நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

                    நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
          நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
                    நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று 
          வனைந்து வனைந்து  ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
                    மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
          புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
                    பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே  (ஞானசரியை-1)

          இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டும் உணர்வால் உணர்ந்து கொண்டும் பரவசத்தால் நெகிழ்ந்து கொண்டும் அன்பால் நிறைந்து கொண்டும் இருக்கும் சுடராழித் தவத்தைச் செய்து வந்தோமென்றால், திருவடிகளிலிருந்து கண்ணீரானது பெருகிக் கொண்டு உடம்பை நனைத்துவிட ஆரம்பிக்கும்.  கண்ணீர் தானாகவே பெருகி வரவேண்டுமென்றால், அது சுடராழித் தவத்தில் இறைவன்மீது காட்டும் அன்பினால்தான் சாத்தியம்.  அவ்வாறு சுடராழித் தவத்தின் கண்ணீர் பெருகி உடம்பெல்லாம் ஆறாக ஓடும்போது, இரு திருவடிகளும் ஒன்றாக இணைந்து மூன்றாவது திருவடியானது மகாரப் புள்ளியில் தோன்ற ஆரம்பிக்கும். 

அந்த மூன்றாம் திருவடியை கெட்டிப் பிடித்துக் கொண்டு, அதன் மெய்ப்பொருள் இருக்கும் பிரணவக் குகைக்குள்ளே நுழைந்து சுழிமுனை நாடியின் வழியே உள்ளே அமுதக்காற்றை ஒளியாகக் கொண்டு செல்லும்போது, அங்கே பிரம்மக் கூட்டில் தேனாகவும் அமுதமாகவும் கரும்பின் சாறாகவும் சிவம் இருந்து கொண்டு நம்மைக் கண்டதும் ஆனந்த நடனம் செய்வார்.  இந்நிலையைத்தான், “அழுதால் உனைப் பெறலாமே” என்றும், “அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே” என்றும் பாடியருளி சுடராழித் தவத்திற்கு மற்றொரு முக்கிய பிரமாண்ட ஆவணத்தை இப்பாசுரத்தில் பதிவிட்டுச் சென்றிருக்கிறார், நம் பூட்டனுக்கும் பூட்டனாகிய மாணிக்கவாசகப் பெருமான் அவர்கள்.  மாணிக்கவாசகரும் பிரமஞானத் தவத்தைச் செய்து, பிரமஞானத்தைப் பெற்று, சிவமாகி ஒளிதேகம் அடைந்தார் என்பது கண்கூடு.

மனித வாழ்வுக்கு உணவு தேவைதான். ஆனால், உயிருக்கு என்ன உணவு? உடம்பை வளர்த்தெடுக்க உணவு இருப்பதைப் போல, உயிரை – உயிராற்றலைப் பெருக வைக்க உணவு ஒன்று இருந்துதானே ஆக வேண்டும். உடலை அழியாமல் பாதுகாக்கும் உணவுகளில் சிறந்த உணவுதான் தேன். அது தேகத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.  தேனீக்கள் மலர்ந்த மலர்களிலிருந்து தேனினைக் கொண்டு வந்து சேர்த்து, தேன்கூட்டை உருவாக்குகின்றன. அதேபோல மனிதன் தன் உயிருக்கான தேனை பிரபஞ்சத்தின் அமுதக்காற்றிலிருந்து தேனீக்களைப் போல சிறிது சிறிதாக ஒவ்வொரு நாளும் சேகரித்துச் சேகரித்து உயிர்க்கூட்டில் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உயிர்க்கூடு ஒருகட்டத்தில் நிரம்பி அமுதத் தேனாக உருமாறி, அமுதக்கலசமானது உருகி உருகி, தொண்டை வழியே வழிந்தோடி வரும். அந்த அமுதத்தேனை உண்ணும் சாதகன் இறவா நிலையை பெற்று சிரஞ்சீவியாய் வாழ்ந்திடுவான். இதைச் சொல்லிக் கொடுப்பதுதான் நம் திருவாசகத் தேன்.

          மாணிக்கவாசகராகிய தேனீ இறைவன் திருவடி மலர்களில் மட்டும் உட்கார்ந்து எடுத்த தேன்கூடுதான், இத் திருவாசகம். ‘திருவாசகம் என்ற தேன்கூடு, ஒரே மலரால் உருவான தேனாகும். வேறு எந்த மலர்களிலும் மாணிக்கவாசகராகிய தேனீ அமர்ந்திருக்கவில்லை. பரவிந்து சொரூபனான பரமேசுவரனே சிட்டாளாக மதுரையம்பதியில் மண் சுமந்து பெற்ற பரிசுதான், பண் சுமந்த பாடலாகிய இத் திருவாசகம்! பரமேசுவரனால் படி எடுக்கப்பெற்ற பிரமஞான நூல்தான் இத்திருவாசகம்.

          எத்தனை எத்தனை பிறவிகளை மனிதன் எடுத்தாயிற்று ! எய்ப்பும் களைப்பும் அவனுக்கு அநேகம் வந்தாயிற்று! கடினமான பிறப்புக்கள் கொடுத்த வேதனைகள் அவனுக்கு அதிகம்! சூழ்ந்து வந்த தளைகள் எண்ணற்றவை! இவையெல்லாம் நீங்கிப் போக வேண்டுமென்றால், வாருங்கள் திருவாசகத் தேனமுதப் பாடல்களை ஓதலாம் !

          பிறப்பு என்ன? வாழ்க்கை என்ன? அதில் காணும் இன்ப, துன்பங்கள் என்ன? நன்மை, தீமைகள் என்ன? இந்த மாயச் சுழற்சியில் சிக்கிய ஆன்மா அனுபவிக்கும் அல்லல்கள்தான் எத்தனை ஆயிரம்! இந்த அல்லல்கள் தீர வேண்டுமென்றால், அதற்கான ஒரே வழி திருவாசகம் ஓதுதல் மட்டுமே.

          அல்லல் நீங்கி ஆனந்தம் அடையத் திருவாசகம் பாடுக! திருவாசகம் ஓதுக! திருவாசகத் தேனைப் பருகிடுக !

          திருவாசகம் உடலையோ உள்ளத்தையோ மனசையோ உருக்க எழுந்தக் கவிதைகள் அல்ல. அது நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நம் உயிரை எழ வைக்க எழுந்த சாமகானப் பாடல்கள். ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டுமென்றால், அது நம் உயிரை உருக்கி அமுதத்தைப் பொழிய வைக்க வேண்டும். திருவாசகம் செய்யும் மகா மகத்தான பணியே அதுதானே. திருவாசகத்தை மெய்யுணர்வோடு ஓதுவோர்கள் இதை நன்றாக அறிவார்கள். ஓதுவதோடு அல்லாது திருவாசகம் சொல்லும் பிரமஞானத் தவத்தை விடாது பற்றிக் கொண்டேமென்றால், பிறவிப் பெருங்கடலை மிகவும் எளிதாக கடந்துவிடலாம். அதற்கு ஆதாரம் – சான்று – உதாரணம் திருவாசகம் பாடி முடித்தக் கையோடு, மாணிக்கவாசகர் ஒளிதேகம் பெற்று இறைவனோடு கலந்துவிட்டதுதான்.

          “ஊனினைப் பெருக்கி உயிரை இழந்தேன்” என்பார் சுந்தரர். அதனால் நமது உயிரின் (ஆன்மாவின்) கட்டுப்பாட்டில்தான் உடல் இருக்க வேண்டும்.  உடலின் எடை குறைந்திருப்பதுதான் உடலுக்கும் நல்லது; ஆன்மாவுக்கும் நல்லது. அதேபோல உடலிற்கான தேவைகளும் குறைந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் ஆன்மாவின் தேவைகள் பெருகி வளரும். அதனால், நமது தேகத்தில் இருக்கும் பரநாதச் சத்திகளைக் கொண்டு உடலை இளைக்க வைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஆன்மாவின் ஞானஒளியை நாம் பற்றிவிட முடியும். ஆம்! ஒளிதான் ஞானத்தின் சின்னம்!

முகம்மது நபி, எல்லாம் வல்ல இறைவனிடம் “ஒளியை. என் உடலில் நிரப்பு” என்று கேட்டுப் பிரார்த்தனை செய்கிறார்.

          ஆன்மா ஞான ஒளியைப் பெற்றிருப்பதால், நம் தேகத்தில் இன்பம் மேவுகிறது. அது சாதாரண இன்பமல்ல, அந்தம் ஒன்றில்லாத இன்பம்! ஆனந்தமாய இன்பம்! இடையீடே இல்லாத இன்பம்! தடையேயில்லாத இன்பம் !

          இந்த ஆன்மாவின் ஆனந்தமயமான இன்பத்தின் அருமை தெரியாததால்தான், நாம் பலவற்றை வெகு இயல்பாக இழந்து கொண்டே வருகிறோம். ஆன்மாவை அறிந்து கொள்ளாத அறியாமை ஒன்று நமக்கும் இருக்கும்வரை நம்மால் ஒருபோதும் ஆன்மாவை நெருங்க முடிவதில்லை. இந்த அறியாமையால்தான் உலக வரலாற்றின் அனைத்துப் பக்கங்களும் நிரம்பி வழிகின்றன. 

          அதனால் நம் வினைகளை வென்று பிறவியை அறுத்தெறிய வேண்டும் என்றால், சிவபெருமானை விரைந்து வருமாறு அழைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.

அழிவின்றி நின்றதொர் ஆனந்தவெள்ளத்து இடைஅழுத்திக்

கழிவில் கருணையைக் காட்டிய கடிய வினைஅகற்றிப்

பழமலம் பற்றுஅறுத்து ஆண்டவன் பாண்டிப் பெரும்பதமே

முழுதுலகும் தருவான் கொடையே சென்று முந்துமினே.      (திருப்பாண்டிப் பதிகம் – 8)

என்று இறைவனை விரைந்து கூப்பிடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான்.

          பிரமஞானத் தவத்தின் காரணமாக மும்மலங்களும் நீங்கி மெய்யறிவின் பரிபூரண ஞானத்தோடு விளங்கும் மாணிக்கவாசகர், சிவானந்த வெள்ளத்தில் திளைத்தும் மூழ்கியும் அருளிய இத்திருவாசகத் தேனானது, ‘நமச்சிவாய’ என்றே இறைவனை வணங்கித் துதித்துத் தொடங்குகிறது. ‘அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே’ எனச் சொல்லி தான் பேரின்பம் பெற்றதைக் கூறி திருவாசகம் முடிவடைகிறது.

          இந்த தெய்வீகக் கவிதையானது ஐம்பத்தொன்று (51) பதிகங்களும், அறுநூற்று ஐம்பத்தெட்டு (658) பாசுரங்களையும் கொண்டிருக்கிறது. இதிலே மாணிக்கவாசகரின் அத்தனை பேரின்ப அனுபவங்களையும் கண்டு சுவைக்கலாம். அந்த அனுபவங்களை நாமும் எவ்வாறு பெறலாம் என்பது இனிமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் இனிய எளிமையானச் சொற்கள், நம் சிந்தையுள்ளே நின்று நம் செவிகளை செம்மையாக இன்ப நாதத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

          சீரார் திருவடித் திண் சிலம்பின் சிலம்பு ஒலிகளைப் போல, ஆராத ஆசையை எழுப்பித் தேனும் பாலும் கன்னலும் என்று தீஞ்சுவை பொதிந்த சிவஞான அருளமுதத்தை ஊட்டும் வல்லமை கொண்ட இம்மணி வார்த்தைகள், பிரமஞானத் தவத்தில் தன்னை அடைந்தவர்களுக்கு செம்பொருள் ரகசியத்தைத் தெரிவித்து, அந்த ரகசியம் சொல்லும் பிரமஞானத்தை தெளிவுபடுத்தி, அந்த ஞானத்தின் கருப்பொருளை திருவடிகளில் காட்டிக் கொடுத்து, முடிவான செம்பொருளாம் சிவப்பொருளைக் கூட்டும் பெருமைகளைக் கொண்டது திருவாசகம் என்பதுதான் காலத்தால் அழியாத காவியமாக நின்று கொண்டிருப்பதற்குக் காரணமாகும். சித்தம் சிவமான செம்மலின் செஞ்சொற்களல்லவா, தேனொழுகும் திருவாசகம். பொருள் விளங்குவதற்கு முன்பே அதன் அருளை வழங்கிடும் ஆற்றல் கொண்டதுதான் இத்திருவாசக மணிச் சொற்கள்.

சிவத்தோடு ஒரு உடன்படிக்கை

‘மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழ்ந்து ஒளிதேகத்தை பெற்றுவிட்ட மாணிக்கவாசகரிடம்தான் நாம் அனைவரும் கேட்க வேண்டும். இறைவனிடம் அன்பு செய்வதற்கு, இறைவனிடமே ஒரு சிறு உடன்படிக்கை முன்வைக்கிறார்  மாணிக்கவாசகர்: “அப்பனே! அம்மையோ உன் இதயத்தின் நடுவில் இருக்கிறாள்! நீயோ அம்மையின் இதயத்தினுள் இருக்கிறாய்! நீவிர் இருவரையும் என் இதயத்துள் இருத்த எனக்கு ஆசை கிடந்து தவிக்கிறது. அதற்கு நீர் ஒரு சிறிய உதவி எனக்குச் செய்தால் போதும். என்னை உன் அடியார்கள் நடுவில் கொண்டுபோய் வைத்துவிடும்” என்பதுதான் அது.

உடையாள் உந்தன் நடு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால், அடியேன் உன்

அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்! பொன்னம்பலத்து எம்

முடியா முதலே ஏன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே! (கோயில் மூத்த திருப்பதிகம் – 1)

முற்றோதியும் ஏன் முத்தி கிடைக்கவில்லை?

நம் நாட்டிலுள்ள சிவாலயங்களில் ‘திருவாசக முற்றோதுதல்’ என்னும் நிகழ்வானது சிவனடியார்களால் அதிகளவில் நடந்து வருகிறது. ‘திருவாசகம் முற்றோதுதல்’ நிகழ்ச்சிகள் பலவற்றில் சிறுவயது முதலே யாம் கலந்து கொண்டிருக்கிறோம். அங்கு நடக்கும் நிகழ்வினைப் பார்க்கும் போதெல்லாம், திருவாசகம் ஓதுதலும், திருவாசகத்தில் உருகுதலும் ஒவ்வொரு மெய்யுணர்வாக அவர்களின் அனுபவத்தில் கனிந்து வரும்  நிலைப்பாடாக அல்லாது, ‘திருவாசகம் முற்றோதுதல் நன்மை பயக்கும்’ என்ற நம்பிக்கை சார்ந்த ஒரு சமயச் சடங்கு அங்கே சீரும் சிறப்புமாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற உணர்வுதான் எனக்குள் மின்னலைப் போல தோன்றித் தோன்றி அலைக்கடித்தது. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பழமொழி ஆதித் தமிழர்கள் காலத்திலிருந்து இன்றுவரை வழங்கி வருகிறது உண்மையென்றாலும், ஏன் திருவாசகம் சொல்கின்ற பிரமஞானத்தின் மெய்ப்பொருள் ஓதுவோர்களின் உள்ளத்தில் வசப்படவில்லை என்ற எண்ணமே பெரிதும் எம்மை யோசிக்க வைத்தது.

இக்கேள்விக்கு யாரிடம் சென்று விடை தேடுவது என்றபோது, எமக்கு எம்முடைய முதற்குருவான வள்ளல் பெருமான்தான் சட்டென்று நினைவுக்குள் வந்தார். திருவாசகத்தைப் பற்றி வள்ளலார் உரைத்த “வான் கலந்த மாணிக்கவாசக, உன் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்” என்ற வாக்கைப் பற்றினேன். ஆம், வெறும் திருவாசக வாசிப்பு மட்டும் போதுமா, திருவாசகம் என்னும் அமுதத்தேனைப் பருகிவிட? ‘திருவாசகத்தில் “நான்” கலந்து பாடினாலே இறைவனைச் சிக்கெனப் பிடிக்க இயலும் என்பதை உணர்ந்தேன். அப்படி “நான்” கலந்து பாடினால் என்ன நிகழும்? இதோ வள்ளல் பெருமானின் கவியைக் கேட்கலாம் வாருங்கள் :

“நல்ல கரும்புச் சாற்றினில் தேன் கலந்து, பால் கலந்து, நன்கு பழுத்துக் கனிந்த பழச்சாற்றினைக் கலந்து …”; இத்தனையும் கலந்தால், அச்சுவை நமக்கு திகட்டிவிடத்தானே செய்யும். நன்றாக இருக்குமா? என்று கேட்டால், வள்ளல் பெருமான் கூறினார், “இத்தகைய சுவையுடன், உன் ஊனையும், உயிரையும் கலந்து விடு ; திகட்டாமல் நிலைத்த இனிமையான அமுதம் அங்கே தோன்றிவிடும். அந்த அமுதத்தேன் எப்போதும் திகட்டவே திகட்டாது” என்றார்.

வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன்

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை
கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே (வள்ளற்பெருமான்)

இதற்கு மேலும் திருவாசகத்திற்கு உரையும் சான்றும் விளக்கமும் வேண்டுமோ? வள்ளல் பெருமான் “வாழையடி வாழையாய் வந்த அடியார்த் திருக்கூட்ட மரபினுள்” வந்திட்ட நாம் வாழ்ந்து வரும் காலத்திற்கு சற்று அண்மையில் வாழ்ந்தவர். ஞானசரியை பாடி முடித்ததும் ஒளிதேகத்தைப் பெற்று இறையோடு ஒளியாக கலந்து இன்னும் நம்மிடையே வாழ்ந்து அருள்ஞானத்தை வழங்கிக் கொண்டிருப்பவர். அவர் கூறிய இந்த மெய்ந்நெறியைப் பின்பற்றி  திருவாசகத்தில் “ஊன் கலந்து உயிர்கலந்து” என்ற புணர்வுநிலை நின்று ஓதினால், வாராத சிவனும் ஓடோடி நம் நெஞ்சில் வந்து அமர்ந்து கொள்ள மாட்டானா, சொல்லுங்கள்.

அப்போது தான் மாணிக்கவாசகருக்கு வானம் வசப்பட்டதைப் போல நமக்குள்ளும் அமுத வானம் வசப்படும். திருவாசகம் ஓதியும் நமக்குள்ளே அமுத வானம் வசப்படவில்லையென்றால், எப்படி முத்தியோ? சித்தியோ? சுத்த தேகமோ? பிரணவ தேகமோ? ஞான தேகமோ? அருள்தேகமோ? சித்திக்கும். சற்றே சிந்தித்து திருவாகத்தை நாள்தோறும் ஊன் கலந்து உயிர் கலந்து ஓதி வருவதே நம் பிரார்த்தனையாக இருக்க வேண்டும். அவ்வாறு திருவாசகத்தை ஓதினால் சிவஞானம் சித்திக்கும். அருள்தேகமும் கைவசப்படும்.

சிவத்தைக் காண கன்றை ஈன்ற பசுவின் மனம் வேண்டும்

          இறைவனின் பொன் திருவடிகளை நம் உயிருக்குள் காண வேண்டுமென்றால், கற்றாவின் (கன்றை ஈன்ற பசுவின்) மனம் போல நாம்  கசிந்துருக வேண்டும்; கன்றை ஈன்ற பசுவின் மனம், தான் ஈன்ற கன்று வளர்ந்து, தனக்கு ‘இதைச் செய்யும், அதைச் செய்யும்’ என்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றியே, தன் கன்றின்மேல் கொண்ட அன்பு ஒன்றாலேயே அது உருகி நிற்கும்; “உன் ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிமேல் அன்பு கனிந்து கசிந்து உருகும் மனத்தை எனக்கருளவே யான் உன்பால் வேண்டுகிறேன்” என்று குற்றாலத்துறையும் இறைவனிடம் மனமுருகி வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.

உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்

கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே (திருவாசகம் :39-3)

          “மாணிக்க வாசக! சிலநாட்கள் இங்கு வாழ்ந்து, பின் தில்லைக்கு வந்து என்னைப் பார்” என்று இறைவன் மணிவாசகரைப் பிரிந்ததால்தான் மாணிக்கவாசகரின் மனம் ‘கற்றா’வின் மனம்போலக் கசிந்துருகியது; நமக்கான அற்புத பிரமஞானமான ‘திருவாசகமும்’ கிடைத்தது. இது இறை செய்த உலக உயிர்களுக்கான அருட்கொடையன்றி வேறென்ன சொல்லி விட முடியும்.

யாரேனும் ஒருவராவது திருவாசகம் சொல்கின்ற பிரமஞானத் தவத்தில் தன்னைச் சரியாக பொருத்திக்கொண்டு மாணிக்கவாசராகவே உருகிக் கரைகிறாரோ, அவருக்கு இறைவனை அடைவது மிக எளிது. இதைத்தான் வள்ளலார், “நான்” கலந்து பாடுங்கால்” என்று நமக்குச் சொன்னார். திருமூலதேவர் “ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்றார்.

மாணிக்கவாசகரை எண்ணற்ற கடுமையான வாழ்வியல் இடர்ப்பாடு களும் துன்பங்களும் காட்டாற்று வெள்ளம்போல் துன்புறுத்தத் தான் செய்தன. அவைகளின் காரணமாக, உலகில் அறியாமையில் வாழும் எண்ணற்ற மனிதர்களின் குற்றங்களைத் தாமே செய்ததாகத் தம்மீது ஏற்றிக்கொண்டே ஞானமழை பொழிந்தார் மாணிக்கவாசகர்; அத்துன்பச் சூழலில், அவர்களாகவே மாறிப்போய் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதால் அவரின் உயிர் மலரிலிருந்து பூத்துப் பிறந்தவைதான் இத்திருவாசகப் பாடல்கள்.

 

அமுதம் நமக்குள்ளே இருக்கிறது

மாணிக்கவாசகர் இறைவனின் உத்திரவுப்படி, பல சிவத்தலங் களையும் தரிசித்துவிட்டு, சிதம்பரத்திற்கு வந்து சேர்கிறார்.  தில்லைவாழ் சிவனடியார்கள் பலர் மாணிக்கவாசகரைக் கண்டு வணங்கி, வரவேற்று மரியாதை செய்து, மாணிக்கவாசகரிடம், “நாங்கள் சிவனடி யார்கள் ; சிவபெருமானின் பெருமைகளை ஓரளவு தெரிந்து வைத்திருக்கின்றோம்; இருப்பினும் அவனைக் கண்ணால் காணும் பேறு இதுவரை எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை; பிரம்மனும், திருமாலும் காணமுடியாத சிவபெருமானைத் திருப்பெருந்துறையில் தாங்கள் கண்டுகளித்த அந்த மெய்யுணர்வு அனுபவத்தை எங்களுக்கு விளங்கிடும்படி கூறி அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

சிவனடியார்களின் விண்ணப்பத்தைக் கேட்டதும், இறைப்பேரின்ப மெய்யுணர்வுகள் ஆட்கொள்ள மாணிக்கவாசகர் பிரமஞானத் தவத்தில்  மூழ்க ஆரம்பித்தார். தவத்தின் உச்சத்தில் தம்மைச் சுற்றி நிற்கும் சிவனடியார்களை மறந்தார்; தம்மையே மறந்தார்; தன் தேகத்தை மறந்தார் ; தன் உயிரை மறந்தார் ; ஐம்புலன்களை சொல்லும் உணர்வுகளை மறந்தார் ; இறைப்பேரின்ப வெள்ளத்தில் திளைத்தார்; அவரின் மனம், மொழி, மெய், உயிர் அனைத்தும் கனிந்துருகத் ‘திரு’வாம் இறைவனில் கரைந்த அனுபவத்தை விளக்கும் ‘கோயில் திருப்பதிகம்’ என்னும் பத்துப் பாடல்களை, தன் முன்னே நிற்கும் இறைவனுடன் பேசும் திருவார்த்தை களாக, சிவனடியார்கள் அனைவரின் ஊனினையும் என்பையும் உருக்கும் அருள்வெள்ளக் காட்சிகளாக விரிய ஆரம்பித்தது.

இறைவனை உள்ளவாறு காண …

“தேன் போன்ற அமுதத்தின் தெளிவாய் தூய இனிமையாய் இருப்பவனே! பரமேசுவரனே!  அழகிய பெரிய மெய்வழியாகிய பிரணவக் கமலமாகிய திருப்பெருந் துறையில் வீற்றிருக்கின்ற மங்கலப் பொருளான பரமேசுவரனே ! முடிவற்ற நிலைகள்  அனைத்தையும் கடந்த ஆனந்த மானவனே ! என்னுடைய அன்பான உருவமே ! என்னைப்  பகைத்து நின்று, எனது அறிவை மயங்கச் செய்யும் வஞ்சகத்தையுடைய கள்ளத்தனமான பஞ்சேந்திரியச் சத்திகளின் வழிகளை அடைத்தவனே ! அவ்வாறு அடைத்ததின் காரணமாக, எனது திருவடிகளுக்குள் அமுதம் ஊற்றெடுத்து நிற்க, எனக்குள்ளிருந்து தோன்றுகின்ற பர சம்மந்தமான சோதி சொரூபமான மேலான ஒளியே !  நீ உண்மையாக இருக்கும் இந்த சோதி வடிவத்தை காணும்படி நீ எனக்குள் எழுந்து வந்து அருள் செய்வாயாக ! ”

 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!