
தேகம் அழியா சித்திக்கான ரகசியம்

தேகம் அழியா சித்திக்கு திருமந்திரம்
நம் தமிழ்மொழியின் பிரம்ம தவஞானியான திருமூலர் பிரம்மஞானத் தவம் செய்து நமக்கு வழங்கிச் சென்ற திருமந்திரப் பாடல்களில் ஒவ்வொரு ஞானப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பற்றி சிறிது சிந்தித்து பகிர்ந்து மகிழ்வதற்காக இந்த சிறுமுயற்சி எடுக்கின்றோம். ஆதித்தமிழ்ச் சித்தர் குருமார்கள் நம் அனைவரையும் ஆசிர்வசிப்பார்களாக !
இன்று மூன்றாம் தந்திரத்தில் வரும் சரீரசித்தி உபாயம் என்ற தலைப்பில் வரும் ஒரு திருமந்திரத்தை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்பாடல் :
மூன்று மடக்குஉடைப் பாம்பு இரண்டும் எட்டும் உள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றியிருக்க உடம்பு அழியாதே (திருமந்திரம் – 728)
முதல் வார்த்தையே மூன்று மடக்குடை பாம்பு என்கிறார் திருமூலர். மடக்குதல் என்றால் மாறுதல், மடங்கிச் செல்லுதல் என்று பொருள்படும். மூன்று இடத்தில் மாறிச் செல்வது அல்லது மூன்று இடத்தில் மடங்கி வளைந்து செல்வது என்று பொருளாகிறது. பெரிய, பெரிய புலவர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், சமயவாதிகள் எல்லோரும் உடனடியாக இம்மந்திரப் பாடலுக்கு உரை கண்டு சொல்லி விடுகிறார்கள். இம்மந்திரத்தில் மறைந்துள்ள சூட்சுமம் என்ன? அவை சொல்லவரும் மெய்ப்பொருள் என்ன? அவற்றை எவ்வாறு தந்திர முறையில் செய்வது? என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்பட்டிருந்தால், சத்திய பிரம்மத்தின் சூட்சுமத்தை கண்டு விண்டிருப்பார்கள். அனுபவமில்லா சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேர்ந்துவிடுமா என்ன. நாம் மெய்ப்பொருளுக்குள் நுழைந்து செல்வோம்.
மூன்று மடக்குடை பாம்பு. பாம்பின் குணம் வளைந்து, வளைந்து செல்வது ; ‘ஸ்’ என்ற சத்தத்தோடு செல்வது பாம்பின் நடை. பாம்பு ஒலியின் ஆற்றலாகும். ஒலியின் தன்மை வளைந்து வளைந்து செல்வதுதான். ஒலி என்றால் சத்தம்தானே. எனவே, பாம்பு என்று திருமூலர் சொன்னது நம் தேகத்தில் ஒலியானது சத்தத்தோடு பயணம் செய்யக்கூடியது என்பதைக் காட்டத்தான். நம் சுவாசத்தின் சத்தம்கூட ‘ஸ்’ என்றுதான் இருக்கிறது. ஆனால், சுவாசங்கள் எந்தவிடத்திலும் வளைந்து வளைந்து செல்வதில்லை. ஒரே நேர்க்கோட்டில்தான் செல்லும்.
சான்றோர்கள் கூறுவது என்னவென்றால், மூன்று மடக்குடை என்பது இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய நாடிகளில் பிராணன், அபானன் செல்வதுதான் என்கிறார்கள். இவர்கள் சொல்வதை பார்த்தால் ஒருவகையில் சரியாகத்தான் இருப்பதுபோலத் தோன்றுகிறது. இம்மந்திரத்தின் அடுத்த வார்த்தையை ஒப்புநோக்கும்போது மேலே சொன்ன மூன்றுநாடிகள் அடிபட்டுப் பொய்த்துப் போய்விடுகிறது.
இரண்டும் எட்டும் உள என்பது இரண்டெட்டு பதினாறு என்று அர்த்தம் கொண்டு, பதினாறு எண்ணிக்கையிலான இடகலை சுவாசத்தை அர்த்தம் கொள்கிறார்கள். இது தவறான கருத்தாகும். இரண்டும் எட்டும் என்பது உகாரத்தையும் அகாரத்தையும் சுட்டிக்கொண்டு நிற்கிறது. உகாரம் என்ற இடது திருவடி இரண்டு என்ற எண்ணிக்கையினாலும் அகாரம் என்ற வலது திருவடியை எட்டு என்ற எண்ணிக்கையினாலும் மறைத்துக் கூறுவது சித்தர்களின் பரம்பரை மரபாகும். தக்கார்க்கு உரைத்தும் மற்றார்க்கு மறைத்தும் சொல்லிச் செல்வதுதான் சித்தர் மரபு.
எனவே, மூன்று மடக்குகளை உடைய பாம்பானது இரண்டும் எட்டும் என்ற எண்ணிக்கையில் அமைந்திருப்பதுதான் என்கிறார்கள் சித்தர் ஞானிகள். அதாவது அகாரமும் உகாரமும் தான் மூன்று இடங்களில் மடங்கிக் காணப்படுகிறது என்கிறார்கள். எங்கே அந்த மூன்று இடங்கள் என்றால், அது ஃ என்ற எழுத்தின் வடிவத்தில் அமைந்துள்ள வலது திருவடி, இடது திருவடி மற்றும் மகாரம் என்ற அக்கினிக் கலை இருக்கும் இடங்களாகும்.

உகாரம் – இடது திருவடி அகாரம் – வலது திருவடி
அடுத்ததாக “ஏன்ற இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம்” என்கிறார். இந்த பன்னிரெண்டு அங்குலம் என்பது பிராணன் என்று சொல்கிறார்கள். அது தவறு. பன்னிரெண்டு என்பது வலது திருவடியின் ஒளிக் கற்றைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இந்த பன்னிரெண்டு அங்குலம் என்ற வலது திருவடிதான் பிராணன் உள்நுழைந்து செல்லும் வழியாகும் என்பதால், உடலுக்குள் பிராணன் உள்நுழைந்து செல்லும் வலது திருவடியைத்தான் ஏன்ற இயந்திரம் பன்னிரெண்டு அங்குலம் என்றார்.
அடுத்து “நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டியிட்டு” என்ற வரி வருகிறது. நான்றவிழ் முட்டை இரண்டு என்பது அகாரத்தையும் உகாரத்தையும் குறிக்கிறது. இந்த அகார, உகாரக் கலைகளை உற்று உற்றுப் பார்த்து, இவ்விரு கலைகளையும் ஒன்றுசேர்க்கும்போது மூன்றாவது திருவடி அழகுறத் தோன்றி காட்சியளிக்கும். அந்த மூன்றாவது திருவடியின் மெய்ப்பொருளில் கவனம் சிதறாது இமை மூடாமல் உற்று உற்றுப் பார்த்து ஊன்றி நின்று, ஆழமாகவும் ஆழ்ந்தும் நிற்கும்போது, அங்கே மூன்று மடக்குடை பாம்பானது, கலைகளின் எண்ணிக்கைகளால் சமச்சீர் எண்ணிக்கையினை பெற்று நிற்கும்.
அதாவது அகாரத்தின் பன்னிரெண்டு எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருக்கும்.
உகாரத்தின் பதினாறு கலைகள் பன்னிரெண்டு கலைகளாக மாறி நிற்கும்.
உகாரத்தின் மீதமுள்ள நான்கு கலைகள் அக்கினிக் கலைகளை நோக்கி வெண்சாரைப் பாம்பினைப் போன்று வளைந்து வளைந்து ஸ் என்ற சத்தத்தோடு ஓடிச்சென்று அக்கினிக் கலைகளின் எட்டோடு ஒன்று சேர்ந்து பன்னிரெண்டு கலைகளாக உருமாறி நிற்கும்.
இப்போது அகாரம், உகாரம், மகாரக் கலைகளுக்குள் பேதமில்லாமல் ஒவ்வொன்றும் பன்னிரெண்டு கலைகளாக உருமாறி நிற்கும்போது, அங்கே அக்கினிக் கலைகளில் ஒரு ரசவாதம் நடைபெறத் தோன்றும். தோம், தோம் என்ற நாதம் அங்கே எழ ஆரம்பிக்கும். எந்த அளவுக்கு இந்த பிரம்மஞானத் தவத்தில் இந்நிலை வரும்போது, இமை மூடாது விழிப்பு நிலையில் தொடர்ந்து உடல் வலிகளைப் பொருட்படுத்தாமல் சாதகன் மகாரக் கலைகளில் ஊன்றி நிற்பானோ, அந்த அளவுக்கு அவனின் சிரசிற்குள் சிவநடனம் தோம், தோம் என்று ஒலிக்க ஆரம்பிக்கும். இந்த நடனம்தான் சிவநடனம், ராஜநடனம், சிவராஜ நடனம், நடராஜ நடனம் ஆகும். சிவம் ஒளிவடிவாக இருந்தாலும், சிவம் நடனமாட ஒலியின் சக்தி கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.
சிவம் அசையாமல் இருந்தால் அது ஒளி வடிவமாகும்.
சிவம் அசைய ஆரம்பித்துவிட்டால் அது ஒலி வடிவமாகும்.
ஒளியோடு ஒலி வடிவத்தோடு சேர்ப்பிக்கும் கலைதான் நமது பிரம்மஞானத் தவமாகும். இத்தவத்தை விட்டால் சிவத்தையும் பிடிக்க முடியாது ; சக்தியையும் பிடிக்க முடியாது ;
சிவத்தின் அடி, முடியையும் காண முடியாது ;
மகாவிஷ்ணுவின் சங்கு நாதத்தையும் சக்கர ஒளியையும் காண முடியாது.
இவ்வாறு யார் ஒருவர் சதா மகாரக் கலைகளோடு அகாரத்தின் ஒளிக் கலைகளையும் உகாரத்தின் ஒலிக் கலைகளையும் ஒன்றாக சேர்ப்பித்து மூன்று கலைகளையும் சமச்சீர் கலைகளாக்கி, அகாரத்தை 600 கலைகளாவும் உகாரத்தை 600 கலைகளாகவும் மகாரத்தை 600 கலைகளாகவும் வேதியியல் மாற்றம் செய்கிறானோ அவனுக்குள் இருக்கும் உயிர் மொட்டானது பூத்து மலர ஆரம்பித்துவிடும். இவ்வாறு தொடர்ந்து பிரம்மஞானத் தவத்தில் ஊன்றியிருந்து கொண்டிருந்தால், அப்போது இந்த உடலானது அழியா நிலையை – இறவா நிலையை – மரணமிலா பெருவாழ்வை அடைந்துவிடும். திருமூலர் இப்பாடலில் சொல்லியுள்ள மெய்ப்பொருள் மகாரத்தில் ஊன்றியிருக்க உடல் அழியாதே என்பதுதான்.
இந்த திருமந்திரப் பாடலுக்கான வரைபடம் இதோ

மூன்று மடக்குடைப் பாம்பு
ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்
ஞான சற்குரு டாக்டர்.ருத்ர ஷிவதா,
பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!!


