தேகம் பொன்மேனி ஆகும் ரகசியம்

தேகத்தை பொன்மேனியாக்கும் திருமந்திரம்

எம் அமுதத் தேனாம் தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம். அனைத்து தமிழ்ச் சான்றோர்களுக்கும் மனித உயிர்களுக்கும் பரிபூரண வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, எம் சற்குருவிடம் நல்லாசி பெற்று திருமந்திர அமுதக்கடலில் அடுத்ததொரு முத்தை எடுக்கிறேன், உங்கள் அனைவருக்காக.

நம் முப்பாட்டன் வருடத்திற்கு ஒரு பாட்டு என்று மூவாயிரம் ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்து பரிபூரண அமுத ஞானத்தைக் கொடுத்துச் சென்றிருக்கிறார். ஒரு பாட்டு எழுதுவதற்கு ஒரு வருடம் முழுக்க பிரம்மஞானத் தவத்தில் இருந்திருக்கிறார் என்றால், அப்பாட்டின் வலிமையும் வல்லமையும் நமக்குப் புரிந்திருக்க வேண்டுமல்லவா. தான் பெற்ற ஞான இன்பத்தை அவரோடு வைத்துக் கொள்ளாமல் நமக்கும் அள்ளித் தெளித்திருக்கிறார். வாருங்கள், அடுத்த அமுதக் குடத்திற்குள் நுழைந்திடுவோம்.

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம் ஒன்றில்லை
வளிஉறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம் அதாமே. (திருமந்திரம் – 846)

ஆதித் தமிழ்ச் சித்தர்கள் நம் சமுதாயத்திற்குச் சொல்லும் செய்தி மரணமிலா பெருவாழ்வைத்தான். அதற்காக அனேக உபாயங்களையும் தந்திரங்களையும் கொடுத்துள்ளார்கள். கர்ம வினைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதால், ஒருவருக்குப் பயன்படும் உபாயம், தந்திரம் மற்றவருக்கு பயன்படாமல் போகலாம். அதனால் சித்தர்கள், ஞானிகள் கூறிய ஏதாவது ஒரு தந்திரத்தில், உபாயத்தில் நமக்கு கிட்டவேண்டிய பிரம்ம ஞானம் கிட்டியேத் தீரும். யாருக்கு எந்த தந்திரம் சித்தியைக் கொடுக்கும் என்பது அவரவர் குருமார்களே முடிவு செய்வார்கள். கர்மவினையின் தாக்கத்தை தட்டித் தூக்கியெறிய ஒரு குருவால் மட்டுமே முடியும்.

திருமூலர் இப்பாட்டில் கூறுவது என்னவென்றால், தெளிதரும் இந்தச் சிவநீரைப் பருகிவிட்டால் ஒரு வருடத்திற்குள்ளே தேகமானது ஒளி நிலையை அடைந்துவிடும் என்கிறார். சரி, நல்ல விசயம்தான். அந்த சிவநீர் எங்கே இருக்கிறது என்பதைத் தேட வேண்டாமா? இப்பாட்டின் கருவே சிவநீர்தான். சிவநீர் எது என்று முதலில் கண்டறிய வேண்டும். கண்டு அறிந்ததும் அச்சிவநீரை எப்படி பருக வேண்டும் என்னும் உபாயத்தை, தந்திரத்தை, தவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கடுத்து ஒரு வருடம் முழுக்க விடாமல் அத்தவத்தை, தந்திரத்தைச் செய்து வரவேண்டும். அப்போதுதான் தினமும் அச்சிவநீரை பருகிவர முடியும்.

சான்றோர்களும், புலவர்களும், சைவ சித்தாந்திகளும், சமயவாதிகளும் சிவநீர் என்றால் மனிதன் உடலிலிருந்து கழிவாக வெளியேறக்கூடிய சிறுநீர் என்று உரை காண்கிறார்கள். என்னவொரு அபத்தம் பாருங்கள். சிறுநீரை ஓராண்டு குடித்து வந்தால், தேகம் ஒளியாகி விடுமா? என்னவொரு பேதமை? அப்படியென்றால் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட மக்கள் அனைவரும் சிறுநீரைப் பிடித்து ஒரு வருடம் குடித்து, ஒளிதேகி ஆகிவிடலாமே. வள்ளலார் எல்லாம் ஒளிதேகம் அடைய சிறுநீரைக் குடிக்க வேண்டும் என்று எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? இல்லையே. இங்கே பிரம்ம ஞானத்தைச் சொல்பவர் திருமூலர். அவர் மகா சித்தர். அவரைப் போன்று இறைவனை அடையும் தந்திரங்களை பகீரங்கமாக உரைத்தவர்கள் காகபுசண்டரும் மாணிக்கவாசகரும் ஔவைத்தாயும் தான். மற்ற சித்தப் பெருமக்கள் மறைத்தே ஞானத்தைச் சொன்னார்கள்.

மாணவர்கள், இளைஞர்கள், பெரியோர்கள் எவராயிருப்பினும் நம் தமிழ் ஞானப் பாடல்களை படிக்கும்போது, பிரம்மஞானத்தில் அனுபூதி நிலை அடைந்த குருமார்களிடம் சென்று பிரம்மஞான விளக்கம் கேட்டு மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டுமே அல்லாது, புலவர்கள் உரை எழுதி வைத்திருக்கும் நூல்களை அப்படியே படித்து ஏற்றுக் கொள்ளக் கூடாது. அது அறியாமையில்தான் நம்மை மூழ்க வைக்கும்.

சரி, விசயத்திற்கு வருவோம். சிவநீர் என்றால் அது ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வரும் கங்கை நீராகும். சிவன் சிரசில் சூடியிருக்கும் பிறைநிலவிலிருந்து பொங்கிப் பிரவகிக்கும் கங்கை நீர்தான் சிவநீர் ஆகும். கங்கை நீர் ஒன்றுதான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் தன் சுயத்தன்மையிலேயே இருக்கும் புனிதமான ஞான நீராகும். அப்படியென்றால் கங்கை நீரை ஒரு வருடம் குடித்துவந்தால் தேகம் ஒளியாகிவிடுமா என்று அபத்தமான கேள்வி உங்களுக்குள் எழக்கூடாது.

கங்கை நீர் என்பது நமது அமுதக் கலசத்திலிருந்து உயர்மின்காந்தக் கலைகளின் தண்வெப்பத்தினால் உருகி வழிந்து இறங்கும் அமுதநீர் ஆகும். அமுதத்தை உண்டால் இறப்பில்லை என்பது நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு நன்றாக தெரிந்த விசயம்தான். அதனால் பாற்கடலில் விளைந்த இந்த அமுதப்பாலை உண்பதற்காக தேவர்களும் அசுரர்களும் மேருமலையை மத்தாக வைத்து, வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலை கடைந்து அமுதக் கலசத்தை வெளியே கொண்டு வந்தார்கள். அதில் தேவர்களுக்கு மட்டும் அமுதம் கிட்டியதால், அவர்கள் இன்றுவரை சாகாவரம் பெற்று சிரஞ்சீவியாய் வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த அமுதக் கலசம் எங்கே இருக்கிறது என்றால், அது சிரத்தின் நடுவே உள்முகமாக மையப்புள்ளியில் பிணியல் சுரப்பி இருக்கும் இடத்தில் தெளிவாக அமைந்துள்ளது. இதில் எந்தவித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். அமுதம் இருக்கும் இடம் ஒரு கலசத்தின் அமைப்பைப் போன்றும் பனியால் உறைந்துபோனது போன்றும் இருக்கிறது. இந்த அமுதக் கலசம் ஒவ்வொருவருக்கு உள்ளும் கண்டிப்பாக இருக்கிறது. அத்தனை பேரிடமும் அமுதக் கலசம் உள்ளது. அதில் அமுத நீரான சிவநீர் உள்ளது. அந்தச் சிவநீரை அவரவர்தான் பருக வேண்டும்.

உங்கள் உடலை அழியாமல் வைக்கும் அமுதத்தை மற்றவர் கேட்டால் கொடுப்பீர்களா என்ன? கண்டிப்பாக யாரும் தரமாட்டீர்கள். அப்படி என்றால், நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அந்த அமுதக் கலசத்தை போய் எடுத்து வர வேண்டியதுதான். ஏதோ பக்கத்து வீட்டில் அமுதக் கலசம் இருப்பதைப் போல சொல்கிறீர்களே, என்று முணுமுணுக்கிறீர்களா. அப்படித்தான் இப்பாட்டின் மெய்ப்பொருளை எம் சற்குரு எமக்குள் அனுபவப்பட வைக்கும்வரை சந்தேகம் இருந்து கொண்டிருந்தது.

சிவநீரைப் பருகிடும் உபாயத்தை, தந்திரத்தை திருமூலர் இப்பாட்டின் மூன்றாவது வரியில் சொல்லிவிட்டார். “வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கினால்” சிவநீர் உருகி ஓடி வரும். வளி என்றால் ஆகாயம், காற்று என்று பொருள்படும். அதாவது ஆகாயத்தில் இருக்கக்கூடிய அமுதக் காற்றை உறிஞ்சிக் கொள்ள வேண்டும் முதலில். எதன் வழியாக என்றால் எட்டின் (8 – அ) வழியாக. எட்டின் (8) வழியாக அமுதக் காற்றை உறிஞ்சக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், அப்போது உங்கள் தேகத்தில் மனம் ஒடுங்கிப் போய், மனமற்ற நிலையை அடைந்து விடுவீர்கள். அந்த எட்டுதான் அகாரம் என்னும் சூரிய ஒளிப்பாதை. இந்த சூரிய ஒளிப்பாதையின் வழியே இருக்கும் சுழிமுனை நாடி வழியேதான் அமுதக்காற்றை உறிஞ்ச வேண்டும். இதை தக்க ஞான சற்குருவானவர் தங்களுக்குக் கற்றுத் தருவார். முதலில் ஞான சற்குருவை தேடிக் கண்டுபிடியுங்கள். பின் அனைத்தும் தானே நடக்கும்.

மனம் ஒடுங்கும்போது, அதோடு கூடவே இன்னொன்றும் ஒடுங்கிப் போகும். அதன்பேர்தான் பிராணன் என்ற மூச்சுக்காற்று. அதாவது மனம் ஒடுங்கும்போது, சுவாசமற்ற நிலை தானே உருவாகிவிடும். மனமற்றவனே ஞானி. மனமுள்ளவனே மனிதன். அப்படி என்றால், நீங்கள் மனிதனாக இருக்கும்வரை மனமும் அடங்காது ; பிராணனனும் ஒடுங்காது ; சுவாசமும் நிற்காது. மனம் அடங்க, பிராணன் ஒடுங்க, சுவாசம் அற்றுப்போக மனிதன் மகா ஞானியாவான். இதுதான் இப்பிரபஞ்சத்தின் பிரமஞானக் கோட்பாடு.

இதில் வேடிக்கை என்னவென்றால், மனதையும் பிராணனனையும் சுவாசத்தையும் ஒடுக்க தனித்தனியாக வேலை செய்யத் தேவையில்லை. அனைத்திற்கும் ஒரே உபாயம்தான், தந்திரம்தான். அதுதான் சுடராழித் தவம் எனும் அமுத ஞானத் தவம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், எட்டு என்ற அகாரத்தின் வழியாக அதாவது வலது திருவடியின் வழியாக அமுதக் காற்றை உறிஞ்சிக் கொண்டுபோய், அமுதக் கலசம் இருக்கும் சுவற்றை ஆணிகொண்டு துளைப்பதுபோல, தினம்தினம் சூரியனின் உயர்மின்காந்த ஆற்றலைக் கொண்டு அமுதக் கலசத்தைத் தாக்கிக் கொண்டே வந்தீர்கள் என்றால், ஒருநாள் அமுதக் கலசமானது நீங்கள் தாக்கிய உயர்மின்காந்த வெப்பத்தால் உருகி தொண்டைவழியே தேன்பாகாக வழிந்துவர ஆரம்பிக்கும். அவ்வாறு வழிந்திடும் அமுதப்பாலாம் இச்சிவநீரானது தெளிந்த நீரோடையைப் போல தெளிவாக காட்சிதரும். இந்த அமுதச் சிவநீரை பிரம்மஞானத் தவத்தினால் மட்டுமே உருகவைத்து உண்ண முடியும். மற்ற உபாயங்களும், தந்திரங்களும் சிவநீரை அடைய எட்டாக் கனியாக இருக்கின்றன. இதை சற்குருவால் எமக்கு கிடைத்த பிரம்மஞான அனுபவத்தால் சொல்கின்றோம்.

ஏனென்றால், இந்த பிரம்மஞானத் தவத்தில்தான் பாற்கடலைக் கடைந்து அமுதத்தை எடுத்திடும் ஞானகர்மங்கள் சற்குருவினால் கற்பிக்கப்பட்டு செய்யப்பட்டு வருகின்றன. அமுதம் இருக்கும் இடத்தை சற்குரு உங்களுக்குக் காட்டிக் கொடுப்பார். அதன்பின் அக்கலசத்தை உடைத்து அமுதத்தை உருக வைக்கும் தந்திரத்தையும் போதித்திடுவார்.

இப்போது உங்களுக்கு அமுதக் கலசம் இருக்கும் இடம் தெரிந்தாயிற்று. அதன்பின் கலசத்தை உருக வைக்கும் வழிமுறையும் தந்திரமும் தெரிந்தாயிற்று. பிறகென்ன வேலை உங்களுக்கு !
திருவடி என்னும் திருப்பாற்கடலை பிரணவம் என்ற மேருவை மத்தாகக் கொண்டு அமுதக் காற்றை கயிறாகக் கொண்டு சாலன தந்திரத்தால் கடைய ஆரம்பித்தீர்களென்றால், உயர்மின்காந்தப் பிராணனின் தண்வெப்பத்தால் உருகாத அமுதக் கலசம் உடைந்து உருகி தொண்டையின் மேல் இருக்கும் பிரம்மரந்திரத் துவாரத்தின் வழியே தெவிட்டாத தேனாக – தேன்பாகாக மெல்ல மெல்ல பூங்காற்றாக குளிர்ச்சி நிறைந்து ஒவ்வொரு சொட்டுச் சொட்டாக விழ ஆரம்பிக்கும். அப்போது இத்தேகத்திற்கு இன்னதென்று உணரமுடியாத அற்புதப் புளகாங்கித உணர்வுகள் பீறிட்டுக் கிளம்ப ஆரம்பிக்கும். அங்கே தேகமும் உயிரும் ஒன்றுக்கொன்று பாம்புகள் புணர்வதைப் போல புணர்ந்து கொள்ள ஆரம்பிக்கும். அந்த மெய்யுணர்வுகள் கொடுக்கும் களிகொள்ளும் ஆனந்தம் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த மெய்யுணர் இன்பங்களை பிரம்மஞானத் தவத்தில் ஒவ்வொரு விநாடியும் ஒரு சாதகன் அடைந்து வந்து இவ்வாறு ஒரு வருடம் அமுத சிவநீரைப் பருகி வந்தானென்றால், அவன் தேகம் தங்கத்தைப் போன்று ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்க ஆரம்பிக்கும். “களிதரும் காயம் கனகம் அதாமே” என்பது இதுதான்.

சாலன தந்திரம் – மெய்ப்பொருளை கடைவது (ஒளிதரும் சிவநீர்)

மெய்ப்பொருள் கனகமாவது (தங்கமாவது)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!!