இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!

இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.

அடுத்த வரி அற்புதம் நின்ற கற்பகக் களிறே (14) என்பது.

அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய கற்பகமாக இருக்கக்கூடிய ஆண் யானையாகிய களிறே என்று பொருள்படுகிறது. கற்பக மரம் என்று ஒன்று இருப்பதாக நம் முன்னோர்களால் சொல்லப்படும் மரம் ஒன்று உண்டு. அம்மரத்திடம் போய் நாம் எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்பது காலங்காலமாக இருந்து வரக்கூடிய ஒரு ஐதீகம்.

கற்பகம் என்ற சொல்லை பதம் பிரித்துப் பார்த்தோமென்றால்,

கற்பு + அகம் = கற்பூ + அகம் = கல் + பூ + அகம் எனப் பிரிந்து பொருள் தரும்.  பெண்களுக்கு கற்பானது கல்லைப் போன்ற திடகாத்திரமாக, மிக்க வலிமையானதாக இருக்க வேண்டுமென்பார்கள் நம் முன்னோர்கள்.  ஆண்களுக்கும் கற்பு சமமானதே.  அதனால்தான் திருமண நிகழ்வின்போது, கல்லால் ஆன அம்மியில் பெண்ணின் காலை வைத்து அதில் மணமகன் மெட்டியை அணிவிப்பான்.  அந்த மெட்டியை அப்பெண் பார்க்கும்போதெல்லாம், திடமாக இருக்கும் அம்மியில் வைத்து இந்த மெட்டி போடப்பட்டிருக்கிறது, இந்தக் கல்லைப் போல நாம் கற்பில் திடமாக, வலிமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.  இந்நிகழ்விற்காக அம்மிக்கல், கால் மெட்டி சடங்குகளை நம் முன்னோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்.

இங்கே கற்பூ என்பதை நாம் தவத்தில் காண வேண்டிய ஒரு நிகழ்வாகும்.  நமது கண்மணிப் பூவானது கல்லினைப் போல ஆடாமல் அசையாமல் உறுதியாக ஒரே இடத்திலேயே நிலை கொண்டிருக்கும்போது, தவத்தை நம்மால் எளிதாகச் செய்துவிட முடியும்.  கண்மணியானது அசைந்து கொண்டிருக்கும்போது, மனமானது அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டே இருக்கும்.  திருவடியின் அசைவுகள் எல்லாமே மனதின் சஞ்சலத் தன்மைகளையே குறிகாட்டுகின்றன. மெய்ப்பொருள் அசைந்தால், மனதில் எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும்.  எண்ணங்களை வரவொட்டாமல் செய்ய வேண்டுமென்றால், இமைக்காது இருந்துவர பழகிவர வேண்டும்.  இப்படி இமைக்காமல் இருக்கப் பழகிக் கொண்டால், என்ன நடக்கும் என்பதை திருமூலர் சொல்வதைக் கேட்போம்.

நெற்றிக்கு நேரே புருவத்துஇடைவெளி

உற்றுஉற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்

பற்றுக்கு பற்றாய்ப் பரமன் இருந்திடம்

சிற்றம்பலம் என்று சேர்ந்து கொண்டேனே   (திருமந்திரம் – 2770)

இறைவன் நம்மில் எவ்விடத்தில் வாசம் செய்கிறான் என்பதை திருமூலரின் வாக்கால் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.  நெற்றிக்கு நேராக புருவத்து இடைவெளிக்குள் இறைவன் வாசம் செய்கிறான்.  அதுதான் பற்றே இல்லாமல் இருக்கும் பரமேசுவரனைப் பிடித்துக் கொள்ளும் பற்றாகும். அப்பற்று நம்மை சிவமாக்குவிக்கும். அவ்விடம்தான் பரமேசுவரனின் வாழ்விடமாகும்.  அதுதான் சிற்றம்பலமும்கூட.  அவ்விடத்தை நாம் அடைய வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் தெரியுமா, அன்பர்களே.  அந்த புருவ இடைவெளியான மகாரப் புள்ளியில் மௌனப் புள்ளியில்  இமைக்காமல் சதா உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான்.  அவ்வாறு செய்துவிட்டோம் என்றால், திருச்சிற்றம்பல வாசன் – பரவுலகை ஆளும் பரமேசுவரனோடு ஒன்று சேர்ந்து இறைநிலையை அடைந்துவிடலாம். இந்நிலைதான் கற்பக நிலையாகும்.

இந்நிலையை எப்போது நாம் அடைகின்றோமோ, அப்போதுதான் நம் சிரசிற்குள் மகா அற்புதங்களும் நம்ப முடியாத மாயாஜாலங்களும் வண்ண வண்ணப் பூக்களாக மின்னொளிகளாக வானவில்லாக காட்சி அளிக்க ஆரம்பிக்கும்.  இந்நிலை கிடைக்கும்போது, நாம் எண்ணும் எண்ணங்களையும், ஆழ்விருப்பங்களையும் கற்பகக் களிறான மகா கணபதி நிறைவேற்றிக் கொடுக்க ஆரம்பிப்பார்.  மகா கணபதி இருக்கும் இடம் இவ்விடம்தான்.  நம் உயிர்க்கூட்டிற்கும் நம் மகாரத் திருவடிக்கும் இடையே இருக்கும் பிரமநாடிதான் தும்பிக்கையைப் போன்றிருக்கும்.  அதனால் இந்த உயிர்நாடியை பிரமஞானிகளும் சித்தர்களும் மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கணபதி என்ற உருவத்தில் உவமைப்படுத்திச் சொல்லிச் சென்றார்கள்.  இப்போது உயிர்நாடியின் மெய்த்தன்மை மறைந்து போய், உவமானப் பொருளே உண்மை என்றாகி, நான் கணபதி உருவத்தை வரைந்தும் செதுக்கியும் வைத்துக் கொண்டு வழிபட்டு வருகின்றோம்.  உண்மையில் வழிபட்டு பிரார்த்தனை செய்ய வேண்டியது, உங்களுடைய உயிர்நாடியைத்தான்.  இந்த உயிர்நாடியான பிரமநாடியைத்தான் ஔவைத்தாய், “அற்புதம் நின்ற கற்பகக் களிறே (14)” என்றார்கள்.

நல்லது, அடுத்த அகவல் வரிக்குள் செல்லலாம்.

முப்பழம் நுகரும் மூஷிக வாகன (15).

முப்பழம் என்பது மூவகைப் பழங்கள். அது மொட்டோ, பூவோ, காயோ அல்ல. கனி.

முப்பழம் என்பதைப் பதம் பிரிக்கலாம்.

மு = ம் + உ

ப் = ப்

ப = ப் + அ

ழ = ழ் + அ

ம் = ம்

முப்பழத்தில் 5 மெய்யெழுத்துக்களும், 3 உயிர் எழுத்துக்களும் வருகின்றன.  உயிர் எழுத்துக்களில் ‘அ’ இரண்டு முறையும் ‘உ’ ஒருமுறையும் வருகிறது. மெய்யெழுத்துக்களில் ஒரு முறை ‘ழ்’ மெய்யும், இரு முறை ‘ப்’ மெய்யும், மற்றொரு இரு மெய்களாக ‘ம்’ உம் வருகிறது.  அதாவது மூவகை மெய்யெழுத்துக்கள் வருகின்றன. அதாவது ஒரு ழகர மெய், இரு பகர மெய், இரு மகர மெய்கள் வருகின்றன. ஆக இரு உயிரெழுத்து, மூன்று மெய்யெழுத்துக்கள் சேர்ந்த ஒரு நிலைதான் முப்பழம் என்பது.   இரண்டு உயிரும் மூன்று மெய்யும் இணைந்தால், அதுவே பரிபூரணமான பஞ்சாட்சரமாகும்.  இதுதான் பிரமஞானப் பஞ்சாட்சரமாகும்.

ப் என்ற மெய்யில் வரும் பகரம் ஒளி என்றும் அழகு என்றும் பொருள்படுகிறது.  அதாவது அழகே உருவான ஒளிதான் பகரம் என்றாகிறது.

அடுத்து ழ் என்ற மெய்யில் வரும் ழகரம்.

‘ழ’கரம் – இது தமிழ் மொழியின் தனி சிறப்பு. உயிரின் ஒலியை உடலோடு இணைக்கக் கூடிய பிரபஞ்ச நாதமாக இருப்பதுதான் இந்த ழகர ஒலி.  எனவே, முப்பழமானது இவ்வாறாகத் தான் இறைவனால் கட்டமைக்கப்பட்டு, இறை இரகசியமாக இன்றளவும் இருந்து வருகிறது.

அ – அகாரம்

உ – உகாரம்

ம் – மகர மெய்

ப் – விந்தொளி

ழ் – நாதவொலி.

ழகரம் தமிழின் சிறப்பு. திருஞான சம்பந்தர் சீர்காழி பெருமான் மீது பாடிய திருப்பதிகம் ஒன்றின் பத்தாவது பாடலில் அதாவது ஒரு செய்யுளில் 19 முறையும் 12வது செய்யுளில் 22 முறையும் ழகரம் பயன்படுத்தி இருப்பார்.

பாடல் :

பாழி யுரை வேழநிகர் பாழ மணர்
குழுமுட லாள் அருணரா
ஏழினிசை யாழின்மொழி
ஏழையவள் வாழுமிறை வாழுமிடமாம்
கீழிசை கொள் மேலுலகில் வாழரசு
சூழரசு வாழவரனும்க் காழியசில்
காலிசெய் வேழ்உலகில் ஊழிவளர்
காழிநகரே”

பொருள் :

பாழிகளில் தாங்கும் சமணர்களும் புத்தர்களும் உணராத பெருமான், யாழின் இசை போல் பேசும் உமாதேவியுடன் உறையும் பதியாவது கீழுலகும் மேலுலகும் அஞ்சுமாறு செய்த காளியானவள் அக்குற்றம் நீங்க பூஜை செய்த காழியப் பதிவாகும்.

பாடல் :

“ஒழுகலரி தாழ்கலியில் ஊழிஉலகு
பழிபெருகு வழியை நினையா
முழுதுடலில் ஏழுமயிர்கள்
தழுவுமுனி குழுவினொடு
கெழுவு சிவனைத்
தொழுது உலகில் இழுகுமலம்
அழியும்வகை கழுவும் உரை
கழுமல நகர்ப் பழுதில் இறை
எழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே”

பொருள் :

அறம் அழிந்துகொண்டே வரும் கலியுகத்தில் வரும் அரவழியைப் பின்பற்றுவது கடினமாகிவிடவே உடல் முழுவதும் உரோமங்கள் கொண்ட உரோமச முனிவர் தம் கூட்டத்துடன் வந்து மலம் (பாசங்கள் ) நீங்குமாறு வழிப்பட்டது கழுமலைப் பதி (சீர்காழி ) ஆகும்.

ழ – நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும்.

இந்த ழகரம் உச்சரிப்பு நமக்கு என்ன செய்தியை சொல்லத் தெரியுமா அன்பர்களே.  தமிழின் சிறப்பெழுத்து நம் உயிரோடும் உடலோடும் ஒட்டி உறவாடும் ஒரு ஞான எழுத்தாகும். எப்படியென்றால், ழ எழுத்தை நாக்கின் நுனியை மேல் அண்ணத்தின் நடுப்பகுதியில் தொட்டுக் கொண்டு இருக்கும்படி வைத்துக் கொண்டு உச்சரிப்பதால் உருவாகும் ஒலியே ழகர எழுத்து.  எந்த மொழியிலும் இல்லாத ஒரு அற்புத மாயாஜாலத்தை இந்த எழுத்து நமக்குள் விளைவித்துவிடும். எப்பொழுதெல்லாம் நாம் ழகர எழுத்தை உச்சரிக்கின்றோமோ, அதாவது நாக்கின் நுனியை மேல் அண்ணத்தின் நடுவில் தொட்டுக் கொண்டு உச்சரிக்கின்றோம் இல்லையா. அப்பொழுதெல்லாம் நம் உடலானது உயிரின் ஆற்றலோ இணைக்கப்பட்டுவிடும்.  உயிரின் ஆற்றல் கிடைக்கப் பெற்ற உடலானது தொடர்ந்து புத்துணர்ச்சி நன்றாக இயங்க ஆரம்பிக்கும். களைப்பென்பதே இல்லாது போகும்.  எங்கள் குருகுலத்தில் பிரமஞானத் தவத்தைப் பயின்று வரும் மாணவர்களுக்கு, குருவின் அருளால் இந்த வித்தைக் கற்றுக் கொடுத்து அனுபவப்பூர்வமாக உணர்த்தி வருகின்றோம். அதேபோல தொடர்ந்து நமது நாவின் நுனியை மேல் அண்ணத்தின் நடுப்பகுதியில் தொடும்படி வைத்துக் கொண்டால், நம்முடைய மனமானது செயல்படாது நின்றுவிடும்.  மனம் செயல்படாமல் மனதை வெல்லும் ஒரு வெற்றிகரமான உபாயம் – தந்திரம்தான் இந்த ழகர எழுத்தை உச்சரிப்பது.  மனமற்ற நிலையே ஞானம்.  மனம் அற்றுப் போனவனே ஞானி ஆகும் தகுதியைப் பெறுகிறான். நமது தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், நம் தமிழ் மொழியை

“தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

என்றார். காரணம் இந்த ழகர எழுத்தின் சிறப்பால்தான்.

அடுத்தது மகர மெய்யெழுத்தான ‘ம்’ என்பது.  இந்த எழுத்தின் ஒலி உண்டாக்கும் ஆற்றல்களைப் பற்றி அமெரிக்காவில் இருக்கக்கூடிய நாசா விண்வெளிக் கழகமானது ஒரு பெரிய ஆய்வினையே மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.  அதன்படி சூரியனிடமிருந்து ஒருவித ஒலி தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும், அவ்வொலி என்னவென்பதை ஒரு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்து கேட்பொலியை பதிவு செய்து கேட்டபோது, சூரியனிடமிருந்து சதா தொடர்ந்து ‘ம்’ என்ற ஒலியே வந்து கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்து இவ்வுலகுக்கு அதை அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறார்கள்.  சூரியன் மட்டுமல்ல அனைத்துக் கிரகங்களும் நட்சத்திரங்களும் இவ்வாறு இந்த ‘ம்’ ஒலியைத்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கண்டார்கள்.  அந்த ‘ம்’ என்ற மகர மெய்தான் நமது உயிரின் நாதமாகவும் இந்நாள்வரையிலும் இருந்து வருகிறது.  நமது உயிரின் ஒலி – நாதம் இந்த ‘ம்’ மகர மெய்யே.  இறைவனின் நாதமும் இந்த மகர மெய்யே.  இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் நாதமும் இந்த மகர மெய்யாகவே இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.  அந்த அளவுக்கு இந்த பிரபஞ்சத்தின் சர்வ சுதந்திரம் பெற்ற ஒரு ஒலி உண்டென்றால், அது மகர மெய்யான ‘ம்’ மட்டுமே என்றால் அது மிகையாகாது.  அனைத்தும் உண்மையே – சத்தியமே.

அதனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆற்றல்களையெல்லாம் இந்த முப்பழம் என்ற சொல் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது.  அதனால்தான் நம் உயிரான மூஷிகன் இந்த உயிர், மெய் எழுத்துக்களான முப்பழங்களை உண்டுவருகின்றான் என்பதைத்தான், “முப்பழம் நுகரும் மூஷிக வாகன” என்றார் ஔவை.

அடுத்த வரி “இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டி (16)” என்பது.

இதுவரை சொல்லப்பட்டுள்ள அற்புத ஞானங்களாக விநாயகப் பெருமான் இருப்பதால், விநாயகப் பெருமானே, நீ சொற்களுக்கும் எண்ணங்களுக்கும் ஞானங்களுக்கும் அப்பாற்பட்டு அற்புத பிரமஞானப் பொருளாக இருக்கின்றாயே.  உன் பிரமஞானத்தை எனக்குள் விதைத்து விட இப்பொழுது நீ விரைந்து வந்து என்னை ஆட்கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என்பதைத்தான், “இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டி” என்கிறார் ஔவை.

அடுத்த வரி தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி (17) என்பது.

அழும் தன் குழந்தைக்கு அக்குழந்தை கேட்காமலே அதன் பசியறிந்து பால் கொடுத்து அக்குழந்தையின் உயிர் வளர்ப்பவள் தாயல்லவா.  ஆனால், நம்மைப் போல் ஞானத்திற்காகக் காத்துக் கொண்டு தவசிகளுக்கு இறைவனே தாயாக வந்து ஆட்கொண்டு அருளி ஞானப்பாலை ஊட்டி மகிழ்வான்.  இதைத்தான் மாணிக்கவாசகரும் சிவபுராணத்தில்,

                வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை

                அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

                புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி

                மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

                மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய                        (55)

                விலங்கு மனத்தால், விமலா உனக்குக்

                கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

                நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

                நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி

                நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

                தாயிற் சிறந்த தயாவான தத்துவனே                                                 (61)

என்று பாடிப் பாடி, அழுது அழுது, அரற்றி இறைவன் தாயாக வந்து ஆட்கொள்ள வேண்டும் என்று பலவாறு பாடிப் பரவுகின்றார்.

                அடுத்தபடியாக அதிசயப்பத்து என்ற பதிகத்தில் மூன்றாவது பாடலில்,

                                முன்னை என்னுடை வல்வினை போயிட

                                                முக்கணது உடைஎந்தை

                                தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன்

                                                எளியவன் அடியார்க்குப்

                                பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில்

                                                இளமதி அதுவைத்த

                                அன்னை ஆண்டு தன்அடியரிற் கூட்டிய

                                                அதிசயம் கண்டாமே. (அதிசயப் பத்து – 3)

அதாவது “எங்கள் தந்தை போன்ற பரமேசுவரன் சந்திர, சூரிய, அக்கினிக்களை மூன்று கண்களாக உடையவன். பிரமன் முதல் அனந்தாதியர் முடிய வரையுள்ள எவர்களாலும் அவன் அறிவதற்கு அரிதானவன் ; எளிமையானவன். ஆனால், சிவன் ஒருவனே தவம் செய்யத் தக்கவன் என்பதை உணர்ந்து, பிரமஞானத் தவத்தை உபதேசமாகப் பெற்ற தம் மெய்யடியார்கள் அறிந்து  அனுபவிப்பதற்கும் எளியனாய் இருப்பவன். பொன் உருவத்திலும், நிறத்திலும் வெற்றி கொள்ளத்தக்க திருவடிகளில் ஒரு கோட்டையையும், பிரணவத்தின் உச்சியில் மூன்றாம் பிறைச் சந்திரனையும் அமைத்து தாயாய் இருந்து ஆட்கொண்டு, நான் முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் அறுந்து போகும்படிச் செய்து, பிரமஞானத் தவத்தில் மிக்கராகிய தன் மெய்யடியார்கள் திருக்கூட்டத்தில், அதிக வினைகளைக் கொண்ட என்னையும்  அவன் சேர்த்தருளிய அதிசயத்தைக் கண்டேன்” என்று இறைவனை தாயாகக் கண்டு அதிசயித்துப் போனதாக மாணிக்கவாசகர் பாடுகிறார்.

திருவாசகத்தில் ஆனந்தமாலை பதிகத்தில் ஐந்தாம் பாடலில் மாணிக்கவாசகர்,

தாயாய் முலையைத் தருவானே

                                    தாராது ஒழிந்தாற் சவலையாய்

                                நாயேன் கழிந்து போவேனோ

                             நம்பீ இனித்தான் நல்குதியே

                                தாயே என்றுஉன் தாள்அடைந்தேன்

                                 தயாநீ என்பால் இல்லையே

                                நாயேன் அடிமை உடனாக

                                                ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.               (5)

அதாவது “எல்லாவுயிர்கட்கும் தாயாகி வந்து திருமுலைகளில் அமுதமாகியப் பாலைத் தருபவனே ! (ஞானப்பால் அளிப்பவனே !) அதனைத் தராது போனால் பாலின்றி மெலியும் சேய் போல் நாயேன் (அறியாமையாற்) இவ்வுலகத்தை விட்டு கழிந்து போக மாட்டேனோ?   இனியாவது அருள் தருவாயாக! உன்னைத் தாய் என்றெண்ணி உன் திருவடிகளை அடைந்தேன். ஆனால் நீயோ என்னிடம் கருணை  காட்டாது பாராமுகமாய் இருக்கிறாய். நான் உன்னையடைந்தவுடன் என்னை ஆட்கொண்டாய். இப்போது  நான் உனக்குத் தேவையில்லையோ?” என்கிறார்.

இறைவன் தாயாக இருந்து அவனது ஞான முலையின் மூலமாக தமக்கு ஞானப்பாலாக அமுதப்பாலை உண்பிப்பவனாக இறைவனே இருப்பதால், “தாயாய் முலையைத் தருவானே” என்றார்.

திருமுலைப்பால் திருவிழா

திருஞானசம்மந்தர் 3 வயது குழந்தையாக இருந்தபோது, இறைவியே தாயாக வந்து திருமுலையில் ஞானப்பாலைக் கொடுத்தது சீர்காழி திருத்தலத்தில். இது உலகமே அறிந்த விசயம்தான்.  அதைப்பற்றி சில செய்திகள்

திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி தனது திருமுலைப் பாலை, பொற்கிண்ணத்தில் எடுத்து, ஞானப்பால் ஊட்டும் விழா “சீர்காழி சட்டநாதர் கோயில் தேவஸ்தானம்” தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான திருக்கோயில். இக்கோவிலில் திருநிலைநாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.

சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.

குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்.

சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு “யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்” எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, “தோடுடைய செவியன் விடையேறி” என்று பதிகம் பாடலானார். அந்தப் பதிகம் இதோ.

தோடுடைய செவியன் விடையேறிஓர் தூவெண்மதி சூடிக்

காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்அன்றே.

ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.

பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.

ஆக, இப்படியெல்லாம் அருளாளர்கள் வாழ்வில் இறைவனே தாயாக வந்தருளி அருள்பாலித்து அவர்களுக்கு ஞான ஒளிதேகத்தை அருளியிருக்கின்ற காரணத்தால், ஔவைத்தாயும் தமக்கு இறைவனே தாயாக வந்து அருளிட வேண்டும் என்பதைத்தான், “தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி” என்று பாடினார்.

                அடுத்த அகவல் வரிகளுக்குள் செல்லலாம்.

                “மாயாப் பிறவி மயக்கம் அறுத்து (18)” என்பது.

 நாமெல்லாம் பிறந்திருக்கும் பிறப்பே மாயைகளாலும் கர்மவினைகளாலும்தான்.  அப்படியிருக்க இந்த மாயைகளை எப்படி அறுப்பது என்ற கேள்வி நம் அனைவருக்குள்ளும் கண்டிப்பாக எழுந்தால் ஒழிய, நமக்கெல்லாம் விமோட்சணமே கிடைக்காது.  கேள்வி எழுந்தால் பதில் கிடைக்கும்.  மாயை என்றால் என்ன? கர்மவினை என்றால் என்ன? எதன் காரணமாக மாயை வருகிறது? எந்த உபாயத்தின் மூலமாக மாயையை அறுத்தெறிவது? இவையெல்லாம் நமக்குள் எழ வேண்டிய கேள்விகள்.  ஔவை மட்டுமல்ல, அத்தனை சித்தர்களுமே, பிரமஞானிகளுமே மாயையையும், கன்மத்தையும், ஆணவத்தையும் அறுக்க வேண்டுமென்று சொல்லாமலில்லை.  ஆனால், எப்படி அறுப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?  அதற்கெல்லாம் பதில் ஔவை எழுதிய ஞானக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.  அந்நூலை வாங்கிப் படித்தால் எப்படி மாயை, கன்மம், ஆணவங்களை அழித்தொழிக்கலாம் என்பது தெரிய வரும்.  இந்த மும்மலங்களால் நமக்கெல்லாம் ஜென்மம், ஜென்மமாகப் பிறவிகள் அமைந்து கொண்டே இருக்கிறது.   இந்த மாயை மயக்கத்திலிருந்து நம்மை எப்படி விடுவித்துக் கொள்வது? மாயைகளை எப்படி அறுத்தொழிப்பது?

இந்த மாயை பற்றி திருமூலர் சொல்வதைக் கேட்போமே அன்பர்களே.

                                கொண்ட இவ்விந்து பரம்போல் கோதற
நின்ற படம்கடமாய் நிலை நிற்றலின்
கண்டுஅகல் ஆதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆகுமே.            (தி.ம.1930)

நான் ஐந்து மலங்களின் சுழலில் கிடந்து உழல்கின்றேன்; கரையேறுவது தெரியாமல் தத்தளிக்கிறேன். ஆணவம் என்னைக் குருடாக்குகிறது; இருட்டறையில் கிடத்தியிருக்கிறது; மூலையில் முடக்கிப் போட்டு விட்டது.

ஆன்மாவுக்கு ஆணவம் ஒர் அழுக்கு. அதனாலேயே ஆணவமலம் என்ற வழக்கு வந்தது போலும்! ஆன்மாவுக்கு ஆணவத்துடன் உள்ள சம்பந்தம் அநாதியானது. ஆணவமலம் ஆன்மாவைச் சிற்றறிவு உடையதாக்குகிறது. சிறு தொழில் உடையதாகச் செய்கிறது. ஆன்மாவைச் சிறுமைத்தனம் பொருந்திய நிலையதாக்குவது ஆணவத்தின் இயல்பு. ஆன்மாக்கள் தோறும் ஆணவத்தின் பந்தம் கூடும்; குறையும். இயல்பாக ஆன்மாவுக்கு அறிவு உண்டு; தொழில் உண்டு. ஆயினும் ஆன்மா ஆணவத்துடன் கலந்திருந்ததாலே ஆணவம் அறிவை மறைத்து விட்டது. தொழிலையும் மறைத்து விட்டது.

இருளிடைப்பட்ட கண், ஒன்றையும் காணாது. அதுபோல இருள் மலமாகிய ஆணவத்தின் வயப்பட்ட ஆன்மாவின் நிலையும் ஆனது; அதனால் ஆன்மா தன்னையும் காண இயலவில்லை; தன்னுடைய தலைவனையும் உணர இயலவில்லை. இது ஆணவத்தின் மூல நிலை. ஆன்மா திருவருட் துணையால் பிறவி எடுத்து வினைகள் இயற்றும் போது ஆன்மாவின் ஆணவம் கேடே செய்கிறது. ஆன்மா வினைகள் இயற்றும் போதும் இன்பதுன்பங்களை நுகரும்போதும் “நான் செய்கிறேன்”, “நான் நுகர்கிறேன்” என்று எண்ணி செருக்கடையச் செய்கிறது. இதுவே, ஆணவத்தினைச் சார்ந்த ஆன்மாவின் நிலை. ஆணவம், ஆன்மாவை இயல்பாக எப்போதுமே பற்றியிருப்பதால் இதை “மூல நோய்” என்று திருமுறைகள் கூறும். ஆணவம் இருளினும் கொடியது. காரணம் இருள், தன்னைக் காட்டும்; காணக்கூடிய பொருளை மறைக்கும். ஆணவம், தன்னையும் காட்டாது; தன் செயலையும் காட்டாது. ஆணவச் சார்பினால் ஆன்மாவுக்கு அறிவு இல்லாமல் போகிறது; விருப்பமும் இல்லை; செயலும் இல்லை.

ஆன்மா, இனங்கண்டு கொள்ள இயலாமல் ஒடுங்கிக் கிடக்கும்; முடங்கிக் கிடக்கும். ஆன்மாவுக்கு இது கேவலம். அதனால் ஆணவத்துடன் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாவின் நிலைமையை கேவலாவத்தை என்று மெய்கண்ட நூல்கள் கூறும்.

இந்த நிலையில் சிவன் எம்பிரான் கருணையால் ஆன்மா, மாயையிலிருந்து உடலையும் உலகையும் பெற்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து ஆன்மாவை மீட்க சிவன் —— பரம்பொருள் மாயை, கன்மம் என்று இரண்டு கூடுதல் மலங்களைச் சேர்க்கிறான். அதாவது அழுக்குத் துணியை வெளுக்க உவர் மண்ணைச் சேர்ப்பதைப்போல்! மாயை கன்மங்கள் உபசார வழக்காலேயே மலம் என்று கூறப்படுகிறது. மாயை, கன்மம் என்ற மலங்களுடன் சேர்க்கை கிடைத்தவுடன் ஆன்மாவுக்கு விருப்பம், ஞானம், செயல் ஆகிய மூன்றும் அமையும். இந்த நிலைகள் மாறிமாறி வந்து பொருந்தும். இந்த நிலையில் ஆன்மா, அறிவும் தெளிவும் இல்லாமல் நிலையில்லாதவற்றை நிலையாயின போலவும் நிலையானவற்றை நிலையில்லாதன போலவும் எண்ணும். நல்லன தீயனவாகும். தீயன நல்லனவாகும். இது மயக்க நிலை. ஒரு மலமாகிய ஆணவத்துடன் கூட்டுநிலை இருள்மல நிலை. மாயை, கன்யம், ஆணவம் ஆகிய மும்மலத்துடன் கூட்டு நிலை மருள் நிலை. இந்த நிலைமைகளில் இருந்து ஆன்மா பூரண அறிவுப் பொலிவுடன் விடுதலை அடைய வேண்டும். அதாவது இறவாத இன்ப அன்பு நிலையை அடைதல் வேண்டும். இந்த நிலை அருள்நிலை.

கருமம் — வினைத் தொடர்பு ஆன்மாக்களுக்குக் கிடைத்த பிறகே ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. அவரவர் செயலுக்கு ஏற்ற பயனைத் துய்க்குமாறு செய்தல் நியதி. துய்த்தலினால் ஆன்மாவின் மலங்கள் கரையும்; மலங்கள் செயலிழக்கும். ஆனால் துய்க்கும் பொழுதும் ‘நான்’, ‘எனது’ என்ற உணர்வுடன் துய்த்தால் பற்றின் காரணமாக, மலங்களின் பிடி இருக்கும். இதனால் செத்துப் பிறத்தல் தொடரும். செய்யும் வினைகள் மட்டுமே பிறப்பிற்கு வித்தாகா. செய்யும் செயல்களின் நோக்கமே காரணமாக அமையும். இங்ஙனம் மும்மலம் என்று பேசுவது பெரு வழக்கு. மாணிக்கவாசகர்  “ஐம்மலங்களிற் கிடந்துழல்வேன்’’ என்கிறார்.

மாயை, சுத்த மாயை என்றும், அசுத்த மாயை என்றும் இருவகைப்படும். அசுத்த மாயையின் காரியம் மாமேயம் எனப்படும். மாமேயம், கால தத்துவம் முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களும் உலகங்களும் உலகத்துப் பொருள்களும் இவற்றால் வரும் போகமும் ஆகும். திரோதானம் ஐந்தாவது மலம். சிவசக்தியே திரோதான சக்தியாகத் தொழிற்படுகிறது. திரோதான சக்தியே (மறைக்கும் ஆற்றல்) ஆன்மாவுக்கு மலங்களின் செயற்பாட்டை பக்குவப்படுத்தி உய்திச் சாதனைகள் (மலப்ரிபாகம்) ஏற்புடத் துணை செய்கிறது. இதுவும் மலம் என்று உபசாரமாகக் கூறப்பெறும். இவ்வைந்து மலங்களும் உயிர்களை – ஆன்மாக்களைப் பொருந்தி இயக்குகின்றன. இந்த நிலையில் ஆசைகள், விருப்பு வெறுப்புக்கள், இன்பங்கள் துன்பங்கள் ஆகியவற்றில் உழலும் நிலையை “ஐந்து மலங்களில் கிடந்து, உழல்வேன்” என்றார்.

மாணிக்கவாசகரின் அனுபவம் மலங்களின் ஆற்றல் அடங்கிய நிலை ; ஒடுங்கிய நிலை ; உய்யும் நெறியில் செல்லும் நிலை. ஆன்மாவில் வந்து பொருந்தும் குலம்களையப் பெற்றுவிட்டது; குற்றங்களும் களையப்பட்டு விட்டன. இவையிரண்டும் அற்ற நிலையே நன்னிலை தான் ! ஆயினும், நிறைநலம் சார்ந்த பக்குவம் அல்ல. அதனால் மாணிக்கவாசகர் தன்னைக் கைவிடாது அருள்பாலிக்கும்படி வேண்டுகின்றார். என் மலங்களின் ஆற்றல் வலியது. ஒரு சிறு இடுக்கில் கூட நுழைந்துவிடும். பழக்கவாசனை பொல்லாதது. அதனாலேயே பழக்கம் தவிரப் பழகுமின் என்றார்கள்.

இறைவனே! சிவனே! அனைத்துயிர்களுக்கும் மங்கலம் செய்பவனே! ஆணவத்திலிருந்து என்னை மீட்டு எடுப்பாயாக! என்னை ஆணவம் இயல்பாகப் பற்றியது! அநாதியிலேயே பற்றியது! நானும் ஆணவத்துடன் இரண்டறக் கிடந்துழல்கின்றேன்! இறைவா நீ, என்னை ஆணவத்திலிருந்து மீட்க மாயையைக் கொண்டு இயற்றிய உடல் கொடுத்தனை! மாயையை விளக்காகக் கொண்டு அந்த ஒளியில் கரையேறுமாறு பணித்தனை! ஆனால், நானோ மாயையில் கட்டுண்டு அதுவே சொர்க்கம் என்று கிடந்து உழல்கின்றேன். சாதனத்தைச் சாத்தியம் என்று எண்ணி மயங்கிக் கிடக்கின்றேன். எந்த ஒரு தீமையும் நன்மையின் வழியிலேயே மறையும்; மறைய வேண்டும். இது நியதி. அதனால் நீ எனக்கு நல்வினைகள் செய்தலுக்குரிய அறியும் கருவிகள் — செய் கருவிகளைத் தந்தருளினை. ஆனால் நானோ தீவினையே பெருக்கி வாழ்கின்றேன்!

இறைவா உன்னுடைய திருவருட் சக்தியே என் பொருட்டுத் திரோதான சக்தியாக உருக்கொண்டு மறத்தல் செய்யினும் நான் நினைவுப் புலனை மேலும் ஆழமாக இயக்கி மறக்க வேண்டியவற்றை மறக்காமல் வன்கண்மை கொண்டு வல்வினை செய்து வாழ்கின்றேன். ஆக, நான் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் ஆகிய ஐந்து மலங்களின் சார்பில் சிக்குண்டு உழல்கின்றேன். மத்திடை அகப்பட்ட தயிர்போல உழல்கின்றேன்! தயிர் — ஆன்மா! மத்து — ஐம்புலன்கள்! இறைவா, கன்மத்தின் வழி வினைவழி வந்த மிகப் பெரிய பொல்லாங்காகிய குலத்திலிருந்து என்னை மீட்டாய்! குலம், பிறப்பு — இஃது ஒரு தீச்சுற்று! இதிலிருந்து ‘என்னை மீட்ட பெருமானே என்னைக் குற்றங்களிலிருந்தும் மீட்டாய்! என்று பேசுகிறார். குற்றம், ஆன்மாவின் புலன்களால் செய்யப்படுவது. அகக் கருவிகளைச் சார்ந்தது குற்றம், குறைகள் பொறிகள் வயப்பட்டவை. இறைவன் மாணிக்கவாசகரைக் குற்றங்களின்றும் மீட்டெடுத்து விட்டான் குற்றங்கள் இல்லையேல் குறைகள் இரா! குறைகள் இல்லா நிலையில் குற்றங்கள் இல்லாமல் போகலாம். ஆனால் உறுதியாகக் கூற முடியாது. அதனால்தான் மாணிக்கவாசகர், “களைந்தாய் என்னைக் குற்றம்” என்று பாடுகின்றார்.

சிவனே! எம்பிரானே! என்னைக் குலத்திலிருந்து விடுபடச் செய்தனை! என் குற்றங்களைக் களைந்தாய்! இந்த நிலையில் என்னை முற்றாக எடுத்தாளுவாய்! மேருவை வில்லாக வளைத்த உனக்கு இது கடுமையான பணியல்லவே! உலகத்திற்குத் தலைவனாக விளங்கும் நீ, என்னை — அடைக்கலம் புகுந்த என்னைக் கைவிடலாமா? தனக்குவமை இல்லாத தலைவனே! ஐந்து மலங்கிடந்து உழலும் என்னை எடுத்தாண்டு கொள்க! என்று நெக்குருகப் பாடுகின்றார்.

குலங் களைந்தாய் களைந்தாய் என்னைக் குற்றம் கொற்றச் சிலையாம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய் பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அந்தாமரை மேனியப்பா ஒப்பி லாதவனே
மலங்கள் இந் தாற்சுழல் வன்தயிரில் பொருமத் துறவே      (நீத்தல் விண்ணப்பம்-29)

முப்புரம் எரித்த வரலாறு – தாருகன் என்னும் அசுரனின் மகன் தாரகாசுரன்.  இவர்கள் பிரம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.

வரங்களைப் பெற்ற ஆணவத்தில் தாரகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். எனவே, அவனை முருகப்பெருமான் அழித்தார். தாரகாசுரனின் புதல்வர்கள் தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி. இவர்கள் பிரம்மாவை வேண்டி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதன்படி மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை அளித்த பிரம்மா, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மூன்று நகரங்களும் அருகருகே வரும்போது, இந்த நகரங்களுக்கு அழிவு ஏற்படும் என்றும் கூறினார்.

வரங்களைப் பெற்ற மூவரும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள், கயிலையில் சிவபெருமானைச் சந்தித்து தங்களின் துன்பத்தைப் போக்கி அருளும்படி வேண்டினர்.

மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் சாத்தியம். எனவே பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்குமாறும் ஒரு தேரை உருவாக்கச் சொன்னார் சிவபெருமான்.

பூமியை பீடமாகவும், சூரிய – சந்திரர்களை சக்கரங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால்களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப்பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டையாகவும் அமைந்தன. பிரம்மா தேரோட்டியானார்.

கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம் வீச, விந்தியமலை குடையானது. வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்னால் நிறுத்தப்பட்ட தேரில் மேருமலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார்.

அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று அசுரர் களும் சிவபெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சத்தியில் பாதி பலம் இருப்பதால்தான், சிவபெருமானால் அசுரர்களை அழிக்க முடியாது என்று அகந்தை கொண்டனர்.

அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒரு நொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது. ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகவிழ்ந்தனர்.

தத்துவம் – திரிபுரத்தை எரிக்குமாறு செய்ததற்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களைத் தன் திருவடி பார்வையால் (நோக்கால்) சுட்டு எரித்தான் என்று பொருள்.

                திருமுறைகளில் திரிபுராந்தக மூர்த்தி –

                அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன்

                முப்புரஞ் செற்றனன் என்பர்கள்

                மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம்

                அப்புரம் எய்தமை யார் அறிவாரோ                 (தி.ம.343)

முப்புரங்களாகிய மும்மலங்களும் ஓரிடத்தில் இணைந்திருக்கும்போதுதான், அவைகளை நம்மால் வெல்ல முடியும்.  ஆணவம் தனித்தோ, மாயை தனித்தோ, கன்மம் தனித்தோ இருக்கும்போது அவைகளை என்ன தவம் ஆற்றினாலும் அழிக்க முடியாது. காரணம் அவைகள் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் படைத்துக் கொண்டே இருக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன.  உதாரணத்திற்கு மாயையை தனித்து நின்று அழிக்கின்றோம் என்றால், அவை ஆணவத்திலிருந்தோ அல்லது கன்மத்திலிருந்தோ மீண்டும் பிறப்பெடுத்து வளர்ந்து நிற்கும்.  நாம் இது தெரியாமல் மாயையை அழித்து விட்டோம் என்று கன்மத்தையோ அல்லது ஆணவத்தையோ அழிக்கும் ஞானச் செயலில் ஈடுபட்டிருப்போம்.  ஆனால், அழியாத மாயை அங்கே உங்கள் ஞானச் செயலின் முன்பாக நின்று கொண்டு, மற்ற இரு மலங்களையும் அழிக்கவிடாமல் தடுத்துவிடும்.  இது புரியாமல், தெரியாமல் நாம் மாயா மலத்தை அழித்துவிட்டோம் என்று பூரித்துக் கொண்டிருப்போம்.

இதனால்தான் பிரமஞானத் தவத்தில் மூன்று மலங்களும் ஒன்றாக இருக்கக்கூடிய மெய்ப்பொருளின்மீது கவனம் வைத்து ஒளியாற்றலால் அவைகளை உற்றுப்பார்த்து அழிக்கும் சுடராழித் தவத்தைச் செய்து வருகிறோம்.  சுடராழித் தவம் அல்லாது மும்மலங்களை ஒன்றாக அழிக்கக்கூடிய ஒரு ஆயுதம் இதுவரை படைக்கப்படவில்லை ; உருவாக்கப்படவுமில்லை.  சிவபெருமானே இந்த சுடராழிப் பார்வையால்தான் முப்புரங்களாகிய மும்மலங்களை பார்வையாலேயே பார்த்து எரித்தொழித்தார். அதனால்தான் சிவத்திற்கு திரிபுராந்தகன் என்ற பெயரே வந்தது.

மாயை முதலான மும்மலங்களை வெல்ல வேண்டுமென்றால், பிரமஞானத் தவத்தில் ஒரு தந்திரத்தால் கடைவாயிலைக் கட்டி எழுப்பினால் அது சாத்தியப்படும் என்கிறார் திருமூலர்.

                கடைவாசலைக் கட்டிக் காலை எழுப்பி

                இடைவாசல் நோக்கி இனிதுஉள் இருத்தி

                மடைவாயில் கொக்குப்போல் வந்தித்து இருப்பார்க்கு

                உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே    (தி.ம.591)

கடைவாசல், இடைவாசல், மேல்வாசல் என்று மூன்று வாசல்கள் நம் மெய்ப்பொருளில் உள்ளது.  கடைவாசல் மெய்ப்பொருளின் கீழுள்ள வாசல்.  இடைவாசல் என்பது மெய்ப்பொருளின் மையப்புள்ளியில் நுண்ணிய துவாரம்.  மேல்வாசல் என்பது மெய்ப்பொருளின் மேற்பகுதியில் இருக்கும் வாசல்.  கீழ்வாசலில் பரணி நட்சத்திரமும் ; மேல்வாசலில் கார்த்திகை தீபமும் இருக்கிறது. கடைவாசலாகிய பரணி நட்சத்திரத்தில் இருந்து கொண்டிருக்கும் காலாகிய அபான வாயுவை, சுடராழித் தவத்தில் மேல் எழுப்பிக் கொண்டு, பிராணன் இருக்கும் கார்த்திகை தீபத்தில் கொண்டு போய் சேர்த்தால், கார்த்திகை தீபம் மேலும் பலமடங்கு பிரகாசமாக எரியத் தொடங்கும்.  தீபத்தின் அதிக வெளிச்சம், அதிகப் பிரகாசம் அபான வாயுவால் மட்டுமே நடக்கும்.

மேற்கண்ட முறையான குருகுல ஞானத் தந்திரங்களால் மட்டும்தான் நமக்கு பிறவிகள் தோறும் வந்து கொண்டிருக்கக் கூடிய மாயா மயக்கத்தை அறுத்தெறிய முடியும் என்பதைத்தான், ஔவைத்தாய் “மாயாப் பிறவி மயக்கம் அறுத்து” என்றார்.

அடுத்தபடியான அகவல் வரிகள் :

“திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்

 பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து” (19, 20)

ஐந்தெழுத்து சரி. அதென்ன திருந்திய ஐந்தெழுத்து. அதிலும் திருந்திய முதல் ஐந்தெழுத்து. திருவாசகத்தில் கோயில் மூத்த திருப்பதிகத்தின் பத்தாவது பாடலில், மாணிக்கவாசகர்,

நல்காது ஒழியான் நமக்குஎன்றுஉன்

                               நாமம் பிதற்றி நயனநீர்

                                மல்கா வாழ்த்தா வாய்குழறா

                                                வணங்கா மனத்தால் நினைந்துஉருகிப்

                                பல்கால் உன்னைப் பாவித்துப்

                                                பரவிப் பொன்னம்பலம் என்றே

                                ஒல்கா நிற்கும் உயிர்க்குஇரங்கி

                                                அருளாய் என்னை உடையானே.        (10)

“என்னை அடிமையாக உடைய ஈசனே ! இறைவன், அடிமையாகிய நமக்கு அருளை வழங்காது இருக்க மாட்டான் என நம்பி உன் பஞ்சாக்கர நாமத்தைப் பலகாலும் சொன்னோம். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து, வாயால் குழறி வாழ்த்தி, உரை  சொல்லத் தடுமாறி, எம் மெய்ப்பொருளால் வணங்கி நின்றோம். மனத்தால் நினைந்து, நினைந்து உருகி நின்  ஒளிமேனியை பாவனை செய்து  வணங்கி அழகிய பொன்னம்பலத்தவா எனச் சொல்லி குழைந்து நிற்கும் உயிராகிய பிராணனுக்காக திருவுள்ளம் இரங்கி அருள்புரிவாயாக” என்றார்.

மாணிக்கவாசகர் அடிமையாக இருக்கும் நம்மை காக்க இறைவன் என்றும் கடமைப்பட்டவன் என்றே கருதினார். அதனால் இறைவனால் நமக்கு அருளை வழங்காமல் இருக்க முடியாது என்றும் நம்பிக் கொண்டிருந்தார்.  இறைவனை பிரமஞானத் தவத்தால் நினைந்தும்,  துதித்தும் உரை தடுமாறியும், பலவாறு பணிந்தும், ‘பொன்னம்பலம்’ எனப் போற்றியும் தனக்கு இரங்கி அருள வேண்டும் என்றே பாடி அருளினார்.

சிவனின் ஐந்தெழுத்து மந்திரத்தைப் போல ஒரு மந்திரச் சொல் இவ்வுலகில் இல்லை எனலாம். இதனைச் “சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” எனும் அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் பாடியிருக்கின்றார். “நாமம் பிதற்றி” என்பது பசுபோதம் அழிந்த நிலையில், அருளனுபவ நிலையில், பார்ப்பவர்களும் கேட்பவர்களும் தன்னைப் பழிப்பார்கள் என்ற எண்ணமிலாது ‘ஓதுதல்’ ஆகும்.

இரு திருவடிகளையும் பிரமஞானத் தவத்தால் ஒன்று சேர்க்கும்போது திருவடிகளில் அன்பு மிகுந்து கண்களில் நீர்ப்பெருக்கு உண்டாகிடும் என்பதைத்தான், “புன்கணீர் பூசல் தரும்” என்றார். ஆகவே இறைவனிடம் வைத்த பேரன்பால் கண்களில் கண்ணீர் பெருகியதை “நயன நீர் மல்க” என்றார்.

பிரமஞானத் தவத்தால் மெய்யுணர்வான ஞான அனுபவமாகி திருவடிகளில் நிறைந்து, இறைவனை வாயால் வாழ்த்தும்போது மனத்தின் வேகம் சொல்லினாலும் வாய் குழறும் நிலையை “வாய் குழறா” என்றார். தன்னால் வாய் பேச முடியாத நிலையில் உடலை சடத்தைப் போல கீழே கிடத்தி வணங்க நேரும். அதனால் “வணங்க” என்றார்.

இவ்வண்ணம் மனம், மொழி, மெய்யுணர்வுகளால் பரவினேன் என்பதைப் “பரவி” என்றும் கூறினார்.  இந்த மெய்ப்பாடுகளிலிருந்து தன்னுணர்வு மீளும்போது, “பொன்னம்பலம் பொன்னம்பலம்”  என்றே பாடல்கள் பாடிப் பாடி, வாய் சோர்ந்தேன் என்று அருளினார்.

ஞான மெய்ப்பொருளுரை : பிதற்றுதல் = பலகால் பேசுதல் “மல்கா” – மல்க என்பதன் விரி.  மல்கி என்றுங் கூறுப.  மல்குதல் = பெருகுதல், குழறா = குழறி. வாய்தடுமாறுதல் அன்பின் மெய்ப்பாட்டிற்கு அறிகுறி.   பாவித்து = கடவுள் உயிரோடு இரண்டறக் கலந்துள்ள நிலையை எண்ணி, ஒல்கா = ஒல்கி, தளர்ந்து.

எப்படியாவது தனக்குள்ளே இருக்கும் சிவத்தை பார்த்து, அவனின் அருட்கலைகளைப் பெற்று பேரின்பம் அடைய வேண்டுமென்ற தலைசிறந்த பிரமஞானச் சாதகர்களின் பிரம வேகத்தைத்தான், “நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம்” என்றார்.

எல்லையற்ற பரம்பொருளை எப்படி நம்மால் உணர்ந்து அறிந்துகொள்ள முடியும்?

அறமும், சாதனையும், தவமும் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால் குருவருளால் நமக்கு ஞானமாகிய இறைவனின் தரிசனம் கிடைத்தே தீரும். நமது மனம் பரிபக்குவம் அடைந்து விட்டால், அப்பொழுது நாம் சொல்லும் பிரார்த்தனையை கணபதி கேட்கிறார். மந்திர ஒலிகளே தன் வடிவமாகக் கொண்டவர்தான் மகா கணபதியின் ரூபம். அவரே, தூலம், சூக்குமம், காரணம் முதலிய ஸ்ரீ பஞ்சாக்ஷர சொரூபமாக இருக்கிறார்.  தூல, சூக்கும, காரண பஞ்சாக்ஷரங்களுக்கு தகுந்த தேவதைகள் இருக்கிறார்கள்.  இவற்றுக்கெல்லாம் ஆதாரம் (மூலம்) பிரணவம்தான். அந்த ஓங்காரம் அகாரமாகவும், உகாரமாகவும், மகாரமாகவும், நாதமாகவும் பிந்துவாகவும் இருக்கிறது.

நாதமும், பிரகாசமும் கூடிய ஓம்கார பஞ்சாக்ஷரம் (ஓம்கார நாதம்) மூலாதாரத்தில் தோன்றி, சுவாதிஷ்டானம், மணிபூரகம் (நாபி), அனாகதம் (இருதயம்), விசுத்தி (கண்டம்), புருவ மத்தி (ஆக்கினை) என்ற ஆதாரச் சக்கரங்களில் சுழிமுனை நாடியின் வழியாக திருவடிகளின் மௌனப் புள்ளியின் வழியே பாய்ந்து செல்கின்றன.  ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்பவர் இந்த ஐந்து எழுத்துக்களுக்கும் அதிதெய்வங்கள் – என்றல்லாம் தந்திர சாஸ்திரங்களில் உள்ளன.

கண்ணால் காண்பது – வரிவடிவம் (ப்ரத்யக்ஷம்).

வாயால் சொல்வது வைகரி.

காதுகளால் கேட்பது சப்த மாத்திரை.

அனைத்து உலக உயிர்களின் காதுகளுக்கும் கேட்கக்கூடிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மகாரத் திருவடியில் நின்று கொண்டு உச்சரிக்க வேண்டும். அந்த பஞ்சாக்ஷர சப்தமே உச்சரிப்பவருக்கு பேரின்பம் தரும்.  இம்மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க அந்த தெய்வ எழுத்துக்கள் ஐந்தும் தெய்வ நாதமாக நம் உயிருள் மலர ஆரம்பிக்கும்.

திருந்திய பஞ்சாக்ஷர வடிவான கணபதி அப்போதுதான் நம் உள்ளமென்ற திருவடிகளில் வந்து புகுந்து அருள்புரிவான். அவனது சொரூபம் (பஞ்சாக்ஷரம்) நாத வடிவாகத் தெரியும். உலக நினைவுகளிலிருந்து நம் பற்றுகள் அறுந்துபோய், திருவடிகளானது காரணப் பஞ்சாக்ஷரமயமாக மாற ஆரம்பிக்கும்.

எவராலும் காண்பதற்கு அரிதான இறைவன், பிரமஞானிகள், தான் இருதய கமலமான திருவடிகளை மலரச் செய்து அதன் மத்தியில் உள்ள தஹராகாசத்தில் உள்ள பரம்பொருளை உணர்வு கொண்டு வழிபட்டு பேரின்பம் அடைவர். இதுவே தகர வித்யை.  இந்த தகர வித்யையில்தான் ஐந்தெழுத்துக்கள் புதிய வடிவம் பெற்று மகா ஆற்றல் பொருந்தியதும் திருந்தியதுமான வடிவத்தைப் பெற்று, நம் திருவடிகளில் நிலைகொள்ள ஆரம்பிக்கும் என்பதைத்தான் ஔவைத்தாய், “திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்து என் உளந்தனில் புகுந்து” என்றார்.

நல்லது. திருச்சிற்றம்பலம்.  இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும்

@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்

www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்

கொடுத்து வருகின்றோம். நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.

பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!