அகத்தியர் ஞான சைதன்யம் – 51

1938 ஆம் ஆண்டு பழம்ஓலைச் சுவடியிலிருந்து எடுக்கப்பட்ட ஞான ஓலை

ஆதியாய் நின்ற விளக்கு ஒளியைப் போற்றி
அரன்அருளை உறும்அடியார் பாதம் போற்றி
நீதியாய்ப் பதினெண்பேர் கிருபையாலே
நிரைந்து உரைத்த யோகமுடன் ஞானம்தன்னை
பாதிமதி அணிபரமன் எனக்கு இசைந்த
பருதிமதி சுழிமூன்றும் நன்றாய்ச் சொல்வேன்
வேதனை வாராமல் முதல்தீட்சை மார்க்கம்
விளம்புவேன் மகார கணபதி காப்பாமே (1)

ஆம்எனவே இடகலை யகாரம் சந்திரன்
அருளாம் உகார பிங்கலையாம் சூரியன்
தாம்எனவே ஓங்காரக் கம்ப நுனிஉச்சி
சாதித்தார் சுழிமுனையில் மகாரம் நிற்கும்
நாம்எனவே நாதவிந்தால் சுழினைபாரு
நன்றாம் இரவிமதியும் ஒன்றாய்க் கூடும்
பாம்எனவே அமுர்தம் கபாலத்து ஏறும்
பருதிநிகர் செந்தீ ஒளி வீசும்தானே (2)

தான்என்ற அகாரம் அதேவிந்து வாகும்
சாதனை உகாரம் அதே நாதம் ஆகும்
வான்என்ற சுழினை அதே மகாரமாகும்
மைந்தனே இதைமறைத்தார் சித்தர்எல்லாம்
தேன்என்ற குருகாட்டத் தெரியும் அல்லால்
சிவம்அறியாப் பாவிகட்குத் தெரியாதப்பா
நான்என்ற சிவயோக மார்க்கம் தன்னை
நன்மையுள பிள்ளைகட்குச் சொன்னேன்பாரே (3)

சொன்னபடி இன்னம்ஒரு சேதி சொல்வேன்
சோதிதனிலே தினமும் தொடர்ந்து ஏறு
என்ன படித்தாலும் குருவில்லாச் சீடன்
என்ன பிரயோசனம் ஆம்அலைந்து சாவான்
பொன்அதனைக் கம்மாளர் உருக்கினாற்போல்
புருவநடுத் தமர்திறக்க இருகண்பூட்டு
கொன்றுவிடும் கருவியெல்லாம் சணத்தில்மாளும்
கூத்தன் நின்ற சுழினைதனைத் திறமாய்க் காணே (4)

காணப்பா இடைமணியே நாதமாகும்
கருவான பின்மணியே விந்துவாகும்
தோணப்பா அம்மணிகள் ரெண்டுக்கும்தான்
துருவஇடை பிங்கலையும் என்றுபேராம்
ஊணப்பா சந்திர சூரியனாம் என்பார்
உறையான நீர்என்றும் கங்கைஎன்றும்
பூணப்பா ரவிஎன்றும் மதிதான் என்றும்
பூட்டுவார் சுடர்ச்சோதி எனச் சொல்வாரே (5)

வாரான பெரியோர்கள் பாசை எல்லாம்
மகாரம் அதுக்கே ஆகும் மனம் வேறில்லை
கூரான இருவிழியால் அடிமூலம் பார்
குறிதோணும் வெளிதோணும் தோசம்தீரும்
பேரான அட்டசித்தி வசமே ஆகும்
பிரியமுறும் மருந்தெல்லாம் சித்தியாகும்
ஏராத வாசியது ஏறிற்றானால்
எமன்இல்லை வினைஇருள் இல்லை எண்ணே (6)

இருளில்லை என்பதுதான் ஆருக்குஎன்றால்
இடைஎன்ற கலையில் கண்இருக்கினோற்கு
வறுமையில்லை என்னும்சொல் ஆருக்குஎன்றால்
மகத்தான பஞ்சவர்ணம் கண்டோர்க்குஅப்பா
கெருவமில்லை (கர்வமில்லை) என்றசொல் ஆருக்குஎன்றால்
கேசரத்தில் நாசிநுனி பார்த்தோருக்குஅப்பா
தருமம் வரும் என்றசொல் ஆருக்குஎன்றால்
சதாபத்தி விளக்கொளியில் சார்ந்தோர்க்குஆமே (7)

ஆமப்பா முத்துபச்சை பவழம் வெள்ளை
ஆதியென்ற மஞ்சள் அஞ்சும் பஞ்சகர்த்தாள்
நாம்இடை பிங்கலையும் பிரமன் விஷ்ணு
நாடிமூன்றும் கூடிநின்ற சுழியே ருத்திரன்
வாமப்பா புருவமத்தி மயேசன்ஆகும்
வன்மைசிவனுக்கு மனோன்மணியே சத்தி
ஊமப்பா பிரமனுக்குச் சத்திவாணி
உறுதியுள்ள விஷ்ணுவுக்குத் திருவாங்காணே (8)

காணவே ருத்திரற்கு ருத்திரியாகும்
கார்மகேஸ்வரற்கு மகேஸ்வரியும்ஆகும்
வேணென்ற இவர்சுழினை உச்சிமையம்
வீற்றிருப்பார் மூலகணபதி வாலையும்
பாணென்ற நடுவில்நின்று பார்த்தாயானால்
பாலகனே சிவசத்தி வார்த்தை சொல்வார்
ஊணென்ற தேகம் கைலாசம் ஆகும்
உற்றகுரு வார்த்தைதனை உரைத்திட்டேனே (9)

சாதனை விவரம்
உரைத்தபடி நின்று மிகப்பழக்கமாகி
உறுதிகொண்டு மயிர்ப்பாலம் மீதுஏறி
நிறைத்தபடி முடியும் நெருப்பாறு தாண்டு
நேரான பூரணமும் கலந்து பேசும்
மறைத்தாரே சித்தரெல்லாம் பேசிக்கொண்டு
மகத்தான பூரணத்தைக் காட்டாமல்தான்
விரைத்த விரைசாவி ஆகாமல்தான்
விபரமுடன் பூரணத்தை விளம்புவேனே (10)

பூரண விபரம்
விளம்புகிறேன் பூரணத்தான் எது என்றாக்கால்
வெட்டாவெளி சுழினை உச்சி வேறேயில்லை
தளம்பாதே வேறுஎண்ணாதே நீயும்
சகலசித்தும் கைவசமாய் ஆடும்பீடம்
முளங்காதே பூரணத்தைக் கண்டோம்என்று
முச்சுடரின் சேதிதனை மொழிந்தால்தோசம்
பழங்காறு மும்மூலம் தன்னைத் தானும்
பார்மகனே சித்தர்கள்தான் பகரார்காணே (11)

காண்என்று சொல்வதுதான் யாருக்குஎன்றால்
கால்அறிந்த ஞானிகட்குச் சொல்லல்ஆகும்
வாண்என்ற சொல்அதனை அறியவேணும்
வஞ்ச சண்டாளர் நட்பைத் தள்ளவேணும்
ஊண்என்று சொன்னவிடம் காணவேணும்
உன்மனதைப் பூரணத்தில் ஏற்றவேணும்
சாண்என்ற சொல்அகற்ற இதனைச் சொன்னேன்
சமர்த்திருந்தால் மும்மூலம் தயவாய்ப் பாரே (12)

தயவாகச் சொல்லிவிட்டேன் சுழினைமார்க்கம்
சாதனையைப் புலையரிடம் சொன்னால்தோசம்
மயமான சோதி அடிமூலம் பாரு
மகாரம்என்ற சுழினைதனைப் பின்பு பாரு
நயமான கருவி தொண்ணூற்று ஆறும்போகும்
நற்தீப ஒளிவீசும் புருவம்தன்னில்
பயமில்லை ஆண்டு பன்னிரெண்டும் சென்றால்
பராபரம் உனக்கு ஏவல் செய்வார்பாரே (13)

பாரும்என்று வேணதெல்லாம் சொல்வார்பின்னும்
பாரில் அதிசயங்கள்தனைத் தெரியச் செய்வார்
நேரும்என்ற மாய்கையொடு கோபம்தள்ளு
நிலைஆங்காரப் பைசாசத்தைத் தள்ளு
மேரும்என்ற நிட்டை சதாகாலம் நில்லு
மேன்மைதரும் தாயாரைக் கண்டுகொள்ளு
தேரிநின்ற அண்டத்தின் சோதிதன்னை
தெளிவாக யான்பார்த்தேன் சேதிகேளே (14)

சேதியென்ன அனல்கோடி ரவியோ கோடி
சென்றுஏறும் தீக்கோடி மின்னல்கோடி
வேதனையாம் நீபார்க்கும் போதுஅய்யா
விண்ணடா இடிகோடி வெளிச்சம்கோடி
பேதிக்கும் தேகம்அது அருணன்போல் ஆம்
பிசகில்லை புனல்கோடி சுடரோ கோடி
ஏதுஇடுக்கம் ஒன்றுமில்லை இதுவரைக்கும்
இகத்தினிலே இருக்காரே மலையில்ஏறே (15)

மலைஏறாது இருந்தாக்கால் ஒன்றும்இல்லை
வாராது வாராது அப்பியாசங்கள்
கலைஏறாப் பாவிகட்கு யோகமேது
காலுதலை அறியார்கள் நடப்பதுஎங்கே?
குலை அறியாத் தோசிகட்குக் குளிகை எங்கே?
கூட்டமிட்டு இருந்தவர்க்குக் குறிகள் இல்லை
தலைஅறியா மாந்தருக்குத் தவங்கள் இல்லை
சாதிகுலம் என்றவர்க்குச் சாவுதானே (16)

சாவதுதான் எதினாலே வந்ததுஎன்றால்
சண்டாள மனம் நிலைக்காத் தோசத்தாலே
ஆவதுவும் அழிவதுவும் விந்தால் அப்பா
ஆச்சரியம் பாழ்குழியின் ஆசையாலே
காவல்அது கட்டழிந்து போனதாலே
காட்சிஎல்லாம் பொய்யாச்சு கண்டுபாரு
பாவதுவும் சுண்ணாம்பில் ஒட்டினாப்போல்
பரமகுரு பீடம் அதைப் பகுத்திடாயே (17)

பகுத்திடாய் என்றுசொன்னேன் மகனேகேளு
பார்அதனிற் திருமூர்த்தி தேடிக்காணார்
வகுத் திடீரென்று வெகுவாகநீயும்
வாழ்த்தினையே மும்மூர்த்தி அறிந்தாரா சொல்
அகத்தினிலே பிரமம் அதைஅறியார் யாரும்
அறிந்தமட்டும் சொல்லுகிறேன் அடுத்துக்கேளு
செகத்தினிலே அவர்பீடம் யானுங்காணேன்
சார்ந்துபார் நடுநிலையைச் சார்ந்துபாரே (18)

சார்ந்துபார் என்றபொருள் அறிந்துகொண்டேன்
சச்சிதானந்த சிவயோக மூர்த்தி
கூர்ந்துநின்ற மும்மூலம் அறிந்தேன்அய்யா
குருவிருந்த பீடம்அதை நன்றாய்க் கண்டேன்
வார்ந்துநின்ற இருமணியின் வகையைக் கண்டேன்
சார்ந்துநின்ற முச்சுடரும் கண்டேன்அய்யா
சார்ந்துநின்ற முச்சுடரும் கண்டேன்அய்யா
சதாசிவமாம் சுழினைதனிற் சார்ந்திட்டேனே (19)

சார்ந்திட்டேன் இடகலை பிங்கலையும் பார்த்துச்
சகலமும்தான் அனுக்கிரகத்தால் அறிந்தேன்
கூர்ந்திட்டேன் அடிமூலம் தன்னில் நின்று
கூப்பிட்டேன் தாய்வந்து தீயம் ஈய்ந்தால்
பார்த்திட்டேன் அதற்கு மேல் நடுமூலத்தைப்
பார்என்று தாய்சொன்னாள் இடச்சுழியைக்
கார்த்திட்டேன் கர்ம அனுபவத்தை வெட்டிக்
காரணமாம் புருவம்என்ற தீபந்தானே (20)

தீபத்தில் நின்றுகொண்டேன் அனேககாலம்
சிவசிவா நினைத்தது எல்லாம் சித்தியாச்சு
கோபத்தை எள்ளளவு மனதில் வையேன்
கூவென்று அழுதிட்டேன் தாயைப்பார்த்து
ஆபத்து என்னவந்தது என்றுசொல்லி
ஆத்தாளும் என்முகத்தைப் பார்த்துநின்று
ஏபத்தா அமுர்தம் அதை இந்தாஎன்று
எனக்கும் அவள்ஈய்ந்திட்டாள் பார்த்திட்டேனே (21)

பார்த்திட்டேன் மதிஅமுதம் தன்னைத் தின்று
பார்என்றாள் மேல்மூலம் பார்க்கும்போது
வேர்த்திட்டேன் முகங்கள்எல்லாம் களையுமாகி
விழுந்தேனான் போதைதனில் சிக்கிக்கொண்டு
ஆப்பிட்டேன் அவள்போதம் தன்னிற்சிக்கி
அலறினேன் உளறினேன் ஆத்தாள் தன்னைக்
கூப்பிட்டேன் போதைதனைச் சகிக்கமாட்டேன்
புதுமைஇது போதும்என்றே அழுதிட்டேனே (22)

அழுத எனைப் பார்த்த சிவகாமி ஆயி
அம்பரமாம் இடகலையில் அழுத்துஎன்றாள்
பழுதுஅப்போ கலைமாறிப் போதைபோச்சு
பார்மகனே இன்னும்என்ன கவலை என்றாள்
குளிர்ந்திடவே செல்வம்போல் வந்துநின்று
கூப்பிட்டாள் ஏன்என்றேன் திரும்பிப் பார்த்து
களரற்ற பால்போல என்னைத்தானும்
கண்மணி என்றே சொல்லி முத்திட்டாளே (23)

முத்திட்டாள் முகத்தோடே முகம்அணைத்து
மோசமில்லை நீநானும் ஒன்றேஎன்றாள்
பெத்திட்டேன் அவள்நானாய் நான்அவளாய்ப்
பேதமில்லை இருபேரும் ஒன்றேஆனோம்
சத்தியமாய்க் குருமொழியைத் தவிராதாலே
தாய்நானும் ஒன்றானோம் தப்போஇல்லை
நித்தியமாய் அடிநின்று முடியில்ஏறு
நிர்ணயமாய்ச் சொல்லிவிட்டேன் நிசமாய்த்தானே (24)

நிசமான தியானத்தில் இருக்கும்போது
நெடு உயரமலையில் இட்ட தீபம்போலாம்
அசமான மலையில் இட்டவிளக்கைக் கண்டால்
ஆச்சரியம் ஆச்சரியம் அதுவே போதும்
பிசகான சடம் நிலைத்துப் போச்சுதப்பா
பிசகில்லை விளக்கு அதனைக் கண்டபோது
வசமாச்சு துரியநடு நிலைத்துப் போச்சு
வம்பான ஏமனையும் வெல்லல் ஆச்சே (25)

வெல்லலாம் ஓம்நமசிவாயந் தன்னை
விளக்கமாய்ப் பஞ்சகர்த்தர் எழுத்தைச் சொல்வேன்
சல்லலாம் இதனாலே அட்டகன்மம்
க்ஷணத்தில் விளையாடிடலாம் என்றும்சொன்னார்
அல்லவடா சித்தர்களைக் காணவென்றால்
அறையுகிறேன் சிவயநம கிலிஓம் என்று
சொல்லியே ஜெபித்திடவே சித்தர்வந்து
சூட்சமுடன் தொழில்முறைகள் தருவார்நில்லே (26)

நில்என்று சொல்வதுதான் எங்கே என்றால்
ஏமம்அதாய்ப் பொதிகை என்ற புருவம்தன்னில்
கல்என்று சொன்னவிடம் காணவேணும்
கருத்தறிந்த பிள்ளைகளைச் சேர்க்கவேணும்
இல்லறமும் பொருள்ஏவல் இருந்துதானாள்
என்னசொல்வேன் தவநெறிக்கு ஆகாதப்பா
வள்ளதொரு பிள்ளைகளாய் இல்லாவிட்டால்
வணக்கமுறும் துறவறமாய் இருத்தல்நன்றே (27)

நன்னென்ற நூல்உண்மை அறிந்தோனானால்
நன்மையாம் சித்தர்வந்து கூட்டிக்கொள்வார்
ஒன்றென்ற பொருள்தெரிந்தால் நாமும்சொல்வோம்
உறுதியுள்ள சித்தன்என்று சேர்த்துக்கொள்வேன்
பண்டென்ற கற்பமுறை எல்லாம் சொல்வேன்
பரமகுரு வேடமதைப் பூணவைப்பேன்
கண்டென்ற வள்ளபங்கள் இருந்தால் அப்பா
காசினியில் இருந்துதவம் செய்துவாவே (28)

வாவென்றேன் தவத்தை நிறைவேற்றிக்கொள்ளு
வராவிட்டார் பொதிகைதனிற் சேருசேரு
கூவென்றேன் முன்னே சித்தரையும் காண
குறிப்பறிந்து தியானம்அதைச் சொல்லுகின்றேன்
ஆவென்ற ஐந்தெழுத்தை லக்ஷம் ஓத
அரிஅரனும் வந்து உனக்கு உபதேசிப்பார்
மாவென்ற கூட்டம்அதில் சேர்த்துக் கொள்வார்
மகாசித்தர் ஆவதற்கு வளம்சொன்னேனே (29)

சொன்னேனே இப்படித்தான் வெளியதாக
சொல்லியும் தான்அறியாட்டல் என்னசெய்வோம்
பொன்னான முருகவேள் கிருபையாலே
பூட்டெல்லாம் வெளிதிறந்து போட்டேன்அப்பா
நன்னயமாய் இந்நூலை யாருக்கும்தான்
நல்காதே சுழினையுட குறியைப் பாரு
என்னமோ என்றுசொல்லி இகழ்ச்சியாக
இயம்பினால்எமன் உன்னை இழுப்பான்பாரே (30)

இழுக்குடைய மூடர்களோடு இணங்கிடாது
இயல்புமிகும் சுழிமுனையைக் கண்டுதேறு
பழக்கம்இல்லாத் தோசிகளைச் சேர்ந்திடாதே
பாழ்குழியிலே தினமும் வீழ்ந்திடாதே
முழக்கமுள்ள மாயைவந்து அதட்டிற்றானால்
முன்னின்ற ஞானம் என்ற வாளால்வெட்டு
வளப்பமுடன் அதனைநீ வெட்டாவிட்டால்
மயக்கமுற்ற பாம்புவந்து சீறும்தானே (31)

சீறினால் சீறுதுஎன்று இருந்தாயானால்
சிவன்பாதம் காணும்முன்னே தேகம்போகும்
மாறினால் வாசி இரு சுடரில் ஏற்றி
வைத்தாக்கால் இந்திரியப் பாம்புசாகும்
கூறினால் போகாது ஏறுஒட்டாது
கூசாமலே மௌனத் தடியாற்கொள்ளு
தேறுதற்கு ஞானம் என்ற வலையைப் போட்டால்
சீறுகின்ற பாம்பதுவும் அடங்கிப்போமே (32)

அடங்காது வலையை நீ போடாவிட்டால்
ஐயையோ வீண்பாடு பட்டதுஎல்லாம்
துடங்காது மாயையினால் ஞானசோதி
சொரூபமணி கண்டுஅதுவும் பொய்யாப் போகும்
பலவான தொழில்களெல்லாம் பொய் என்றெண்ணிப்
பார்த்தோர்க்கும் கருவதனைப் பகரக்கேளு
கலையான மௌனத்தார் மாயைதன்னைக்
கரணம்என்ற இருகண்ணாற் கட்டிக்காட்டே (33)

காட்டியே இருகண்ணால் காலைக்கட்டு
காரணத்தை முக்காலால் ஏற்றிக்கொள்ளு
சூட்டுவது சுழினை இருபூவைச் சூட்டு
சுகபோகம் என்றுசிவன் நன்றாய்ச் சொன்னார்
நீட்டுவது நான்நினைத்தேன் நீயும்பாரு
நிசம்சொன்னார் என்பேரில் சந்தோஷத்தால்
பூட்டுவது என்குரு இப்படியே என்றார்
புதுமைதனை இன்னதென்று உரைத்திட்டாரே (34)

உரைத்தபடி பார்த்து நீ வருகும்போது
ஓகோகோ நடன ஒலிச் சத்தம்கேட்கும்
மறைத்திட்ட நடுமூலம் கண்டத்தூணி
வாசிதனை ஆகாச வட்டம்சேரு
குறையில்லை மத்தளத்தின் ஓசைகாணும்
குற்றமில்லாத் தீபஒளி வீசும்வீசும்
திரைஅகற்றி நந்திஒளி வீசும்கண்கள்
திருவான வாசிகண்டம் ஏறும்தானே (35)

கண்டம்எனும் புருவநுனி மூக்கில் ஏறும்
கருத்துவைத்து வாசிதனைக் கபாலத்து ஏற்று
விண்டுநின்ற அடிமூலம் பார்க்கும்போது
வெடிச்சத்தம் கேட்கும் மனம் ஒடுங்குமட்டும்
பண்டுசொன்ன அடிப்படையில் திறமாய்நின்று
பரிவேகம் ஒடுங்கினாற் சத்தம்போச்சு
தண்டுமுண்டு பண்ணாமல் நிமை(இமை) மூடாமல்
சாதித்தால் சோதியுமாம் இருளுமாமே (36)

இருள்அதுவும் சோதியிலே மூடிற்றானால்
ஏதுஇரு கொள்ளியினால் சுட்டுப்போடு
மருள்இல்லை ஏகமதாய் வெளிச்சமாச்சு
மனம்அடங்க வாசியது அடங்கும்பாரு
பெருமைஎன்ற மோன பதம்அறிவிற் காண
பீடுஉயரும் வெளிஒளியாம் வீட்டைப்பற்றி
அருமைஎன்ற வாசிசுழி ஏறுமட்டும்
அடையிடையில் அங் என்று அழுத்திநில்லே (37)

நில்லடா காற்றுஏறி நின்றுதானால்
நீ பாரு சுழிஅதனை இடைக்கண்ணாலே
எல்லிபகல் அற்ற நடுமூலம் ஆகும்
இங்கிருந்து மேலேற ஆயிசொல்வாள்
வல்லமையாய் மனதைஒட்டிச் சமாதிபாரு
வளுவான திரோதாயி மயக்கம்தீரும்
நல்லதொரு மாணவனே உன்தனக்காய்
நலமாகச் சொல்லிவிட்டேன் ஊன்றிப்பாரே (38)

ஊனிப்பார்க்கையில் கண்ணில் வலிஉண்டானால்
உருட்டிநீ கசக்கிவிட்டு தேய்த்துக்கொள்ளு
பாணிஎன்ற கண்ணின்வலி போச்சுபோச்சு
பரஞான தீபஒளி காணலாச்சு
மாணிக்கக் கங்கைதனைக் குடிக்கலாச்சு
வளமான வாசியது ஏறலாச்சு
காணிக்கு மூன்றுசுடர் காணலாச்சு
கருணைதரும் சத்திசிவம் காட்டுவேனே (39)

காட்டுகிறேன் சத்திசிவம் ஒளியேஆகும்
கருணைதரும் நாதவிந்து ஒளியே ஆகும்
மாட்டுகிறேன் பூரணமும் அமுதம்ரெண்டும்
மயமான ரவிமதியும் ஒளியே ஆகும்
பூட்டுகிறேன் சந்திரசூரியனும் ஆகும்
புலம்பாதே சுழினை ஏகாச்சரமும் தோணும்
ஆடுகிறேன் சடாச்சர பஞ்சாட்சரம்தான்
அடங்காத எட்டெழுத்தும் ஒளியும்ஆமே (40)

ஒளியாச்சு உகாரமுடன் அகாரம் ரெண்டும்
ஓகோகோ அண்டபிண்டம் உரைக்கலாச்சு
கலையாச்சு பன்னிரெண்டும் பதினாறுஆச்சு
கால்ஆச்சு ஐம்பூதக் கருவும்ஆச்சு
தெளிவாச்சு மதியாச்சு வாசியாச்சு
சிறப்பான வங் சிங் மங் மருவலாச்சு
வெளியாச்சு சிறிதாச்சு புனலும்ஆச்சு
மேலான பஞ்சவர்ண ஒளியும்ஆச்சே (41)

ஆச்சடா இத்தனைபேர் ஒளிக்கே ஆகும்
அப்பனே வேறேதும் இல்லையில்லை
போச்சடா பெண்ணாசை தன்னால்அப்பா
புருவமைய ஒளிமழுங்கிப் போச்சுபோச்சு
வாச்சுதடா உனக்கு இத்தனையும்அப்பா
வளமாகச் சொல்லிவிட்டேன் மயங்க வேண்டாம்
கூச்சடா படுக்கவென்றால் உபாயம்கேளு
குருவானால் இடக்கையைக் கீழேவையே (42)

வையடா கால்நீட்டிப் படுக்கும்போது
மைந்தனே புருவமதில் தியானம் வைநீ
செய்யடா உதயத்தில் சரீரசுத்தி
சிவசிவா திருநீறு தளமாய்ப் பூசி
உய்யடா உதயாதி மூன்றுக்குள்ளே
உற்றவிஷம் தலைஎடுத்துக் கதிரிற்கொள்ளு
நையடா மும்முக்கால் கடந்தபின்பு
நலமான பத்தியம்கொள் நாட்டம்பாரே (43)

நாட்டம்பார் சூரியனில் அவிழ்தம்கொள்ளு
நலமான அமுதுஉண்ணு உறக்கம்பண்ணு
ஆட்டம்பார் சூடுகொண்டால் நெய்யைத் தேய்த்து
அதன்பிறகு பயர்தேய்த்துக் குளித்துப்போடு
ஊட்டம்பார் அமுதுடனே பாலும்கொள்ளு
ஒருவாரம் ஓர்முழுக்கு பஞ்சகற்பம்
சீட்டமுடன் இப்படியே செய்துவந்தால்
சிவராஜ யோகம்இது தீர்க்கம்தானே (44)

தான்என்ற யோகிஎன்றால் தாயைக் காண்பான்
சண்டாள வாதியென்றால் சுட்டுமாய்வான்
பாண்என்ற அமுர்தம் உண்டால் தேகம் பொன்னாம்
பரைவாலை தனைஅறிந்தால் சித்தனாவான்
ஊண்என்ற வரைபார்த்தால் ஞானியாவான்
ஒலியான வீண்பேச்சில் ஒன்றுமில்லை
கோன்என்றால் குறிஅறிவான் சுழினைக்காண்பான்
கொடும்பாவி இவ்வழிக்கு வாரான்பாரே (45)

வாரான யோகிஎன்று சடைவளர்த்து
மகாஞானம் வந்தவர்போல் வேடம்பூண்டு
கூரான அட்சரங்கள் செபித்துக் கொண்டு
குருக்களென்றும் ஞானியென்றும் பேரையிட்டுப்
பேரான சாத்திரங்கள் கற்றுக்கொண்டு
பிசகாகத் தர்க்கமிட்டுப் பெருமைபேசிச்
சேருவான் மாதர்களை மகிழவைத்துத்
தினந்தினமும் வயிர்பிழைக்க அலைவான்பாரே (46)

அலைவதுவும் அல்லாமல் பிள்ளைகட்கு
ஆசைகொடுத்தே அவரை அழைத்துப் போவான்
நிலையில்லா ஊர்தோறும் திரிந்து அலைந்து
நேசம்போல் கூட்டமிட்டு அர்த்தம்சொல்லி
வலையில் அகப்பட்டது ஒருமீனைப் போலே
வம்பர்களை அரைச்சணத்தில் மயங்கவைப்பான்
துலையாத வாதமுறை செய்வேன் என்று
துஷ்டர்களை வாய்அடக்கிச் சோறு உண்பானே (47)

உண்பதுவும் அல்லாமல் இன்னும் ஒன்று
உறமான பிள்ளைகளைக் கெடுப்பான் அய்யா
இன்பமுள்ள நல்ல சமுசாரிதன்னை
ஈடேற ஒட்டாமற் செய்வான் பாவி
வம்பனடா பொய் சொல்வான் வயிற்றினாலே
மருட்டுவான் நரிக்கொம்பு வைத்துக்கொண்டு
தும்பவரும் அவன்காற்று உன்மேற்பட்டால்
துட்டனாம் அவனைநீ து(தொ)டர்ந்து ஏகாதே (48)

து(தொ)டராதே இந்நூலின் வழியே சென்றால்
சுத்தமதி அம்பலத்தின் சொரூபம்காணும்
படராது செனனம் என்ற கொடிதான் அப்பா
பராமுகமாய் இருந்தாலே மரணம்ஆவாய்
திடமாம் இச்சேதி எல்லாம் ஆயிசொல்லச்
செப்பினேன் சூஸ்திரமாய் ஐம்பத்துஒன்றில்
மடைமறைஆதி இந்நூல்போல் ஒருநூல் இல்லை
மகிழ்சித்தர் பாஷையெல்லாம் அறைத்திட்டாரே (49)

மறைத்திட்ட சிவயோகம் நன்றாய்ச் சொன்னேன்
வழிமுறையோடு என்மகனே அறிந்துகொள்ளு
மறைத்திட்டார் சித்தர்எல்லாம் பேசிக்கொண்டு
மகாமௌன யோகம் இதை மறைவாய்வைத்து
நிறைத்தாரே சாத்திரங்கள் தோறும்அப்பா
நிலையில்லா அச்சரங்கள் யோகம்தன்னை
விறைத்தாரே அதனைநிசம் என்று உழைத்தால்
வீறாக உன்தேகம் வீழ்ந்து போமே (50)

வீழ்ந்ததுவும் போகாமல் இருகண்ணைத் தான்
விறைந்து அடியின் நடுமூக்கில் ஊன்றிப்பாரு
தாழ்ந்ததுவும் போகாமல் சுழினைவாசி
தான்ஏறி நின்றதுஎன்றால் சொல்லக் கேளு
ஆழ்ந்துபார் சுழினைதனை அகாரத்தாலே
அருமையுடன் குறித்துவிட்டேன் நடுமூலத்தை
வாழ்ந்திருக்க ஓர்இதழைச் சுழியில் நாட்டி
வைத்தால் மெய்ச்சோதிமயம் சொன்னேன்முற்றே (51)