
ஞான சைதன்யம் விளக்கம்
ஸத்-சித்-ஆனந்தம் என்ற மூன்றும் கடவுளின் லட்சணம் என்றும் ; இருப்பது ஸத், எல்லாவற்றையும் அறிவது சித், குறைவற்ற இன்பம் ஆனந்தம். இறைவனைப் போன்ற பரிபூரண ஞானத்தை அடைவது சைதன்ய நிலையாகும் ஸத்-சித்-ஆனந்தம் என்ற மூன்றும் பிரமத்தின் சொரூப லட்சணம் என்று வேதாந்தம் கூறுகிறது.
ஆன்மாவோடு ஒன்றி ஆன்மாவாகவே இருப்பது, ஆன்ம அனுபூதியில் திளைத்திருப்பதுதான் சைதன்ய நிலையாகும். இந்த நிலையை, ஸ்வஸ்வரூப அனுஸந்தானம் என்று அழகாக விவேக சூடாமணி குறிப்பிடுகிறது. இறையுணர்வில் ஊன்றி இறைவனோடு இரண்டறக் கலந்திருக்கும் அத்வைத அனுபூதியே சைதன்ய நிலையாகும்.
சைதன்யா என்பது “உணர்வு” என்பதற்கான சமஸ்கிருத வார்த்தையாகும். இது உலகளாவிய சுயம் அல்லது ஆன்மாவுடன் தொடர்புடையது. இது “ஆவி”, “புத்திசாலித்தனம்”, “ஆற்றல்”, “உற்சாகம்” அல்லது “உணர்வு” என்றும் பொருள்படும். யோக சாஸ்திரம் சொல்கிறது பிரமத்தின் அடிப்படை இயல்புதான் சைதன்யம் என்று. சைதன்யா என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு உணர்வுபூர்வமான இயக்கத்தின் பெயராகும். சைதன்யா பகவான் பூமியைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட விஷ்ணுவின் அவதாரமாக அவரது பக்தர்களால் கருதப்படுகிறார்.
சைதன்யா, ஒரு தத்துவ வார்த்தையாக, ஒரு தெய்வீக, தூய உணர்வு, இது மனதை ஒரு தியான அமைதிக்கு இழுக்க முடியும். சைதன்யாவில் பல பிரிவுகள் உண்டென்று இந்து மதம் சொல்கிறது. பிரம சைதன்யா – முழுமையான உணர்வு ; ஈஸ்வர சைதன்யா – அண்ட உணர்வு ; ஜீவ சைதன்யா – தனிப்பட்ட உணர்வு ; சாக்சி சைதன்யா – உள்ளே உள்ள உணர்வு.
உபநிடதங்களில் உள்ள உணர்வுகளின் ஏழு மடங்குகள் உடல், உயிர், மன, மேலான அறிவு, பேரின்பம், எல்லையற்ற தெய்வீக சுய விழிப்புணர்வு மற்றும் தூய தெய்வீக இருப்பு.
இந்த அற்புதமான முழுமையான விழிப்பு நிலையில் இருக்கும் மெய்யுணர்வுகளையும் அதன் தனித்த அமுத நிலையையும் பற்றிக் கூறுவதுதான் சைதன்யம் என்று அழைக்கப்படுகிறது.
ஞான சைதன்யம் = ஞானம் என்பது ஞான்+அம் எனப் பிரிந்து பொருள் தருகிறது. அறிவு, அனுபவம், புரிதல், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிந்தித்து செயல்படும் திறன்தான் ஞானம் எனப்பது.
இந்த ஞானத்திற்கு கேட்டல், சிந்தித்தல், தெளிதல், தவம் கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முந்தைய மூன்று நெறிகளிலும் பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து பிரமஞானத் தீக்ஷை உபதேசம் செய்து பிரமஞானத்தை அளித்து முத்திநிலையை வழங்குவார். சாதகன் அதைப் பிடித்துக் கொண்டு பிரமஞானத்தின் சித்திநிலையை அடைவார்.
இத்தகைய ஞானம் கைகூடுவதற்குச் சற்குருவின் அருள் இன்றியமையாதது. ஆன்மாவின் பரிபக்குவ நிலையில் சிவனே மானுட வடிவில் குருவாக வந்து பிரமஞானத் தீக்ஷை கொடுத்து, முத்தி கொடுத்து சித்தி நிலையை அருளுவார். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான் ; சற்குரு வழிபாடே சன்மார்க்கம் என்று திருமந்திரம் கூறுவது இந்நிலையைத் தான்.
தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்ய
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகம் சூடக்
குருபக்தி செய்யும் குவலயத்தோருக்குத்
தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கம் தானே
குருவைக் காணலும், பூசித்தலும், நினைத்தலும், தொட்டுக் கும்பிடுதலும், குருவின் புகழ் பாடுதலும், திருவடிகளைச் சிரத்திற் சூடுதலும் ஆகிய குருபக்தி செய்யும் நெறியே சன்மார்கம். இது உலகத்தவர்க்கு உலகச் சார்பினை ஒழித்து முத்திச் சார்பினைத் தந்து பேரின்பத்தை ஊட்டும் என்பது இப்பாடலின் பொருள்.
ஆன்மா சாந்ததன் வண்ணமாவது; பாசத்தோடு சார்ந்திருக்கும் நிலையிலே அசத்தைச் சார்ந்து அசத்தையே காணும். தன்னையும் அசத்தாகவே காணும். இந்தச் சரீரமே தான் என்று எண்ணும். இவ்வாறிருந்த ஆன்மா முத்தி நிலையிலே சத்தைச் சார்ந்து, சத்தையே காணும். அது இந்த உயிர்நிலையடைந்து, உடலோடு கூடியிருக்கும் நிலை ‘சீவன் முத்தி’ எனப்படும். ‘சீவன்முத்தர்’ உடம்பு பிரியும் போது சிவத்துடன் இரண்டறக் கலந்து பேரின்பம் அனுபவிப்பர்.
நம்முடைய சமய குரவர்களுள் மாணிக்கவாசகர் ஞானமார்க்கத்தில் நின்று பரமுத்தி பெற்றவர். அவர் சீவன்முத்தராய் இருந்த நிலையில் தாம் பெற்ற அனுபவத்தைச் ‘சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்’ என்று தமது ஞானகுருவைப் புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசு நாயனார் ஞானநெறியில் தாம் பெற்ற அனுபவத்தைப் பாடியுள்ளதைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்
உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.
ஞானத்தின் வகைகள்
ஞானத்திற் சரியை – ஞானநூல்களைக் கேட்டல்.
ஞானத்திற் கிரியை – ஞானநூல்களைச் சிந்தித்தல்.
ஞானத்தில் யோகம் – ஞானநூல்களைத் தெளிதல்.
ஞானத்தில் ஞானம் – ஞான நிட்டை கூடல்.


