
போற்றி ! அருளுக !
கடவுளை, தமிழில் ‘போற்றி! போற்றி!’ என்று வாழ்த்துதல் மரபு. போற்றி என்ற சொல்லிற்கு, ‘போற்று’ என்றும் பொருள் கொள்ள வேண்டும். போற்றி என்ற சொல்லில் உள்ள இகர ஈற்றை, வியங்கோள் எனக் கொண்டால் ‘போற்று’ என்று வரும். ‘போற்றுக’ என்ற சொல்லுக்குக் ‘காப்பாயாக’ என்பதே பொருள். சொல் இருக்கும் இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.
“போற்றி யருளுக நின் ஆதியாம் பாதமலர்” என்ற தொடரில் “போற்றி” என்பது வினையெச்சமாகும். இறைவன் எப்பொருளுக்கும் முதலாக திகழ்பவன். “வாழ் முதலே!” என்றும் அருள்வது காண்க! இந்த உலகத்தினுடைய அனைத்துப் பொருள்களின் ஆதியே! நின் திருவடிகளை எமக்குள் அருளுக! ஞான மெய்ப்பொருளாம் திருவடி ஞானத்தை தந்தருள்க! பிரமஞானத் தவத்தால் பெறப்படும் திருவடி இன்பத்தை தந்தருள்க! எம்மைக் காத்தருளவும் செய்க! முத்தி, நெறியறியாத மூர்க்கரொடு சேர்ந்திடாமல் எறும்புகளால் அரிக்கப்படும் புழுக்களைப் போல், புலன்களால் அரித்து அழிக்கப் பெறாமலும் “நான்”, “எனது” என்ற ஆணவச் செருக்கால் தலையால் நடக்காமலும் சிந்தையுள் சிவத்தை வைத்து வாழ்ந்திட அண்ணித்தருள் செய்க! எமக்கு வாழ்நிலையின் முடிவான பேறாகிய நின் செந்தளிர் போன்ற திருவடிகளைத் தந்தருள்க. செம்மை சேர்ப்பதால் செந்தளிர்கள்! இதை ‘செம்மலர்’ என்று சிவஞான போதம் கூறும்! சிவம் ஆதியாக நிற்றலைப் போல அந்தமாகவும் நிற்கிறது. உலகம் அனைத்தும் ஒடுங்கும் கடையூழிக் காலத்திலும் இருப்பவன்தான் சிவம். அவனே உயிர்கள் களைப்பாறிப் புத்துயிர்ப்புப் பெறுவதற்குக் இறுதி ஊழிக்காலத்தில் உலகத்தை ஒடுக்கிப் பின் புதுப்பித்து அருளுகின்றான். எனவே, சிவனே அந்தம், ஆதி, முதலும் நடுவும் முடிவும் அவனே!
எல்லா உயிர்களின் தோற்றத்திற்கும் காரணம் இறைவனே! எல்லா உயிர்களும் இறைவனிடத்தில் தோற்றம் என்பது படைப்பு என்று பொருள் தராது. தோற்றம் = தோன்றுதல்; புலப்படுதல். “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற திருக்குறளுக்குத் “தோன்றின்” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும் பாங்கே இங்கேயும் கொள்ள வேண்டும். அதாவது பலரறிய மக்கள் மன்றத்தில் தோன்றும் பொழுது புகழொடு தோன்றுக. அங்ஙனம் புகழ்பட வாழும் தகுதி பெறாவிடின் தோன்றாதே என்பதுதான். அந்தக் குறளுக்குரிய உண்மைப் பொருள் என்றும் உள்ள உயிர் ஆணவத்தால் கட்டுண்டு செயலற்றுக் கிடந்த நிலை, தோன்றா நிலை. இறைவன் கருணையால் செயற் கருவிகளுடன் கூடிய உடலையும் அறிவுக் கருவி கருவிகளாகிய (கரணங்களை) புலன்களையும் கொண்டு அறிவு விளக்கமுறும் நிலையில் தோன்றியதே தோற்றம்.
எல்லா உயிர்களும் பொன்னும் பொருளும் பெற்று வாழும் வாழ்வளிப்பதால் “பொற்பாதம்” என்றார்.
“பொன்னும் மெய்ப் பொருளும் கருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை”
என்னும் நம்பியாரூரர் சொல்லியிருப்பதையும் இங்கே காணலாம். பொன் வேறு; பொருள் வேறு. பொன் – தங்கம். இன்று பணம் முதலியனவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பொருள் – நுகர் பொருள்கள், உடலோடு இணைந்திருக்கும் உயிர்களுக்கு உயிர் வாழ உணவு தேவை ; மருந்து தேவை. உடை தேவை. களிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியன தேவை. இவையெல்லாம் நுகர்பொருள்கள். திருவள்ளுவரும்
“பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை”
என்றார். இங்குப் பொருள் என்பது உயிர் வாழ்தலுக்குத் தேவையான உணவையே குறிக்கும்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”
என்றும் கூறுவர். உணவு, உயிராகாது. உணவால் உயிரைக் கொடுக்கவும். இயலாது. உடலில் உயிரைக் காத்து வைத்து வாழ்வளிப்பது உணவு.
போகம் – இன்பம். மாணிக்கவாசகர் “போகமாம் ஆங்கழல்கள்!” என்று பாடுகின்றார். போகம் என்பது பொருளைத் தரவல்லது. போகம்- இன்பம். உயிர்க்குலத்துக்கு இன்பம் தரும் வாயில்களும் இன்பம் தருபவையும் பலப்பல. ஆன்மாக்கள் வளர்ச்சி அடைய, அடைய இன்பத் துறைகளும் மாறும். குழந்தைப் பருவத்தில் தேவை விளையாட்டுப் பொருள்கள்; இனிப்பு மிட்டாய்கள்! இளமையில் தேவை கல்வி; கற்றோர் வாய்க் கேட்டல். வாலிபப் பருவத்தில் காதலின்பம். வாலிபப் பருவத்தில் இன்பத் துறைகள் ஆற்றலுக்கும் தகுதிக்கும் ஏற்பப் பலப்பலவாகிவிடும். சாதனை செய்தல் ஆகியவற்றிலும் இன்பம் காண்பர். முதிர்ந்த – ஆன்ம முதிர்ச்சி நிலையில் இறைவன் கழலேத்தும் இன்பத்தையே இன்பமெனக் கொள்வர். “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே” என்றும் மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ளார்.
இறைவனுடைய திருவடிகளைக் கண்ணாரக் கண்டு அடையும் இன்பமே இன்பம். உயிர்கள் – ஆன்மாக்கள் அடையும் முடிவிலா இன்பம் திருவடி இன்பமேயாம். திருவடியின்பத்தை ‘ஆனந்த வெள்ளம்’ என்று கோவையார் போற்றும் திருவடியின்பமாகிய ஆனந்த வெள்ளம் வற்றாது; முற்றாது. அந்த ஆனந்த வெள்ளத்தினை வழங்குவதே ஆனந்தக் கூத்தனின் ஆடல் கூத்து!
‘பூங்கழல்கள்’- மலரின் தன்மையுடைய திருவடிகள் என்பது பொருள். மலர், மங்கலப் பொருள்; மணமுடையது; தேன்பிலிற்றும் இயல்புடையது; மென்மையானது. ஆணவக் காரிருளினால் கட்டுண்டும் ‘யான்’ ‘எனது’ என்ற செருக்கில் சிக்கிக் கொண்டும் தலையால் நடக்கும் ஆன்மாக்களை, இறைவன் வன்முறையால் அணுகுவதில்லை. இறைவன் ஆன்மாக்கள் செய்யும் பிழைகளையெல்லாம் பொறுத்தாள்பவன். மேலும் பிழை எல்லாம் தவிர்த்தும் காத்து ஆள்பவன். பிழைகளைப் பொறுத்தலினும் பிழைகளைத் தவிர்த்தல் பேரறம் என்றும் நினைந்து நினைந்து போற்ற வேண்டிய உதவி. இறைவன் ஆன்மாக்களை ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து மெள்ள யாதொரு சுவடும், களங்கமும், கறையும், நோவும் இன்றி மீட்பதைப் “பையத் தாழுருவி” என்பார் மாணிக்கவாசகர். ஆதலால் இறைவன் சிவன், ஆன்மாக்களை மென்மையாக இன்ப வெள்ளத்தில் அழுத்தி ஆட்கொள்வதால் பூங்கழல்கள் என்றார்.
இங்குத் திருவடிகளைக் ‘கழல்’ என்றார். வெற்றிச் சிலம்படித்த திருவடிகளைக் கழல் என்று கூறுவது மரபு. ஆம்! எம்பெருமான் சிவனின் திருவடிகளை- கழல்கள், உயிர்களை ஆட்கொள்வதில் வெற்றி பெற்றவை. முப்புரம் எரித்து வெற்றி கொண்ட கழல்கள்! சிவன், காலத்தை வென்று விளங்கி ஊழி முதல்வனாக நிற்பவன். ஆதலால், சிவபெருமானின் திருவடிகள் – கழல்கள்!
சமயநெறிக் கோட்பாட்டின் அடிப்படையே பலருக்கு விளங்காதது. நம்மை- உயிர்களைக் கடவுள் படைத் தான் என்றே பலரும் கருதுகின்றனர். ஏன் சில சமயங்கள் அப்படியே கூறுகின்றன. நம்மை – உயிர்களைக் கடவுள் படைத்தான் என்பது அறிவியல் முறையிலும்கூட இசைந்து வாராது. கடவுள் பரிபூரணன்: குறைவிலா திறைவு; கோதிலா அமுது; குறையிலிருந்து நிறை தோன்றலாம். இது பரிணாம வளர்ச்சி. நிறையிலிருந்து குறை தோன்றாது. ஆன்மாக்களுக்கு உள்ள குறைகளை நோக்கின் கடவுள் படைத்திருப்பான் என்று சராசரி அறிவு கூட ஒத்துக் கொள்ளாது. ஆதலால் உயிர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. உயிர்கள் என்றும் உள்ளவை (Existence) “எல்லா உயிர்க்கும் தோற்றமாம்” என்பதற்குப் பொருள் கொண்டதுபோல, மறைவாகச் செயலின்றிக் கிடந்தவை, செயலுக்குரிய் அறிவுக் கருவிகளையும் செயற்கருவிகளையும் பெற்று இயக்கத்திற்கு வருவதே தோற்றம்.
“மூலையிலே கிடந்தேனை”
என்றார் திருமூலரும். உயிர்களுக்கு முடிவும் இல்லை. அப்படியானால் உயிர் வாழ்க்கைக்கு முடிவே இல்லையா? முடிவில்லாமல் இருந்தால், எய்ப்பும் களைப்பும் வந்து விடும். உயிர்களின் வாழ்க்கைக்கு எல்லை இறைவன் திருவடிகளைச் சார்தலேயாம். இந்த நிலையிலும் சமயங்கள் தம்தம் நிலையில் மாறுபடும், உயிர்கள் திருவடி ஞானம் பெறச் சிவத்தினை அடைந்து திருவடி இன்பத்தை அடைதலே உயிர்களின் வாழ்க்கைக்கு முடிவு. அப்படியானால் திருவடிகளில் உயிர்கள் கலப்பதன்மூலம் தன்னை இழந்து விடுகின்றனவா? இல்லை! உயிர்கள் – ஆன்மாக்கள் திருவடியின்பத்தில் தன்னை இழந்து விட்டால் முன் சொன்ன உண்மைக்கு மாறாகிவிடும். அதாவது உயிர்களுக்கு – ஆன்மாக்களுக்கு அழிவு இல்லை என்பதற்கு மாறாகி விடும். உயிர்கள் தன்னை இழத்தல், சிவத்துடன் சேர்ந்து தன்னை இழத்தல் என்பது பொருளால் இரண்டாகவும் தன்மையால் ஒன்றாகவும் விளங்குவதேயாம். தன்னை இழத்தல் என்பது தற்போத மிழத்தவேயாகும்; பாலொடு நீர் கலந்தது போல! பாலைக் காய்ச்சினால் தண்ணீர் நீராவியாகிவிடும். அது போலப் பாலொடு நீர் கலந்த நிலைதான் சிவத்தொடு ஆன்மா கலந்த நிலை.
இறைவன் சிவனைக் கண்டறிவார் இல்லை என்பது திருவாசகம். இறைவனைக் கண்ட பிறகுதான் நம்புவது என்பது சமயநெறிக்குப் பொருந்தாத விவாதம். காண்டல் – கண்களால் காண்பது. கண்களால் காணக் கூடியவன்தான் கடவுள் என்பதை
“புவனியில் சேவடி தீண்டினன் காண்க”
“கண்ணால் யானும் கண்டேன் காண்க”
என்றருளியுள்ளதை இங்கே நாம் ஒப்புநோக்க வேண்டும். கண்கள் அறிவுப் புலனுடன் தொடர்பு கொள்ளவில்லையானால் காட்சி நிகழ்ந்தாலும் பொருள் புரியாது. பொருளைப் பற்றியதாகக் காட்சி அமையாமல் போய்விடக்கூடும். சிந்தனை செய்து தெளிந்து, அந்த தெளிந்த அறிவால் அறிந்து அறிந்து, உணர்ந்து உணர்ந்து மெய்யாம் உயிரை அனுபவித்த பிறகுதான் கடவுள், கண் காட்சிக்குப் புலனாகும்.
இதைத்தான் நமது ஆதித்தமிழ்ச் சித்தர்கள் அவர்களின் பிரமஞானத் தவத்தினால் கண்டறிந்து, அனுபவித்து நமக்கெல்லாம் ஞானக்கொடையாக கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். சமயம் கூறும் பத்திநிலை வேறு ; திருவாசகம் சொல்லும் பிரமஞானம் என்பது வேறு. சமயம் பத்தியோடு தன்னை நிறுத்திக் கொள்கிறது. பிரமஞானமோ பத்தியின் வழியில் பயணப்பட்டு, முத்தி நிலையைக் கடந்து, சித்தியை அடைந்து, இறுதியில் இறையணுவை அடைந்து கலப்புற்றுவிடும்.
திருவாசகம் சொல்ல வருவது இந்த பிரமஞானத்தைத்தான். வெறும் பத்தி காட்டுவதால் மட்டுமே இறைவனைக் கண்டுவிட இயலாது. அங்கே அந்த பத்தனுக்குள் உயிர்க்கூடு விழிப்படைய வேண்டும். பத்தியால் உடல் திருப்திப்பட்டுவிடும். ஆனால், பத்தியால் உயிர் திருப்தியை ஒருக்காலும் அடைந்திடாது. அதற்குத் தேவை உயிர்க்கூட்டுக்குள் மேலே இருக்கும் சந்திரக் கலசத்தின் அமுதக்கலசம். அமுதக்கலசம் ஏற்கனவே நமது கர்மவினைகளின் சென்மாந்திரப் பதிவுகளின் காரணமாக உடைக்கவே முடியாத அளவுக்கு ஆழமாக இறுகிப்போய் கிடக்கிறது. அதை உருக வைப்பது மட்டுமே அமுதக்கலசத்தைத் திறப்பதற்கான ஒரே மந்திரச் சாவி.
இந்த மந்திரச் சாவியை நமது வலது கண்ணிலிருந்து திறக்க ஆரம்பிக்க வேண்டும். அதற்கு ஒரு ஞான சற்குரு தேவை. அவரின் பிரமஞானத்தை ஒரு விதையாக எடுத்துக் கொண்டு வந்து, நமது கண்களின் வழியே உயிர்க்கூட்டில் விதைத்தால் மட்டுமே, அந்த அமுதக்கலசத்தை உருக வைக்கவோ, திறக்கவோ இயலும். இதுதான் பிரம ரகசியம் – சிவ ரகசியம். இதைச் செய்யாமல் என்னதான் பத்தியால் அழுது புரண்டாலும் பரமேசுவரனைக் கண்டுவிட முடியாது. இது அத்தனை ஞானிகளின் வாழ்க்கைத் தெளிவு ; ஆதித் தமிழ்ச் சித்தர்களின் இறுதியான முடிவும்கூட. இமையா நாட்டத்தில் இறைவனைக் காண முடியுமே அல்லாது, இமைத்துக் கொண்டு வாழும்வரை ஒரு ஆணியும் நம்மால் புடுங்கிவிட முடியாது.
மக்களே! வேதங்கள் ஓதுவதினால் மட்டும் இறைவனைக் காண முடியாது; அறிய முடியாது; அனுபவிக்க முடியாது. இறைவனை – சிவனைக் காண அன்பு தேவை. ஆற்றல் மிக்க அன்பு தேவை. நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து ஊற்றெழும் கண்ணீரீனால் உடல் நனைந்துவிடும் அன்பு தேவை. இந்த அன்பை எளிமையான முறையில் அடைந்திட உங்களுக்கு பிரமஞானத் தவம் தேவை. இத்தவத்தைச் செய்யும்போது மேலே சொன்ன அன்பு தானாகவே சரீரத்தில் பிறந்துவிடும்.
உயிர்கள் உடலொடு கூடி நிலத்தில் தோன்றியது உய்வதற்காக! உயிர்கள் உய்வதற்காக உடுத்துக் கொண்ட உடையனையது உடம்பு. பிறப்பின் நோக்கம் உய்தல். உயிர் – ஆன்மா, தன் முயற்சியால் மட்டுமே உய்தல் இயலாது. இறைவன் சிவனின் கருணையும் தேவை. இறைவன் சிவன் உயிர்களுக்கு உய்வு அருளுகின்றான். ஆன்மாக்களாகிய நாம் உய்யுமாறு அறிந்து அவ்வழியிலேயே ஆட்கொள்கிறான். உயிர்களை – ஆன்மாக்களை உய்யுமாறு செய்தல் – உடன்பாட்டு நெறியாம் பிரமஞானத் தவ வழி சென்று மீட்டெடுத்தலேயாம். காரணம் அந்த இறைவனே சதா எக்காலமும் பிரமஞானத் தவத்திலேயே இருந்து கொண்டிருப்பதுதான். தவத்தால் மிக்கானை தவத்தால்தானே சென்றடைய முடியும்.
இறைவன் சிவனின் ஆட்கொள்ளும் நெறியில் எதிர்மறை அனுகுமுறைகள் எதுவுமே இல்லை. ஆங்காரம் உயிரின் இயற்கை. அது எதிர்மறை அணுகுதலை ஏற்காது. எனவே, உயிர்களின் மனமறிந்து மனத்துள் இருக்கும் கருத்தறிந்து அக்கருத்தினை முடித்து வைத்தே ஆட்கொண்டு அருள்கின்றான் இறைவன். ஆன்மாக்கள் புறத்தே போனாலும் உடன் வருவான். துரிசுகள் செய்தாலும் உடந்தையாக இருப்பான். முடிவான நிலை ஆட்கொண்டருளுதல் ; ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துதல் ; இறவா இன்ப அன்பில் திளைத்திடச் செய்தல். உயிர்களை ஆட்கொண்டருளுதலால் ‘பொன்மலர்’ என்று போற்றுகின்றார்.
தைநீராடல் என்பது நமது தமிழ் மரபு. காலப்போக்கில் அது மார்கழி நீராடல் ஆயிற்று. வைகறையில் மார்கழி நீராடல் பழந்தமிழர் காலம் தொடங்கி இன்றுவரை நிகழ்ந்து வரும் ஒரு ஆனந்த மெய்யுணர்வு நிகழ்வாகும்.
வாழ்க்கைப் பொழுதில் வைகறைப் பொழுது நல்ல இனிமையான பொழுதாகும். வைகறைப் பொழுதில் பிரபஞ்சத்தின் ஆற்றல்களை அதிகளவு கொண்ட அமுதக்காற்றானது உலா வரும். அமுதக்காற்று வரும் பொழுதில் நாம் சுவாசிக்கும் ஒரு சுவாசம் நூறு சுவாசங்களுக்குச் சமம். அந்நேரத்தில் ஓசோனும் வரத்தான் செய்யும். ஓசோனை விட அதிகளவு ஆற்றல் கொண்டதுதான் இந்த அமுதக்காற்று. இந்த அமுதக்காற்றைப் பற்றி வள்ளற்பெருமான் சொல்வதை இங்கே சற்று நினைவு கூறலாம்.
அமுதக் காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயம் தொடங்கி உதய பரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது. அக்காலத்தில் ஜீவர்கள் நன் முயற்சியில் இருப்பது விசேச நலம். தேகாதி பிண்டத்தில் மேற்படி அமுதக் காற்று வியாப்பியமாய் இருக்கும். ஒருகால் ஒரு க்ஷணநேரம் அந்தக் காற்று வியாபகமாய் இருக்குங் கால் ஜீவர்களுக்கு இதுவரையில் தாங்கள் அறியாத தான கடவுள் விளக்கம் உண்டாகும். மேற்படி காற்று வியாபகம் ஏகதேசமும் இல்லாவிடில் ஜீவர்கள் விஷக் காற்றினால் சதா வியாபகம் அடைதிலில், இந்த சொற்ப ஜீவிப்பும் விருத்திக்கு வரமாட்டாது. அமுதக் காற்று வியாப்பியம் அன்றி வியாபகமாய் இருக்குங் காலத்தில் ஜீவர்களுக்கு அறிவு விளக்கம், மனநெகிழ்ச்சி, இந்திரிய அடக்கம், கடவுள் பக்தி முதலியவும் விளங்கும். அக்காலத்தை அமுதக் காற்றின் வியாபக காலம் என்று அறிய வேண்டும். இதன்றி இருள்மயமாய் முன்பின் தோன்றாது அறிவின்றி இருக்குங் காலம் விஷக் காற்று வியாபகமாய் இருக்குங் காலம் என்று அறிய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.
கடலில் தோன்றும் புயல் காற்றுக்கும், பூமியில் தோன்றும் பூமி அதிர்வுக்கும் காரணம் அமுதக் காற்று வேகமாக கீழே நோக்கி வருகின்ற போது, கீழே உள்ள விஷக்காற்று, பூதக் காற்று, உஷ்ணக் காற்று மேலே செல்ல முடியாமல் சிக்கல் உண்டாகி, கடலிலோ, பூமியிலோ வேகமாக உள்ளே செல்வதால், கடலில் புயலும், பூமியில் அதிர்வும் பிளவும் உண்டாகின்றது. என்பது காற்றின் அழுத்தத்தால் உண்டாவதாகும்.
வள்ளல்பெருமான் அவர்கள் அமுதக் காற்றை சுவாசிப்பதற்காக, தூங்காமல் விழித்து இருக்கும் தந்திரத்தை (சூது) அறிந்து கொண்டார். அமுதக்காற்றை சுவாசிக்கும் தந்திரத்தை அறிந்து கொண்டுவிட்டால் என்னென்ன பலன்கள் நம் தேகத்திலும் உயிரிலும் நடக்கும் என்பதை இங்கே வள்ளற்பெருமான் சொல்வதைக் கேட்கலாம் வாருங்கள்.
தூங்காதே விழித்திருக்கும் சூது அறிவித்து எனையாண்ட துறையே
என்னை நீங்காதே என்னுயிரில் கலந்து கொண்ட பதியே
கால் நீட்டிப் பின்னே வாங்காதே விரைந்து நீ வரல் வேண்டும்
தாழ்த்திடில் என்மனந்தான் சற்றும் தாங்காதே இது
நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதந்தானே !
இரவு விடிந்த இணையடி வாய்த்தன
பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீ பற
பாலமுதண்டேன் உந்தீ பற
பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்தன
தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீ பற
தூயவன் ஆனேன் என்று உந்தீ பற
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீ பற
இன்னமுது உண்டேன் என்று உந்தீ பற
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்தேன் என்று உந்தீ பற
எண்ணம் பலித்தது என்று உந்தீ பற
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனம் தவிர்ந்தது என்று உந்தீ பற
சிற்சபை கண்டேன் என்று உந்தீ பற.
திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரைஒளி ஓங்கிற்று என்று உந்தீ பற
பலித்தது பூசை என்று உந்தீ பற.
காலையில் தூக்கத்தை நீக்கி, அமுதக் காற்றை சுவாசிப்பதால், உடம்பில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையைப் பற்றி வள்ளல்பெருமான் விரிவாக சொல்லுகிறார். அமுதக் காற்று பால்போல் இருந்தது. அதனால் தூயவன் ஆனேன். ஏக்கம் தவிர்ந்தேன். இன்பம் கிடைத்தேன். என் எண்ணம் பலித்தது. கோபம் தவிர்ந்தது. ஞானம் உதித்தது. நாதம் ஒலித்தது. ஆண்டவர் இருக்கும் சிற்சபையைக் கண்டேன். மாயா திரைகள் விலகி விட்டது. செஞ்சுடர் தோன்றிற்று. ஓங்கார நாதம் ஒலித்தது. நான் பண்ணிய பூசை அனைத்தும் பலித்தது என்று ஆனந்த கூத்தாடிப் வானில் கலந்து அண்டங்கள் எல்லாம் கடந்து அருட்பெருவெளி எல்லாம் கடந்து அருட்பெருஞ் ஜோதியுடன் கலந்து விட்டதாக மகிழ்ச்சியைத் தெரியப்படுத்துகிறார். அமுதக் காற்றை சுவாசித்து அனுபவித்ததால் மேலும் சொல்லுகிறார்.
காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் – ஞாலமிசை
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை ஏய்ந்து.
மேலும் அனுபவமாலை என்னும் பதிகத்தில் எழுபதாவது பாடலில் தெரியப்படுத்துகிறார் வள்ளல்பெருமான் அவர்கள்.
காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்குக்
கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ
வேலை இலாதவள் போலே வம்பு அளக்கின்றாய் நீ
விடிந்தது நான் தனித்திருக்க வேண்டும் ஆதலினால்
சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில்
சூழ்ந்திருப்பாய் தோழி எந்தன் துணைவர் வந்த உடனே
ஓலை உறாது யான் அவரைக் கலந்து அவரும் நானும்
ஒன்றான பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.(திருவருட்பா-5784)
தன்னுடைய மனம் என்னும் தோழியிடம் சொல்லுகிறார். “காலையில் அமுதக் காற்று என்னும் என்னுடைய கணவர் காலையிலே வருவார் என்று பலமுறை சொல்கிறேன் உன்னுடைய காதில் விழவில்லையா? நான் வேலை இல்லாதவள் போல் என்னிடம் வம்பளக்க வருகின்றாய், பொழுது விடியப் போகிறது, நான் தனித்து இருக்க வேண்டும். நீ ஓலையில் எழுதி வைத்த சமயவாதிகள்போல் மலர் பறித்து புறத்தில் இருக்கும் பொம்மைகளுக்கு மாலையாக போட்டு மகிழ்ந்து இருப்பாய். என் உளவு அறியாய், என் கணவர் என்னும் அமுதக் காற்றைக் அருந்தி கலந்து அவரும் நானும் ஒன்றான பின்னர் உன்னை அழைக்கின்றேன், அதுவரையில் எனக்கு தொல்லைத் தராது விலகிப் போய்விடு” என்று தன்னுடைய மனதை அடக்குகிறார் வள்ளல் பெருமான் அவர்கள்.
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர்
இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார்
கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம்
கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில்
சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார்
உரவகத்தே என்கணவர் காலையில் என்னுடனே
உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி. (திருவருட்பா – 5787)
“தோழி, இரவுக் காலத்தில் இந்த உலக மகளிர் தத்தம் கணவரோடு கூடி மகிழ்கின்றார்கள்; ஆனால் அவர்கள் அக்கூட்டத்தின் இயல்பையும் அதனிடத்திலிருந்து விலகும் இயல்பையும் அறியாமல் காம மயக்கம் ஒன்றையே அறிந்தொழிகின்றார்கள்; மறைவாகக் கள்ளுண்டு அறிவு மயங்கியிருக்கும் போது ஒருவர்க்கு இனிய பழத்தைக் கொடுத்தால் அவர் அதனை உண்டுச் சுவைத்து மகிழ்ச்சி அடைவாரோ, அடைய மாட்டார் அல்லவா; அது போல வற்றாத நீர் பொருந்திய கிணற்றிலே விழுந்தவர் போல இவ்வுலகவர் கூடும் கூட்டத்தில் சுகம் ஒன்றுமில்லையாம்; அவர்கள் அதனால் துன்பமே காண்கின்றார்கள்; திண்ணிய மனத்துடன் என் கணவராகிய அமுதக்காற்றோடு காலைப் பொழுதில் கலந்து ஒன்றாவதால் உளதாகும் பேரின்பம் சொல்லில் வடிக்க இயலாததாகும்”.
மூச்சு சுவாசிக்கும் எண்ணிக்கை அடிப்படையில்தான் வாழ்நாள் கணிக்கப்படுகிறது. அமுதக்காற்று வரும் காலத்தில் எழுந்து நடந்தால் சுவாசித்தால் – ஒரு தடவை சுவாசித்தால் பத்து சுவாசத்தை மிச்சப்படுத்தி விடலாம். அதே நீங்கள் அந்த அமுதக்காற்று வரும் நேரத்தில் பிரமஞானத் தவத்தில் அமர்ந்திருந்தால், ஒரு சுவாசம் 1000 சுவாசங்களை மிச்சப்படுத்திவிடும். இது அனுபவத்தில் கண்ட உண்மை – சத்தியம். அந்த அளவுக்கு உங்கள் வாழ்நாள் கூடிக்கொண்டேதான் போகும். குறையவே குறையாது. அமுதக்காற்று வரும் பொழுதில் நீர் நிலைகளில் ஓசோன் படிந்து அந்தத் தண்ணீர் அதிகளவு பயன் தரத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும். அப்போது நீராடல் உடலுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும், பத்திமைக்கும், செய்யும் தவத்திற்கும் பெருமளவு ஞானத்தை அள்ளி அள்ளி வழங்கும். எனவே, இந்த ஞானத்தை மார்கழி மாதத்தில் அனைத்து உயிர்களும் பெற்று பிரமஞானத்தை அடைந்திட வேண்டுமென்றுதான் மார்கழி நீராடலையும் ‘போற்றி’ என்றார் மாணிக்கவாசகர்.
இந்தப் பாடலில் இறைவனின் – சிவனின் தனித் தன்மை போற்றப் படுகிறது. ஐந்தொழிலுக்கும் சிவனே உரியவன். சிவனே முழு முதல்வன். சிவனை அறிவாலும் செல்வத்தாலும் காண இயலாது. அன்பினாலும் தொண்டினாலுமே காணலாம் என்பது பெறப்படும் உண்மை! சிவன் – இறைவன் நம்மையெல்லாம் உய்ய ஆட்கொண்டருளப் பிரார்த்தனை செய்வோமாக! வாழ்வோமாக!
திருவாசகம் நாள்தோறும் ஓதுதலே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். திருவாசகச் சொற்கள் தெய்வாம்சம் கொண்ட சொற்கள். அவை அதிக ஆற்றலை தன்னகத்தே கொண்டிருப்பவை. ஒளிதேகத்தை அடைந்த மாணிக்கவாசகரின் உயிரில் பூத்திட்ட ஞான மலர்கள் அவை. ஒவ்வொரு சொல்லும் நம் உயிரைச் சென்று தாக்கும் அன்புக் கணைகளாகும். அமுதக்காற்றின் துணைகொண்டு உயிரை சதா தாக்கிக் கொண்டு வந்தால், ஒரு நேரத்தில் நமது உயிர்க்கமலம் தன் ஆயிரம் இதழ்களை விரித்து, மணம் வீச ஆரம்பித்துவிடும். அப்போது உயிருக்குள் கமழும் ஒளிக்கலைகள் உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் பரவி நம் தேகத்தை ஒளிதேகமாக்கும். உயிர் ஒளியாகத்தான் இருக்கிறது. ஆனால், கூம்பிப்போய் கிடக்கிறது. அதை மலர வைத்தால் ஒன்றே போதும். உயிரின் நறுமணம் உடலின் மரபணுக்கள் அத்தனையையும் ஒளியணுக்களாக்கி, தேகத்தை நித்தியமாக்கிவிடும். அதனால்,
திருவாசகம் ஓதினால் சிவஞானம் சித்திக்கும்.
திருவாசகம் ஓதினால் பரஞானம் சித்திக்கும்.
திருவாசகம் ஓதினால் நெற்றிக்கண் தோன்றிடும்.
திருவாசகம் ஓதினால் அருட்கலைகள் சித்திக்கும்.
திருவாசகம் ஓதினால் அமுதத்தேன் ஊற்றெடுக்கும்.
அமுதத்தேன் ஊற்றெடுத்தால் அருட்கலைகள் சித்திக்கும்.
அருட்கலைகள் சித்தித்தால் ஞான ஒளிதேகம் சித்திக்கும்.
அதனால் திருவாசகத்தை நாள்தோறும் ஓதுக, ஊன் கலந்து, உயிர்கலந்து என்று பணிவோடு சொல்லி இந்த முன்னுரையை குருவருளால் இனிதே நிறைவு செய்கின்றோம்.
பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியேன் உடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே
யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்குஎழுந்து அருளுவது இனியே.
(பிடித்தப்பத்து-9)
சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு தீவினைகெடுத்து உய்யலாம்
பத்தி தந்துதன் பொற் கழற்கணே பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்து இந்த மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக் கண்நம் சென்னி மன்னி மலருமே (சென்னிப்பத்து-6)
என்பே உருக நின்னருள் அளித்துஉன் இணை மலரடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி உயிர் உண்கின்ற எம்மானே
நன்பே அருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே (எண்ணப்பதிகம்-3)
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்! (திருவெம்பாவை – 20)
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!