல ; இறைவனை தன் உயிரில் ஒளியாகக் கண்டு நாமும் ஒளியாக மாற வேண்டும் என்பதற்கான தேவநாத வாசகம்.
திருவாசகம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், மொழியாலும் மதத்தாலும் சமயத்தாலும் ஆளுமை செய்யப்பட்டிருந்தாலும் நம்முடைய ஆன்மாவைத் தொட்டுவிட முடியாது ; எந்தவித அசுத்தமும் இல்லாத சுத்த நாதத்தால், தேவ ஒலிகளாலான தெய்வ வார்த்தைகளும் மெய்ப்பொருள் களும் திருவாசகத்தின் அடிநாதமாக விளங்குவதால், தேவ நாதங்களை திரும்பத் திரும்ப ஓதி வருவதால், அவை உண்டாக்கும் சுத்த நாதங்களின் அலைக்கற்றைகளால் நம் தேகம் மட்டுமல்ல, உயிர்க்கூடும் சுத்தமடைந்து விடுகின்றன.
இந்த தெய்வீக அன்புச் சொற்கள் திருவாசகம் முழுக்க அளவில்லாமல் கொட்டிக் கிடப்பதால், உயிர்மொழியான தமிழின் வேதமாக – மறைமொழியாக திருவாசகம் திகழ்கிறது. இதை உணர்ந்து ஓதினால்தான், நம் உடலும் உருகும் உயிரும் உருகும் சந்திரக்கலசமும் உருகும். சந்திரக் கலசம் உருகுவதால், அதனுள்ளே இருக்கும் அமுதம் தானாக உருகி வழியும். இந்த அமுதத்தேனை தினமும் பருகிக் கொண்டு வந்தால், பசி-தாகம்-உறக்கம் மூன்றும் அற்றுப்போய் அம்மனிதன் பிரமஞான நிலையை அடைந்திடுவான்.
விதிதான் வாழ்க்கை என்றால் இறைவன் எதற்கு?
அரசனாகப் பிறப்பதும், செல்வந்தனாகப் பிறப்பதும், ஏழையாகப் பிறப்பதும், ஆரோக்கியமில்லாமல் பிறப்பதும், தரித்திரனாகப் பிறப்பதும், யாருடைய கையிலும் இல்லை; அவரவர் செய்த முன்வினைப் பயனால் அத்தகையப் பிறவி வாய்க்கிறது என்கிறது சைவ சித்தாந்தம். வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டு விட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடுகூட எதற்கு என்ற கேள்விக்கு திருவாசகத்தில் விடை காணலாம், வாருங்கள்.
ஒருவருக்கு மிக மோசமான சூழலில் பிறப்பு அமைவது அவர் முன் செய்த வினைப்பயன். மனிதன் பிறந்த பின் செயலாற்றுவதற்கு உயிர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்கின்றன நம் திருமுறைகள். ஒரு துறையில் உயர்ந்த வாய்ப்புக் கிடைத்த ஒருவர் சிறப்பாக உழைத்து நாட்டின் விலையுயர்ந்த மதிப்பு வாய்ந்த விருதை வாங்கும் நிலைக்கு உயர்வதோ அல்லது முறையற்ற வழியில் கிடைக்கும் பெரும்பொருளுக்கு ஆசைப்பட்டு, நாயினைவிட கீழாக கெட்டுப் போவதும் அவரவர்களின் உரிமை.
உடற்குறைபாட்டோடு ஒருவர் பிறந்தாலும், அவர் நன்றாக உழைத்து, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதும் அல்லது அவ்வாறு பிறந்துவிட்டோமே என்று வருந்தியே காலத்தை முடிப்பதும் அவரவர் உரிமைதான். திருநீலகண்டரைப் போலவோ, திருக்குறிப்புத் தொண்டரைப் போலவோ, பெற்ற பிறவியைப் பயன்படுத்தி, இறைமீது மாளா மாறாக் காதல் கொண்டு தொண்டு செய்து, நாயனாராக உயரலாம்; அல்லது உலக மாயா காரியங்களிலும், உடலின்பங்களிலும் ஈடுபட்டு, கர்மவினைகளை அதிகப்படுத்தித் துன்புறலாம் என்பதும் உயிர்களின் உரிமைதான்.
தாயுமான இறைவனின் கருணை
இத்தகைய உரிமைகளை உயிர்களுக்குத் தந்த இறைவன், அறிவு தரும் ஐந்து பொறி மற்றும் ஐம்புலன்களுடனான உடலையும், மனதையும், நினைவுகளையும் கொடுத்துவிட்டு எங்கோ ஆகாயத்தில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு ஆனந்தமாக இருப்பானா என்றால் அதுதான் இல்லை என்கிறார் மாணிக்கவாசகர். குழந்தையை வெளியே சுதந்திரமாக விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தொலைவில் இருந்துகொண்டு எவ்வாறு பெற்றோர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்களோ, அதைப்போல இறைவனும் நம்மை இவ்வுலகில் விளையாட விட்டாலும் நம் பெற்றோர்களைவிட அதிகளவு கருணையே உருவான தாயினைப் போல கவனித்துக் கொண்டிருப்பான். நம் உடம்புள்ளே புகுந்தவன், நம் உயிருள்ளே ஒளியாக புகுந்து கொண்டு, நாம் அறியாவண்ணம் நம்மை சதா கவனித்துக்கொண்டே இருப்பான் என்று குயில் பத்து பதிகத்தில் கானக் குருங்குயிலிடம் சொல்கிறார் மாணிக்கவாசகர்.
“தேன்பழச் சோலை பயிலும் சிறுகுயிலே! நீ இதைக் கேள்! நம் இறைவன் வானத்தை உதறிவிட்டு, இந்த மண்ணுலகுக்கு வந்து மனிதர்களை ஆட்கொள்ளும் வள்ளல்; மனிதர்கள் நல்லபடியாக ஞானமும் கல்வியும் பெற வேண்டுமே என்ற கருணையால் இவர்களின் ஊன் உடம்பில் கலந்து மறைந்து வாழும் இறைவனை, நான் சற்றே தேடத் தொடங்கியதும், கருணையால் அன்பு பொங்க, என் ஊன்-உடலை உதறிவிட்டு, என் உள்ளம் புகுந்து, என் உணர்வோடு உணர்வாகக் கலந்துவிட்டான்; மானின் பார்வையிலும் இனிமையான பார்வையையுடைய உமாதேவியின் மணாளனை என்னிடம் வரச் சொல்லிக் கூவுவாயாக!” என்று குயிலைத் தூதுவிடும் அழகு தமிழ் கொண்ட மணிவாசகத்தை ரசித்து ருசித்துச் சாப்பிடலாம்.
தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ
வான் பழித்து, இம் மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன் பழித்து உள்ளம் புகுந்து என் உணர்வு அது ஆய ஒருத்தன்
மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய் !
(திருவாசகம் : 18-4)
எளிய மனிதர்களை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே வான் பழித்து, மண்ணுலகிற்கு வந்தான் என்கிறார் மாணிக்கவாசகர்; நாம் பணக்காரனாக, அறிஞராக, பெரிய அரசாங்க அதிகாரியாக, கல்வியிற் சிறந்த பெருமானாக, ஞானிகளாக, ஆசிரியர்களாக, அர்ச்சகர்களாக, பண்ணையாராக, வேத விற்பன்னராக இன்னும் எது எதுவாகவோ இருக்கிறோம் ; ஆனால், நாமெல்லாம் மனிதராக இல்லை; இத்தகைய செருக்கில் இருக்கும் வாழும் நமக்கு இறைவன் வசப்பட மாட்டான் என்று சொல்லாமல் சொல்கிறார் மாணிக்கவாசகர்.
இறைவன் எப்போதும் நம் உயிரில் கலந்தே இருக்கின்றான்
சூரியன் மறைவதால் நம் கண்கள் காணும் ‘புறஇருள்’, எல்லாப் பொருள்களின் ‘இருப்பை’ கண்ணுக்கு மறைத்தாலும், ‘இருள் உள்ளது’ என்னும் ‘தன்னிருப்பை’ மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதால், நாம் செயற்கை மின்னொளியை உருவாக்கி, இருள் நீக்கி வாழ்கிறோம்.
‘அறியாமை’ என்னும் ‘அகஇருள்’ நம்மைப் பிடித்துள்ளது என்பதே நமக்குத் தெரியாததால், நாம் அறியாமையில் இருந்து விடுபட இயலாது; நம்மிடம் பெருங்கருணை கொண்ட இறைவன் நம்மைப் பிடித்த ‘அறியாமை’ என்னும் அகஇருளை நீக்க, கண் முதலிய அறிவுக்கருவிகளுடன் கூடிய உடல் பிறவிகளைத் தருவதால், நல்வினை, தீவினை செய்து அதன் பலன்களைப் பெறுவதன் மூலம், நாமே நம்மை அறிகிறோம்; நம் தலைவனாம் இறைவனையும் அறிகிறோம்.
கருணையினால் நம்முள்ளே மறைந்து வாழும் இறைவன், நாம் அறியாமலேயே நமக்கு அருள் வழங்குகிறான். அறியாமை நீங்கிய நாம், இதே இறைப்பண்புடன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் துன்புறும் சகமனிதர்களுக்குச் செய்யும் தொண்டினால் இறைவனின் அன்புக்கு உரியவர்களாகி ஆட்கொள்ளப்படுவோம். இச்செய்தியின் உள்ளீடே திருவாசகத்தில் பல இடங்களிலும் பேசப்படுகின்றது.
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தான்
இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான் என்பதை மாணிக்கவாசகர் தில்லையில் அருளிய கண்ட பத்துப் பதிகத்தில் அற்புதமாக விளக்குகிறார். உடல் பிறவிக்கு வருவதற்கு முன்பே, அதாவது, உடலற்ற அருவமாக, அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் போதே, கருணை கொண்டு உள்புகுந்தான் இறைவன்; தன் உள்ளத்தில் நிலையாக அமர்ந்து, சிந்தனையை வைத்து, பின் உடலில் புகுந்து, பெருங்கருணை யினால் ஆண்டுகொண்டு, தன்னுடைய மறைப்புச் சக்தியினால் உயிர்களுக்குத் தெரியாமலேயே அவைகளுடைய திருவடிகளுக்குள்ளே மறைந்தே இறைவன் வாழ்கிறான்; உயிர்களின் செயல்பாடுகளிலும் உரிமைகளிலும் இறைவன் தலையிடுவதில்லை.
வாழ்வின் நெடும் பயணத்துக்குப் பின், மாணிக்கவாசகர் இறையருளால் தன் பிறவி நோக்கத்தை அறிந்துகொண்டது போல், நாமும் ஊனுக்குள்ளே இருக்கும் உயிரில் உறைந்து கொண்டிருக்கும் இறைவனைக் கண்டு, ஒளிதேகத்தைப் பெற வேண்டாமா? புலால் துருத்தியான தேகத்தை, எப்போது பூந்துருத்தி தேகமாக மாற்றப் போகிறோம்? “திருத்துருத்தி என்னும் ஊரில் குடிகொண்டிருக்கும் தித்திக்கும் சிவபதத்தை, ஆசை (அருத்தி) யினால் நாயடியேன் தில்லையில் கண்டுகொண்டேன்”, என்றார் மாணிக்கவாசகர்.
உருத் தெரியாக் காலத்தே உள் புகுந்து, என் உளம் மன்னி
கருத்து இருத்தி ஊன் புக்கு கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே
(திருவாசகம் : 31-3)
உலக மாயா வாழ்க்கையில் ஒருவர் செய்யும் நன்மை-தீமைகளின் (வினை) பயன் அவரை மட்டுமே சேரும். குழந்தைகளுக்காகவும், வாழ்க்கைத் துணைக்காகவும் சொத்துச் சேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள், கர்மவினைகள் சேர்வதைக் கவனிப்பதில்லை. அறமற்ற வழியில் ஒருவர் சொத்து சேர்க்கும்போது, அதனால் விளையும் தீவினைகள் அவரிடமே வந்து சேர்ந்துவிடும். துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும், சுற்றமும், நட்பும் ஒருவரின் வினைப்பயனில் பங்கெடுக்க முடியாது; ஒருவர் உண்ட உணவை எப்படி வேறொருவர் செரிமானம் செய்ய முடியாதோ, அதைப் போன்றதே வினைப்பயனும்.
ஒரு உயிரின் வினைப்பயனை வேறு உயிர்கள் பங்கிட்டு வாங்கிக் கொள்ள இயலாது. ஆதலால், மாணிக்கவாசகர் உயிரை ‘ஆதம் இலியான்’ (ஆதரவற்றவன்) என்கிறார்; கடலிற் பெருகிய நஞ்சை உண்ட என்னுடைய பரம்பரனே! வினைப்பயனால், சுற்றத்தார் யார் துணையும் இல்லாமல் ‘பிறப்பு இறப்பு’ என்னும் தப்ப முடியாத அருநரகில் அழுந்தி மூழ்கிக் கொண்டிருந்த அடியேனுக்கு, ஐயோ என்று இரங்கி, உன் திருவடி மலர் காட்டி ஆட்கொண்டது உனது திருவருள் அல்லவா என்று பரவசம் அடைகிறார் மாணிக்கவாசகர்.
ஆதம் இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில்
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு ‘ஆ! ஆ!’ என்று
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே ! அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம் பரனே ! (திருவாசகம் : 38-3)
இங்கு பெருமான், மிகவும் துன்பமுடைய பிறப்பு இறப்புகளையே நரகம் என்று கூறினார். அழிக்க வந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்களைக் காத்ததைபோல, பிறவியாகிய நரகத்தில் விழுந்து அழுந்துகின்ற என்னையும் அவனின் பொன்னடித் திருவடியைக் காட்டிக் காத்தது உன் திருவருளே என்று வியக்கிறார்.
இறைவன் நுண்மையிலும் நுண்ணியன்
எல்லாம் வல்ல இறைவன் இப்பிரபஞ்சத்தில் மிகப்பெரிதினும் மிகப்பெரியவனாகியும், மிகமிகச் சிறியதைக் காட்டிலும் நுண்ணியனாகவும் உள்ளதையும் ஒரு நொடியில் உணர்ந்து கொண்ட மாணிக்கவாசகர், தம்முடைய அனுபவக் காட்சியை அற்புதமான அறிவியல் சொல் வளமையால் நமக்கு விளக்குகின்றார். இறையருளால் இறைக்காட்சி வசப்பட்டதன் விளைவாக, இறைவனும், தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்திலுள்ள (Ever-Expanding Universe with innumerable Galaxies), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டை வடிவ மிகப்பெரிய பெருங்கோள்களும், உள்ளும் புறமுமாக ஒரே நேரத்தில் அவர் கண்களுக்குப் புலப்பட்ட தால், இரண்டையும் ஒப்பிட்டுக் காட்சிப்படுத்தும் மாணிக்கவாசகரின் அறிவியல் சொல்லாடல்கள் நம்மை மீளமுடியாத வியப்பில் ஆழ்த்துவிடுகின்றன.
இயற்பியலைக் கடந்த விண்பகுதியும் மாயையும்
நாம் காணும் மாபெரும் கோள்கள், அண்டப்பேரொலியின் விளைவாகக் காணும் பருப்பொருளாக உருவாகும் முன்பு, எல்லையற்ற அடர்த்தியும் வெப்பமும் உடைய காண இயலாத நுண்ணிய (சூக்கும) நிலையில், இயற்பியல் விதிகளுக்குள் வந்திராத பகுதியாக இருந்தது. இத்தகைய காண இயலாத அனைத்திற்கும் தோற்றுவாயான நுண்ணிய (சூக்கும)ப் பகுதியை ‘மாயை’ என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. மாயை என்னும் மூலப்பொருளில், அணு நிலைக்கு முன்பு, இயற்பியல் விதிகளுக்கு உட்படாத, காண இயலாத, இத்தகைய பகுதிகளும் கருந்துளைகளும் எப்போதும் உள்ளன.
கோள்கள் ஒன்றினையொன்று மோதிக்கொள்ளாமல், அவையவற்றின் நியமப்பாதையில் இயற்பியல் விதிகளின்படி இயங்கும் பிரபஞ்சப்பகுதியை ‘அண்டம்’ என்று சொல்லாமல் ‘அண்டப்பகுதி’ என்று மிகச் சரியாகப் பெயரிட்டு அழைக்கும் மாணிக்கவாசகரின் நுண்ணறிவை நம்மால் பாராட்டாமல் இருக்க இயலவில்லை. அவர் இறைவனிடம் பெற்ற ‘வாலறிவு’ என்னும் முற்றறிவைக் கண்டு வியந்தல்லவா போகிறோம் நாம்! காணும் நிலையில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் பெரிய மாபெரும் கோள்கள், இறைவனை ஒப்பிடும்போது, சிறிய அணுக்கள் போன்று காட்சியளிப்பதால், இறைவன் மிகப்பெரியவன் என்று நிறுவுகிறார் மாணிக்கவாசகர்.
நுண்மையிலும் நுண்ணியனான இறைவனின் தரிசனம்
இனி, பெரிதினும் பெரிதான இறைவனைத் தரிசித்த நாம், நுண்மையிலும் நுண்ணியனாக (nano of all other nanos) உள்ள இறைவனின் தரிசனத்தைக் காண்போம்.
வேதியன் தொகையுடன் மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து
எறியது வளியில் கொட்கப் பெயர்க்கும் குழகன் (திருவாசகம் : அண்டப்பகுதி – 7-12)
1968 முதல் 1995 வரை ஹுபலே, ஸ்டீவன் ஹாக்கின்ஸ், ரோகர் பென்ரோஸ், எல்லிஸ், டேவிட் சிரம் போன்ற அறிவியலாளர் கண்டுபிடிப்புகளால் அனைத்துக் கோள்களும், விண்மீன்களும் அவற்றின் காலமுடிவில் காண இயலாத பழைய நுண்ணிய நிலையை மீண்டும் அடையும் என்பதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பரமாணு என்னும் கடவுள் துகள் (God Particle) குறித்த கோட்பாடும் தற்போது நமக்கு கிடைக்கப்பட்டுள்ளது.
கோள்களும், விண்மீன்களும் தோற்றத்திற்கு வருவதும், இயற்பியல் விதிகளின்படி அவை இயங்குவதும், அவைகளில் உயிர்கள் உடல்வாழ்வுக்குத் தோன்றுவதும், வாழ்வதும், பின் மடிவதும், ஊழிக்கால முடிவில் அக்கோள்களும், விண்மீன்களும் மீண்டும் அழிவதுமான பிரபஞ்சச் சுழற்சியை (தோற்ற நிலையிலிருந்து காண இயலாத நுண்ணிய நிலை அடைதல்), இறைக்காட்சி கிட்டிய மாணிக்கவாசகர் அருமையாக விவரித்துள்ளார். பிரமன் படைத்தலையும், திருமால் காத்தலையும் செய்கிறார்கள். கணக்கிலடங்காத உலகங்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதால், பல பிரமன்களும், பல திருமால்களும் உள்ளனர் என்கின்றார் மாணிக்கவாசகர்.
நூறு கோடி பிரமர்கள் நுங்கினர்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே! (திருமுறை : 5:100-3)
என்று தேவாரத்தில் இச்செய்தியை அப்பர் பெருமான் காட்சிப்படுத்தியுள்ளார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!


