மும்மலங்களை அறுக்கும் ரகசியம்

மும்மலங்களை அறுக்கும் திருமந்திரம்

எம் அமுதத் தேனாம் தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம். அனைத்து தமிழ்ச் சான்றோர்களுக்கும் மனித உயிர்களுக்கும் திருவடியில் நின்று வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, எம் சற்குருவிடம் நல்லாசியோடு திருமந்திர அமுதக்கடலில் அடுத்ததொரு முத்தை எடுக்கிறேன், உங்கள் அனைவருக்காக.

வாருங்கள், அடுத்த திருஅமுதக் குடத்திற்குள் நுழைவோம். நாம் இங்கே எடுத்திருக்கும் திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரத்தில் தியானம் என்ற தலைப்பிற்குள் வருகிறது. திருமந்திரம் இதோ :

விண் நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளைத் தலைக் காவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்தக்
கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே. (113)

பிரம்மஞானத் தவத்தின் ஒரு மெய்யுணர்வு நிலைதான் இப்பாடல் உணர்த்தும் கருத்து. கண்ணில் நின்றால் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் தண்ணின்ற தாளைப் பிடித்துக் கொள்ள முடியும். தண்ணின்ற தாளை பிடித்துக் கொண்டால் விண்ணில் நின்று நித்தமும் பேரின்பத்தில் மூழ்கி வினைகளை அழித்தொழிக்கலாம் என்பதுதான் திருமூலர் சொல்லும் ஞானம்.

இத்திருமந்திரம் முதல்வரியிலிருந்து படித்துச் செல்லக் கூடாது. காரணம் பிரம்மஞானத் தவத்தின்போது ஏற்படும் மெய்யுணர்வுகளை திருமூலர் தலைகீழாக படம்பிடித்துக் காட்டுகிறார். அப்படியே படித்தால் தவறான ஒரு உணர்வுக்குள்தான் நாம் செல்ல வேண்டியிருக்கும். அதனால் திருமூலர் சொல்லும் பிரம்மஞானத்தை உணர்ந்துகொள்ளாமலேயே போய்விடுவோம்.

கண்களில் நின்றால்தான் உள்ளே எப்படி நிற்க வேண்டும் என்பது தெரியவரும்.
உள்ளே ஒழுங்காக நிற்கத் தெரிந்தால்தான் தண்ணென்ற குளிர்ச்சியான தாள் எதுவென்று கண்டுபிடிக்க முடியும். அந்த மெய்யுணர்வால் நிரம்பிய குளிர்தாளைக் கண்டால்தான், அதனை தலையில் எப்படி காவல் வைத்துக் கொள்வது என்ற சூக்குமம் நமக்குள் பிடிபடும்.
அவ்வாறு குளிர்தாளை தலைக்காவலாக வைத்துப் பழகிக் கொண்டால்தான், விண்ணாகிய பிரபஞ்சத்தின் உயர்காந்தப் பிராண ஆற்றல்களை உறிஞ்சிக் கொள்ள முடியும். விண்ணாற்றலால்தான் மனிதப் பிறப்புக்குக் காரணமான வினைகளை அழித்தொழிக்க முடியும். வினைகளை அழித்தபின், அங்கே மலம் நிமலம் ஆகும். மலம் என்றால் அது மும்மலங்கள். ஆணவம், மாயை, கன்மம் என்பவைகளே மும்மலங்கள். வள்ளற்பெருமான் ஐந்து மலங்கள் உள்ளதாகக் கூறுகிறார். ஆணவம், மாயை, மாமாயை, மகாமாயை, கன்மம் என்பவைகளே ஐந்து மலங்கள்.

இப்போது புரிகிறதா ஏன் நாம் இப்பாடலை தலைகீழாகப் படிக்கச் சொன்னோம் என்று.
விண்ணாற்றல்களால் நம் வினைகளை அழிக்க வேண்டுமென்றால், நாம் தண் என்ற குளிர்ச்சியான தாள்களைக் கொண்ட (திருவடிகளைக் கொண்ட) உயிராற்றலைப் பிடிக்க வேண்டும். அதற்கு நாம் குளிர்ச்சியான திருவடிகளை தலைக்காவல் வைத்துவிட வேண்டும். அவ்வாறு தலைக்காவல் வைத்தபின்பு தான் நம்மால் தவத்தில் உள்ளே அகத்தில் நிலையாக நிற்க முடியும். அப்படி நிலைத்து உள்ளே நிற்க வேண்டுமென்றால், கண்கள் என்ற திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும். திருவடிகளைப் பற்றிக் கொண்டு உள்ளே ஞான வாசலுக்குள் செல்ல வேண்டுமென்றால், அங்கே தடையாக இருக்கக்கூடிய களிம்பாகவும் வினைகளுக்குக் காரணமாகவும் இருக்கக்கூடிய மும்மலங்களை அறுக்க முடியும்.

மும்மலக் களிம்பிகளை எவ்வாறு அறுத்தெடுப்பது? அது பிரம்மஞானத் தவத்தால் மட்டுமே முடியும். காரணம் பிரம்மஞானத் தவத்தில் சுடராழித் தவம் கற்றுத் தரப்படுகிறது. சுடராழித் தவத்தின் நோக்கமே கண்களில் களிம்பாக இருக்கக் கூடிய மும்மலத் திரைகளை கிழித்தெடுப்பதுதான். எவ்வாறென்றால், சுடராழித் தவத்தில் ஒளி ஆற்றல்களை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

குவியாடியைக் கொண்டு (Convex lens) சூரிய ஒளியை ஒரு வெற்றுத்தாளில் குவித்தோமென்றால், சிறிது நேரத்தில் அத்தாளில் குவிக்கப்பட்ட ஒளிக்கதிர்கள் அத்தாளை சுட்டெரித்து தீப்பிடித்துக் கொள்கிறதா இல்லையா. அதை போலத்தான் சுடராழித் தவத்தில் சூரிய ஒளி ஆற்றலின் உயர்காந்தப் பிராண ஒளிக்கற்றைகளை கண்மணி என்ற குவியாடியில் உள் வாங்கப்பட்டு, மும்மலத் திரைகளின்மீது இந்த ஒளிக்கற்றைகள் குவிக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து சூரிய ஒளிக்கற்றைகள் கண்மணியில் குவிக்கப்படும்போது, மும்மலத் திரைகள் கிழிவதற்கான வெப்பம் எப்போது உண்டாகிறதோ, அப்போது வினைத் திரைகள் கிழிய ஆரம்பித்திடும். தொடர்ந்து சுடராழித் தவத்தை செய்து கொண்டே வரவேண்டுமென்று இதற்காகத்தான் சொல்லப்படுகிறது. மும்மலத் திரைகள் கிழியும் அளவுக்கு சுடராழித் தவத்தில் வெப்பக் கனல்கள் பொங்கிக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் காலங்காலமாக ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக்கூடிய வினைப்பதிவுகள் அழியும்.

மனிதன் அந்த மும்மலத் திரைகளை அறுப்பதற்கு குருவின் துணையும் இறைவனின் ஆசியும் கண்டிப்பாக தேவையல்லவா. அதனால் இறைவனானவன் மும்மலங்கள் எங்கே குழுமியுள்ளனவோ, அந்த இடத்தின் உள்ளே குளிர்ச்சியான அமுதக் கலசத்திற்குள் வாசம் செய்து கொண்டிருக்கிறான். ஞான வாசல் சென்றால் இறைவன் வாசம் செய்யும் இடத்தை அடைந்துவிட முடியும். ஞான வாசலுக்குத் தடையாக மும்மலத் திரைகள் விளங்கிக் கொண்டிருப்பதால், அந்த கண்களிலே இறைவன் வாசம் செய்து கொண்டு, மனிதன் வினைக் களிம்புகளை அறுத்து வெல்வதற்கு உதவியாக உள்ளே இருந்து கொண்டிருக்கிறான். அதனால் திருமூலர் கண்ணின்று காட்டிக் களிம்பு அறுத்தானே என்றார்.

நாம் இறைவன் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டால், வாசல் திறந்து உள்ளே பிரவேசிக்க முடியும். அவ்வாறு உள்ளே பிரவேசிக்கும்பொழுது, மூன்று ஆட்கள் வந்து தடுத்து நிறுத்தினால், அப்போது உள்ளே இருக்கும் இறைவன், நம் பிள்ளை உள்ளே வருகிறானே, இவர்கள் தடுப்பது சரியல்ல, நியாயமுமல்ல என்று எண்ணிக் கொண்டு, அவனுடைய குளிர்ச்சியான கரங்களைக் கொண்டு, அந்த மூன்று ஆட்களையும் அவனின் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்து, நாம் இறைவனை நோக்கி ஓடி வருவதற்கு வழிவகை செய்து ஆனந்தக் கூத்தாடுவான். அந்த ஆனந்தக் கூத்தாடும்போது தசவித நாதங்களும் சாதகனுக்குள் கேட்க ஆரம்பித்திடும். நாதம் கேட்கக் கேட்க உள்ளே செல்லும் ஒளியாற்றல்களின் ஆட்டம் சொல்ல முடியாத அளவுக்கு உருகி ஓடிக் கொண்டு வருவதால், அப்போது ஆனந்தம் எதனோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு அளப்பரிய ஆனந்தமாக இருக்கும். இதைத்தான் நடராஜ நடனம் என்றார்கள் நம் சித்தர் பெருமக்கள். அதனால்தான் திருமூலர் உள்ளின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தம் என்றார்.

வெப்பங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று சுடுவெப்பம், இரண்டாவது தண்வெப்பம். தண்வெப்பம் என்றால் குளிர்ச்சியான வெப்பம். பிரம்மஞானத் தவத்தை செய்தால், தேகத்தில் சுடுவெப்பம் தோன்றக் கூடாது, தண்வெப்பம்தான் தோன்ற வேண்டும். ஏனென்றால், அமுதக்காற்றை பிரம்மஞானத் தவத்தில் முழுமையாக உள்வாங்கினால்தான் தேகம் குளிர்வெப்பத்தால் நிறைய ஆரம்பிக்கும். காரணம் அமுதக்காற்று குளிர்வெப்பமாகும். அதனால்தான் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் அமுதக்காற்று பூமிப்பந்தை முத்தமிடுவதால் பூமியெங்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. ஓசோன் என்றுகூட அமுதக்காற்றை சொல்லலாம். ஆனால், அமுதக்காற்று ஓசோனுக்குள் மேலான அதிக உயர்காந்தப் பிராண ஆற்றல்களைக் கொண்டது. அதனால் மனிதனை நிமலனாக்குவதற்கும் நித்திய தேகத்தைப் பெறுவதற்கும் இறவா அமுதைப் பெறுவதற்கும் அமுதக்காற்று முழுக் காரணமாக இருக்கிறது. அதனால்தான் அமுதக் காற்றாகிய குளிர்காற்றை உள்ளே உறிஞ்சும் ஆற்றல் கொண்ட தாளாகிய திருவடிகளை கண்களை தண் என்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து என்றார் திருமூலர்.

அவ்வாறு கண்களில் அமுதக்காற்றை உள்ளே உறிஞ்சிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால், கண்களில் திரைகளாக இருக்கும் மும்மலங்களை வென்று வினைகளை மெய்வழி கொண்டு அழித்தொழிக்கலாம் என்பதைத்தான், விண் நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு என்றார் திருமூலர்.

அமுதக்காற்றை கண்களால் உறிஞ்சிக் கொள்வது

எனவே, திருவடிகளைக் கொண்டு அமுதக்காற்றை உள்ளே வாங்கும்போதுதான் பிறவிக்கு காரணமான வினைகளை அறுத்தெடுக்க முடியும் என்பதும் அதற்கு பிரம்மஞானத் தவம் ஒன்றே வழி என்பதும்தான் இத்திருமந்திரப் பாடல் சொல்லும் மறைக்கப்பட்ட ரகசியம்.

ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்
ஞான சற்குரு டாக்டர்.ருத்ர ஷிவதா,
பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!!