திருவடிகள் – பிரமஞானத் தவங்களின் மெய்க்கருவி
விநாயகர் அகவலையும், ஞானக் குறளையும் பாடியது ஔவைத்தாய் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இதில் ஞானக்குறளைப் பற்றி 100-க்கு 95 பேருக்கு விவரம் தெரியாது. ஞானக்குறளுக்கு மெய்ப்பொருள் உரை எழுதி யாம் 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட போது நிறைய புலவர்கள், தமிழ் அறிஞர்கள் ஔவை ஞானக்குறள் பாடியிருக்கிறாரா என்றே சந்தேகத்தோடு கேட்டு, அதன்பின் நூலினைப் பெற்று படித்து பெருமகிழ்வு கொண்டார்கள்.
இந்த இரண்டு ஞான நூல்களையும் பாடியது ஔவைத்தாய் என்றபோது, இதில் எதை முதலில் பாடினார்? இரண்டாவதாக எதைப் பாடினார்? என்ற கேள்வி எமக்குள் சில நாட்களுக்கு முன்பு வட்டமிட ஆரம்பித்தது. அதற்கான விடையும் கிடைத்தது. விநாயகர் அகவல் சொல்லப்பட்டவிதம், அதன் கருப்பொருள் ஆகிய இவ்விரண்டையும் ஞானக் குறளின் கட்டமைப்போடும், அதனின் கருப் பொருளோடும் பொருத்திப் பார்த்தபோது, ஔவைத் தாயின் மகா ஞானம் கண்டு விக்கித்துப் போய் விட்டோம். எப்படி என்பதை இங்கே உங்களோடு முதல்முறையாக பகிர்ந்து கொள்கின்றோம்.
ஔவைத்தாய் இந்த இரண்டு நூல்களையும் ஒரே காரணத்திற்காகவே இயற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. எம்முடைய ஆய்விலிருந்து அவர் விநாயகர் அகவலைத்தான் முதலில் பாடியிருக்க முடியும் என்றே தோன்றியது.
இதற்கடுத்தபடியாகத்தான் ஞானக்குறளைப் பாடியிருக்க வேண்டும். ஏனென்றால், விநாயகர் அகவலில் ஒரு பாத்திரத்தைப் பாடியவர், ஞானக் குறளில் அப்பாத்திரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தி மெய்யுணர்வுகளைப் பெற வேண்டும் என்பதை பலவித தந்திர முறைகளோடும் செய்முறை களோடும் அனுபவப் படும்படி எளிமையாகப் பாடிக் கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்ததும் எம்மால் அடைந்த பேரின்பத்திற்கு அளவே இல்லை எனலாம்.
ஔவைத்தாய் இந்த இரண்டு நூல்களின் வழியாக இவ்வுலக உயிர்களுக்கு சொல்ல வந்த ஞானம் என்னவென்றால், முதலில் உலக ஆன்மாக்கள் அனைத்தும் பிரமஞானத்தை அடைவதற்கான மெய்க்கருவி எது என்பதை முதலில் தெரிந்து கொண்டு, ஒரு சற்குருவின் மூலமாக ஞானத் தீக்ஷை பெற்று, அந்த மெய்க்கருவியைக் கொண்டு மெய்வழிக் கல்வியான சாகாக் கல்வியை அடைந்து விடவேண்டும் என்பதுதான். ஞானத்தை அடைவதற் கான மெய்க்கருவி என்பது நமது திருவடிகள் என்றும் ; அந்தத் திருவடிகளின் மூலமாக செய்யப்படும் பிரமஞானத் தவங்கள்தான் நம்மை இறைவனோடு ஒளியுடலாகக் கலப்பிக்க வைக்கும் சாகாக் கல்வி என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதனால் நம் அனைவருக்குமே நாம் சிவஞானத்தை, பிரம ஞானத்தை அடைவதற்கு திருவடிகளும், அதில் ஆற்றப்படும் பிரமஞானத் தவங்களும் மிக மிக அவசியம், முக்கியம் என்பதை ஔவைத்தாய் விநாயகர் அகவலிலிருந்து ஆரம்பித்து வைக்கிறார்.
நாம் எதைச் செய்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கித்தான் ஆரம்பிப்போம் என்பது தமிழர்களின் மரபல்லவா. அதன்படியே ஔவைத் தாயும் நாம் பிரமஞானத்தை அடைவதற்காக விநாயகப் பெருமானை ஓடி வந்து அமுதத்தை, பிரமஞானத்தைக் கொடுத்திட வேண்டுமென்று தமிழால் அகவி அழைக்கின்றார்.
என்றும் வேண்டும் குருவன்பும் இறையன்பும் !
திருச்சிற்றம்பலம் !!


மூலமும் ஞான மெய்ப்பொருரையும்
சீதக் களபச் செந்தாமரைப் பூம் (1)
விநாயகர் அகவலின் முதற்சொல்லே சீதக் களபம் தான். அடுத்த வார்த்தையை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும். அச்சொல் செந்தாமரைப் பூம்பாதம் என்பது தான்.
சீதம் என்றால் குளிர்ச்சி பொருந்திய என்று பொருள்படுகிறது. இதுபற்றி திருமந்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.
சிவனும் சக்தியும் வெம்மையும் குளிா்ச்சியும் ஆக இருந்து இவ்வுலகைக் காத்து வருகின்றார்கள்.
புண்ணிய நந்தி பொருந்தி உலகுஎங்கும்
தண்ணிய மானை வளா்ந்திடும் சத்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலா்ந்தெழு பூவிலே. (தி.ம.387)
சிவபெருமான் அறிவின் மயமாய் எல்லாப் பொருள்களிலும் பொருந்தியுள்ளான். குளிா்ச்சி பொருந்திய மாயா காாியப்பொருளைக் காத்தருள்கின்றான். சத்தியும் கண்ணோட்டமுடன் எல்லாவற்றிலும் கலந்து, தாங்கும் தன்மையுடன் வியாகிருதியிலே விாிந்து எழுவாள்.
கண் இயல்பு என்பது இரக்கம். மண் இயல்பு என்பது தாங்கும் தன்மை.
சிவம் புவனங்களில் பொருந்தி விளங்கும். சக்தி அவற்றில் பொருந்தி வெப்பத்தை நீக்கும் குளிா்ச்சிபோல் இருந்து வளா்ப்பாள். நந்தி- சிவபெருமான்.
வியாகிருதி – மேல் ஏழ் உலகையும் கூறும் மந்திரங்கள்.
களபம் என்றால் சந்தனக் கலவைச் சாந்து பூசிய பாதம் என்றும் யானைக் குட்டி என்றும் இருபொருள்படுகிறது. ஔவைத் தாய் இந்த விநாயகர் அகவலைப் பாட ஆரம்பித்ததும், கணபதி எவ்வாறு அழைக்கிறார் என்றால், எப்போதும் ஆனந்தமாக அமுதமே வடிவாக இருக்கக் கூடிய யானைக் குட்டியே என்னை நோக்கி ஓடி வா என்றே ஆனந்தமாக அழைக்கின்றார் நமது பிரமஞானியாக வாழ்ந்த ஔவைத்தாய். கணபதி வா என்று அழைத்தால் அவரைப் புகழ்ந்து பாடி ஆடி அழைப்பது நமது தமிழக மரபல்லவா. அப்படித்தான் ஔவைத்தாய் அவர்கள் விநாயகப் பெருமானை, என் உயிரில் அமுதமாய் விளங்கும் யானைக்குட்டியே ஓடி வா வா என்றழைக் கிறார். இந்த அமுதம் என்ற வார்த்தையை இங்கே எதற்காகப் பயன்படுத்தினோம் என்றால், அமுதம் எப்போதும் குளிர்ச்சியாக மட்டுமே இருக்கக் கூடியது. வெப்பங்களில் இரு வகைகள் உண்டு. ஒரு வெப்பம் – சுடு வெப்பம் அதாவது சுடுகின்ற வெப்பம். அது சூரியனிலிருந்து வருகின்ற வெப்பம். மற்றொரு வெப்பம் – தண்வெப்பம் அதாவது குளிர்ச்சியான வெப்பம். சுடு வெப்பம் எப்போதுமே தேகத்தை – உடலை அழிக்கக் கூடியது. குளிர்ச்சியான தண் வெப்பமோ தேகத்தை அழியாமல் பாதுகாக்கக் கூடியது. குளிர்ச்சியில் இருக்கும் ஒரு பொருள் என்றும் அழிவதேயில்லை. அதற்காக சமையற் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க நாம் இன்றைக்கு குளிர்சாதனப் பெட்டிகளை (ஃபிரிட்ஜ்களை) பயன்படுத்தி வருகிறோம். அதுபோல் நமது தேகத்திற் குள்ளே அதாவது மூளைக்குள்ளே குளிர்ச்சியான தண்வெப்பமே, தேகத் திற்கு வெளியே அதாவது தேகத்தின் மேற்புறங்களில் சுடுவெப்பமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேகம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால், நமது சிரசிற்குள்ளே அதாவது தலைக்குள்ளே இருந்து நம் உடலை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரின் குளிர்ச்சியான அமுத வெப்பத்தை உடலெங்கும் செலுத்தி விட வேண்டும். அதுதான் நமது தேகம் அழியாமல் இருப்பதற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு உபாயம் – தந்திரம். இந்த தந்திர முறையை விநாயகர் அகவலைப் படிக்கக் கூடிய அனைத்து பக்தர்களும் அன்பர்களும் அடைய வேண்டுமென்றே ஔவைத் தாய் இவ்வாறு ஞானப் பொருளை உள்ளடக்கிய சொற்களை விநாயகர் அகவல் முழுக்க போட்டுப் பாடியிருக்கிறாள். அதனால் சீதக் களபம் என்றால் அமுதமே வடிவான அழகிய யானைக் குட்டியான விநாயகப் பெருமானே என்னை ஆசிர்வதிக்க அருள்பாலிக்க ஓடி வா என்றழைக்கிறார் ஔவைத்தாய். நாமும் அவ்வாறே ஞானப் பொருள் புரிந்து இனி ஒவ்வொரு அழைப்போமாக.
அடுத்த வார்த்தைக்குச் செல்வோம்.
செந்தாமரை பூம்பாதம் என்ற வார்த்தை. அந்த விநாயகன் செந்தாமரைப் பூப்போன்ற பாதங்களை அதாவது திருவடிகளைக் கொண்டிருக்கிறான் என்கிறார்.
செம்மை நிறத்தில் இருக்கக் கூடிய அழகிய திருவடிகள் என்று பொருள். இங்கே பாதம் என்றால் அது திருவடிகளை மட்டுமே குறிக்கும் ஒரு ஞானச் சொல்லாகும். பாதம் என்றால் அது நமது கால் என்றே அனைவரும் இதுநாள்வரையிலும் நினைத்து வாழ்ந்து வருகிறோம். பாதத்தை பூவைப் போன்றிருக் கிறது என்று சொல்வது சரியான பொருளைக் கொண்டிருக்கிறதா என்பதை நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாதம் என்பது நமது கால்களைக் குறிக்கிறதல்லவா. அது எப்படி பூவைப் போல இருக்கும்? பூவின் குணம் நமது பாதங்களுக்கு உண்டா? பூவின் குணம் அது சூரியனைக் கண்டால் விரியும் ; சூரியன் மறைந்தால் சுருங்கும். விரிவதும், சுருங்குவதும் தான் பூக்களின் குணம். இதை இயற்கை தந்த பரிசு பூக்களுக்கு. ஆனால், நமது கால்களாகிய பாதங்கள் பூக்களைப் போல சுருங்கி விரியுமா, சொல்லுங்கள் பார்க்கலாம். அப்படி யென்றால், பாதம் என்பது திருவடிகளை மட்டும்தான் குறிக்க வேண்டும் ; அப்படித்தான் குறிப்பதாக திருமூலம் உட்பட்ட அனைத்து பிரமஞானிகளும் சொல்லி இருக்கிறார்கள்.
அடுத்த வார்த்தை அந்த பூப் போன்ற பாதம் செந்தாமரைப் பூவாக இருப்பதாகவும் ஔவைத்தாய் பாடுகிறார். செந்தாமரை எப்போதாவது நமது பாதங்களாகுமா? செந்தாமரைக்கு எத்தனை இதழ்கள் இருக்கிறது. நமது பாதங்களுக்கு அப்படி பல இதழ்கள் இருக்கிறதா? இதழ்கள் என்றால் அது சுருங்கும், விரியும். அப்படி பாதங்களில் இருக்கும் விரல்கள் சுருங்கி, விரியுமா? அதுவும் இல்லை அல்லவா. மேலும், செந்தாமரை எங்கே இருக்கும்? அது நீர் இருக்கும் குளங்களில்தானே இருக்கும். நமது பாதங்கள் எப்போதும் நீருள்ள குளத்திலா இருந்து கொண்டிருக்கிறது? சற்றே சிந்திக்கவும் அன்பர்களே. ஆனால், ஔவைத்தாய் அவர்கள் நமது பாதம் என்ற திருவடிகள் செந்தாமரை இருக்கும் நீருள்ள குளத்தில் இருப்பதாகப் பாடியிருக்கிறார்.
இந்தத் திருவடிகள் என்று சொல்கிறோம், இல்லையா. இந்தத் திருவடிகள் எந்தப் பொருளைக் குறிக்கிறது என்பதை நீங்கள் சற்றே யோசிக்க வேண்டுகிறோம். திருவடி என்பது வேறு ; பாதம் என்பது வேறு. திருவடிகள் பாதங்களாகா. அதே போல பாதங்கள் திருவடிகளாகா. இறைவன் பாதங்களை நாம் திருவடிகள் என்றே அழைக்கின் றோம், அப்படி அழைக்கும்படி ஆக்கப்பட்டிருக் கிறோம், அப்படி ஆக்கும்படி கட்டமைக்கப் பட்டிருக்கிறோம். நாம் இதுநாள் வரை படித்துவந்த ஆன்மீக நூல்களில் பல்வேறு கட்டங்களில் இந்தத் திருவடிகளை பாதங்களாகவே சித்தரிக்கப்பட்டிருக் கிறது, சில பல அஞ்ஞானிகளால். திருவடிகள் என்பது நமது இரு கண்களையே குறிக்கிறது. இந்த ஞான மெய்ப்பொருளை இனிமேல் நீங்கள் அனைவரும் மறக்கவே கூடாது என்பதற்கே இந்த இரகசியத்தைச் சொல்கின்றோம். எம்முடைய மாணவர்களும் மெய்ப்பொருளைப் பிடித்து மெய்வழிச் சாலையில் பயணம் செய்யக்கூடிய அன்பர்களும் இந்த திருவடி வார்த்தையின் பொருளை நன்றாக உணர்ந்திருப்பார்கள். உலக மக்களும் இந்த ஞானப் பொருள் விளக்கங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றே இங்கே இந்த ஏகன் அநேகன் தளத்தில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய திருவாளர் முத்துராமன் அவர்களின் பணிவான வேண்டுகோளுக்கிணங்க இங்கே உரையாற்றி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எனவே, இந் உரை முழுக்க நாம் எங்கெல்லாம் திருவடிகள் என்று சொல்கிறோமோ, அங்கெல்லாம் உங்களுடைய இரு கண்கள்தான் உங்களுக்கு நினைவுக்குள் மலர்ந்திட வேண்டும்.
சரி, அடுத்த சொற்பதத்தில் முழுகுவோம், வாருங்கள்.
இந்த விநாயகர் அகவல் முழுக்கவே ஞானம், ஞானம், பிரமஞானம் மட்டும்தான் நிறைந்திருக்கிறது. அன்றைய மக்களின் மனநிலைக்கேற்பவும், ஒரு கவிஞர், புலவர் தான் சொல்ல வரும் கருத்தை வேறொரு பொருள்மீது உவமைப்படுத்தி அவர் சொல்ல வரும் கருத்தை ஏற்றிக் கூறும் வழக்கம் ஒன்றுண்டு. இதை தமிழறிஞர்கள் நன்கு அறிவார்கள். அப்படித்தான் நமது தமிழில் காணப்படும் அத்தனை ஞான நூல்களிலும் இப்படி பிரமஞானத்தின் பொருளை பக்தி என்ற பதத்தில் உருவேற்றி, உவமைப்படுத்தி ஞானத்தைப் பக்தியாகக் கொடுத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள். அதனால் பக்தி என்பது நமக்குள் இருக்கக் கூடிய ஞானத்தை வெளிப்படுத்தும் ஒரு அகக்கருவி என்பதை நாம் இங்கே இவ்விடத்தில் இப்பொழுதிலிருந்து நன்றாக புரிந்து கொண்டுவிட வேண்டும்.
என்றும் வேண்டும் குருவன்பும் இறையன்பும் !
திருச்சிற்றம்பலம் !!


