
உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் – 03
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
திருச்சிற்றம்பலம்
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)
பொழிப்புரை : பெண்களின் மோகத் தீயினால் ஆண்களின் சுக்கிலம் வெளிப்படுவதை தடுத்து, சுக்கிலத்தின் சூக்கும ஆற்றல்களைப் பிரித்து எடுத்து, சிவத்தின் திருவடிகள் வெல்க. வேகம் – சுக்கிலம்.
பிரமஞானத் தவத்திற்கு வித்தாகிய சிவத்தின் திருவடிகள் அஞ்ஞான தத்துவங்களை அழிக்கும் அணுவில் அடங்கியுள்ளதால், சிவ ஞானத் திருவடிகள் வெல்க.
பிரமஞானத் தவத்தைச் செய்யாதவர்களுக்கு சிவத்தின் தாமரைத் திருவடிகள் தூரத்தில்தான் இருக்கும் என்பதால், சிவத்தின் தாமரைத் திருவடிகள் வெல்க.
கைகளைக் கொண்டு செய்யப்படும் பிரமஞானத் தவத்தை அறிந்த பிரம ஞானிகளுக்கு அக மகிழ்வினை உண்டாக்கும் சிவத்தின் திருவடிகள் வெல்க.
தலையின் பிரணவ உச்சியில் இந்திரிய சத்திகளை ஒன்றுசேர்க்கத் தெரிந்திருக்கும் பிரமஞானிகளால் பிரகாசத்தைக் கொடுத்து கொண்டிருக்கும் சிவத்தின் திருவடிகள் வெல்க.
ஞான மெய்ப்பொருளுரை : காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருபவர்களுக்கு அவர்களின் முகமானது பொலிவுடன் (தேஜஸ் உடன்) பிரகாசமாகக் காணப்படும். சுக்கிலத்தை வீணாக்காமல் பிரமச்சரியம் இருந்து தவம் செய்வோர்க்கு சுக்கிலத்தின் மாசற்ற எண்ணிக்கையால் உடலில் ஒருவித பிரகாசம் உண்டாகும். காரணம் சுக்கிலம் என்பது ஒளியாற்றல் கொண்டது. வெள்ளியைப் போன்ற வெண்ணொளியாம் ஆத்ம ஒளியைக் கொண்டது. அந்த ஒளி ஆற்றல்தான் மனிதர்களின் முகத்திற்கு தேஜஸைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.
சுக்கிலத்தின் சேமிப்பு அதிகமாக உள்ள மனிதன் உடல் மற்றும் மன ஆற்றல்கள் உடையவனாக, தேஜஸ் மிகுந்தவனாக விளங்குகிறான். மனிதனிலிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது இந்த ஓஜஸ் எனும் உயிர் சத்தியே. சுக்கிலத்தின் திரவநிலையை ஆவிநிலைக்கு மாற்றிவிட்டால், அப்போது சுக்கிலத்தின் உயிர்சத்தி கீழே நோக்காமல், எப்போதும் ஆவியைப் போல மேல்நோக்கியே ஓஜஸாக சென்று கொண்டிருக்கும். சுக்கிலம் திரவ நிலையில் இருக்கும்வரை காமத்தை அடக்க முடியாது. திரவ நிலையை முதலில் திட நிலைக்கு மாற்ற வேண்டும். அதன்பின்தான் ஆவி நிலைக்கு மாற்ற முடியும். பிரமஞானத் தவத்தில் இருப்போர்க்கு காமம் கட்டுப்பட்டே நிற்கும். காரணம், காமத்திற்காக காரணமான மன்மதன் அங்கே சுட்டெரிக்கப் படுவதால்தான். பிரமஞானத் தவத்தல் மனம் சுட்டெரிக்கப்படுவதால், மனமற்ற நிலை சாதகனுக்குக் கிடைத்துவிடும். மனமில்லாதபோது மன்மதனின் கரும்புவில்லிற்கு அங்கே ஒருவேளையும் இல்லை. மன்மதன் எழாதபோது, காமமும் சாதகனுக்குள் எழுவதில்லை. காமம் எழாதபோது, சுக்கிலம் திரவநிலையிலிருந்து திடநிலைக்கு வந்து, சுடராழித் தவத்தில் திடநிலை சுக்கிலம் ஆவிநிலைக்கு ரசவாதம் நடைபெற்றுவிடும்.
ஓஜஸ் அதிகமுள்ளவன் தலைவனாக, வசீகரம் உடையவனாக விளங்குகிறான். நம் உடலில் அதிக உயிர்சத்தி காமசத்தி வெளிப்படுகின்ற விந்து, நாதத்தில்தான் இருக்கிறது. எனவே காமத்தால் விந்து, நாதத்தை இழந்து, உயிர் சத்தி வீணாகி, ஆற்றல்கள் சிதறிப் போகாமல் பாதுகாத்தால், அதிக ஓஜஸ் சத்தி உடையவர்களாக விளங்கலாம். நாம் உண்ணும் உணவு அன்னரசமாகி, இரத்தமாகி பிறகு மற்ற தாதுக்களாக மாறுகிறது.
இதில் எண்பது துளி இரத்தம் ஒரு துளி விந்துவாக மாறுவதால், அதில் உயிர்சத்தி அளவுக்கு அதிகமாக உள்ளது. விந்து, நாதமே சிருஷ்டியின் ஆதாரமாக விளங்குவதால் அவற்றிற்கு அந்த அளவு சத்தி வழங்கப்பட்டுள்ளது. எனவே சிருஷ்டி என்கிற அற்ப உடல் சுகத்துக்காக அல்லாமல் குழந்தைப் பேறுக்காக மட்டும் அதைப் பயன்படுத்தி விரையத்தை தவிர்ப்பவர்கள் அதிக ஓஜஸ் சத்தி உடையவர்களாகத் திகழ்வார்கள். இந்த விந்து, நாதமாகிய சுக்கில, சுரோணிதம் முறையே ஆண்களுக்கு விரைக் கொட்டைகளிலும், பெண்களுக்கு சினைச் சுரப்பிகளிலும் சேமித்து வைக்கப்படுகின்றன. அங்குதான் உண்டாகின்றன என்றும் சொல்வார்கள். நம் உடலில் உண்டாகும் வெப்பத்தினால் இந்த விந்து, நாதத்தில் உள்ள சத்தி ஓஜஸ் எனும் மின்சத்தியாக மாறி, நுண்ணிய நாளங்கள் வழியாக உடலெங்கும் பரவுகிறது.
வீணை மீட்டுவதற்கு முன் தந்திகளை வலுப்படுத்துவதற்கு ரோசனம் தடவுவது போல, பாவில் உள்ள நூலிழைகள் பலம் பெறுவதற்கு பசை தடவுவது போல இந்த ஓஜஸ் பரவுவதனாலேயே நம் நாடி, நரம்புகள் அனைத்தும் வலுப் பொறுகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்தி, புலன்களைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த ஓஜஸானது இன்னும் வலிமையான ஆற்றலாக அதாவது தேஜஸாக மாறி மூளையைப் பலப்படுத்துகிறது.
இதனால் மேதா விலாசம் உண்டாகும், உடல் ஒளி வீசும். சுக்கில சுரோணிதம் சேரும் பொழுதுதான் ஒரு புதிய ஜனனம் உருவாகிறது. அவை இரண்டையும் சேராமல் இருக்கும்பொழுது அறிவாற்றலும், அருளாற்றலும் வளரப் பெறுகிறது. ஒரு நெல்லை மண்ணில் போட்டால் பல நெல் மணிகளாக விளைகிறது. அதே நெல்லை சமைத்து உண்டால், அது உடலையும், உயிரையும் வளர்த்து வீரியத்தைத் தருகிறது. அதே போல்தான் சுக்கிலத்தை சுரோணிதத்தில் இணைத்தால் புதிய உடல்கள் தோன்றுகின்றன.
அதே சுக்கில சுரோணிதத்தை இணைக்காமல் ஓஜஸாகவும், தேஜஸாகவும் மாற்றும் பொழுது மனிதன் தெய்வ நிலைக்கு உயர்கிறான். இதை உணராதவர்கள்தான் உடலுறவின் மூலமாகவும், சுய இன்பம் மூலமாகவும் அவற்றை விரையம் செய்கின்றனர். விவசாயி வயலில் விளையும் நெல் முழுவதையும் விதைப்பதற்கு பயன்படுத்துகிறாரா? இல்லையே? குறைந்த அளவே விதை நெல்லாக எடுத்து
வைக்கிறார். பெரும் பகுதியை உணவிற்காகவே பயன்படுத்துகிறார்.
அது போலவே விந்து, நாதத்தின் சிறப்பறிந்து, இடமறிந்து, காலமறிந்து, தேவையறிந்து, இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். எஞ்சிய பெரும் பகுதியை உள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டும். மனிதனின் புலனின்ப நாட்டத்தால் விந்து கீழ் நோக்கிப் பாய்கின்றது. உயர்ந்த எண்ணங்களாலும், தவத்தினாலும், பத்தியினாலும், நோன்பினாலும், யோகத்தாலும், ஞானத்தாலும் விந்து மேல் நோக்கிப் பாய்கின்றது.
நம் மூலாதாரத்தில் உண்டாகும் ஆன்மீக வெப்பத்தினால் விந்துவிலுள்ள ஓஜஸ் சத்தியானது பல்வேறு சத்திகளாக மாறி உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும் ஆற்றலைத் கொடுக்கிறது. மனிதன் தன் பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கு சுக்கிலத்தின் ஓஜஸ் சத்தியை மேம்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
சுக்கிலத்தின் விரயத்திற்குத் தகுந்தாற்போல் தேஜஸ் கூடும், குறையும். பிரமஞானத் தவத்தினால் மன்மதனின் காமத்தொழிலானது கெடுக்கப்படும். காமம் ஒழிவதால் சுக்கிலத்தின் ஒளியுள்ள கலைகளானது மேல்நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். அக்கலைகளின் உச்சியில்தான் சிவம் வெளிப்பட்டுச் சீவனான சாதகனை ஆட்கொள்வார். இதன்பெயர் தத்புருட நிலை என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றன. இந்நிலை சிவத்தின் முகமாகத்தான் சொல்லப்படுகிறது. இவ்வாறு சுக்கிலக் கலைகளின் ஒளி ஆற்றல்கள் முகத்தில் வெளிப்படுவதால், சாதகர்கள் எப்போதும் ஆனந்த நிலையிலேயே இருப்பார்கள். அதனால், சிவத்தை “வேகம் கெடுத்து ஆண்ட” என்றார் மாணிக்கவாசகர்.
விந்து சத்தியின் பெருமைபற்றி திருமந்திரம் கூறுவதைக் கேட்போம்.
விந்து விளையும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. (தி.ம.1957)
விந்து துளிதுளியாகக் கூடி விளைகின்ற விளையும், விளைந்து முற்றினால் எய்தும் பயனும், உணர்ந்து அடங்குதல் நன்று. இம்முறையே எப்பொழுதும் கைக்கொண்டால் நீண்டு வாழ்தல் நேரும். அவ்வாறின்றி ஆண்பெண் கூட்டத்தினை விரும்பினால் அவ்விந்து வீணாய்க் கழிந்து வாழ்நாளை வீண்நாள் ஆக்கும். இவற்றை உண்மையாக உணரின் விந்து அடங்கும். அவ் வடக்கத்தில் பேராக்கம் உண்டாகும். அடங்காதுவிட்டால் பெரும்போக்கு ஏற்படும். நாதத்தால் ஏற்படும் விந்துவின் சிறப்பும் அருளால் உணர்வார்க்கு விந்து அடங்கும் வெற்றியும் உண்டாகும்.
அழிவு – வெளிச்செல்லுதல். நந்திய – மிகுந்த.
விந்துவெண் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியினாலே நயந்து எரித்து
அந்தமில் பானு அதிகண்டம் மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமுது ஆமே. (தி.ம.1958)
விந்துவென்று சொல்லப்படுகின்ற உயிர்வாழ் வித்தினைப் பொருந்திய மூலத்திடத்தில் விளங்கும் மூல அனலால் செம்மையுறச் செய்து கொப்பூழ் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்திற்கு வலப்பால் நாடி வழியாக ஏற்றி, அதன்மேல் நெஞ்சம் முதல் நெற்றி வரையுள்ள சந்திர மண்டலத்திற்கு இடப்பால் நாடி வழியாக ஏற்றி அச்சந்திர மண்டலத்தைச் சார்புறத் தண்மையும் வெண்மையுமிக்க வண்மை அமுதமாகும்.
(அ.சி.) வீசம் – வித்து. பானுவதி கண்டம் – சூரியன் இருக்கும் இடம் வலதுகண். சந்திரன் சார்பு – சந்திரன் இருக்குமிடம் இடதுகண் (வலது மூக்கு இடது மூக்குமாம்).
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவபோகம் ஆதலாற் சித்தி
அமுதப் பலாவனம் ஆங்குஉறும் யோகிக்கே. (தி.ம.1959)
சந்திரனின் துளிதுளியாம் அமுதம் என்று சொல்லப்படுகின்ற உடற்கண் விந்து மாளுதலாகிய கட்டுப்பாட்டினை எய்த, அதுவே பெருக்கெடுத்தோடிக் கொப்பூழில் தோன்றுகின்ற சிவ அனலில் கட்டுப்படும். அப்பொழுது ஆர் அறிவில் விளைவது சிவபோகமாகும். அதனால் அவ்விடத்துத் திருவடியின்பப் பலாவனம் எய்தும். இவை அனைத்தும் அருளால் முயலும் சிவயோகியர்க்கு உண்டாம். பலாவனம் : பலாத்தோப்பு.
அமுத..மாள – விந்து கட்டுப்பட அமுத….மாள – அவ்விந்து சிவாக்கினியாற் கட்டுப்பட. அமுத….யோகம் – அழிவற்ற சிவயோகம். பலாவனம் – பலாக்கனி நிறைந்த இடம்.
யோகம் அவ்விந்து ஒழியா வகைபுணர்ந்து
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குஉறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. (தி.ம.1960)
சிவபோக நுகர்வினராய யோகியர் உலகியல் வாழ்வின்படி மணந்துகொண்ட அத்தகைய சிவபோக நுகர்வினராகிய பெண்ணுடன் கூடினாலும் உடற்கூட்டமேயன்றி உளக்கூட்டம் சிவனிடத்திருப்பதால் விந்து வெளிப்படுவதினின்று, அவர், அத்துணை மனவடக்கம் அருளால் பெற்றவராவர். அக் காலத்து இருவர்க்கும் எய்துவது அன்பியற் போகமன்று. அருளியற் போகமுமன்று. ஆனால் அருள்கூட்டக் கூடும் ஆண்டான் அடியிணைசார் இன்பியற்போகமாகும். இதுவே அருளால் துய்க்கும் நற்போகமாகும். இச் செந்நெறியொழுக்கம் மேற்கொள்ளாத அறியாமையால் மூடப்பட்ட மூடர்கள் அனைவரும் ஆணவச்சார்பாமருளால் பெருமயக்குற்று மோகங்கெட ஆகம் முயங்காது ஆகங்கெட மோகம் முயங்கி விந்துவிட்டழிவர். கண்டால் கைதொட்டால் சொற்கேட்டால் கருதினால், கலவாமலே விந்து கழியும் கழிகாமுகர் மூடர். இன்பியற் போக இயல்பினர் நம்பியாரூரரும் நங்கை பரவை சங்கிலியாருமாவர்.
விந்து ஒழியா வகை – விந்து வெளிப்படாவண்ணம். ஆக….போகம் – ஆண் பெண் கலக்கும் காலத்திலும் விந்து வெளிப்படாமல் போகம் செய்வதுதான் சிவபோகம்.
விந்துவும் நாதமும் மேவக் கனல்மூல
வந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. (தி.ம.1963)
மேலோதியவாறு விந்துவும் நாதமும் நடுநாடி வழியாக உடற்கண் பொருந்த மூலத்தெழுந்த அனல் மயிர்த்துளைதோறும் நிலைபெறும்படி, நெஞ்சமானது பயிற்சிவயத்தால் உலகியலை நோக்காது மாறும்படி இடையறாது ‘சிவசிவ’ என்று எண்ணிக்கொண்டிருப்பச் சிவமாவர் அம்முறையால் விந்துவின் தூய்மையாகிய கட்டுப்பாடும் எய்தும். இதுவே உடம்புநிலைக்கும் வித்தாகும். வித்து – காரணமுமாம். மாளுதல் – கட்டுப்படுதல்.
கனன் மூல – மூலக்கனல். சிந்தனை மாற – உலக சிந்தை சிவத்தினிடம்மாற. விந்துவும் மாளும் – விந்துவும் கட்டப்படும்.
வித்துக்குற்று உண்பான் விளைவு அறியாதவன்
வித்துக்குற்று உண்ணாமல் வித்துச்சுட்டு உண்பவன்
வித்துக்குற்று உண்பானில் வேறலன் நீற்றவன்
வித்துக்குற்று உண்ணாமல் வித்துவித்தான் அன்றே. (தி.ம.1964)
உலகுக்கு அச்சாணியாகத் திகழும் தாளாண்மையில் குறைவிலாவேளாளர்கள் எத்துணை யிடுக்கண் நேரினும் வித்தினைக்குற்றி ஒரு ஞான்றும் உண்ணார்; என்னை, வித்தினும் விளைவே மிக்கபயன் தருவது ஆதலான். அதுபோல் சிவயோகியரும் வித்தாகிய விந்தினைப் பெண்பால் விடுதலாகிய குற்றினைச் செய்து தம் வாழ்நாள் குறைதலாகிய ஊணினையுண்ணார் விந்துவை அடக்கி நெடுநாள் வாழின் அந்நாள் காறும் உலகத்துப் பலகோடி மக்களுக்கு அவ்வியோகியர் பெரும் பயனாவர். அங்ஙனமின்றிப் பெண்பால் விந்துவினை விட்டு ஒருசில மக்களைப் பெற்றுத் தம் வாழ்நாளை வீணே மாய்த்து விரைந்து மாள்வதால் உண்டாம் பெரும்பயன் யாது? திருவருள் கைவரப்பெற்றுப் பொருவரும் அருள் நூலும் தெருள் நூலும் செய்தருளினார் வித்துக் குற்றுண்ணா விழுமிய வேளாண் சான்றோரேயாவர். விளைவறியாதவனே வித்துக்குற்றுண்பான்: அதுபோல் வித்துக்குற்றுண்ணாமல் வித்தாகிய விந்து வினைக் காமத் தீயால் பெண்பால் விடுத்து அதனைச் சுட்டுண்பான் வித்துக் குற்றண்ணும் வேளாளனினும் வேறல்லன். வித்தினைக் கட்டுப்படுத்தி அவ் விந்துவைப் பெண்பால் விடுத்து உண்ணாமல், தன்பால் நடுநாடி வழியாக மேலேற்றித் தன் உடற்கண் வித்து விதைத்தவன், விழுத்தவச் சிவயோகியாவன். வித்துக்குற்றுண்ணாமல் என்பதற்கு நெல்லின் விளைவின் மாண்புநோக்கி அதனை உண்ணாமல் போற்றியும் அதனினும் சிறந்த விந்துவைச் சுட்டுண்பவன் எனினும் ஆம்.
வித்துத்துக்குற்றுண்பான் – வித்துக்கு வைத்திருக்கும் நெல்லை குத்தி உண்பான். அதுபோல், விந்துவைக் கட்டிச் சுழுமுனையில் ஏற்றாமல் மாதரிடத்தில் செலுத்துபவன்.
விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படும் ஆயிடில்
அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி ஆகுமே. (தி.ம.1971)
விந்துவும் நாதமும் அருளால் பொருந்தியுடன்கூடித் திங்களுடன் தலைப்படு மாயின் ஆயிரவிதழ்த் தாமரைப் பரவெளியினின்று ஊற்றெழும் அமிழ்தம் வந்து வெள்ளம் போன்று இடையறாது பெருகும். அவ்விடத்துத் திருவைந்தெழுத்து மந்திரமே ஆகுதியாகும்.
சந்திரன் – இடைகலை. அங்குதி மந்திரம் – அப்போது உண்டாகும் உறுதிப்பாடு.
திருவடிகளில் உள்ள கலைகளை வெளிப்படுத்தி மேல் ஏற்றுவதால் “பெய்கழல்கள்” என்றார்.
அவ்வாறு கலைகளை மேல் ஏற்றும்போது பிறப்பானது அற்றுப் போவதால், “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள்” என்றார்.
பிரமஞான சாதனைகளை செய்யாதவர்களைத்தான் மாணிக்கவாசகர் புறத்தார் – அன்னியர் என்று அழைத்தார். இவர்கள் எப்போதும் தூரத்தே இருப்பதால் “சேயோன்” என்றார்.
திருவடிகள் தாமரை மலர்களைப் போன்று இருப்பதால், “பூங்கழல்கள்” என்றார்.
எனவே, “புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க” என்று பாடினார்.
கோயில்களில் இறைவனை வணங்க கைகளை தலைக்கு மேலே குவிப்பது வழக்கம்தான். கைகளைத் தலைக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் நிறுத்தி இறைவன் திருவடிகள் அங்கே இருப்பதாக நினைத்து வணங்கும்போது கரங்களின் குவிப்புக்குள் உள்ள இடம் எல்லாக் கலைகளாலும் நிறைந்து இருப்பதால், அதை உணரும் மகிழ்ச்சியானது எப்பொழுதும் சாதகனை மூழ்க வைத்துவிடும். அதனால், “கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள்” என்றார்.
இந்திரியங்களின் சத்திகளைப் பிரணவ உச்சியில் சேர்க்கும் பிரமஞான தவ ரகசியத்திற்குத் தலைவனான சிவன்கழல்கள் என்பது தோன்ற, “சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்” என்றார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!


