உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் – 02

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

திருச்சிற்றம்பலம்

1. சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்)

          நமச்சிவாய வாஅழ்க  நாதன் தாள் வாழ்க

            இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

            கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

            ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

            ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க               (05)

            சிவம் : வாதவூரா, உன் பாடல்கள் உள்ளத்தைத் தொட்டு நிற்கின்றன.  எதற்கு நமச்சிவாய என்று ஆரம்பித்திருக்கிறாய்? எத்தனையோ வார்த்தைகள் இருக்க, என் பஞ்சாட்சரத்தை ஏன் முதன்மைப்படுத்தி பாட ஆரம்பித் திருக்கிறாய்?  என்று மேற்கண்ட ஐந்து பாடல்வரிகளை ஓலைச் சுவடியில் அச்சாணி கொண்டு எழுதிக் கொண்டே சிவபெருமான் கேட்கலானார். 

          மாணிக்கவாசகர் : “அய்யனே, இதென்ன பாடல் உருகி வரும்போது கேள்வியெல்லாம் கேட்கிறீர்கள்.  என் கருப்பொருள் சிதையாதா? பாடப் பாட எழுதிக் கொண்டே வாருங்கள் அய்யனே,  இடையில் பேசாது”.

          மாணிக்கவாசகர் இவ்வண்ணம் சொல்லவும் தென்னாடுடையவன் கேட்பாரா என்ன?  தொடர்ந்து மாணிக்கவாசகரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். 

          சிவம் : “வாதவூரா, நீ பாட்டுக்கு ஆனந்தக் கூத்தாடிக் கொண்டு பாட ஆரம்பித்துவிட்டாய். கவிதை மெல்லென வருவதற்கு பதிலாக அருவியாய் கொட்ட ஆரம்பிக்கிறது.  நதி ஓடும் வேகத்திற்கு எழுதும் வரிகள் சீரெழுத மறுக்கிறது. அச்சாணியை ஓலைச்சுவடியில் அழுத்தி அழுத்தி எழுத வேண்டியிருக்கிறது. விரல்கள் ஒடிகிறதப்பா, அதனால் நீ மெல்லென பாடினால் எம்மால் கேள்விகளைக் கேட்காமல் எழுதி வர இயலும்.”

          இதைக் கேட்ட மாணிக்கவாசகர் தன் உயிருக்குள் மூழ்க ஆரம்பித்தார்.  சிவத்தின் இருப்பிடத்தை மீண்டும் தொட்டு நின்றவர், அங்கே அனல் வீசும் ஒளிப் பிழம்பில் தன்னை ஒப்புக்கொடுக்க ஆரம்பித்தார்.  கலவியின்பம் அரங்கேற ஆரம்பித்தது.

          தன்னை ஒப்புக்கொடுப்பது என்பது தம் உயிரொளியில் கலந்து விடுவது என்று பொருள்.  ஒளி வேறு ; உயிர் வேறல்ல.  ஒளியும் உயிரும் ஒன்றென்றால் உயிர் என்பது ஒளியா? அப்படியென்றால் ஒளியாம் உயிரை எவ்வாறு அறிவது? உயிரைக் காண இயலுமா? ஒளியைக் காணும்போது, ஏன் உயிரைக் காண முடிவதில்லை? இதெற்கெல்லாம் விடை உண்டா? நமக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் உருண்டோடிப் பாடாய்படுத்த ஆரம்பித்தது.

          பொழிப்புரை : பஞ்ச பூதங்கள்தான் இவ்வுலகம்.  மனித தேகமும் பஞ்சபூதங்கள்தான்.  நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்தான் பஞ்சபூதச் சத்திகள்.

          நிலத்திற்கு    – ,

          நீருக்கு          – ,

          நெருப்புக்கு – சி,

          காற்றுக்கு     – ,

          ஆகாயத்திற்கு – .

          நமசிவய என்ற பஞ்சேந்திரிய சத்திகள் நன்றாக நீடூழி வாழட்டும்.  சிவத்தின் திருவடிகள் வாழட்டும். இமைக்கின்ற காலம்கூட என் திருவடிகளாகிய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கக் கூடிய சிவத்தின் திருவடிகள் வாழட்டும். இருட்டை ஒழிக்கும் குருமணியாக சிவமணியின் திருவடிகள் நன்றாக வாழட்டும். ஆகமமாகிய பிரணவத்தின் உள்ளே நன்றாக பொருந்தி இருக்கக் கூடிய சிவத்தின் திருவடிகள் வாழட்டும்.

          தவத்தில் இருக்கும்போது தனித்தவனாகவும் உலக உயிர்கள் சீவிக்க அருளும்போது நீக்கமற எங்கும் நிறைந்து காணப்படும் அநேகனாகவும் இருக்கக் கூடிய இறைவனின் திருவடிகள் நீடூழி வாழட்டும்.

          ஞான மெய்ப்பொருளுரை  : மனிதன்தான் இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களில் மேலானவனாக இருக்கின்றான். மனித தேகத்தில் தொன்னூற்றாறு தத்துவங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவன் உடலானது பஞ்சபூதச் சத்திகளால் ஆக்கப்பட்டிருக்கிறது.  பிரபஞ்சத்தின் பஞ்சபூதச் சத்திகளுக்கும் மனித தேகத்திற்கும் நேரடி தொடர்புள்ளது.  அதனால், மனிதன் பிரபஞ்சத்தின் பஞ்சபூதச் சத்திகளை உறிஞ்சிக் கொள்ளவும் வெளிப்படுத்தவும் கற்றிருக்கிறான். பஞ்சபூதச் சத்திகளோடு ஐந்து இந்திரியங்கள் கூட்டுறவால் இணைக்கப்பட்டிருக்கின்றன. 

            மண் சத்தியால் தேகமும் ; நீர் சத்தியால் வாயுவும் ; அக்கினி சத்தியால் கண்ணும் ; வாயு சத்தியால் மூக்கும் மற்றும் ஆகாய சத்தியினால் காதும் படைக்கப் பட்டிருக்கின்றன.

            மண்ணுக்குப் பிரம்மாவும் ; நீருக்கு விஷ்ணுவும் ;  அக்கினிக்கு ருத்திரனும் ; வாயுவுக்கு மகேசனும் மற்றும் ஆகாயத்துக்கு சதாசிவமும் தேவதைகளாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

            இந்திரிய சத்திகள் மனிதனுக்கு இகத்திலும் பரத்திலும் வாழ்வில் பலவித நன்மைகளைச் செய்து கொண்டிருப்பதால், நம் முன்னோர்கள் இவற்றை ஞானேந்திரியங்கள் என்று அழைக்கலாயினர்.

            ஞானேந்திரியச் சத்திகளை மனிதன் அகமுகமாகப் பயன்படுத்தும்போது, மனிதன் தன்னை உணர ஆரம்பிக்கிறான்.  தன்னை அறியும் அறிவை அடைகிறான்.  பஞ்சபூதச் சத்திகளோடும் ஞானேந்திரியங்களோடும் இறைவனின் திருநாமம் பின்னிப் பிணைந்திருக்கும் ஆற்றல்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதால்,  ந – ம – சி – வ – ய என்றும் பஞ்சாட்சரத்தை மண்ணோடும் நீரோடும் நெருப்போடும் காற்றோடும் ஆகாயத்தோடும் மனிதன் தொடர்புபடுத்தினான்.  அப்போது நமசிவாய என மனிதன் உச்சரிக்க ஆரம்பித்தான்.  உச்சரிப்பின் விளைவு அவனுக்குள் சொல்லொணாத மெய்யுணர்வு கிளறிவிட ஆரம்பித்தது.  உச்சரிப்பின் விளைவுகள் ஏற்படுத்திய அகவுணர்வு மாற்றங்கள் மனிதனை ஞானத்தை நோக்கி சிறகடிக்க வைத்தன. 

            அதனால்தான் மாணிக்கவாசகர், அவருக்குள் இறைவுணர்வு ஏற்படுத்திய மெய்யுணர்வினால்  ஞானத்தை உடைய இந்திரிய சத்திகள் முதன்மையாக இருக்கின்ற காரணத்தால் இவ்வாறு “நமச்சிவாய வாஅழ்க” என்றார் மாணிக்கவாசகர். 

            பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி

            சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு

            வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில்

            வேய்ந்து கொள்மேலை விதியது தானே            (தி.ம.2038)

            பூதங்களாகிய புலன்கள் ஐந்தும் புறத்துப் பாயும் இயல்பின. அதனால் அவை பாய்ந்தன. அப் பாய்வினைத் திருவருளால் அகற்றிச் சாரப்படும் என்றும் பொன்றாத் திருவடியுணர்வாகிய கட்டுத்தறியில் இணைத்துப் பூட்டுவதாகும். இணைத்துப் பூட்டுவதென்பது ‘சிவசிவ’ என்னும் செந்தமிழ் முந்துமறையினை நந்தாதெண்ணும் நலவழிபாடாகும். அந் நெறியிற் சென்றார்க்குச் சிவபெருமான் சிறந்ததாக ஆய்ந்து கொள்ளப்பெற்ற திருவடிப்பேரின்பம் என்னும் பெரும் பேரருளினைச் செய்தருள்வன். அங்ஙனம் செய்தருளின் அதுவே சிறந்ததாகிய திருவடிப் பேற்றின் பெருவாழ்வு முறைமையுமாகும். இஃது ஐம்புலனையும் அடக்கிக்கொள்ளும் முறைமையால் எய்துவதென்க.

            தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
            அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
            சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
            வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே          (தி.ம.2042)

            சிவபெருமான் தூமாயையை நிலைக்களமாகக்கொண்டு திருவருளின்கண் திருமேனி கொண்டருள்வன். இது சிவனடியார் திருநீற்றுத் திருமேனியுடன் திருக்கோயிலின்கண் சிவபெருமான் திருமுன் வீற்றிருப்பதை ஒருபுடையொக்கும். திருக்கோயில் தூமாயையாகவும், திருவெண்ணீறு திருவருளாகவும், உடம்பு சிவபெருமானாகவும் ஒப்பமைத்துக் கொள்க. இக் குறிப்பே ‘அந்த வுடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார்’ எனவும், ‘ஊனுடம்பு வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே’ எனவும் கூறிப் போந்த திருமுறைத் திருவருண்மொழிகளால்’ பெறப்படும் பேருண்மையும் ஆகும். சிவபெருமான் கொண்டருளும் அருள் திருமேனியைச் சகளம் என்பர். சகளம் – நிலைக்களம் ; சிவக்கொழுந்து. அச் சிவக்கொழுந்தினிடத்து அன்புடையார் நெஞ்சம் தங்கி இன்புறுகின்றது. அதற்கு இடையூறாகப் புறப்பொருளில் ஈர்த்துத் தீரா, இடையூறிழைக்கும் ஐம்புல அரிப்பினை யாரும் உணரார். எள்ளி நகையாடுதற்குரிய சில பல சிரிப்புமொழிகளைப் பேசி யாவதென்? உறுதியாக நின்று நம்மைப் பிறவித் துயருட்படுத்துவது மேகம் சூழ்ந்த கருவரையனைய ஆணவ வல்லிருளேயாம் என்க. அரித்தல் – துன்புறுத்தல்.

            பரநாத சத்தியாகிய பார்வதியோடு பரவிந்து சொரூபனாகிய சிவபெருமான் சம்மந்தப் பட்டுள்ளதால், சிவத்தை “நாதன்” என்றார்.

            திருப்பெருந்துறைதான் கோகழி என்று அழைக்கப்படுகிறது.  தண்டமும் சக்கரமும் அமைந்துள்ள இடத்தைத்தான் ‘கோகழி’ என்றழைப்பார்கள்.  கோ என்றால் இறைவன், தலைவன், பசு என்று பொருள்படும். கடவுளுக்கும் தெய்வத் தத்துவங்களுக்கும் சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் அனைத்தும் காரணப் பெயர்கள்தான்.  திருவடிகளைத்தான் சக்கரங்கள் என்றும் விரல்களைத்தான் தண்டம் என்றும் ஞானிகள் அழைத்தார்கள். 

            பிரமஞானத் தவத்தைச் செய்யும்போது தேகத்தில் விரல்களையும் சக்கரங்களையும் பயன்படுத்துகிறார்கள், பிரம யோகிகள். சனகாதி முனிவர்களுக்கு சிவம் பிரமஞானத்தைப் போதிக்கும்போது, கைவிரல்களினால் சின்முத்திரையைக் காட்டி, பிரம ஞானம் அடைய வேண்டுமென்றால் திருவடிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று காட்டி பிரமஞானத்தை அவர்களுக்குப் புகட்டி அருளினார்.  சின்முத்திரை வடிவம் திருவடிகளைச் சுட்டிக்காட்டவே அன்றி, தவம் செய்யும்போது முழங்காலின்மேல் கைவிரல்களை சின்முத்திரையில் வைத்துக் கொள்வதற்காக அல்ல என்பதை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

            சின்முத்திரையில் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் ஒன்றையொன்று தொடுமாறு வளைத்து வைத்துக் கொண்டு, மற்ற மூன்று விரல்களையும் நீட்டியிருப்போம்.  ஆள்காட்டி விரலும் பெருவிரலும் நன்றாக வளைந்து வட்டவடிவமாக காட்சியளிக்கும்.  இந்த வடிவம்தான் திருவடியின் வடிவம்.  தெய்வப் படங்கள் சின்முத்திரையில் வரையப்பட்டிருந்தால், அப்படங்கள் சொல்லும் செய்தி நாம் திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதைத்தான்.

               

           சின்முத்திரை          =                  திருவடி

            மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
            கோலால் நடத்திக் குறிவழியே சென்று
            பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
            மாலானது மாள மாளும்அவ் விந்துவே      (தி.ம.1956)

            மூலம் முதலாகச் சொல்லப்படும். ஆறு நிலைகளுக்கும் அப்பாலுள்ள தூவெளி மேனிலம் எனப்படும். அங்கு விந்துவும் நாதமும் தோன்றும். அவற்றை நடுநாடி வழியாக நடத்தி அகத்தவ ஆசான் கூறியருளியபடி சென்று அவ் விந்துப்பாலாகிய அமிழ்தத்தினைப் பருகுவராயின் பற்றறப் பற்றினாராவர். பிறப்பிற்கு ஏதுவாம் மருள் முற்றும் மாயும். அவ் விந்துவும் அடங்கும்.

            மேலாநிலம் – நிராதாரம். கோலால் – சுழிமுனையால். குறி – ஆசிரியன் கூறியபடி. மாலானது – போகமானது. மாளும் – கட்டுப்படும்.

            பிரணவத்தின் துணையில்லாமல் இறைவனை அடையவே முடியாது.  இங்கு பிரணவம் என்பது மேரு மலையாகச் சொல்லப்பட்டுள்ளது.  பிரணவம் என்ற மேருவை கருவாக வைத்தே ஆகமங்கள் சிவபூசைகளை வரையறுத்துள்ளன.  அகமம் என்றால் மேரு மலை என்று பொருள்.  அகமம் என்ற சொல்லே ஆகமமாக மாறியுள்ளது.  இந்த மேருமலையானது பிரணவ மேருமலையைக் குறிக்கிறது.  எல்லாத் தெய்வங்களும், தெய்வ சத்திகளும் பிரபஞ்சமும் அந்தப் பிரணவ மேருவில்தான் சூக்குமமாக பொதிந்துள்ளன. 

            சிவம் இருக்கும் இடம் பிரணவத்தின் உச்சியாகும்.  சிவத்தின் திருவடி சத்திகள்தான் ஒவ்வொரு உயிர்களிடத்திலும் திருவடிகளாக படைக்கப்பட்டுள்ளன.  எனவே, சிவத்தை “ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க” என்றார் மாணிக்கவாசகர்.

            அரூப நிலையில் இருக்கும்போது தனித்தும், ரூப நிலையில் இருக்கும்போது எல்லா உயிர்களிலும் வியாபித்து பரந்து காணப்படுவதால் அநேகனாகவும் இருப்பதால், சிவத்தை “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க” என்றார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!