
இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!
இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.
அடுத்த வரி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக் (28) என்பது.
முதலில் இங்கே நாம் ஐம்புலன்கள் என்பவை என்னென்ன? அவற்றின் பயன்பாடுகள் என்னென்ன? அவைகள் நல்லவையா? கெட்டவையா? கெட்டவையாக இருப்பின் அவைகளை எப்படி நல்லவைகளாக மாற்றுவது? ஐம்புலன்களை அடக்கும் உபாயம் என்ன? ஆகிய இவைகளை எல்லாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
கண் – ஒளி
காது – ஒலி
மூக்கு – சுவாசம்
வாய் – சுவை, மொழிதல்
மெய் – உண்மை, உடல்
மனிதர்களுக்கு ஐம்புலன்கள் அல்ல, ஏழு புலன்கள் உள்ளன என்பது தெரியுமா?
நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ் கட்டுரை தகவல்
எழுதியவர் அலெக்சாண்ட்ரா மார்ட்டின்ஸ்
நம்முடைய உடல் தோரணையும் முக பாவனைகளும் மூளைக்கு முக்கியமான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. அவற்றுக்கு ஏற்ப மூளை செயலாற்றுகிறது என, ஸ்பெயினின் மட்ரிட்டில் உள்ள கம்ப்லுடென்சே பல்கலைக்கழகத்தைச் (Complutense University of Madrid) சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நாசரேத் கேஸ்ட்டெல்லெனோஸ் கூறுகிறார்.
“நமது முகம் கோபமாக தோன்றினால், நாம் வழக்கமாக கோபமாகவே இருப்போம் எனக்கருதி கோபம் தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை தூண்டிவிடும்,” என அவர் கூறுகிறார். அதேபோன்று தான், நம் உடல் தோரணை மற்றும் முக பாவனைகள் கவலையாக தோன்றினால் கவலை தொடர்பான நரம்பியல் கட்டமைப்புகளை மூளை ஊக்குவிக்கும்.
நாம் முன்பு அறிந்திருந்ததைவிட தற்போது நம்முடைய உடலின் மற்ற பாகங்களுடன் மூளை தொடர்பில் இருக்கிறது என்பது ஆராய்ச்சிகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
“நமக்கு ஐந்து உணர்புலன்கள் அல்ல, ஏழு உணர்புலன்கள் இருக்கின்றன” என நாசரேத் கூறுகிறார். நுகர்தல், சுவைத்தல் உள்ளிட்ட ஐம்புலன் உணர்வுகள் “மூளைக்கு அவ்வளவு முக்கியம் அல்ல,” என்கிறார் அவர்.
நமது உடல் குறித்து புரிந்துகொள்வது எப்படி?
நமது உடல் குறித்து புரிந்துகொள்வதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது அதனை நன்றாக கவனிக்க வேண்டும். நமது உடல் குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமக்கு ஒரு உணர்வு ஏற்படும்போது ஒரு நொடி நின்று அந்த உணர்வை நாம் உடலில் எங்கு உணர்கிறோம் என்பதை அறிய வேண்டும்? அந்த சமயத்தில் உங்களது உடலை எப்படி உணர்வது என்பதை அறிய வேண்டும். இது உங்கள் உடலை கவனிப்பதன் மூலமே வரும்.
கடினமான தருணங்களில் இந்த விழிப்புணர்வு உதவுமா?
உதாரணமாக, பதற்றமாக இருக்கும்போது, நமது வயிற்றிலோ அல்லது தொண்டையிலோ ஏதோ ஒரு உருளை உருள்வதை போன்று உணர்ந்திருப்போம். இவை அனைத்தும் மூளையால் உணரப்படுகிறது. அந்த உணர்வுகளை நாம் அறிந்தால், மூளைக்கு வந்த தகவல் தெளிவாகிறது. இதனால், ஒரு உணர்ச்சியை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்தி அறியும் திறன் மூளைக்கு அதிகரிக்கும்.
பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்திரியங்கள் இருக்கின்றன. பஞ்ச இந்திரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தைக் கிரகிப்பது கண். சப்தத்தைக் கிரகிப்பது காது. கந்தத்தை (மணம்) கிரகிப்பது மூக்கு. ரஸத்தை (சுவை) கிரகிப்பது நாக்கு. ஸ்பரிசத்தைக் கிரகிப்பது சருமம். இந்த ஐம்புலன்களும் புதிதாக ஒன்றை உண்டாக்கவில்லை. வெளியே உண்டாகி இருக்கிற சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தங்களை இவை உணர்கின்றன. ரேடியோ ஸெட் மின்ஸார சப்த அலைகளைப் பிடிப்பது போல் இவை எப்படியோ வெளியில் இருப்பவற்றை அறிந்து பிடித்துக்கொண்டு மூளைக்கு அனுப்பி வைக்கின்றன. காரியம் செய்து புதிதாக ஒன்றைப் படைக்காமல், வெறுமே கிரகித்து நமக்கு அறிவிப்பதால், இந்தப் புலன்களுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர். கை, கால் போல காரியம் செய்கின்ற புலன்களுக்கு கர்மேந்திரியங்கள் என்று பெயர். நாக்கு ஞானேந்திரியமாக இருந்து ரஸத்தை உணர்வதோடு, பேச்சு என்று காரியத்தால் புதிதாக சப்தத்தைப் படைக்கவும் செய்வதால் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது.
ஞானேந்திரியங்களான ஐம்புலன்களுக்கும் ஆசிரயமாக இருப்பனவே பஞ்ச பூதங்கள் என்கிற ஆகாயம், காற்று, தீ, நீர், மண் ஆகிய பிரபஞ்ச சக்திகள். சப்தம் மட்டுமே ஆகாசத்தில் உண்டு. ஓம்கார நாதமாகிய பிரணவம் ஆகாயத்தில் நிரம்பியிருக்கிறது. பலர் கூடியிருக்கிற இடத்தில் பல தினுசான பேச்சுச் சப்தம் உண்டானாலும் ‘ஓ’ என்ற ஓசையொன்றே கேட்கிறது. சமுத்திரம் ‘ஓ’ என்கிறது. ஒரு சங்கைக் காதில் வைத்துக் கொண்டால் ‘ஓ’ சப்தம்தான் கேட்கும். “ஏன் ‘ஓ’ என்று கத்துகிறாய்?” என்றுதான் கேட்கிறோம். ‘ஓ’வுக்கு ஒரு புள்ளி வைத்து முடித்தால் ‘ஓம்’ இதுதான் எங்கும் இருப்பது. வாயுவில் சத்தத்தோடு ஸ்பரிசமும் இருக்கிறது. நம்மீது காற்றுப்பட்டால் நமக்குக் காற்றுதான் படுகிறது என்று புரிகிறது அல்லவா? நெருப்புக்கு ஸ்பரிசத்தோடு ரூபமும் இருக்கிறது. தீயைக் கண்ணால் பார்க்க முடிகிறது. ஜலத்துக்கு இவற்றோடு ரஸம் (சுவை) என்பதும் உள்ளது. அதை நாம் நாக்கில் விட்டுக்கொண்டு குடிக்கிறோம். மண்ணுக்கு மணமும் உள்ளது. மண் என்றால் மண்ணில் விளைகிற எல்லாம் அதில் அடங்கும். நாம் கண்டும் கேட்டும், ருசித்தும், தொட்டும், முகர்ந்து பார்த்தும் இவற்றையெல்லாம் அநுபவிக்கிறோம்.
ஐம்புலன்களே நமக்கு வாழ்வின் சகல ஆனந்தத்தையும் சாத்தியமாக்குகின்றன. நல்ல சாப்பாடு, ரம்மியமான சங்கீதம், சுகந்தம், குளிர்ந்த தென்றல், பூரண சந்திரனின் காட்சி இவை நமக்கு ஐம்புலன்களாலே அநுபவத்துக்கு வருகின்றன. மனிதனுக்கு இந்த ஐம்புலன்களைத் தந்து, இவற்றுக்கு ஆகாரமாக வெளியே ஐம்பூதங்களிலிருந்து தோன்றும் சுவை, மணம் முதலிய அழகுகளையும் வைத்திருப்பவர் ஸ்வாமி. அவரது கிருபையால்தான் சகல இன்பங்களும் கிடைக்கின்றன. நம்மால் ஒரு மணி அரிசி சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமியே இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, அதன் அழகுகளை நாம் அநுபவிப்பதற்காக நமக்கு பஞ்ச இந்திரியங்களையும் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். ஆனபடியால் நமது புலன்களால் அநுபவிக்கும் இன்பங்களை ஸ்வாமியின் நினைவோடு அநுபவிப்பதே நமது கடமையும் தர்மமுமாகும்.
அவருக்கு இந்த இன்பங்களை முதலில் அர்ப்பித்து அவரது பிரஸாதமாகவே இவற்றை நாம் ஏற்க வேண்டும். இந்த வழக்கம் நிலைப்பட்டால் ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்யத்தகாத எந்தப் பொருளையும் நமது புலன்களால் அநுபவிக்கக் கூடாது என்ற பக்குவம் உண்டாகும்.
பஞ்சேந்திரியங்களால் அநுபவிக்கும் பிரபஞ்ச வஸ்துக்களைப் பரமேசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணும் மனோபாவனையில் பிறந்ததுதான் பஞ்சோபசாரம் என்கிற ஐந்து உபாசாரங்கள். கோயிலிலும் வீட்டுப் பூஜையிலும் ஸ்வாமிக்குக் குறைந்தது ஐந்து உபசாரம் செய்யவேண்டும். ஸ்வாமியின் விக்கிரகத்துக்குச் சந்தனமிடுவது, புஷ்பம் போட்டு அர்ச்சிப்பது, தூபம் காட்டுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் பண்ணுவது ஆகியனவே பஞ்சோபச்சாரங்கள். இவற்றில் சந்தனமிடுவது கந்தம் – பிருதிவி தத்துவம் என்ற மண்ணைக் குறிப்பது. புஷ்பம் ஆகாயத்தைக் குறிப்பது. தூபம் வாயுவைக் குறிப்பது. தீபம் அக்னியைக் குறிப்பது. நைவேத்தியம் அமிருதமாகிய நீரைக் குறிப்பது, எனவே பஞ்ச பூதங்களும் பஞ்சோபசாரத்தில் அடக்கம். பஞ்ச பூதங்களிலிருந்துதான் பஞ்சேந்திரியங்களின் அத்தனை நுகர்ச்சி வஸ்துக்களும் உண்டாகின்றன. ஆகவே, பஞ்சோபசாரத்தில் ஈசுவரன், பிரபஞ்சம், ஜீவன் எல்லாம் ஒன்றுபடுத்தப் பெறுகின்றன.
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவை அறிந்தேனே (திருமந்திரம் – 2033)
அசேதனம் – அறிவில்லாதது
அமரர் – வானோர்
அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார் – அறிவில்லாதோர் ஐம்புலன்களையும் அடக்கு என்று மீண்டும் மீண்டும் கூறுவர்.
அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை – ஐந்தும் அடங்கினால் வானோரும் அங்கு வாழவியலாது.
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு – அவற்றை அடக்கினால் அறிவு பெற வழி இல்லை என்று
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே – அவற்றை அடக்க வேண்டாத அறிவை பெற்றேன்.
ஐம்புலன்களை அடக்க நினைப்பவர்களை திருமூலர் இப்படி விமர்சிக்கிறார். தன்னுடைய தமிழில் அவர் கூறியதை நம்முடைய தமிழில் பார்ப்போம்.
ஐம்புலன்களை அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள்.
ஐம்புலன்களை அடக்கியவர்கள் தேவலோகத்தில் கூட இல்லை.
ஐம்புலன்களை அடக்கினால் மதிகெட்டு போகும்.
அவற்றை அடக்காது நெறிப்படுத்தும் அறிவை அறிந்தேன்.
திருமந்திரம் கூறும் ஐம்புலன் அடக்கம்
புலன்கள்/தன்மாத்திரைகள் என்பவை ஐம்பூதங்களின் பண்புகள் ஆகும்.
அவைகள் 1.ஓசை, 2.ஊறு, 3.ஒளி, 4.சுவை, 5.நாற்றம்
பொறிகள்/ஞானேந்திரியங்கள் என்பவை உடலில் உள்ள உறுப்புகள் ஆகும். இவைகள் புலன்களை பயன்படுத்தி ஐம்பூதங்களுடன் தொடர்பை ஏற்படுத்தும்.
அவைகள் 1.செவி, 2.மெய், 3.வாய், 4.கண், 5.மூக்கு
கன்மேந்திரியங்கள் என்பவை புலன்கள் மற்றும் பொறிகளால் விளையும் செயல்களாகும்.
அவைகள் 1.வாக்கு, 2.பாதம், 3.பாணி, 4.பாயுரு, 5.உபத்தம்
புலன்கள், பொறிகள், மற்றும் கன்மேந்திரியங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்.
இறைவன் திருவடி அடைய புலனடக்கம்:
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே – (திருமந்திரம்-2011)
ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது – ஐம்புலன்களை அடக்குவது, உலகத்தையே வெல்வதாகும்.
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது – ஐம்புலன்களை அடக்குவது, அரிய தவமாகும்.
ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது – ஐம்புலன்களை அடக்கினால், இறைவன் திருவடியை அடையலாம்.
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே – ஐம்புலன் அடக்கியவர், இறைவன் அருளுக்கு உரியவர் ஆவர். அடக்க முயன்றால் உள்ளதும் போயிற்று:
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே (தி.ம.733)
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே (தி.ம.734)
முழக்கு – ஒலி
முழக்கி எழுவன மும்மத வேழம் – மூன்று மதமும் கொண்ட யானை பிளிறிக்கொண்டு ஓடுவதுபோல் – ஐந்து புலன்களும் ஆரவாரம் செய்து விஷயங்களை அனுபவிக்கத் துடித்தன.
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் – ஐம்புலன்களை அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்.
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் – ஐம்புலன்கள் அந்த கோட்டையிலிருந்து தப்பி ஓடி பெருங்கேடு விளைத்தன.
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே – நன்கு வளர்ந்திருந்த கரும்பை சிதைத்து விட்டன – என்னிடம் ஏற்கனவே சேர்ந்து இருந்த அறிவை கெடுத்துவிட்டன.
சுழுமுனை நாடுதல்:
இளைக்கின்றவாறு அறி இன்னுயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடு இல் புகழோன்
தளைக் கொண்ட நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க,
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் பெடைத்தே (தி.ம.2013)
இளைத்தல் – தளர்தல் – பிறந்து பிறந்து எய்தல்
கேடு இல் புகழோன் – யோகி
பெடைத்து – பெண் தன்மை உடையது – நாயகி
கிளைக்கு ஒன்றும் – அடியார்க்கு இசையும்
துளைக்கொண்டது – சுழுமுனை
இளைக்கின்றவாறு அறி இன்னுயிர் வைத்த – தளரும் தன்மையுடையதாக வைத்த இன்னுயிரை அறிந்த யோகி
கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடு இல் புகழோன் – ஈசனை வழிபடும் அடியார்களுடன் சேர்ந்து, ஈசனை அடையும் பொருட்டு
தளைக் கொண்ட நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க – ஐம்புலன்களின் ஆட்டத்தை ஒடுக்க, துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் பெடைத்தே – சுழுமுனை வழிச் சென்று, சிவானந்தம் பெற்று, சிவனது நாயகியாகத் தன்னை உணர்வான்.
மனதை அடக்கி எங்கும் கோயில் காண்க:
நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே. (தி.ம.2015)
நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப் – எல்லா உயிர்களிடத்தும் இயங்குகின்ற இறைவனை நாள்தோறும் எண்ணி
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக் – எல்லா இடத்திலும் அலைகின்ற மனதை படிப்படியாக ஒடுக்கி
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் – ஏதாவது ஒரு இலக்கை இடைவிடாது நினைத்தால்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே – உலகு எங்கும் கோயிலாக விளங்கும்.
பிராணன் அடங்கினால் மனமும் அடங்கும்:
பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை;
பிராணன் மடைமாறிப் பேச்சு அறுவித்துப்
பிராணன் அடைவே பேறு உண்டிடீரே (தி.ம.560)
பேராது அடங்கி – இடம்பெயராமல் அடங்கி
பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் – உயிராற்றல் மூச்சுக்காற்றுடனும், மனதோடும் பல வழியில் செல்லாமல் அடங்கி
பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை – அடங்கியிருக்கும் பிராணனால் பிறப்பு இறப்பு இல்லை.
பிராணன் மடைமாறிப் பேச்சு அறுவித்துப் – உயிராற்றலை வழி மாற்றி சுழுமுனை வழியாக செலுத்தி, மௌன நிலையை அடைந்து
பிராணன் அடைவே பேறு உண்டிடீரே – உயிர் முறையாகப் பெறவேண்டிய பேற்றினை பெற்று நுகர்வீராக.
காலத்தை(மரணத்தை) வெல்ல:
மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு
வேல் ஒத்தக்கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்துஅது தானே (தி.ம.576)
முக்காரம் இடுதல் – அடைதல்
மூலத்துவாராம் – மூலாதாரத்தின் துவாரம்
மேலைத்துவாராம் – உச்சந்தலையில் உள்ள துவாரம் – பிரம்மரந்திரம் – (anterior fontanelle)
வெளி – சிதாகாயம் – ஆன்மஉணர்வு என்னும் வெளி
மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு – அபான வாயு வெளியேறும் மலவழியை அடைக்கவும்.
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு – உச்சந்தலையில் உள்ள துவாரத்தை நினைக்கவும்
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்திரு – அகவெளியில் உணர்வை செலுத்த வேண்டும்.
காலத்தை வெல்லும் கருத்து-அது தானே – காலத்தை வெல்ல முடியும்.
அகவொளி காண்க – ஐம்புலன்களை தானாக அடங்கச்செய்தல்:
ஐம்புலன்களை தானாக அடங்கச்செய்தல்
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக்
காணாக்கண், கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அதுவாமே. (தி.ம.581)
வெளி – சிதாகாயம் – ஆன்மஉணர்வு என்னும் வெளி
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி – சுழன்று கொண்டிருக்கும் மனதை இடைவிடாது நினைத்து சுழுமுனையில் நிறுத்தி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக் – சுழுமுனை வழியாக சிதாகாயத்தை உற்று நோக்க – சுழுமுனை வழியாக புருவமதிக்கு ஏறும் குண்டலி சக்தியால் தூண்டப்பெறும் உயிராற்றலால் சிதாகாயத்தை உற்று நோக்க வேண்டும்.
காணாக்கண்,
கேளாச் செவி என்று இருப்பார்க்கு – பார்க்க வேண்டாத கண்,
கேட்க வேண்டாத காது என்று இருப்பார்க்கு – ஐம்புலன்களை தானாக அடங்கச்செய்தல்
வாழ்நாள் அடைக்கும் வழி அதுவாமே – வாழ்நாள் கழியாமல் அடைக்கும் வழியாகும்.
புலன்களை அடக்க தாரணை செய்க:
அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்துப்
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்த மனாதி சித்தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே (தி.ம.590)
சத்தாதி – சத்த ஆதி – ஐம்புலன் – தன்மாத்திரை – 1.ஓசை, 2.ஊறு, 3.ஒளி, 4.சுவை, 5.நாற்றம்
சித்தாதி – சித் ஆதி – சித்தும் சத்தும் – அறிவும் உண்மையும்
மனாதி – மன்னன் முதலிய நான்கு அந்தக்கரணங்கள் (1.மனம், 2.புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்)
தற்பரம் – பரம்பொருள் தாரணை – எட்டு யோக நிலைகளில் ஒன்று. (1.இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம், 8.சமாதி)
அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்துப் பொருத்த – புலன் இச்சை அரித்த உடலை ஐம்பூதத்தில் ஒடுக்கி
ஐம்பூதம் சத்தாதியில் போந்து – ஐம்பூதங்களை தன்மாத்திரைகளில் ஒடுக்கி
தெரித்த மனாதி சித்தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே – மன்னன் முதலிய நான்கு அந்தக்கரணங்களை சத்சித் ஆனந்தத்தில் ஒடுங்க தாரணை செய்தால் பரம்பொருள் அனுபவம் பெறலாம்.
புலன்கள் தானாக அடங்கும் – அமுதம் பருகும் இன்பம் விளையும்:
விடாத மனம் பவனத்தொடு மேவி,
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி
கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும்; வீடு
படாதன இன்பம் பருகு ஆர் அமுதமே (தி.ம.872)
பவனம் – காற்று
மேவி – தங்கச்செய்தல்(To cause to ஸ்டே)
கொளுவி – கொளுவு(Hook / join together)
நடாவு – நடவு – செலுத்த (To cause to go)
வீடு படாதன – விடுதல் முடியாத
விடாத மனம் பவனத்தொடு மேவி – ஐம்புலன்களை விடாத மனம், பிராணனுடன் சேர்த்து,
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி – அதை பிராணாயாமத்தால் உண்டாகும் நாத ஒலியுடன் செலுத்த வேண்டும்
கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் – அவ்வாறு செலுத்தும் போது புலன்கள் தானாக அடங்கும்
வீடு படாதன இன்பம் பருகு ஆர் அமுதமே – அப்பொழுது விடுதல் முடியாத, அதுவரை கிடைக்காத அமுதம் பருகும் இன்பம் விளையும்.
இறைவனைப்போற்று, புலன் அடங்கும்:
போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே
போற்றிசெய்; மீண்டே புலன் ஐந்தும் புத்தி ஆம்;
நால் – திசைக்கும், பின்னை, ஆற்றுக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே (தி.ம.2017)
ஆற்று – குளிரச் செய்
ஊற்று – ஊறு – ஈரம் – Spring
போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே – எதையேனும் போற்றினால்,
சிவனது திருமேனியைப் போற்று – போற்றிசெய்;
மீண்டே புலன் ஐந்தும் புத்தி ஆம்; – அப்படி செய்தால், ஐம்புலன்களும் புத்தியுள் அடங்கும்
நால் – திசைக்கும், பின்னை, ஆற்றுக்கும் நாதனை – பிறகு நான்கு திசைகளிலும் இருந்து குளிர்ந்த அனுபவத்தை தரும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே – ஊற்றுகை உள்ளத்தில் நிறுத்தி, அவனோடு ஒன்றி இருக்கவேண்டும்.
சிந்தையில் சிவனை நிறுத்து:
கைவிடல் ஆவது ஒன்று இல்லை, கருத்தினுள்
எய்தியவனை இயல்பினால் ஏத்துமின்;
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய் வருடு ஐய புலன்களும் ஐந்தே (தி.ம.2019)
ஐ – நுட்பம்
வருடு – பொருந்திய
கைவிடல் ஆவது ஒன்று இல்லை – ஐம்புலன்களை அடக்க கைவிட வேண்டியது ஒன்றும் இல்லை
ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய் வருடு ஐய புலன்களும் ஐந்தே – ஐம்பொறிகளின் ஆசையினால் தோன்றிய பொய் பொருந்திய, நுட்பமானவைகளே ஐம்புலன்கள்
கருத்தினுள் எய்தியவனை இயல்பினால் ஏத்துமின் – சிந்தையுள் சிவனை நிறுத்தி மனதாலும் சொல்லாலும் போற்ற வேண்டும்.
இப்படியெல்லாம் ஐம்புலன்கள் இருக்கின்றனவே, இந்த ஐம்புலன்களை அடக்கி நிறுத்தக்கூடிய அதாவது செயல்பட விடாது நிறுத்தி வைக்கக்கூடிய தந்திரமான பிரமஞானத் தவத்தில் வரக்கூடிய சுடராழித் தவத்தை உனது கருணை என்ற அமுதமே வடிவான கருணாமிர்தத்தால் விநாயகப் பெருமானே நீ எனக்கு அருளி அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்பதைத்தான், “ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிது எனக்கு அருளி” என்று உள்ளம் உருகும்படி பாடி பிரமஞானத்தை இவ்வுலகில் விதைத்துவிட்டுப் போனார் ஔவைத்தாய்.
அடுத்த வரியாக, “கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள்கடிந்து (30)” என்பது.
கருவிகள் என்பது என்ன என்பதை நாம் முதலில் உணர்வுபூர்வமாக உணர்ந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதை எப்படி ஒடுக்குவது என்பதை யோசிக்கவே முடியும்.
எது கருவிகள்? அது எங்கே இருக்கிறது? அதை ஒடுக்கி அடக்கும் உபாயம் என்ன?
இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்தால் பிறகு அதை அடக்கி இன்புறுவது மிக எளிதானதே.
கருவிகள் என்பது அகக் கருவிகளே ஆகும். அகக்கருவிகள் என்பது அந்தக்கரணங்களே ஆகும்.
அந்தக்கரணம் கர்மேந்திரியங்கள் மற்றும் ஞானேந்திரியங்களின் பின்னணியில் இருந்து கொண்டு அவற்றின் செயல்களை ஒருங்கிணைத்து, நமக்கு உள்ளே இருந்து அறிவை உண்டாக்குகின்ற, கண்களுக்கு தெரியாத புலனையே அந்தக்கரணம் என்று வேதவேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது.
அந்தக்கரணமானது மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் எனும் நான்கு வகையாக மாறுபட்டு செயல்படுகிறது. `இது இவ்வாறு, அவ்வாறு அல்ல` என்று பொருளை (வஸ்து) குறித்து உறுதியான அறிவை (ஞானத்தை) ஏற்படுத்தும் அந்தகரணத்தின் செயல்தான் புத்தியாகும்.
மனமானது சங்கல்பம் மற்றும் விகல்பம் ஆகியவைகளின் தன்மையாகும். சங்கல்பம் எனில் எண்ணுதல், சிந்தித்தல் முதலியவைகளாகும். விகல்பம் எனில் சந்தேகப்படுதல், ஐயப்படுதல் ஆகும். அந்தகரணத்தின் மாறுதல்கள் ஒரு விசயத்தைக் குறித்து அல்லது ஒரு செயலைக் குறித்து இத்தன்மையினால் எழும் போது அதனை மனம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மனம் மற்றும் புத்தி எனும் இந்த இரண்டிலேயே சித்தமும் அகங்காரமும் அடங்கியுள்ளன.
சித்தம் என்பது புத்தியிலும், அகங்காரமானது மனதிலும் அடங்கியுள்ளது.
அனுசந்தானம் எனில் முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொள்வது ஆகும். ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வது சித்தத்தின் முக்கியமான இலக்கணமாகும்.
அகங்காரம் எனப்படுவது `தான்` `தன்னுடைய` என்று எண்ணமே அகங்காரம் எனப்படும்.
சிவஞான போதத்தில் இந்த அந்தக்கரணங்களைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
“அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே” (சிவஞானபோதம் – நூற்பா-4)
உடல் வேறு உயிர் வேறு – இரண்டும் சேர்ந்தே செயல்படுகின்றன. உடல் செயல்பாட்டிற்குப் பல கருவிகள் உள்ளன. புறக் கருவிகள், அகக் கருவிகள் எனக் கருவிகள் இரு வகைப்படும். மெய், வாய், கண், மூக்கு, கை, கால் முதலியன புறக் கருவிகள் ஆகும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை அகக்கருவிகள் ஆகும்.
அகக்கருவிகளைத் தத்துவ முறையில் அந்தக்கரணங்கள் என்று அழைக்கப்பெறுவது மரபு. அந்தர் – உள்அகம்; கரணம் – கருவி, அந்தர் + கரணம் = அந்தக்கரணம். (அந்தர் + புரம் = அந்தப்புரம், அந்தர் + வாயில் = அந்தவாயில் என்று வரும்).
உடல், ஐம்பொறிகள், நுண்ணுடம்பு, பிராணவாயு முதலியன அறிவற்ற சடப்பொருள், அவை உயிர் ஆகா. அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியவை சிறப்பு உணர்வைத் தருகின்றன. ஆகையால் அந்தக் கரணங்களே உயிர் ஆகும் என்று அந்தக்கரண ஆன்மவாதி கூறினான்.
உயிர் ஆகிய ஆன்மா அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கனுள் ஒன்றன்று. உயிர் தன்னை இயற்கையிலேயே பற்றியுள்ள ஆணவ மலமாகிய குற்றத்தினால் அறிவை இழந்து நிற்கின்றது. அதாவது, அரசன் நுட்பமான அறிவு இல்லாதிருத்தலால் ஆலோசனைத் துணைக்கு அமைச்சர்களைத் துணையாகக் செயல்படுகின்றான். அவர்கள் அறிவுத் துணையைக் கொண்டு அரசன் ஆட்சியை நடத்துவான். அதுபோல ஆன்மாவானது ஆணவ மல மறைப்பினால் அறிவின்றி நின்ற நிலையில், அந்தக்கரணங்களுடன் சேர்ந்து செயல்படுகின்றது.
அமைச்சர் செயல்பாட்டிற்கேற்ப அரசன் நிலை வேறுபடும். அதுபோல அந்தக்கரணங்களின் செயல்பாட்டிற்கேற்ப உயிர் பல்வேறு நிலையை அடையும். அவ்வாறு அடையும் நிலை அவத்தை எனப்படும்.
உயிர் அந்தக்கரணங்களைச் செயல்படுத்துகின்றது. அந்தக்கரணங்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் வழியாக உணர்கின்றன. அந்தக் கரணங்கள் தமக்குக் கீழ் உள்ள ஐம்பொறிகளை நோக்க அறிவுடையன. ஆனால், தம்மைத் தாம் அறிய மாட்டாமையால் அறிவற்றன. உயிர் தன்கீழ் உள்ள கருவிகளை நோக்க அறிவுடையது, அறிவுடையது. ஆதலால் அந்தக்கரணங்கள் நான்கில் உயிர் ஒன்று அன்று.
உயிரால் செயல்படுத்தப்பெறும் அந்தக்கரணங்களுள் சித்தம் – ஒன்றைச் சிந்தித்து அறியும், ஆனால் நான் சிந்தித்தேன் என்று அறியமாட்டாது. மனம் – இன்னது, இது இவ்வாறு ஆகுமோ? ஆகாதோ? என்று ஒன்றை நினைத்துப் பற்றும், ஆனால் தன்னைப் பற்றி அறியாது. அகங்காரம் – அதனை இவ்வாறு இருக்கும் என்று துணிந்து முடிவு செய்வேன் என்று ஒருப்பட்டு எழுந்து செயல்படும், ஆனால் ஒருப்பட்டு எழுந்தேன் என்று தன்னை அறியாது. புத்தி – இன்னது, இது என்று நிச்சயித்து அறியும், நிச்சயித்தேன் என்று தன்னை அறியாது. ஆனால் உயிர் – சிந்தித்தேன், பற்றினேன், ஒருப்பட்டு எழுந்தேன், நிச்சயித்தேன் என்று அறியும். உயிர் தன்னை நோக்கியும், பிறவற்றை நோக்கியும் அறிவாய் உள்ள நிலையில் தம்மை நோக்க அறிவற்ற சடமாயுள்ள அந்தக் கரணங்களில் வேறாக உண்டு என்பது உறுதியாகிறது.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலன்களை ஐம்பொறிகள் அனுபவிக்கும். பொறிகள் இவ்வாறு உணர்வது வாயில் காட்சி எனப்படும். ஐம்பொறிகளால் அறியப்பெறும் ஐம்புலன்களை மனம் முதலிய அந்தக்கரணங்கள் அறிதல் மானதக் காட்சி எனப்படும். மனதில் தோன்றியவற்றை ஆன்மாவாகிய உயிர் அனுபவிக்கும். அவ்வனுபவம் தன் வேதனைக் காட்சி எனப்படும். வேதனை – அனுபவம். கடலில் தோன்றிக் கரையை அடையும் அலைபோல் உயிரில் இக்காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியடங்கும். கடல் போல் உயிர். அலை போல் காட்சிகள்.
அலை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கரையை அடைவதைப் போல் மூன்று காட்சிகளும் முறையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி, உயிர் அறிவினுள் பதிந்து மறையும். மனம் முதலிய அந்தக்கரணங்கள் ஐம்புலனுக்கு வேறாதல் போல், உயிரும் மனம் முதலிய அந்தக்கரணங்களுக்கு வேறு என்பது கருத்து.
பலவாறாக உணர்கின்ற உயிர், மனம் முதலிய அந்தக்கரணங்களுக்கு வேறாக உள்ளது என்பதனை மெய்கண்டார் காலதத்துவ உவமையைக் கொண்டு விளக்கியுள்ளார்.
தத்துவங்களில் காலதத்துவம் தனிச் சிறப்பு உடையது. சூரியன், நிலா, நட்சத்திரங்கள் முதலியவற்றின் சார்பினால் காலதத்துவத்தில் பகல், இரவு, நாள், மாதம் முதலியவை உண்டாகின்றன. காலதத்துவம் சூரியன், நிலா முதலியவற்றிற்கு வேறானதே. அதுபோல உயிர், மனம் முதலிய அந்தக்கரணங்களைச் சார்ந்து பலவித உணர்வுகளை உடையதாகின்றது. எனினும் உயிர் அந்தக்கரணங்களின் வேறானதே ஆகும்.
காலத் தத்துவம் ஆன்மாவிற்கு உவமை, சூரியன், நிலா, நட்சத்திரங்கள் ஆகியவை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக் கரணங்களுக்கு உவமை. கால வேறுபாடுகள் பலவித உணர்வுகளுக்கு உவமை. சூரியன், நிலா, நட்சத்திரங்கள் காலதத்துவத்திற்கு வேறாதல் மனம், புத்தி முதலிய அந்தக்கரணங்களுக்கு ஆன்மா வேறாதலுக்கு உவமை ஆகும்.
அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகும். அவற்றைச் செலுத்துவதற்கு மந்திர எழுத்துக்களும், தெய்வங்களும் உண்டு. ஓம் என்பது பிரணவ மந்திரமாகும். அதனைப் பிரிக்காமல் வழங்கியவாறே கொள்வது சமட்டிப் பிரணவம் எனப்படும். அதனையே அகரம், உகரம், மகரம், நாதம், விந்து என்று ஐந்தாகப் பிரிக்கப் பெறும்போது வியட்டிப் பிரணவம் என்று வழங்கப் பெறும்.
அகரத்திற்கு அதிதெய்வம் பிரம்மா. அகரத்தால் அகங்காரம் செலுத்தப் பெறும். உடனே அகங்காரம் இன்னது எனத் தெளிவேன் என்று ஒருப்பட்டு எழுந்து தொழிற்படும்.
உகரத்திற்கு அதிதெய்வம் திருமால். உகரத்தால் புத்தி செலுத்தப் பெறும். உடனே புத்தி இன்னது என்று தெளிந்து கொள்ளும்.
மகரத்திற்கு அதிதெய்வம் உருத்திரன். மகரத்தால் மனம் செலுத்தப் பெறும். உடனே மனம் இன்னது இது என்று சென்று பற்றும்.
விந்துவுக்கு அதிதெய்வம் மகேசுவரன். விந்துவில் சித்தம் செலுத்தப் பெறும். உடனே சித்தம் சிந்திக்கும்.
நாதம் சதாசிவத்தை அதிதெய்வமாகக் கொண்டு புருட தத்துவத்தைச் செலுத்தும் போது ஆன்மாவானது செயல்படும்.
அறிவுடைய உயிர் அறிவற்ற அந்தக்கரணங்களோடு சேர்ந்து செயல்படுவது ஏன்? என்ற வினா எழும். ஆன்மாவாகிய உயிர் என்று உண்டோ அன்றே அதனைக் குற்றம் ஒன்று பற்றியுள்ளது. செம்பில் களிம்பு போலவும், நெல்லில் உமி போலவும் அக்குற்றம் உயிரிடத்தில் பற்றியுள்ளது. அவ்வியல்பான குற்றமே ஆணவ மலமாகும்.
மலம் என்பதற்கு அழுக்கு என்பது பொருளாகும். ஆடையின் வெண்மை நிறம் தோன்றாதவாறு அழுக்கு மறைத்திருப்பது போல உயிரினுடைய அறிவு சிறிதும் விளங்காதவாறு ஆணவமலம் மறைத்து நிற்கின்றது. உயிரிடத்தில் இயற்கையாய் இருப்பதால் சகச மலம் எனப்படும். அச்சகச மலம் நீங்கி அறிவு பெறுவதற்காக உயிர் அந்தக்கரணங்களுடன் கூட வேண்டியதாயிற்று. ஏனைய மலங்களுக்கு மூல காரணமாக இருப்பதால் ஆணவத்தை மூல மலம் என்று வழங்குவது உண்டு.
மலம் என்றாலே ஆணவ மலத்தையே குறிக்கும். ஆணவம் ஒன்றேயல்லாமல் பலவாக இல்லை. அதன் சத்திகள் எண்ணற்றன. இரவில் இருள் ஒன்றே பலருடைய கண்களையும் மறைத்து நிற்றலைப் போல் ஆணவம் ஒன்றே பல ஆற்றலால் பல உயிர்களின் அறிவை மறைத்து நிற்கின்றது.
பிற சமயத்தார் யாரும் ஆணவ மலம் உண்டு என்று கொள்வதில்லை. பிற சமயத்தாரில் சிலர் மாயை, கன்மங்களே உயிருக்கு அறியாமையைச் செய்கின்றன என்று கூறுவர். சைவ சித்தாந்தம் மட்டும் ஆணவத்தை உடன்பட்டு ஆணவத்தை நீக்கவே மாயை, கன்மங்களை இறைவன் உயிர்களுக்குக் கூட்டினான் என்றும், ஆணவம் இருள் போன்றது; மாயை ஒளி போன்றது என்றும், மாயை கன்மங்கள் உயிர்களுக்கு விளக்கத்தைத் தருவன என்றும் கூறும்.
மாயா கருவிகள் உயிரின் வினைக்கேற்ப அவ்வப்பொழுது ஒடுங்கியும், எழுச்சியுற்றும் நிற்றலால் உயிரின் அறிவும் குறைந்தும் கூடியும் நிற்கும். அதனால் உயிர்க்குப் பல நிலைகள் உண்டாகும். அமைச்சர்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்தும் அரசற்கு அந்தந்த நேரத்தில் பல்வேறு நிலைகள் ஏற்படும். உயிரும் அதுபோலக் கருவிகளின் கூடுதல், நீங்குதல் ஆகியவற்றால் பலவேறு நிலையை அடையும்.
ஆணவத்தால் அறியாமை அடைந்த உயிர் அந்தக்கரணங்களுடன் சேர்ந்து செயல்படும்போது பலவித நிலைகளை அடையும். அவ்வாறு அடையும் நிலைக்கு அவத்தை என்று பெயர்.
அவத்தை 1. காரண அவத்தை, 2. காரிய அவத்தை என இருவகைப்படும்.
காரணாவத்தை 1. கேவல நிலை, 2. சகல நிலை, 3. சுத்த நிலை என மூவகைப்படும்.
கேவலம் – தனிமை. உயிர் ஆணவத்தோடு மட்டும் கூடித் தனிமையில் கிடக்கின்றதால் கேவல நிலை எனப் பெற்றது. அறிவுப் பொருளாகிய உயிர், அறிவே சிறிதும் இல்லாமல் தன்னையும் உணராமல் கிடக்கும். ஆணவ மலத்தில் மூழ்கிக் கிடப்பதால் கேவல நிலை எனப் பெற்றது.
ஆணவ இருளில் மூழ்கிக் கேவல நிலையில் கிடந்த உயிர்க்கு இரங்கி இறைவன் மாயையிலிருந்து உடல், கருவி, உலகம், நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்துக் கொடுப்பான். இவற்றைத் தனு, கரணம், புவனம், போகம் எனக் கூறுவர். இவற்றின் துணையால் ஆணவ மல மறைப்புச் சிறிதே நீங்கப் பெற்று அறிவும் செயலும் ஓரளவு விளங்கி உலக வாழ்வில் உயிர் செயல்படும். உலக வாழ்வில் முன்செய்த வினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்தும் நல்வினை, தீவினைகளைச் செய்தும் மாறி மாறி இறந்தும், பிறந்தும் உயிர் சுழன்று கொண்டே இருக்கும். இந்நிலைக்குச் சகல நிலை என்று பெயர்.
உயிர் கேவலம், சகலம் ஆகிய இரண்டையும் நீங்கி இறைவனைச் சார்ந்து பேரின்பத்தை அனுபவிக்கும் நிலை சுத்தம் எனப் பெறும். கேவலம் இருள்நிலை; இரவு போன்றது. சகலம் மருள்நிலை; பகல் போன்றது. சுத்தம் தெருள்நிலை; இரவு பகலற்ற நிலை எனப்படும்.
“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு” (குறள்)
இருள் – கேவலம், மருள் – சகலம், இரண்டு நீங்கிய மாசறு காட்சியர்க்கு இன்பம் பயத்தல் – சுத்தம். இம்மூன்று அவத்தைகளும் பல பிறப்புக்களில் நடைபெறுவனவாகும்.
உயிர் உடலுடன் கூடி வாழும் போது நாள்தோறும் நடைபெறும் அவத்தை காரியாவத்தை எனப்படும். 1. நனவு (சாக்கிரம்), 2. கனவு (சொப்பனம்), 3. உறக்கம் (சுழுத்தி), 4. பேருறக்கம் (துரியம்), 5. உயிர்ப்படங்கல் (துரியாதீதம்) எனக் காரியாவத்தை ஐவகைப்படும்.
நனவு, கனவு முதலிய நிலைகளில் அறிவு படிப்படியாகக் குறைந்து வரும் அந்நிலையில் உயிர் சிறப்பாக நிற்கும் இடம் ஐந்தாகும். செயல்படும் கருவிகளும் குறைந்து கொண்டே வரும்.
நனவு (சாக்கிர) நிலையில் புருவ நடுவில் உயிர் இருக்கும். 35 கருவிகள் செயல்படும்.
செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகிய ஞானேந்திரியங்கள் – 5.
ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய புலன்கள் – 5.
வாய், கால், கை, எருவாய், கருவாய் ஆகிய தொழிற் கருவிகள் – 5.
பேச்சு,நடை,கொடை, போக்கு, இன்பம் ஆகிய தொழிற்கருவிகளின் செயல்கள்– 5.
பிராணவாயு, அபானவாயு, உதான வாயு (ஒலிக்காற்று), வியானன் (தொழிற் காற்று), சமானன் (உடல் நிலையைச் சமப்படுத்தும் காற்று), நாகன் (தும்மல் காற்று), கிருகரன் (கொட்டாவிக் காற்று), கூர்மன் (விழிக் காற்று). தனஞ்செயன் (வீங்கல் காற்று), தேவதத்தன் (இமைக் காற்று) ஆகிய வாயுக்கள் 10.
அந்தக்கரணங்கள் 4. புருடன் 1. ஆக, இம்முப்பத்தைந்து கருவிகளும் நனவு நிலையில் செயல்படும்.
கனவு (சொப்பன) நிலையில் உயிர் கழுத்திலிருக்கும் போது 25 கருவிகள் செயல்படும்.
நனவு நிலையில் உள்ள ஞானேந்திரியங்கள், தொழிற் கருவிகள் ஆகிய பத்தும் நீங்க எஞ்சிய 25 கருவிகள் செயல்படும்.
உறக்க (சுழுத்தி) நிலையில் உயிர் இதயத்தில் இருக்கும்போது சித்தம், பிராணவாயு, புருடன் ஆகிய மூன்றும் செயல்படும்.
பேருறக்க (துரிய) நிலையில் உந்தியில் உயிர் இருக்கும்போது பிராணவாயு, புருடன் ஆகிய இரண்டு மட்டும் செயல்படும்.
உயிர்ப்படங்கல் (துரியாதீத) நிலையில் மூலாதாரத்தில் புருடன் மட்டும் இருக்கும்.
இவ்வாறு மேலே இருந்து கருவிகள் குறையக் குறைய மூலாதாரத்தை அடைந்த உயிர், அறியாமையில் அழுந்தியிருக்கும். மேலே இருந்து கீழே வரவரக் கருவிகள் குறைகின்றன. இந்நிலை கீழாலவத்தை எனப்படும். மீண்டும் கீழேயிருந்து மேலே செல்லுதல் மேலாலவத்தை எனப்படும்.
காரிய அவத்தைகளைக் காரிய கேவலம் 5, காரிய சகலம் 5, காரிய சுத்தம் 5 என்று 15 ஆக்கி விரித்துக் கூறப்பெறும். இச்செயல்பாடுகள் உயிரின் பொது இலக்கணம் ஆகும்.
அந்தக்கரணங்களின் செயல்கள், அவத்தைநிலைகள் ஆகியவற்றை விரித்துக் கூறியதன் நோக்கம் தூயநினைவு, தூயசொல், தூய செயல் என்ற முறையில் உயிர் செயல்பட வேண்டும். ‘பர பரக்க வேண்டா பலகாலும் சொன்னேன்’ என்பதற்கேற்பப் பரபரப்பு நீங்கி அமைதியான வழிக்கு உயிர் செல்ல முயலும் என்பதே ஆகும்.
“அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே” (சிவஞானபோதம் – நூற்பா-4)
இப்படியெல்லாம் செயல்படக்கூடிய அந்தக்கரணங்களாகிய அகக்கருவிகளை எப்படி அடக்கி ஒடுக்க வேண்டுமென்றால், பிரமஞானத் தவத்தால் எந்த இடத்தில், எந்த வெற்றிடத்தில், எந்த இராப்பகலற்ற இடத்தில் உயிரும் உடலும் சேர்ந்திருக்குமோ அந்த இடத்தில் இருந்து கொண்டு பிரமஞானத் தவத்தை செய்யும்போது, அகக்கருவிகளாகிய அந்தக்கரணங்கள் அடங்கி ஒடுங்கி நிற்க ஆரம்பிக்கும். இதற்கு நம்மைப் பிறவிகள்தோறும் பீடித்துக் கொண்டிருக்கக்கூடிய நல்வினை, தீவினை ஆகிய இரு கர்ம வினைகளையும் நன்றாக அறுத்தெடுத்து அதில் இருக்கக் கூடிய மாயா மலம் என்ற இருளை இல்லாமல் செய்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் ஔவைத்தாய், “கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து” என்று மனம் உருகப் பாடி அருளினார்கள்.
நல்லது. இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும்
@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்
www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்
கொடுத்து வருகின்றோம். நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!


