இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!

இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.

 

அடுத்த வரி “தலம் ஒரு நான்கும் தந்து எனக்கருளி

மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே (32)” என்பது.

ஔவைத்தாய் இங்கே விநாயகப் பெருமானை அடையும் மார்க்கத்தில் நால்வகை தலங்கள் இருப்பதாகவும் முவ்வகை மலங்கள் இருப்பதாகவும் அம்மலங்கள் தரும் மயக்கத்திலிருந்து – மயக்க உணர்வுகளிலிருந்து தன் எண்ணங்களின் வேர்களை அறுத்தெரிந்து விட வேண்டுமென்று பலவாறு பிரார்த்திக்கிறார்.

அது என்ன நால்வகை தலங்கள்? முவ்வகை மலங்கள்? அவைகளை அறுப்பது எப்படி? இதைத்தான் சற்று விரிவாகக் காணலாம், வாருங்கள்.

 ஞானமே முதலா நான்கு நவையறத் தெரிந்து மிக்கார்;

தானமுந் தவமும் வல்லார்; தகுதியின் பகுதி சார்ந்தார்;
 ஊனமே லொன்று மில்லா; ருலகெலாம் புகழ்ந்து போற்று
 மானமும் பொறைபுந் தாங்கி மனையறம் புரிந்து வாழ்வார்   (பெரியபுராணம்)

(இ-ள்.) ஞானமே……மிக்கார் – ஞானம் முதலாக வைத்து எண்ணப்பட்ட நான்கினையும் குற்றம் நீங்கத் தெரிந்து அவற்றிலே மிகுதியும் திறமை பெற்றுள்ளவர்கள்; தானமும்…..வல்லார் –
தானத்திலும் தவத்திலும் சிறந்தவர்கள்; தகுதியின் பகுதி சார்ந்தார் – எல்லாவற்றிலும் தக்கவற்றையே சார்ந்தவர்கள்; ஊனமேல் ஒன்றுமில்லார் – ஒருகுறைவும் இல்லாதவர்கள்; உலகெலாம்…. வாழ்வார் – உலகங்களெல்லாம் போற்றும் மானத்தினையும் பொறுமையினையும் மேற்கொண்டு இல்லறத்தை வழுவாது இயற்றி வாழ்கின்றவர்கள் (இவர்கள்);

(வி-ரை.) ஞானமே முதலா நான்கு – ஞானம் – யோகம் – கிரியை – சரியை என்பன. ஞானத்தை முதலாக வைத்துச் சொன்னதென்னையெனின், ஞானமே கனி – பலன் என்பர். அதுவே முடிந்த
பயனாம். ஆயின் இந்தப் பலனைப் பெறுதற்கு முன், கனியை வேண்டுவான் ஒருவன் கனியே தனது விருப்பில்முதன்மை பெற்றதாயினும் அதற்கு முன்னதாகக் காயும், மலரும், அரும்பும் இன்றியமையாது வேண்டப்படுதலின் அவற்றை முன்னர்க் காப்பவனாவன். அதுபோலவே இதுவுமாதலின் முதலா நான்கும் என்றார். முதல் – முதன்மையாகக் கொள்ளப்பட்டது.

“விரும்புஞ் சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே”

 

என்றார் தாயுமானார்.

இக்கருத்துப் பற்றியே திருமூல நாயனார் புராணத்துள்,

               “ஞானமுதல் நான்குமலர் நல்திருமந்திர மாலை” (26)

               “நலஞ்சிறந்த ஞான யோகக் கிரியா சரியை எலாம்” (28)

என்று ஆசிரியர் வரம்புபடுத்திக் கூறியருளினார். இவ்வாறறியாது ஞானமுதல் நான்கு என்றதற்கு ஞானத்தை அந்தமாகவுடைய நான்கென்று கூறுவாருமுளர். முதல் அந்தமென்று பொருள்படாமை காண்க. ஞானம் முதல் நான்கும் நான்கு பாதம் நெறி – என்பர். இவையே சன்மார்க்கம் – சகமார்க்கம் – புத்திரமார்க்கம் – தாசமார்க்கம் என்று கூறுவர். இவற்றின் விரிவுகளைத் திருமந்திரத்துட் காண்க.

கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்களும் ஞானத்தை அடைவதற்கான கட்டமைப்புக்குள் வரும் நெறிகளாகத்தான் பிரமஞானிகளால் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முதல் மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார். இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது.

ஆனால், ஔவை அம்மா சொல்ல வரும் நால்வகை ஞானத் தலங்கள் என்பது வேறு.  அதன் பெயர்களை மட்டுமே இங்கு உலக உயிர்களின் ஆன்ம விடுதலைக்காகக் கூறுகிறோம்.  அதன் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் நீங்கள் ஒரு குருவிடம் பிரமஞானத் தீக்ஷையை பெற்றபின், அந்த ஞானத் தலங்களின் செயல்பாடுகளையும் அத்தலங்களை எப்படியெல்லாம் இயக்கி பிரமஞானத்தை அடைய வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அந்த நான்கு ஞானத் தலங்கள் : 1.சுழிமுனை, 2.வஜ்ரம், 3.சித்திரிணி, 4.பிரமம். இந்த தலங்களின் வழியாகத்தான் நீங்கள் உங்கள் உயிருக்கான உணவை உயிர் பசித்திருக்கும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிவிட வேண்டும்.  நமக்குப் பசி வரும் நேரம் இருப்பதைப் போலவே, நம் உயிருக்கும் பசி வரும் ஒன்றுண்டு.  அதை நீங்கள் குருமுகாந்திரம் தெரிந்து கொண்டு, அனுபவத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் உங்களால் உங்கள் உயிருக்குத் தேவையான முழு உணவையும் கொடுத்துவிட முடியும்.  இப்படித்தான் உங்கள் உயிராற்றலைப் பெருக்கி வர வேண்டும்.  உடம்பையும் வளர்த்து, உயிரையும் வளர்க்கும் ஞான அனுபவ தந்திரம்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட பிரமஞானத் தவமுறைகளாகும்.

அதனால் உயிருக்கான உணவை வழங்க நமக்கு ஞானத் தலங்கள் தேவையென்பதைத் தான் ஔவைத்தாய், “தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி” என்றார்.

அடுத்தபடியாக நமக்கு பிறவி மயக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய மூன்று மலங்களான ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றை அறுத்தெரிய வேண்டுமென்கிறார் ஔவைத்தாய்.  இதே ஔவைத்தாய் அவர் பாடிய ஞானக்குறளின் 101வது பாடலில்,

அருளினால் அன்றி அகத்து அறிவில்லை

அருளின் மலம்அறுக்க லாம்                                 (101)

பொருள் : இறையெனும் திருவருள் இல்லாமல் தேகத்தின் அகத்தின்கண் அறிவெனும் மெய்யுணர்வு உருவாகுவதில்லை.  இந்த இறையருள் துணைகொண்டு மும்மலங்களை அறுத்து ஒழித்து விடலாம்.

ஞான மெய்ப்பொருளுரை : அருள் – அகம் – அறிவு – மலம்.  அருளைக் கொண்டு அகத்தில் மெய்யறிவு பெற்று, மலங்களை வெல்லும் திறம்பற்றி ஔவைத்தாய் இக்குறளில் கூறியுள்ளார்.

மனிதனுக்கு பிறவிகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பது மெய்ப்பொருளை அறியாமல் தடுத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களே ஆகும்.  மனம் இந்த மும்மலங்களின் துணைகொண்டே செயல்வினை புரிந்து மனிதனின் கர்மாக்களுக்கு செயல்விடைகளை தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்களை அறுத்தெறிய வேண்டுமென்றால், அதற்கு சாதகன் மெய்ப்பொருள் எனும் இறைவனை அகக்கண் கொண்டு அறிந்து கொண்டால் மட்டுமே சாத்தியமே.  அவனருளால் அவன்தாள் பற்றி என்பது போல, திருவடிகளைக் கொண்டே இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். 

எப்பொழுது இறைவன் அருளால் அவன் திருவடிகளைப் பற்றுகிறோமோ, அக்கணமே மும்மலங் களெனும் கிரந்தித் திரயங்கள் முற்றிலும் அறுக்கப்பட்டு விடும். மும்மலங்கள் ஒழிந்தபின்னர், மனம் அங்கே செத்துப் போயிடும்.  மனமற்றால் ஞானத்தாழிசை அங்கே பூத்துவிடும். 

பூத்த மலர்களின் வாசனை முகர்ந்து பாருங்கள் சாதகர்களே, அதைப் போன்ற நறுமணத்தை உலகில் எங்கும் காண முடியாது.  பரிமள சுகந்த நறுமணம் அது.  தெய்வீக மணம் அது.  அதனால்தான் ஞானிகளின் உடல்களில் எப்பொழுதும் இந்த பரிமள சுகந்த நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும்.  மும்மலத்தை அறுத்துவிட முக்கண்ணன் துணை (அருள்) வேண்டும்.

இறைவனின் அருள்வீழ்ச்சி முற்றப்பெற்ற உயிர்கள் இறைவன் வெளிபட்டுத் தோன்றுவதை காணத் துடிக்கும் என்பதனால் இறைவனே சிவகுருவாக வெளிபட்டுத் தன் திருத்தாளினை நல்கி உயிரின் கருவிக் கரணங்களை எல்லாம் சிவக்கருவிக் கரணங்களாய் மாற்றித் தன்னை முழுமையாகக் காணும் நிலையினை உயிருக்கு அளித்துத் தன் திருவடி நீழலில் இருத்தி மகிழ்வான் என்று மெய்கண்டநூல்கள் குறிப்பிடுகின்றன.

இதனையே ‘முத்தி அல்லது பேரின்பப் பெருவாழ்வு என்று குறிப்பிடுகின்றனர். இத்தகைய அரிய செயல்களைப் பெருமானின் திருவருள் உயிர்கள் பொருட்டு இடையறாது செய்து, அவனின் திருவடிகளை வணங்குவதற்கு நமக்கு அருள் செய்வதனால், “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று மாணிக்க வாசகர் குறிப்பிட்டார்.

உயிர்களை அன்பினால் கசிந்து கசிந்து உருகச் செய்து அவற்றின் வினை முழுவதையும் போக்கித் தனது இணையற்றத் தனிப் பேரின்பத்தைத் தருகின்றான் என்பதனைத் திருமூலர்,

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்க்கொண்டு

தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து,

உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டி களிம்பறுத்தானே     (தி.ம.113)

என்கின்றார்.

மேலும், திருமந்திரத்தில் நெல்லின் பகுதிகளாகிய முளை, தவிடு, உமி என்பவற்றைப் போன்று ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களும் உயிரைப் பிணித்து மறைத்து வைத்துள்ளது என்பதை திருமூலர் எடுத்துக் காட்டுகிறார்.

ஆணவம் மாயையும் கன்மமும் ஆம்மலம்

காணும் முளைஅத் தவிடுமி ஆன்மாவும்

தாணுவைப் போலாமல் தண்டுல மாய்நிற்கும்

பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே       (தி.ம.2192)

ஆன்மாவும் சிவனைப் போலச் சித்துப் பொருளேயாயினும், அரிசி போன்ற ஒரு தன்மையை அஃது உடைமையால் அரிசிக்கு உமி முதலிய குற்றங்கள் அநாதியாக இருத்தல் போல, ஆணவம் முதலிய குற்றங்கள் அநாதியே உளவாக, அது சிவனைப் போலப் பதியாகாது, பசுவேயாய் நின்றது. உனது தன்மையை இங்ஙனம் நீ உள்ளவாறு உணர்ந்து, பாசங்களில் பற்றுக் கொள்ளாது விடுத்துப் பதியாகிய சிவனைப் பற்றி இன்புறுவாயாக.

                ஆணவம் என்பது நெல்லிலுள்ள உமி போன்றது,

                கன்மம் நெல்லிலிள்ள முளை போன்றது,

                மாயை நெல்லிலுள்ள தவிடு போன்றது என்கிறது.

                ஞானம் – நெல்லுக்குள் இருக்கும் முனை முறியாத அரிசி.

               

            “களிம்பு அறுத்தான் எங்கள் கண்நுதல் நந்தி

                 களிம்பு அறுத்தான் அருள் கண் விழிப்பித்துக்

                 களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டிப்

                 பளிங்கில் பவளம் பதித்தான் பதியே”  (தி.ம.114)

எல்லாரினும் உயர்ந்த முழுமுதலாகக் கருதப் படுவான் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான். அவனே நந்தியங் கடவுள் என்று அழைக்கப் பெறுவான். அவன் ஆருயிர்களை அருளால் நன்னெறிப்படுத்தி இருவினையொப்பு, மலச்செவ்வி, திருவருள் வீழ்ச்சி வருவித்து களிம்பறுத்து அருளினன்.

அகக் கண்ணாகிய அருட்கண்ணைத் திறப்பித்து அருளினன். களிம்பாகிய மலம் எஞ்ஞான்றும் அணுக ஒண்ணாத இயற்கை உண்மை அறிவின்பப் பேரொளி சிவன். அவன் தன் திருவடியின் ஒளிக்கதிர் காட்டிச் சார்ந்த தன்வண்ணமாம் தன்மை வாய்ந்த பளிங்கினையொத்த ஆவியின்மாட்டு பவழம்போன்ற செம்மைத் தாகிய தன் திருவடியினைப் பதித்தருளினன். அவனே இறையாகிய சிவபெருமான். பவழம் என்பது செம்மணியாகிய சிவன்.

இதைத்தான் ஔவை அம்மா, “மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே” என்றார்கள்.

அடுத்த அகவல் வரி : “ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்

 ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி (34)” என்கிறார்.

அப்பப்பா, என்னவொரு தமிழ்ச் சொற்கள் பாருங்கள் அன்பர்களே.  ஒன்பது வாயில் – ஐம்புலக் கதவு.  ஒன்பது வாயிலை ஒரு மந்திரத்தால் கட்டிவிட வேண்டும்.  அவ்வாறு கட்டிய பிறகு ஐம்புலன்களின் கதவுகளை அடைத்தும்விட வேண்டும்.  இந்த இரண்டுமே ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேற வேண்டும் என்கிறார் ஔவை.  என்னவொரு ஞானம்.  எந்த சாத்திரங்களும் வேதங்களும் சொல்லாத அற்புதமான ஞானச் சொற்கள். 

எவையெவை ஒன்பது வாயில்கள்? கண்களில் இரண்டு வாயில்கள், மூக்கில் இரண்டு வாயில்கள், காதுகளில் இரண்டு வாயில்கள், வாயில் ஒரு வாயில், கீழே பிறப்புறுப்பில் ஒரு வாயில், இறுதியாக ஆசனவாயில் ஒன்று. ஆக மொத்தம் ஒன்பது வாயில்.  இந்த ஒன்பது வாசல்களையும் ஒரேயொரு மந்திரத்தால் கட்டிவிட வேண்டும் அல்லது அடைத்துவிட வேண்டும்.  அடைத்துவிட்டால் பிராணன் தேகத்தில் தங்காது.  ஆனால், கட்டி வைக்கலாம்.  கட்டி வைக்க ஒரு மந்திரம் உள்ளது என்கிறார் மறைபொருளாக. அதுதான் இரகசியமே.  குருவல்லாது இந்த மந்திரச் சொல்லை எவ்வாறு நாம் பெற்றுக் கொள்ள முடியும்? கண்டிப்பாக முடியாதல்லவா.  அதனால் விநாயகப் பெருமானையே குருவடிவாக வந்து இந்த குவலயத்தில் தன் முன்னே தோன்றி, அவரின் திருவடிகளை நன்றாக காண்பித்து, உவட்டாத பிரமஞானத்தை உபதேசமாக அதாவது தீக்ஷையாகக் கொடுத்து, என் உயிருக்குள் தெவிட்டாத ஞானத் தெளிவினைத் தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறார் ஔவைத்தாய்.

இவற்றையெல்லாம் கொடுக்கின்ற விநாயகப் பெருமானே, எனக்கு இந்த ஒன்பது வாயில்களையும் கட்டிவிடக்கூடிய ஒரு மந்திரச் சொல்லி உபதேசித்தருள வேண்டுமென்று ஞானத்தை யாசித்து நிற்கும் அழகிருக்கே, நம் தாயல்லவா அவள், அவளை நாமும் பின்பற்றி ஒழுகினால் நமக்கும் விநாயகப் பெருமான் பிரமஞானத்தையும் அதன் இரகசியத்தையும் உபதேசிக்காலாமா போய்விடுவார்!  அதனால் நாமும் ஔவைத் தாயைப் போலவே இன்றிலிருந்து பிரமஞானத்தை யாசித்துக் கொண்டே இருப்போமாக.

உலக உயிர்களின் ஆன்மாவிற்குள் இருக்கும் ஒவ்வொரு உயிர்களுக்காகவும் அவ்வுயிர்களும் எம்முயிரே என்று கருதி இங்கே இந்த நொடியில் இவ்வுலகத்திற்கு அந்த ஒன்பது வாயிலை அடைக்கும் மந்திரத்தையும் அதன் தந்திரத்தையும் எம் சற்குருவின் அருளாலும், பிரமஞானப் பொற்சபை குருமார்களின் அனுக்கிரகத்தாலும் வெளிப்படுத்துகின்றோம்.

உங்கள் முன்னால் ஒரு தீபம் இருக்க வேண்டும். இடைவெளி 2 அடி தூரம் இருக்க வேண்டும். இதற்கு குறையவோ, கூடவோ கூடாது.  அந்த தீபம் உங்கள் முகத்திற்கு நேராக இருக்க வேண்டும்.  நீங்கள் அமரும் திசை தெற்கு நோக்கியபடி இருக்க வேண்டும்.  அந்த தீப எண்ணெய் இலுப்பை எண்ணெயாகவோ, நெய்யாகவோ, நல்லெண்ணெயாகவோ இருக்கலாம். அந்த தீபச் சுடரை இமைக்காமல் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடம்வரை உற்றுப் பார்த்துக் கொண்டு, “ஓம்” என்று உச்சரிக்க வேண்டும்.  ஒரு பலகை போட்டு, அதன்மேல் தர்ப்பை பாயை விரித்து, அதன்மேல் ஒரு வெள்ளை விரிப்பை விரித்து, அதன்மீது உட்கார்ந்து கொண்டு சொல்லி வரவேண்டும்.  இந்த ஓம் உச்சரிக்கும் கால அளவு குறைந்த அளவு 15 நொடிகளாவது இருக்க வேண்டும்.  15 நொடிகள் உச்சரித்தால் ஓம் இன் உயிராற்றல் 50 சதவிகிதம் இருக்கும்.  25 நொடிகள் சொன்னால் 100 சதவிகிதம் இருக்கும்.  10 நொடிகள் சொன்னால் 40 சதவிகிதம் இருக்கும்.  முயற்சித்து பார்த்து உங்கள் அனுபவங்களைச் சொல்லலாம்.

நல்லது, அடுத்த வரி : ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி என்பது.

ஐம்புலன்கள் கொடுக்கும் தேக உணர்வுகளைத்தான் நாம் நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.  உணர்வுகளின் பின்னால் நாம் செல்லாமல் அந்த உணர்வுகளின் அதீதத்தை குறைத்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். பிரமஞானத் தவத்தை நீங்கள் செய்து வரும்போது இந்த ஐம்புலன்களும் 20 சதவிகிதத்தைத் தாண்டாமல் நாய்க்குட்டியை போல நம் கால்களுக்கு கீழேயே இருக்கும்.  தவத்தின் ஆற்றல்கள் இல்லாமல் போகும்போது, நாம் இந்த ஐம்புலன்களுக்கு நாய்க்குட்டியாக மாறிப் போவோம்.  இந்த ஐம்புலன்கள் கொடுக்கும் உணர்ச்சிகளிலேயே நம்மை அடிமையாக்கிக் கொண்டு தெரு நாயினும் கீழான பிறப்பாகவே நாம் மாறிப் போவோம்.  இன்றைக்கு உலகில் வாழும் மனிதர்கள் 90 சதவிகிதம் பேர் அப்படித்தான் ஐம்புலன்களின் உணர்வுகளுக்குள் தன்னைத் தொலைத்துவிட்டு இன்றுவரை  தேடிக்கொண்டே இருந்து வருகிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் ஒரே விமோசனம் – ஒரே மோட்சம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் அருளியிருக்கும் ஔவைத்தாய் இங்கே அகவலில் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த பிரமஞான வித்தை ஒன்றுதான்.  புத்தியுடையோர் பிழைத்துக் கொள்க. 

இவ்வாறுதான், நம் ஐம்புலன்கள் கொடுக்கும் உணர்வுகளை அடைத்துக் கொள்ளும் ஞானத் தந்திரத்தை செய்து நாம் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்கிறார்.

நல்லது.  இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும்  

@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்

www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்

கொடுத்து வருகின்றோம். நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

 பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

திருச்சிற்றம்பலம் !!