குருவின் முன்னுரை
எம் ஆன்மாவிற்கும் உயிருக்கும் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அதி அற்புதமான பிரமஞான வித்தையை எம்மை வலிந்தாட்கொண்டு அருளிய சதுரகிரி சித்தரான ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களின் பொன் திருவடிகளுக்கு இந்த குரு எனும் ஞான வேத மலர்களை 2025 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா (10.07.2025) அன்று சமர்ப்பித்து வணங்கி நிற்கின்றோம்.
1988 ஆம் ஆண்டு. குரு என்னை வலிந்தாட் கொண்டது இவ்வாண்டுதான். அன்று ஒரு பௌர்ணமி. யாம் கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரர் அவர்களின் பிராணாயாமத்தை காலை, மாலை என இரு வேளைகளில் தினமும் 4 மணி நேரம் செய்வது வந்தோம். உணவு ஒருவேளைதான். மூன்று வேளையும் சாப்பிட முடியாது. காரணம் பிராணாயாமத்தின் பிராண ஆற்றல் உடலெங்கும் பரவிக் கிடந்த நாட்கள் அவை. மேலும், ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்து கொண்டிருந்த வறுமை தேவதை எம்மை ஆட்கொண்டு அருளிக் கொண்டிருந்த நாட்கள் அவை. வயது 21. இளமைப் பருவம்.
“கொடிது கொடிது வறுமை கொடிது ; அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்றார் நம் ஔவைத் தாய் அவர்கள். அந்த இளமைப் பருவத்தில் எம் வாழ்வில் ஒரு வேளை உணவுக்கு ரொம்பவும் சிரமப்பட்டோம். பிச்சை கேட்க முடியாத பருவம் அது. ஒரேயொரு வாழைப் பழத்தோடு கழிந்த நாட்கள் அநேகமுண்டு. யாக்கை நிலையாமை என்பதை கண்கூடாக கண்டுகொண்டிருந்த நாட்கள் அவை. ஒருவேளை சோற்றுக்கு வழியில்லை ; ஆனால், பேசிக் கொண்டிருப்பதோ வள்ளலாரையும் சித்தர்களையும் பற்றி மட்டும்தான்.
உணவு கிடைக்காத வெகுநாட்களில் திருவருட்பா அகவல்தான் எமக்குச் சோறே. அகவல் பாடி முடிக்க 3 மணி நேரம் ஆகிவிடும். அதன்பின் எம்மை வறுத்திக் கொண்டிருந்த பசி காணாமல் போயிருக்கும். இதை உணர எமக்கு ஒரு மாத காலமாயிற்று. எமக்கு தங்க இருப்பிடம் இல்லாதிருந்த அந்நாட்களில் வள்ளலால் கோவிலில் தங்க இடம் கொடுத்த பெரியவர்தான் தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) பேரூராட்சியில் வசித்து வந்த சந்திரன் ஆசாரி அவர்கள். இவர் இல்லையென்றால் எமக்கு தங்க இடம் கிடைத்திருக்காது ; ஒரு வேளை உணவு கிடைத்திருக்காது ; மெட்ரிகுலேசன் பள்ளியில் ரூ.300/- சம்பளத்திற்கு ஆசிரியர் வேலை கிடைத்திருக்காது.
சுமார் 3 ஆண்டுகள் எங்கள் ஊரில் இருந்த வள்ளலார் கோவிலில்தான் இருந்தேன். காலை, மாலை அகவல் பாராயணம் ஜோராகப் போகும். கட்டடப் பணி முடிந்து திறக்காமல் இருந்த அக்கோவிலில் யாம் தங்குவதற்கு இடம் கிடைத்தக் காரணத்தினால், தினமும் இருவேளையும் நீரால் கழுவி சுத்தம் செய்து, வள்ளலார் சிலை முன்பு விளக்கேற்றி அகவல் பாராயணம் செய்வது வழக்கம். இப்படி எம்மை வள்ளலார் பக்கம் திசை திருப்பிவிட்டது மேலே கண்ட பெரியவர் சிவத்திரு. சந்திரன் ஆசாரி அய்யா அவர்கள்தான். இவருக்கு எப்போதும் யாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். தினமும் உணவு உண்ணும் போதெல்லாம் இவருக்கு நன்றி சொல்வது இன்றுவரை எம்மிடமுள்ள வழக்கம்.


அதிகாலையில் கடப்பை சச்சிதானந்த யோகீஸ் வரரின் பிராணாயாமப் பயிற்சி. இது முடிந்ததும் அகவல் பாராயணம். இப்படித்தான் மூன்று ஆண்டுகள் சென்று கொண்டிருந்தன. இப்படிப் போய்க்கொண்டிருந்த காலத்தில்தான் எம் சற்குரு சுந்தரானந்த மஹரிஷி அவர்கள் வந்து எம்மை ஆட்கொண்டது.
யாம் வள்ளலார் கோவில் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத்தான் பிராணாயாமத்தை செய்வது வழக்கம். குரு எம்மை முதலில் எம்மை ஆட்கொண்டது எப்படியென்றால், பூட்டின் கதவின் உள்ளே காற்று நுழைவதைப் போல நுழைந்து வந்து எம் முன்னே உட்கார்ந்து கொண்டு யாம் செய்யும் யோகப் பயிற்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார். யாரோ நம்மைப் பார்க்கிறார்கள் என்று கண் விழித்துப் பார்த்தால், எம்முன்னே இவர் உட்கார்ந்திருப்பார். “யார் நீங்கள்? எப்படி பூட்டிய கதவின் உள்ளே வந்தீர்கள்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்றெல்லாம் அவரை பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.
“இப்படித்தான்” என்று சொல்லி, எழுந்து கதவின் உள்ளே புகுந்து வெளியே போய்விட்டு, பின் மீண்டும் கதவின் உள்ளே காற்றாய் வந்து நின்றார். யாம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். இவர் என்ன மனிதனா? இல்லை மந்திரவாதியா? என்ற கேள்விதான் அப்போது எமக்குள் எழுந்தது.
இப்படி பல நாட்கள் எம்மை தினமும் பூட்டிய கதவின் உள்ளே வந்து எம் யோகப் பயிற்சிகளைக் கண்டு ஆராய்ந்து வந்தவர், ஒருநாள் “என்ன தம்பி, உனக்கெதற்கு இந்த யோகப் பயிற்சிகள். இந்த இளமையான வாழ்க்கையை எதுக்கு தனிமையில் வீணடித்துக் கொண்டிருக்கின்றாய். வெளியே மற்ற இளைஞர்களைப் போல ரொம்ப ஜாலியாக இருக்க வேண்டியதுதானே” என்றார்.
“நான் எப்படிப் போனா உங்களுக்கென்ன. நீங்கள் யார் என்னை கேள்வி கேட்க” என்று கேட்க மனம் தூண்டியது. ஆனால், எம்மால் அப்படி எடுத்தெறிந்து இவரிடம் பேச முடியவில்லை.
“எனக்கு தாய், தந்தையின் அரவணைப்பும் பராமரிப்பும் கிடைக்கவில்லைதான். அதற்காக இறைவன் வாழும் என்னுடைய தேகத்தை கண்ட குப்பைகள் போடும் குப்பைத் தொட்டியாக்க எனக்கு விருப்பமில்லை. அருளாளர்களைப் போல, சித்தர்களைப் போல வாழ்ந்து இறைவனோடு கலந்துவிட வேண்டும். மீண்டும் பிறந்து இப்படியெல்லாம் வறுமையில் வாடக் கூடாது ; சோற்றுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டும் இருக்கக் கூடாது. வாழ்ந்தால் இறைவனோடு ; இல்லையேல் எமனோடு” என்றேன்.
“அப்படியா, இந்த சின்ன வயதில் என்ன பழுத்த பழம் மாதிரி பேசுறே. நல்லது மகனே. நீ என்னோடு வருகிறாயா? இறைவனை உனக்குக் காட்டுகிறேன். என்றைக்கும் உன் உயிரோடும் இறைவனோடும் வாழ்ந்து கொண்டே இருக்கலாம், அள்ள அள்ளக் குறையாத பேரின்பத்தோடு” என்றார் அவர்.
“அது சாத்தியமா அய்யா? இறைவனைக் காண முடியுமா?” என்று சந்தேகத்தோடே கேட்டேன்.
“அது சற்றுக் கடினமாக ஆரம்பத்தில் தோன்றலாம். ஆனால், பழகப் பழக அது உனக்கு கைவல்யமாகி விடும். உனக்கு இறைவனைக் காண வேண்டுமென்ற தணியாத தாகம், ஏக்கம் இருந்தால் அவரை உனக்கு என்னால் காட்டித் தரவும் தொட்டுக் காட்டவும் முடியும்” என்றார்.
“அதை உண்மையென்று இப்போது நான் இருக்கும் மனநிலையில் ஏற்றுக்கொள்ள சந்தேகமாகவே இருக்கிறது அய்யா” என்றேன்.
“இப்போது தொட்டுக் காட்டி உணர வைக்கிறேன். முடிந்தால் இறைவனைப் பார்த்துக் கொள்” என்றார்.
“எப்படி? எவ்வாறு அது சாத்தியப்படும்” என்றேன்.
“கீழே உட்கார். உன் கண்களை நெற்றிக் கண் புள்ளியில் குவித்துக் கொள்” என்றார்.
அப்படியே செய்தேன்.
உடனே அவர் அவரின் ஒளி பொருந்திய தீட்சண்யமான கண்களில் எம் கண்களை ஆழ்ந்து கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். இமைக்கக் கூடாது என்று ஏற்கனவே சொல்லியிருந்ததால், அவரின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு 15 நொடிகள் கடந்திருக்கும். எமக்கு முன்னே அவர் மறைந்து போனார். அவரின் கண்கள் மட்டும் தனியாக அந்தரத்தில் மிதந்து கொண்டு எம்மோடு பேச ஆரம்பித்துவிட்டது. நான் அமர்ந்திருந்த இடம் வழுக்கிக் கொண்டு போவதுபோல் இருந்தது. அமர்ந்திருந்த இடம் இப்போது காணப்படவில்லை. அதை உணரவும் முடியவில்லை. வள்ளலார் கோவிலின் சன்னல் கதவுகள், சுவறுகள், கதவுகள் அனைத்தும் மறைந்து போயின. வள்ளலார் கோவிலே காணாமல் போனது. எங்கோ ஒரு மலைமீது ஒரு அருவியின் முன்னே அமர்ந்திருந்தேன்.
“அருவியின் உள்ளே போ” என்றார். உள்ளே போனேன்.
“உள்ளே ஒரு குகை தெரிகிறதா” என்றார்.
“ஆம்” என்றேன்.
“உள்ளே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதா?” என்றார்.
“ஆமாம், விளக்கு இருக்கிறது” என்றேன்.
“அங்கே போய் உட்கார்ந்து கொண்டு நான் வைக்கும் இடத்தில் உன் முழு கவனத்தையும் குவித்துக் கொண்டு பூரண அமைதியில் இரு” என்றேன்.
அதற்கு மேல் எமக்குள் எந்தவித எண்ணங்களும் இல்லை. எதையும் யாம் சிந்திக்கவும் இல்லை. அவர் சொன்னபடி விளக்கின் முன்னே உட்கார்ந்து கொண்டு அந்த விளக்கின் ஒளிச்சுடரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தேன்.
அப்போது அங்கே சிலரின் பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. கற்பூர வாடை வர ஆரம்பித்தது. கூடவே நறுமணப் பூக்கள் வாசம் வேறு வந்து கொண்டிருந்தது. ஜவ்வாதும் தாழம்பூ வாசமும் திடீரென்று அந்தக் குகை முழுக்க மணக்க ஆரம்பித்தது. எமக்குள் என்னென்னவோ எண்ணங்கள் உதிக்க ஆரம்பித்தன.
“மகனே, எந்த எண்ணங்களும் உம்மிடம் உதயமாகக் கூடாது. அவைகள் எழும்போதே அந்தவிடத் திலேயே கொன்றுபோடு” என்றார் குரு.
எண்ணங்களைக் கொல்வதா? அது எப்படி என்பது எமக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று எண்ணங்கள் வரக்கூடாது என்றுதான் சொல்ல வருகிறார் என்று நினைத்துக் கொண்டு மனதை தொடர்ந்து விளக்கிலேயே வைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது எமக்கு முன்னே ஒரு பாம்பு சரசரவென்று வந்து நின்று எம்மைப் பார்க்க ஆரம்பித்தது. “இதென்னடா கொடுமை, இந்த மனுசனை நம்பி வந்தா, இந்த குகையில பாம்பெல்லாம் மேயுதே என்ன பண்றது?” என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.
“மகனே, பாம்பின்மீது உன் முழு கவனட்ததையும் வை” என்றார். வைத்தேன்.
எம்மையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு சில நொடிகளில் எம் உடம்புமீது ஏற ஆரம்பித்தது. “ஐய்யய்யோ, இதென்ன சோதனை. இந்த பாம்பு நம்மைக் கொத்தாமல் விடாது போலிருக்கே. அதுவும் சாவகாசமாக கொத்திக் கொத்தி விளையாடுமோ. இறைவா எம் உயிரைக் காப்பாற்று, இறைவா எம் உயிரைக் காப்பாற்று” என்று உடல் வேர்க்க, வேர்க்க உள்ளே துடித்துக் கொண்டு பிரார்த்திக்க ஆரம்பித்தேன்.
உடம்பில் ஏறி நின்ற பாம்பு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டு, எம் கண்முன்னே வந்து எம்மிரு கண்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தது.
“ஓகோகோ, அதுதான் விசயமா. இந்த பாம்புக்கு கொத்த வேறயிடம் கிடைக்கலையாட்டுக்கு. என் கண்களைப் பார்த்துத்தான் கொத்துபோல இருக்கு” என்று நினைத்துக் கொண்டு உடம்பெல்லாம் அப்படியொரு ஒரு பய உணர்வால் ஆட்பட்டது போல இருந்தேன். எமக்கு இந்த பாம்பைத் தவிர வேறு எதுவுமே தெரியவில்லை. அந்தக் குகையும் வாசனைகளும் எல்லாம் மறைந்து போய் விட்டிருந்தது. அங்கே அந்த குகையில் நானும் பாம்பும் தவிர வேறு யாருமில்லை என்பதை உணர்வால் உணர்ந்து கொண்டிருந்தேன்.
“அய்யா, எங்கே போனீர்கள்? இந்தப் பாம்பிடமிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று உள்ளுக்குள்ளே தொடர்ந்து சொல்லிக் கொண்டு கதறிக் கொண்டிருந்தேன்.
அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இது என்ன இப்படி நம்மளை இந்தப் பாம்புகிட்ட சிக்க வச்சுட்டாரே என்று மனம் எண்ணிக் கொண்டு பயத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது பாம்பின் கண்களை உற்றுப் பார்க்கும்படி எம் உள்ளிருப்பு ஒன்று சொல்ல ஆரம்பித்தது. எப்படியும் பாம்பு கொத்தப் போகிறது, நாம் சாகப் போகிறோம். சாவின்போது அமைதியோடு சாகலாமே என்றெண்ணி பாம்பின் கண்களைப் பார்க்க ஆரம்பித்தோம்.
பாம்பின் கண்களில் வைரத்தைப் போன்ற பட்டைத் தீட்டப்பட்ட ஒரு பேரொளி ஜொலித்துக் கொண்டிருந் ததைக் கண்டேன். கருடனின் பார்வை தீட்சண்யத்தைவிட அப்படியொரு தீட்சண்யப் பார்வை இந்தப் பாம்பிடம் காண ஆரம்பித்தேன்.
பாம்பின் கண்களைப் பார்க்க ஆரம்பித்ததும் அந்த பாம்பின் உடம்பு மறைந்து போய், பாம்பின் கண்கள் மட்டும்தான் எமக்குத் தெரிந்து கொண்டிருந்தது.
அப்போது பாம்பின் கண்களிலிருந்து ஒரு மஞ்சள் நிற ஒளி சுழன்று சுழன்று அனலைப் போல வீச ஆரம்பித்தது. சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் ஒளிக் கதிர்களைப் போல அவ்வொளிகள் இருந்தன. எதற்காக இந்தப் பாம்பு மஞ்சள் நிற ஒளிக்கதிர்களை வெளிவிடுகிறது என்பது தெரியாமல் அந்த ஒளிக்கதிர்கள்மீது கவனம் வைக்க ஆரம்பித்த அடுத்த நொடி நான் காணாமல் போனேன். எம் உடம்பும் மறைந்து போனது. என் எண்ணங்கள் காணாமல் போனது. நான் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு ஒளி மட்டும் அகல் விளக்கின் ஒளியைப் போல இருந்தது.
அந்த ஒளியோடு பாம்பின் கண்களிலிருந்து வந்த மஞ்சள் ஒளிகள் கலப்பு கொள்ள ஆரம்பித்தன. அவ்வளவுதான் அந்த இடத்தில் ஒரு தெய்வீகக் கண் ஒன்று தோன்றி நின்றது. அந்தக் கண் கொடுத்த அழகில் சொக்கி நிற்க ஆரம்பித்தேன். பார்வையை அதனிடமிருந்து எடுக்க முடியவில்லை. நிலை குத்தியப் பார்வை அப்போதிருந்தது.
அந்த பாம்பின் ஒளியும் அகல் விளக்கின் ஒளியும் சேர்ந்து எமக்குள் ஏற்படுத்திய ஞான விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல.
“மகனே” என்று குருவின் குரல் கேட்க ஆரம்பித்தது.
பேச நினைக்கின்றேன். ஆனால், பேச முடியவில்லை. எண்ணவும் முடியவில்லை.
“இதுதான் இறைவனின் வீடு. இந்த ஒளி வீட்டின் மையப்புள்ளியை கூர்ந்து பார். அங்கே ஓர் கோடி சூரியப் பிரகாசம் கொண்ட ஒரு ஒற்றை ஒளியணு இருப்பதைப் பார். அதுதான் இறைவன். அந்த ஒளிதான் அவரின் தேகம். அந்த ஒளி நன்றாகத் தெரிகிறதா?” என்றார்.
இப்போது சிறிது எண்ண முடிந்தது. “ஆமாம் அய்யா” என்பதை உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.
அப்போது யாரோ எம் சிரசின் உச்சியில் கை வைத்து அழுத்த ஆரம்பித்தார்கள். எமக்குள் இருந்த கொஞ்சநஞ்ச எண்ணமும் கரைந்து போயிற்று. இப்போது பாம்பின் கண்ணும் மறைந்துபோய், அதன் ஒளியோடு ஒரு ஒளி சேர்ந்து, சேர்ந்து ஆடிக் கொண்டிருப்பதைக் காண ஆரம்பித்தேன்.
“மகனே, அந்த ஒளியில் உன்னைக் காண்கிறாயா?” என்றார்.
அப்படி அவர் சொல்லி முடித்த அடுத்த நொடி நான் என்னுடைய தூலத் தேகத்தோடு அங்கே அமர்ந்து கொண்டிருந்தேன். என் முன்னால் அந்த மஞ்சள் ஒளி இருந்து கொண்டிருந்தது.
“அதற்குள்ளே போ மகனே” என்றார்.
அப்படியே போனேன். உள்ளிருந்த மஞ்சள் நிற ஒளியின் உள்ளே போனதும், அந்த மஞ்சள் ஒளியும் காணாமல் போய், அந்த இடம் வட்ட வடிவமான உலக உருண்டையைப் போல ஒரு வெற்றிடத்தைக் காண ஆரம்பித்தேன். இந்தப் பிரபஞ்சமே ஒரு வட்டவடிவ பொன்னொளிகளால் நிரம்பியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது.
சிறிது நேரத்தில் முருகப் பெருமானின் வேலின் தலைப்பகுதியின் பாதிப் பகுதி செம்மை நிறத்தில் இடது புறமிருந்து வந்து அவ்வெட்டவெளியின் மையம் வந்து சேர்வதைக் கண்டேன். அது வந்து சேர்ந்த அடுத்த நொடியே வலதுபுறமிருந்து மற்றொரு பாதி வேல்பகுதி அதே செம்மை நிறத்தில் (அக்கினியின் நிறத்தில்) வந்து நடுப்பகுதியோடு இணைந்து கொள்ள அங்கே முழு வேலின் தலைப்பகுதி தோன்றி நின்றது. தொடர்ந்து அந்த செவ்வேலையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“மகனே, உன் உயிரின் இருப்பிடம் இதுதான். நன்றாக பார்த்துக் கொள். அதனுள்ளே ஒரு வெள்ளொளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறதா” என்றார்.
“ஆமாம் அய்யா” என்றேன்.
“அதுதான் இறைவன். அந்த வெள்ளொளிதான் இறைவனின் வடிவம். இறைவன் ஒளிவடிவம் என்று சொல்வது இதைத்தான். உமக்குள் தோன்றிய செவ்வேல் தான் முருகப்பெருமான். முருகனின் பூரண அருள் உனக்கு இருக்கிறது. ஒருவன் சித்தனாக வேண்டுமென்றால் அதற்கு முருகப் பெருமானின் அருளும் வாலைத் தாயின் அருளும் கண்டிப்பாகத் தேவை. எப்போதுமே முருகப் பெருமான் வந்தபின்தான் வாலைத்தாய் காட்சியளிப்பாள். ஆனால், உனக்கோ வாலைத்தாய் காட்சியளித்தப் பின்தான் முருகப் பெருமான் தோன்றி அருள்பாலித்தான்” என்றார்.
“நான் இன்னும் வாலைத் தாயைப் பார்க்க வில்லையே அய்யா. நீங்கள் தவறாகச் சொல்கிறீர்கள்” என்றேன் மனதிற்குள்ளே. மனதில் அந்த இறைவனின் காட்சியிலேயே தொடர்ந்து லயித்திருந்தேன்.
“மகனே, வாலைத்தாய்தான் முதலில் உன்னை வந்து ஆட்கொண்டாள். அவள் உன்னை ஆட்கொள்ள சொல்லித் தான் நானே உன்னை உன் ஊரில் வந்து சந்தித்தேன். இதுவெல்லாம் அவள் நடத்தும் நாடகம். உனக்குள் அன்னை புவனேசுவரி தாயார் குடி கொண்டிருக்கிறாள்” என்றார்.
“அய்யா, நான் இந்த இருவரையும் இதுவரை பார்த்ததில்லையே” என்று மனதில் சொன்னேன்.
“மகனே, நீ ஹடயோகப் பயிற்சியை ஆரம்பித்த முதல்நாளன்று ஒரு சிறுபெண் ஐந்து வயதிருக்குமே. அவள் ஓடிவந்து உன் முதுகில் ஏறிக் கொண்டு ஆனந்தமாக ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டு விளையாடினாளா? உன் மடியில் வந்து உட்கார்ந்து கொண்டு உன் கன்னத்தையும் சிரசையும் வருடிக் கொடுத்தாளா?” என்றார்.
அட, இந்த விசயம் இவருக்கு எப்படித் தெரியும். நாமே இந்த விசயத்தை பயத்தால் யாரிடமும் சொல்லாமல் இருந்தோமே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
“என்ன பதிலைக் காணோம்?” என்றார்.
“ஆமாம், ஆமாம் அய்யா. இது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்றேன்.
“உள்ளே தான் அவள் ஒளியாக உட்கார்ந்து கொண்டு எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாளே. இது விசயமாக அவள் சொல்லச் சொல்லவே நான் அறிந்து கொண்டேன். அவள் வேறு யாருமல்ல. மாதங்கியின் வடிவான அன்னை மீனாட்சியும் அவள்தான் ; அன்னை புவனேஸ்வரியும் அவள்தான். இன்று உன் கண்முன்னே பாம்பாக வந்து நின்று இந்த லீலைகளை நடத்திக் கொண்டிருக்கிறாளே அவள்தான் வாலைத் தாய். சித்தர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நாக தொடு தீக்ஷை (சர்ப்ப ஸ்பரிஷ தீக்ஷை) உமக்கு இப்போது வழங்கப்பட்டிருக்கிறது. இது எனக்கே ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நான்தான் உனக்குத் தீக்ஷை கொடுக்க அழைத்து வந்தேன். ஆனால், எனக்கு முன்னே வாலையே உன்னை ஆட்கொண்டு பிரம நேத்திரத் தீக்ஷையை வழங்கியிருக்கிறாள். அவள் உன்னை வலிய வந்தே ஆட்கொண்டிருக்கிறாள். பரிபூரண பிரமஞான வித்தையை உமக்குக் கற்றுக்கொடுக்கும்படி நான் பணிக்கப் பட்டிருக்கிறேன். மகனே, கவலை கொள்ளாமல் இரு. இனி எல்லாம் உனக்கு ஞானத்தில் வெற்றியே கிடைத்துக் கொண்டிருக்கும். இப்போது அந்த வெள்ளொளியின் இருப்பிடத்தை, மையப்புள்ளியை நான் சொல்லும்படி பதிய வைத்துக் கொள்” என்று சொல்லி என் உயிருக்குள் இருக்கும் இறைவனின் இருப்பிடத்தை – சிற்றம்பலத்தைத் தொட்டுக் காட்டி அங்கே ஆனந்த நித்தமும் ஆனந்த நடனம் எப்படி ஆடிக் கொண்டு, பிரமஞானத் தவத்தைச் செய்ய வேண்டும் என்பதை அவரோடு எம்மை சதுரகிரி மலைக்கு அழைத்துச் சென்று ஐந்து ஆண்டுகள் அன்ன, ஆகாரமில்லாமல் வெறும் மூலிகைகளை மட்டுமே உணவாகக் கொடுத்துக் கொடுத்து, பிரமஞான வித்தைகளை கற்றுக் கொடுத்தார் எம் உயிரினும் மேலான சற்குரு அவர்கள்.
அவரின் கருணையினாலும் அருளாசியினாலும் இறைக் கட்டளையினாலும் யாம் தொடர்ந்து 2021 முதல் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞான வித்தைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டும், வலைத்தளத்தில் பேச்சுரை ஆற்றிக் கொண்டு, மாணவர்களுக்கு குருகுலக் கல்வியாக சித்தர்களின் சாகாக் கல்வியைப் பற்றியும் கற்றுக் கொடுத்து வருகின்றோம்.
எமக்குள் பிரமஞான விதையை விதைத்து எம்மை நன்றாக பிரமஞானத்தில் விளைச்சலைக் கொடுக்க வைத்த அந்த பிரமஞான வள்ளலான சதுரகிரி சித்தராம் ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களுக்கு குருதான் ஞான வேதம் என்பதைச் சொல்லும்படி பிரமஞானங்களை சரசுவதியின் மலர்களாக உருவாக்கும்படியான இந்த ஞான வேதத்தை அவரின் பொன் திருவடிகளுக்கு சிரம் தாழ்த்தி பணிந்து சமர்ப்பித்து மகிழ்கின்றோம். எல்லாம் குருவருளன்றி வேறில்லை. இதுவும் அவரின் திருவிளையாடலே.
குருவின் மகிமை
“அவன் அவ்வாத்ம சாக்ஷாத்காரத்தின் பொருட்டுச் சமித்தினைக் கரத்தில் தாங்கியவனாய்ச் சுரோத்திரியரும் பிரஹ்ம நிஷ்டருமான குருவினையே சரணடைக” என்னும் முண்டக உபநிடத வாக்கியத்தின்படி, சுருதி சாஸ்திர அர்த்தங்களைத் தெளிவாக உணர்ந்திருப்பவரும் பிரஹ்ம நிஷ்டருமான குரு எவரோ, அவரிடத்தில் தான் ஈசுவரனது சிற்சத்தியானது மற்ற எல்லாவிடங்களையும்விட விசேசமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும். சூரியனது தகன சக்தி (எரிக்கும் சக்தி) எங்கும் பரவியிருந்தாலும்கூட, அது தான் நேரே பஞ்சு முதலியவற்றை எரிக்கக்கூடியதாக இருக்காது. சூரிய காந்தக் கல்லின் (பூதக் கண்ணாடி – Magnifying Glass or Microscope) வழியாக சூரிய ஒளி குவிந்து வெளிப்பட்டு பஞ்சு போன்றவற்றை எரிக்கும்.
அவ்வாறுதான் ஈசுவரனது சிற்சக்தியும் எங்கும் பரவி நிரம்பியிருந்தாலும் (வியாபித்தி ருந்தாலும்) தத்துவ ஞானியாகிய குருவின் வாயிலாகத் தான் வெளிப்பட்டு, தன் எதிரில் இருக்கும் சீடன் போன்றோர் களின் மும்மலங்களை எரித்து சாம்பலாக்கக் கூடியதாக இருக்கிறது. வேறு எந்த வகையினாலும் ஒருவனால் அவனின் மும்மலங்களை தனித்து எரித்து ஒழிக்கவே முடியாது.
சூரியனின் பிரகாச வெளிச்சமானது இப்பூமியில், பிரபஞ்சத்தில் எங்கும் இயல்பாக பிரகாசித்துக் கொண்டிருந் தாலும், கண்ணாடி, நீர், பளபளப்பான தகடு முதலில் மினுமினுப்புள்ள பொருட்களின்மீது பட்டுப் பிரதிபலிக்கும் போது மிகவும் அதிகளவு ஒளிமிக்கதாகப் பிரகாசிக்கத் தொடங்கும். அந்த அதிக பிரகாசத்தின் காரணமாக போக்க முடியாத இருளைக்கூட எளிதாகப் போக்கிவிடலாம்.
அதைப்போலத்தான், ஈசுவரனது சிற்சொரூபமும் எங்கும் பரவி பிரகாசித்துக் கொண்டிருந்தாலும், அது தத்துவ நிஷ்ட குருவின் வாயிலாகத்தான் மிக விசேசமாக வெளிப்பட்டு, தன்னைச் சார்ந்து உள்ளவர்களின் உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞான இருளான மும்மலங்களை எரித்து ஒழித்து, அவர்களின் சூக்கும தேகத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். மற்ற எந்தவகையினாலும் அவர்களின் இருதய இருளைப் போக்கிவிட முடியாது.
இந்தக் காரணங்களால் எவருமே ஈசுவரனை உபாசித்து, அவர் தரிசனமே கொடுத்தாலும்கூட, அவர்கள் அவர்களுக்குத் தேவைப்பட்ட சில சித்திகளைப் பெறலாமே தவிர, நேராக அவர்களால் ஜீவன்முத்தீ நிலையை அடைந்துவிட இயலாது. ஆனால், அவர் கிருபையால் தத்துவ ஞானியான குருவின் தேகத்தை அணுகி அவரின் இடப்பக்கத்தில் நின்று கொண்டு கேட்கும்போது, குரு அவருக்கு உண்மை உபதேசத்தை அருள்வார். வேறுவிதத் தினால் சீடனுக்கு உபதேசம் கொடுக்க மாட்டார். அதனால் ஈசுவரனை அணுகி நின்று கேட்பதைவிட குருவின் தேகத்தை ஒட்டி இடமிருந்து கேட்பதுதான் ஈசுவர சொரூபத்திலும் விசேசமுடையதாக இருக்கும். அதனை இந்நூலின் 88, 343வது சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளதை படித்து அறிந்து கொள்ளலாம்.

ஈசுவரனை நேரே உபாசிப்பவனுக்கு புண்ணியமாகிய அதிர்ஷ்ட பலம் உண்டாகும். குரு வடிவில் இருக்கும் ஈசுவரனை உபாசிப்பவனுக்கு அந்த அதிர்ஷ்ட பலத்தோடு, குருவின் தரிசனத் தன்மையால் குருவின் திருமுகத்திலிருந்து வெளிப்படும் உபதேச மொழிகளால் உபாசகனது அஞ்ஞானங்கள் அனைத்தும் (மும்மலங்கள் அனைத்தும்) ஒழிந்து போய், மெய்யுணர்ச்சிகளால் அளவிட முடியாத அளவுக்கு பேரானந்தத்தை அனுபவிக்கக்கூடிய தன்னை அறிந்திடும் மெய்த் தெளிவானது அவனுக்கு உண்டாகிடும். இதனால் குரு வடிவம் ஈசுவர வடிவத்தைவிட சிறப்புடையதாகும்.
ஈசுவரன் தன்னை வெளிப்படுத்தாது இருப்பினும், அவனது சிற்சக்தியானது தத்துவத் தியானிகளின் தேகத்தில் மின்சார சக்தியினைப் போன்று, துவாதசாந்தத்தின் (கபால உச்சி) வழியாக சிறப்புடையதாகப் பிரவேசித்து, மிகவும் பிரகாசம் கொண்டதாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். அச்சக்தியின் சில பாகங்கள் பாதங்களின் வழியாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
அதனால் ஈசுவரனைச் சரணடைந்து தம் வாழ்க்கையை அவனுக்கு அர்ப்பணித்து, அவனின் திருவருளைப் பெற விரும்புவோர் ஒவ்வொருவரும் குருவின் திருவடிகளைப் பணிந்து குரு சேவை செய்து வர வேண்டும். அவரின் திருவடியின் வாயிலாக வெளிப்படும் சிற்சக்தியின் ஆற்றலால் அவர் எல்லா நலமும் வளமும் பெறுவார்.
குருவின் திருவடிகளை வணங்கி நிற்கும்போது, அவரிடத்திலுள்ள சக்தியானது திருவடிகளின் வழியாக வணங்குவோரது திருவடிகளின் உச்சி, மகாரப் புள்ளி (புருவ மத்தி), உடற்பகுதி, மார்பு, கழுத்து, கைவிரல் நுனிகள் முதலியவற்றின் வழியாக அவர்களிடத்துப் பிரவேசித்துவிடும்.
குருவின் விருப்பத்திற்கு தக்கபடி நடந்தால், குருவின் கருணை* மிகுதியோடு பார்க்கும் திருவடிகளின் பார்வை சக்தியினால், அவர்களின் சிரசில் தொடுவுணர்வு ஏற்படுவதினாலும், ‘இவனுக்கு நலம் உண்டாகுக’ என்று எண்ணுவதாலும், அவர்களை ஆசிர்வதிப்பதாலும், குருவின் சிறப்புடைய சக்தியானது அவர்களிடத்தில் பிரவேசித்துக் கொண்டிருக்கும்.
(*குருவானவர் கருணையோடு சீடனின் பாவங்கள் நீங்கும்படி பார்ப்பதைத்தான் குரு தீக்ஷை என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட குருவின் தீக்ஷையானது சீடனுக்கு விமலமாகிய ஞானத்தைக் கொடுக்கின்றது. மலமற்றத் தன்மையே விமலமாகும். சீடனின் கர்மவாசனைகளை எரித்தொழிக்கிறது. அதனால்தான் குருவின் இக்கருணைப் பார்வையை குரு தீக்ஷை என வேதங்களும் உபநிடதங்களும் பறைசாற்றுகின்றன. சீடனின் கர்மவாசனைகளை ஒரு குருவின் கருணை நீக்காவிட்டால், அவர் குருவே அல்ல.)
அவர்களது சற்பாவனையானது அதிகரிக்கும்போது, சாதாரண ஒளிப் பிரகாசத்தைக் கொண்ட ஒரு சிறிய விளக்கிலிருந்து கொளுத்தப் பட்ட ஓர் பெரிய தீ ஒளியானது அதனைவிட அதிகம் பிரகாசம் கொண்டதைப் போல, அக்குருவின் வாயிலாக ஈசுவர சக்தியானது விசேஷமாகப் பிரவேசித்து, அவர்களிடத்தில் இருப்பதிலேயே அதிகப் பிரகாசம் உடையதாக இருக்கும்.
இதனால்தான் குருவே சிறந்தவர் என்றும் அவரை அல்லாமல் எவ்விதத்தாலும் எவ்விடத்தும் மனித உயிர்களுக்கு ஜீவன்முத்தீயானது கிடையாது என்று இந்நூலோடு வேத, ஆகம, புராண, இதிகாசங்களும் முரசு அறைகின்றன.
ஆகவே, உலகத்தில் எம்மதத்தவரும் எப்படிப் பட்டவரும் குரு பக்தி செய்ய வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும்.
அத்தன்மையை அடைய குரு பக்தி சித்திக்க வேண்டுமாயின், தினந்தோறும் இந்நூலினைப் பாராயணம் செய்து வருவார்களானால், அப்புண்ணிய விசேஷத்தாலும், இந்நூலின் அர்த்தவடிவ குருப்பிரபாவத்தினை அடிக்கடி மனதில் நினைவுபடுத்திக் கொள்வதாலும் மனப்பதிவு களாலும் வெகு சுலபமாக குரு பக்தி உண்டாகிவிடும். அதனால் அடையப்படும் பலன்களுக்கோ எல்லையே இல்லை என்பது நிச்சயமான ஒன்றாகும்.
என்றும் வேண்டும் குருவன்பும் இறையன்பும்
திருச்சிற்றம்பலம்


