
அகத்தியர் அடுக்குநிலை போதம் – 2
அடிமுடியும் நடுவான நிலையும் எங்கே?
அறுசுவையும் கொண்டு ஒழித்த இடமும் எங்கே?
வடிவான ஐந்தலை மாணிக்கம் எங்கே?
வரையான ஊமை என்னும் எழுத்தும் எங்கே?
இடமாகஆடி நின்ற பாதம் எங்கே?
இச்சையுடன் பேசிநின்ற எழுத்தும் எங்கே?
அடைவாய் இப்பொருளறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குருவென்று நம்பலாமே! (4)
1) அடி, முடி, நடுவான நிலையும் எங்கே?
இறைவனுக்கு அடியும் இல்லை ; முடியும் இல்லை ; நடுவும் இல்லை. உருவம் கிடையாது. தலை கிடையாது. காலும் கிடையாது. உடலும் கிடையாது. உடலற்ற உடல் கொண்டவன் நம் ஈசன் ; நமக்கு அவனே பரமேசுவரன்.
அடி என்றால் திருவடியாகும். இது அனைத்து மாணவ, மாணவியருக்கும் தெரிந்த விசயம்தான். அந்த திருவடியின் அருமை, பெருமைகளை நாம் சற்றே தெரிந்து கொள்ள வேண்டாமா, என்ன.
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
என்ற சிவத்தின் பிரம்மாஸ்திர மந்திரத்தை துதித்து, உயிரில் திளைத்து நாம் பிரம ஞானத்திற்குள்ளே நுழைந்திடுவோம்.
சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமையது ஆக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயங் கெடநிற்க ஆனந்தம் ஆமே (தி.ம.2718)
என்ற இறைவனின் திருவைந்தெழுத்தினை உச்சரித்து திருவடிகளை மௌனப் புள்ளியில் இணைத்து சேர்த்துவிட்டால், சிவக்கலைகள் வெளியாகி நமது பிறவித் துன்பம் சூரியனைக் கண்ட பனிநீரைப் போல உருகி ஓடிவிடுமே.
நமஎன்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவஎன்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றிப்
பவமது தீரும் பரிசும்அது அற்றால்
அவமதி தீரும் அறும்பிறப்பு அன்றோ (தி.ம.2717)
சிவப் பிரமஞானம் பெற்ற உயிர் தன்னுடம்பையும் கருவி கரணங்களையும் மற்ற ஞானத் தத்துவங்களையும் தன்னில் வேறாகப் பகுத்துணர்ந்து சிவப் பரம்பொருளே எனக் கண்டு தெளியும் தன்மையைத்தான் இறைவனின் திருவடி நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே (தி.ம.138)
என்ற திருமந்திரம் சொல்லும் திருவடியின் பெருமைகளை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்ப ஒண்ணாதே (தி.ம.1596)
திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்துஅந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
கருவடி அற்றிடக் கண்டுகொண் டேனே. (தி.ம.1597)
இதைப்பற்றி நமது வள்ளற்பெருமான் அருளியிருப்பதை இங்கே நாம் ஒப்பு நோக்கினால் நன்றாக இருக்குமல்லவா.
எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இது அது என உரைப்ப அரிதாய்த் தங்கும்
ஓர் இயற்கைத் தனி அனுபவத்தைத் தந்து எனைத்
தன்மயம் ஆக்கிப் பொங்கும் ஆனந்த
போகபோக்கியனாய்ப் புத்தமுது அருந்தி
என்உளத்தே அங்கையில் கனி போன்று
அமர்ந்து அருள்புரிந்த அருட்பெருஞ்சோதி என் அரசே
இங்கு இறைவன் திருவடி என்பது சுத்த சன்மார்க்கத்தில் அருள்நிலைதான் நிலைத்த திருவடி.
அருளைப் பற்றுவதுதான் ; பெறுவதுதான் திருவடியை வணங்குவதாகும். சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடம். ஆன்மாவை தொடர்பு கொள்ளும் மெய்ப்பொருள் திருவடிதான். சிற்சபையின் வாசல் நமது கண்மணிகளில் அமைந்துள்ளது.
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள மும்மலத் திரைகள் விலக வேண்டும். நந்தி விலகினால்தான் கருவறை கடவுள் வெளியே தெரிவார். நந்தி விலகும்போது ஆன்மாவில் அருள் சுரக்கும். இந்த அருளே அமுதமாகும். அமுதம் சுரந்து உடம்பு முழுவதும் நிரம்ப வேண்டும். அப்போதுதான் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் வல்லமையைப் பெறும்.
அகவல் வரிகளை நன்கு படித்தால் விளங்கும்.
அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்பொருட்டனிச்
சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை யறியார் எம்மையும்பொருளறி
யாரெனப் புகன்றமெய்ச் சிவமே.
அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலைபொருணிலை
காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே யழியாத் தனிவடிவருள்பெற
முயலுகென் றருளிய சிவமே
அருளே நம்மிய லருளே நம்முருஅருளே
நம்வடி வாமென்ற சிவமே
அருளே நம்அடி அருளே நம்முடிஅருளே
நம்நடு வாம்என்ற சிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம்அருளே
நங்குண மாமென்ற சிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம்அருளே
நம்மிட மாமென்ற சிவமே
சமயத்தையும் மதத்தையும் பற்று வைத்துக் கொண்டு சுத்த சன்மார்க்கத்தில் திருவடியை தேடக் கூடாது. அப்படித் தேடினாலும் கிடைக்காது. தவறான வழிகள் தான் தோன்றும். ஒவ்வொரு ஆன்மாவும் அதன் உள் இருக்கும் அருளே திருவடியாகும். இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு சொல்கிறீர்களே, இந்த திருவடி அப்படி என்னதான் செய்துவிடும் நமக்கு என்ற கேள்வி உங்களுக்கு நமது குருகுலத்தின் குலகுரு திருமூலர் சொல்வதை இங்கே சற்றே செவி மடுப்போம்.
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் எனநந்தி இணையடிக் கீழே (தி.ம.80)
இரவும் பகலும் அற்ற இடத்தில் திருவடிகளைக் கொண்டு அவ்விடம் இருந்தால் எண்ணற்ற கோடி ஆண்டுகள் நாம் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். இதைத்தான் இத்திருமந்திரம் சொல்கிறது.
அடி என்பது நமது திருவடிகளாகிய கண்கள்தான்.
முடி என்பது திருவடியின் உச்சிப்பகுதி.
நடு என்பது மூன்றாம் திருவடி அதாவது மகாரத் திருவடி.
திருவடியின் அடிப்பகுதியில் அபான வாயு இருந்து கொண்டிருக்கும்.
திருவடியின் முடியான உச்சிப்பகுதியில் பிராணன் ஒளியோடு பிரகாசித்துக் கொண்டிருக்கும். திருவடியின் நடு என்பது கண்மணியின் மையத்துளையான சுழிமுனை நாடி முனையாகும்.
2) அறுசுவையும் கொண்டொளித்த இடம் எங்கே?
இந்த உடலுக்கான உணவு அறுசுவைதான். இதற்கான முழு விளக்கத்தினை அருந்தல் – பொருந்தல் – அனந்தல் என்ற தலைப்பில் பேச்சுரையாற்றியதை நமது இணையதளத்தில் காணொளியாக வெளியிட்டிருக்கிறோம். அங்கு சென்று அனைவரும் மீண்டும் ஒருமுறை நினைவில் இருத்திக் கொண்டால் இங்கே உங்களுக்கான பதில் கிடைத்துவிடும்.
3) வடிவான ஐந்தலை மாணிக்கம் எங்கே?
நமது உயிர்க்கலைக்கு ஐந்து முகங்கள் உண்டு. அதனால் ஐந்து தலையும் உண்டு. இதை வேதங்கள், உபநிடதங்கள் காயத்ரி என்று முழங்குகிறது. காயத்ரி தேவிக்கு ஐந்து முகங்கள்தான். பஞ்சபூதங்களுக்கும் ஐந்து முகங்கள்தான். நம் உயிருக்கும் ஐந்து முகங்கள்தான். உயிரின் ஐந்து முகங்களும் ஐந்து நிறங்களோடுதான் இருக்கும்.
காயத்ரி என்பது அதிர்வு, ஒலி. அறிவியல் உறுதிப்படுத்துவது போல் ஆற்றல் மாற்றத்தக்கது. காயத்ரியின் ஒவ்வொரு அசையும் ஒரு அதிர்வு மற்றும் ஒட்டுமொத்த காயத்ரி ஒவ்வொரு அசைக்கும் தொடர்புடைய அதிர்வுக்கு கூடுதலாக ஒரு அதிர்வை உருவாக்குகிறது.
காயத்ரியின் அதிர்வு ஒவ்வொரு அசைக்கும் சாயல்களை (வண்ணங்களை) உருவாக்குகிறது. காயத்ரியின் எழுத்து வடிவங்களை உச்சரிக்கும்போது அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் உயிரைச் சென்று தாக்கும். அதனால் உயிரில் காயத்ரியின் ஐந்து நிறங்களும் பிரதிபலிக்கத்தான் செய்யும்.
இந்த ஐந்து நிறங்களும் நமது கண்மணியில்தான் பிரதிபலிக்கும், எதிரொலிக்கும், உள்கடந்து செல்லும். கண்மணிதான் மாணிக்கம் என்று மறைமுகமாகச் சொல்லப்பட்டது. நமது கண்மணியான மெய்ப்பொருளில்தான் ஐந்து பூதங்களுக்கான துவாரங்கள் உள்ளது. இதன் வழியாகத்தான் பிரபஞ்சத்தின் ஐம்பூத ஆற்றல்களும் அதனதன் நிறங்களோடு உள்சென்று திரும்பி வரும்.
உயிர் தன்னை வெளிப்படுத்தும்போது ஐந்து நிறங்களில் வெளிப்படுத்துவதாக ஏற்கனவே டெலிகிராம் பேச்சுரையில் சொல்லியிருந்தோம். இந்த ஐந்து நிறங்கள் 1.சிவப்பு, 2.முத்தின் நிறம், 3.மஞ்சள், 4.நீலம், 5.வெண்மை ஆகியவைகளாகும். அதனால்தான் இந்த ஐந்து நிறங்களையும் ஐந்து தலை கொண்ட காயத்ரி தேவிக்கு நம் முன்னோர்கள் ரகசியமாகச் சூட்டினார்கள். இங்கே இன்னொரு ரகசியமும் சொல்கிறோம். நமது கண்மணியில் ஐந்து துவாரங்கள் இருக்கிறது என்று சொன்னோம் அல்லவா. அந்த ஐந்து துவாரங்களிலும் ஐந்தைந்து சிறு துவாரங்கள் இருப்பதாகச் சொன்னோம் அல்லது. கண்மணியிலும் இந்த ஐந்து நிறங்கள் ஆளுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதில் மிகவும் ஆற்றல் வாய்ந்த நிறங்கள் இரண்டுதான். அவை சிவப்பும் நீலமும்தான். மனித தேகத்தை ஆளுமைப்படுத்திக் கொண்டிருப்பதும் இந்த இரண்டு நிறங்கள்தான். ஓங்காரத்தை நீங்கள் உச்சாடனம் செய்யும் போதெல்லாம் இந்த ஐந்து நிறங்களோடு இரண்டு நிறங்கள்தான் அதிகளவில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும். அது எப்படி என்பதை குருகுலக் கல்விப் பாடங்களில் விபரமாகச் சொல்வோம்.
எனவே, ஐந்து தலை கொண்ட மாணிக்கம் என்பது நம் உயிரும் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மெய்ப்பொருளும்தான். ஐந்து தலை என்பது நமது உயிர். அதன் மாணிக்கம் என்பது மெய்ப்பொருளான கண்மணி. கண்மணியே உயிரின் மாணிக்கமாகும். இதைத்தான் மூடனாக இருந்த மகாகவி காளிதாஸ் காளியின் அருட்கலைகளைப் பெற்றதும், சியாமளா தண்டகம் என்ற அழியா ஞானத்தைப் பாடலாக வடித்தெடுத்தார். அதன் முதல் வரியே இதுதான் மாணிக்யவீணா முபலாலயந்தீம் மதா³லஸாம் மஞ்ஜுல வாக்³விலாஸாம் | மாஹேந்த்³ரனீலத்³யுதிகோமலாங்கீ³ம் மாதங்க³கன்யாம் மனஸா ஸ்மராமி என்று ஆரம்பித்து, சியாமளா தண்டகத்தை இப்படி முடிப்பார் காளிதாசர்.
ஸர்வதீர்தாத்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே
ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஸக்த்யாத்மிகே,
ஸர்வ பீடாத்மிகே ஸர்வ வேதாத்மிகே, ஸர்வ வித்யாத்மிகே
ஸர்வ யோகாத்மிகே, ஸர்வ வர்ணாத்மிகே ஸர்வகீதாத்மிகே,
ஸர்வ நாதாத்மிகே ஸர்வ ஸப்தாத்மிகே, ஸர்வ விஸ்வாத்மிகே
ஸர்வ வர்காத்மிகே, ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே ஸர்வ ரூபே,
ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம் பாஹி மாம் தேவி துப்யம்
நமோ தேவி துப்யம் நமோ தேவி துப்யம் நமோ தேவி துப்யம் நமஹ
இந்த மந்திரத்தைச் சொல்லும்போது, உங்கள் உயிருக்குள் அப்படியொரு சிலிர்ப்பை பார்ப்பீர்கள். இந்த மந்திரத்தை எமக்கு ஒரு பொன்னால், வைர, வைடூர்யங்களால் நவரத்தினங்களால் கட்டப்பட்ட அரண்மனையில் மல்லிகைப் பூக்களுக்கு நடுவில் எம்மை அமர வைத்து, எம் செவிகளில் அமுதமாய் சியாமளா தாயால் கொடுக்கப்பட்ட மந்திரமாகும். அதுவரை சியாமளா தண்டகம் என்ற ஒரு ஞானப் பாடல் இருப்பது என்பது எமக்குத் தெரியாது.
சியாமளா தண்டகத்தில் காளிதாசர் பாடியதும் இந்த உயிரையும் உயிரின் நிறங்களையும் அதன் குணங்களையும் அவர் அடைந்து ஐம்புலன் மெய்யுணர்வுகளையும் கண்ணீர் பொங்கப் பொங்கப் பாடியதுதான்.
4) வரையான ஊமையெனும் எழுத்தும் எங்கே?
ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டென்றோம்
ஆமை அறிவித்தீர் வாரீர் சேமஞ் செறிவித்தீர் வாரீர்…. வாரீர்….
(கண்ணி 59) திரு அருட்பிரகாச வள்ளலார்.
இந்த அம்பலவாணர் வருகைக் கண்ணியில் ஆமை எழுத்து என்பது ஐந்து உறுப்பு கொண்ட ஆமை இயல்பு உணர்த்தும் ஓங்காரமே. இதில் அ – உ – ம் – விந்து – நாதம் ஆகிய ஐந்து உள்ளன. இது நாத ரூபமாய் வெளிப்படுவதற்கு முன்பு, உள்வளர் ஜோதி வண்ணமாய் உள்ளது. இந்த ஒளிநிலையே பிரணவ ஜோதியாம் ஊமை எழுத்து. ஓம் என்பதற்கு ஆம் என்பதுதான் பொருள் ஆம். மேற்படி ஊமை எழுத்தே பேசாத மந்திரம் எனவும் கூறப்படும்.
ந ம சி வ ய. இந்த ஐந்து எழுத்தில் அந்த ஓர் எழுத்தை யாருமே அறிந்து ஓதவில்லை..என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ஓர் எழுத்து ஏது? அதை எவ்வாறு ஓத வேண்டும்.?
மூன்று மண்டலத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர்எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே (சிவவாக்கியார்)
இந்த பாடலை கவனியுங்கள்!!! பாம்பின் வாயில் தானாக வரும் அட்சரம்…(மந்திரம்)
தோன்றும் ஓர் எழுத்துள்ளே! சொல்ல எங்கும் இல்லையே! அந்த ஓர் எழுத்து மந்திரம் எது? அதை எவ்வாறு ஓத வேண்டும்? யோக மார்கத்தின் மொத்த ரகசியமும் இந்த ஒற்றை எழுத்திலும், அதை ஓதும் முறையிலும் உள்ளது? இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த மந்திரத்தை “பேசாத மந்திரம்”, “ஊமை எழுத்து”, “நெஞ்செழுத்து”, “மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர். கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்.
“ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி”. திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார். “நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே” நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன் நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே! (திருமூலர்) வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார். “ஒரேழுத்தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே – அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார். “எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்ல. தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி திருநடனம் காண முத்தி சித்தியாமே!”. இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன? ந ம சி வ ய. ஐந்திழுத்தில் நான்கு எழுத்துக்கள் ‘அ’காரத்தில் முடியும். ஒரு எழுத்து மட்டும் அகாரத்தில் வராது. அது என்னவென்பதை இங்கே பார்க்கலாம்.
ன்+(அ) = ந ; ம்+(அ) = ம ; ச்+இ = சி ; வ்+(அ) = வ ; ய்+(அ) = ய.
இந்த “சி”காரத்தில் மட்டும் ‘அ’காரம் வராது. பஞ்சபூதங்கள் எதுவும் ஓசை எழுப்பாது. காற்று மட்டும் தான் ஓசை எழுப்பும். காற்றின் ஓசை என்பது சத்தமல்லவா. சத்தம்தான் உயிரை எழுப்பும் ஆற்றல் கொண்டதல்லவா. சத்தத்தால்தான் இந்த அண்டசராசரமே உற்பத்தியானதல்லவா. நம் உடலும் உயிரும் சத்தத்தால்தான் உருவாக்கப்பட்ட தல்லவா. நீங்கள் அந்த சத்தமான நாதத்தை உயிருக்குள் கொண்டு செல்லாததால் தான் உங்களால் பிரம ஞானத்தை அடைய முடிவதே இல்லை. இதுதான் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் ரகசியத்திலும் ரகசியமான ரகசியம். இதை உணர்ந்தோர் பிரமஞானம் அடைவதை அந்த இறையே நினைத்தாலும் தடுக்க இயலாது. இப்போதாவது நீங்கள் உணர்ந்து விழித்து எழுந்துவிடுவீர்களா, மாணவர்களே. இந்த ரகசியத்தை இவ்வளவு எடுத்துச் சொல்லியும் நீங்கள் உணர முடியாவிட்டால், சத்தியமாகச் சொல்கிறோம் செத்துத்தான் போவீர்கள். உங்கள் இறப்பை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். மிக மிக கவனமாய் இருந்து சதா நாதத்தை உயிருக்குள் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டே இருங்கள். நாதத்தால்தான் நாதனை – சிவனை – பரமேசுவரனை அடைய முடியும். நாதம் விட்டால் நாறிப் போய்விடும் இவ்வுடம்பு. புலால் துருத்தியை பூந்துருத்தியாக மணம்வீசச் செய்துவிட வேண்டும். அதற்கு பிரமஞானத் தவத்தைத் தவிர இவ்வுலகில் எந்த உபாயமும், தந்திரமும், மார்க்கமும், குருகுலமும் எங்குமே இல்லை. இதுவெல்லாம் எந்த புண்ணியத்தை, தவத்தைச் செய்தீர்களோ இந்த ஜென்மத்தில் உங்கள் அனைவருக்கும் திகட்டத் திகட்டக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. விட்டுவிடாமல் சத்துடன் இருக்க சிவனை நாடி விடுங்கள். அவ்வளவுதான் சொல்வோம். விழி இருப்போர் விழித்துக் கொள்ளுங்கள் ; கண் இருப்போர் கண்டுவிடுங்கள் ; உயிர் இருப்போர் உணர்ந்து விடுங்கள்.
“ஸ்” “ஸ்”.. என்ற சத்தத்துடன் தான் வெளிப்படும்… அதாவது….. ஸ்+இ=சி… சி என்று உச்சரித்து பாருங்கள்.. முதலில்..”ஸ்” என்ற சத்தத்துடன் தான் “சி”காரம் வெளிப்படும். இதைத்தான் திருமூலர் நாயோட்டு மந்திரம் என்று சொல்கிறார். நாயை எப்படி விரட்டுவோம்? சி..சி…என்று தானே விரட்டவோம்,,, இந்த சிறப்புமிக்க “சி”காரத்தை எப்படி ஓதுவது? இடநாடி, பிங்களாநாடி ; இடது கலை, வலதுகலை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சூக்கும நாடி (சுழிமுனை நாடி) எது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். சூக்குமநாடி என்பது உள்நாக்கு (அண்ணாக்கு)மேல் பகுதியில் உள்ள துவாரம் – ஓட்டை. இதுதான் சூக்கும நாடி. இதுவே பிரம்மரந்திர துவாரம். நாம் தூங்கும் போது சுவாசம் உள்நாக்கின் வழியாகத்தான் ஓடும். அதனால்தான் சிலருக்கு குறட்டை வரும். நமது முன்னோர்கள் தலைக்கு தலையணை வைக்காமல் தலைக்கு கை வைத்து தூங்கக் காரணம் இதுதான். கையை மாற்றியமைத்து படுத்தால் சுவாசம் மாறும்.
நாம் தூங்கும்போது நடைபெறும் இயல்பான சுவாசத்தை நாம் விழித்திருக்கும் போது செயல்படுத்துவதே வாசியோகம். நீங்கள் தவம் செய்யும்போது உள்நாக்கு துவாரம் வழியாக சுவாசித்து பழகுங்கள். இதற்காகத்தான் பிராணக் கிரியா தவத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அப்போது உங்களது சுவாசத்தின் ஓசை “க்ஷி”என்ற லயத்துடன் இயங்கும்.. உங்களின் சுவாசம் ஒரு லயத்துடன் சீராக இயங்கும்போது உங்களின் முதுகுத் தண்டு தானாகவே நேராக இருக்கும். இந்த “சி”காரம் தான் ஊமை எழுத்து. இந்த “சி”காரம் தான் நாயோட்டு மந்திரம். பாம்பு சீறும்போது வரும் சத்தம் “ஸ், “சி”.
லிங்கத்தின் மேல் பாம்பு படம் எடுப்பதுபோல் இருக்கும் ரகசியம் இதுதான். இந்த சி என்று உச்சரிக்காமல் க்ஷி (க் + சி) என்று உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரித்தால் உங்கள் கபால வாசல் தானாகவே திறந்து கொள்ளும். சொல்லித் தானே பாருங்கள். கபாலத்தில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் எமக்குச் சொல்லுங்கள் மாணவர்களே.
இந்த நாயோட்டு மந்திரத்தைப் பற்றி நம் குலகுருவான திருமூலர் சொல்வதைக் கேட்போம்.
நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறியோம் அன்றே (தி.ம.2672)
“மகா காரண பஞ்சாக்கரமாகிய ‘க்ஷி’ என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம். எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவே ஆகும். ஆகவே, சித்தர்கள் ‘நாய் ஓட்டும் மந்திரம்’ என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் ‘இன்னது’ என அறிந்துவிட இயலாது.
5) இடமாக ஆடி நின்ற பாதம் எங்கே?
இடம் என்றால் இடது பக்கம், பாதம் என்றால் திருவடி என்று பொருள். இடது திருவடி ஆடி நிற்கும் இடம்தான் இடமாக ஆடி நின்றயிடம். இடது திருவடியான சந்திரக் கலையில் ஒளிக்கலைகள் அசைந்து கொண்டிருக்கும் இடமான மெய்ப்பொருள்தான் இடமாக ஆடி நின்ற பாதமாகும்.
6) இச்சையுடன் பேசி நின்ற எழுத்தும் எங்கே?
அன்போடும், பரிவோடும், விருப்பத்தோடும் பேசி நின்ற எழுத்தென்பது ‘ம்’ என்பதே ஆகும். இதைப்பற்றித்தான் நாம் மகா மந்திரத் தவத்தில் விரிவாகப் பேசியுள்ளோம்.


