
விநாயகர் அகவலில் அடுத்த சொல் வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்ப என்பதன் மெய்ப்பொருளை இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அரிது (திருக்குறள் – 423)
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அரிது (திருக்குறள் – 355)
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அரிது (திருக்குறள் – 358)
விநாயகர் அகவலுக்கு விளக்கம் எழுதிய புலவர் பெருமக்கள் அழகிய இடையில் என்றுதான் உரை பண்ணியிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு என்பதற்கு யாம் நமது தமிழ் இலக்கியங்களிலிருந்து பொருள் காண முற்பட்டோம். கேட்கலாம், வாருங்கள்.
உலகு நிகழ்ந்த பல்லவர்கோச்
சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து
மருங்கு நீங்கிக் கிடந்ததொரு
மலரை யெடுத்து மோந்ததற்கு
வந்து பொறாமை வழித்தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவியெடுத்
தெழுந்த வேகத் தாலெய்தி. (12.550, சேக்கிழார், கடல் சூழ்ந்த சருக்கம்)
உலகில் ஆட்சி செய்யும் பல்லவ மன்னரான கழற்சிங்கர் என்னும் கோச்சிங்கரின் பட்டத்து அரசியான பெருந்தேவி, அங்குள்ள மலர் மண்டபத்தின் அருகில், கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்து விட்டதற்காக, உள்ளம் பொறுக்க மாட்டாது, சிவனெறியில் நின்று வழுவாது தொண்டு செய்து வரும் தொண்டராதலால், விளங் கும் ஒளிபொருந்திய கூரிய வாயையுடைய வாளினை எடுத்து, விரைவாக வந்து சேர்ந்து என்று பொருள்.
அன்பால் அடிகை தொழுவீர் அறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பாய் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
(திருஇரும்பூளை, திருஞானசம்பந்தர் பதிகம்)
இறைவன்பால் கொண்ட அன்பால் அடி என்ற திருவடி கொண்டு கை எடுத்து வழிபடும் மக்கள், நீர் அறியாத ஒரு விசயம் இருக்கிறது. அது என்னவென்றால், இரும்பூளை என்ற சிவத்தலத்தில் தங்கம் போன்று மின்னும் பொன் திருவடிகளில் சாகா அமுதான கங்கை நீரை இறவா மெய்ப்பொருளாக வைத்திருக்கும் ஈசனாகிய பரமேசுவரன், மின்னலைப் போல கண்களைக் கொண்ட பெண்களோடு இணைந்திருக்கக் கூடிய இன்பமே வடிவாக அமர்ந்திருக்கிறான் என்று பாடுகிறார் அன்னையிடம் திருமுலைப் பாலை உண்ட திருஞானசம்பந்த மூர்த்தி அவர்கள். இவர் ஒளி தேகம் பெற்ற வயது 16. இச்சம்பவம் அவரின் திருமணத்தின்போது நடைபெற்ற நிகழ்வாகும். அவரோடு அவரது மனைவி மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அங்கிருந்த ஒரு நாய் உட்பட அனைவரும் பிளந்திருந்த லிங்கத்தின் உள்ளே தெரிந்த பெருஞ்சோதியில் நுழைந்து ஒளி தேகத்தைப் பெற்று சிவத்தோடு – சிவவொளியோடு கலந்து சிவஞானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். ஒருவருக்கு 16 வயதில் ஒளிதேகம் என்பது சாத்தியமா? என்பதை யோசித்துப் பாருங்கள். அது சாத்தியமே என்று வாழ்ந்து காட்டியவர்தான் திருஞானசம்பந்தர். ஒருவர் அருளாளராக மாறினால் ஒழிய, இப்படி தேவாரப் பாடல்களையோ, திருமந்திரப் பாடல்களை, விநாயகர் அகவல் பாடல்களையோ, ஞானக்குறள் பாடல்களையோ, அருட்பாக்களையோ எழுத முடியாதல்லவா. அருளாளர்கள் இறைவனுக்குச் சமமானவர்களாக சைவ சித்தாந்தம் கருதுகிறது. அது உண்மையும்கூட.
ஔவைத்தாய் ஒளிதேகம் பெற்றது அவரின் 32வது வயதில். அப்படிப்பட்ட ஞான ஒளிதேகியான ஔவைத்தாய், இந்த விநாயகர் அகவலில் வரக்கூடிய மருங்கு என்ற வார்த்தையை இடுப்பு என்ற பொருளில் வன்ன மருங்கில் என்ற வார்த்தைக்குப் பொருள் கண்டு அதையும் அச்சிட்டு உலகெங்கும் வெளியிட்டிருக்கிறார்கள். விநாயகர் அகவலுக்கு இதுகாறும் உண்மையான ஞான மெய்ப்பொருளுரை யாரும் வழங்க வரவில்லை, எத்தனிக்கவில்லை? கேள்வி எழாமல் இல்லை. அந்த வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய எம் குரு எம்மைப் பணிக்கவே இப்போது உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறோம்.
சங்ககாலம் உட்பட பல காலங்களாகப் பயிலப்பட்டு இன்றைய நாளிலே வழக்கற்றுப் போன பல தமிழ்ச்சொற்களுள் ஒன்றுதான் ‘மருங்குல்’ என்பதாகும். இச்சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் காட்டி இருந்தாலும் அவற்றில் ஒன்றுகூட பொருந்தாத நிலை பல இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றது.
கம்பராமாயணத்தில் 43 இடங்களில் இந்த மருங்குல் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
பெருங்கதையில் 32 இடங்களிலும்,
சங்க இலக்கியத்தில் – 14 இடங்களிலும்,
சீவகசிந்தாமணியில் – 13 இடங்களிலும்,
பெரியபுராணத்தில் – 5 இடங்களிலும்,
பதினெண்கீழ்கணக்கில் – 2 இடங்களிலும்,
நளவெண்பாவில் – 2 இடங்களிலும்,
திருவாசகத்தில் – 2 இடங்களிலும்,
மணிமேகலைதயில் – 1 இடத்திலும்,
ஆக மொத்தம் 114 இடங்களில் மருங்குல் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மருங்குலும் சில உவமைகளும்:
பெண்களின் மருங்குலை தாவரக்கொடி, மின்னல், நூல் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். தாவரக்கொடிகளில் வள்ளிக்கொடியும், வஞ்சிக் கொடியும் அடங்கும். சான்றுக்கு சில பாடல்களின் வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கொடி மருங்குல் விறலியருமே – புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம். 316
மின் நேர் மருங்குலாய் – பழமொழி.191
வஞ்சி போல் மருங்குல் – கம்ப.பால.3/9
நூல் உறு மருங்குல் – கம்ப.பால.10/41
இப்பாடல்களில் வரும் மருங்குல் என்பதற்கு இடுப்பு என்று பொருள்கொண்டு, கொடி போன்ற இடுப்பு, மின்னல் போன்ற இடுப்பு, நூல் போன்ற இடுப்பு என்று விளக்கங்கள் கூறுகின்றனர். இது பொருந்துமா என்று பார்ப்போம்.
இவையெல்லாம் பொருத்தமற்ற உவமைகள்:
ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுவதற்கு முன்னால், அவ் இரு பொருட்களுக்கும் இடையில் என்னென்ன ஒற்றுமைக் கூறுகள் இருக்கின்றன என்று சரிபார்ப்பதைவிட அந்த இரண்டு பொருட்களும் மக்களால் எளிதில் கண்டு அறியக்கூடிய பொருட்களாக இருக்கிறதா என்று சரிபார்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
அவ்வகையில் இங்கே, பெண்களின் உறுப்பாகிய மருங்குலைப் பற்றிப் புலவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாடியிருப்பதில் இருந்து மருங்குல் என்பது மக்களால் மிக எளிதாகக் கண்டு இன்புறத்தக்க ஓர் உறுப்பு என்பது தெளிவாகிறது. இந்நிலையில், மருங்குல் என்பதற்கு இடுப்பு என்று பொருள் கொண்டால், பெண்களின் இடுப்பினை யாவரும் எளிதில் கண்டுகளித்தார்கள் என்பது போல ஒரு செய்தியே கிடைக்கிறது.
ஆனால், உண்மையில் பெண்கள் அவ்வாறு தம் இடுப்பினை வெளிக்காட்ட விரும்புவார்களா என்றால் இல்லை. ஏனென்றால், பெண்களின் இடுப்பானது காண்பவர்க்கு காம இச்சையைத் தூண்டிவிட வல்லதாகும். இதை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார் என்பதுடன் அது தமிழரின் பண்பாடும் அல்ல. எனவே பெண்கள் தமது ஆடைகொண்டு இடுப்பினை மறைத்தே இருப்பர். மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது இடுப்பினைப் பற்றி புலவர்கள் யாரும் பாடவும் மாட்டார்கள். இப்படியிருக்க பெண்ணாக பிறப்பெடுத்த ஔவையே, இடுப்பைப் பற்றிப் பாடியிருப்பாரா என்பதை அறிஞர் பெருமக்கள் சற்றே யோசிக்க வேண்டுகிறேன்.
இனி, ஒற்றுமைக் கூறுகளைப் பற்றிப் பார்ப்போம். பெண்களின் இடுப்புக்கும் கொடிக்கும் மின்னலுக்கும் நூலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கொடிபோல மின்னல்போல நூல்போல மெலிந்த இடுப்பு என்று மென்மையினை ஓர் ஒற்றுமையாகக் கூறுவார் பலர். இவ்வாறு கூறுபவர்கள் கொடியின் தடிமனையோ நூலின் தடிமனையோ மின்னலின் தடிமனையோ அறிந்தவர்கள் கிடையாது. கொடியின் தடிமனையோ நூலின் தடிமனையோ கூட அளந்து விடலாம். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றி மறையும் மின்னலின் தடிமனை இதுவரை யார் அளந்திருக்கின்றார்கள்? அளக்கவே முடியாத அளவே அறியப்படாத மின்னலுடன் இடுப்பினை ஒப்பிடுவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்? மேலும், கொடியின் தடிமனிலோ நூலின் தடிமனிலோ ஒரு பெண்ணுக்கு இடுப்பு இருக்குமா? ஒருக்காலும் இருக்க முடியாது. காரணம், இடுப்புக்குப் பின்புறமாக முதுகெலும்பு இருக்கின்றது. இந்த முதுகெலும்பு நிலையாக இருக்க வேண்டுமெனில், இடுப்பும் பலமாக இருக்கவேண்டும். இந்நிலையில், எந்த ஒரு பெண்ணுக்கும் கொடியின் தடிமனிலோ நூலின் தடிமனிலோ இடுப்பு இருக்க வாய்ப்பேயில்லை.
இல்லை இல்லை, இதை அறிவியல் ரீதியாக ஆராயாமல் கலையுணர்வாக கற்பனையாகக் காணவேண்டும் என்று கூறுவாரும் உளர். இவ்வாறு கூறுவதற்கு முன்னால் அவர்கள் ஒன்றைச் சிந்திக்கவேண்டும். ஏன் பெண்களின் இடுப்பினை கொடியுடன் மின்னலுடன் நூலுடன் மட்டும் ஒப்பிடவேண்டும்?. ஏன் மரக்கிளைகளுடனோ செடியின் குச்சிகளுடனோ ஒப்பிடவில்லை? ஏன் கயிறுகளுடன் ஒப்பிடவில்லை? இவையும் மெலிவினை உடையவை தானே ! இவ்வளவு ஏன், வானத்தில் தோன்றும் வானவில்லானது மெலிதாகவும் அழகாகவும் இருப்பதுடன் வளைந்தும் இருக்கின்ற நிலையில், பெண்களின் இடுப்பினை வானவில்லுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் ஒரு பாடலில் கூட ஏன் பாடவில்லை? மரக்கிளை போன்ற இடுப்பு, குச்சி போன்ற இடுப்பு, கயிறு போன்ற இடுப்பு, வானவில் போன்ற இடுப்பு என்று புலவர்கள் பாடாதது ஏன்? என்று சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து இருந்தால் மருங்குல் என்பதனை இடுப்பு என்ற பொருளில் புலவர்கள் ஏன் பாடவில்லை என்பது தெளிவாகப் புரிந்திருக்கும்.
மருங்குல் என்பது இடுப்பு அல்ல
மருங்குல் என்பது இடுப்பினைக் குறிக்காது என்பதற்கு இன்னொரு சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலைசூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்குஇடம் பெறாது விம்மும்
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – கம்ப. பால. 21/17
பொருள்: மேகம் போல் கருமை பூண்ட இமைகளையும் திரண்ட கண்களையும் நெற்றியில் அணிந்திருந்த மேகலை முதலான அணிகள் நெருக்கி மறைக்க இமைகளைத் திறக்க இடமின்றி வருந்துகின்ற பெரிய கண்களை உடைய அவள், காணும் வேட்கை மிகுதலால் மருங்குலின் இடைவெளியின் வழியாக கண்களில் தெரியும் அந்த இடைவெளியின் வழியாக வள்ளலை நோக்குகின்றாள்.
இமைகளின் மேலாக நெற்றியில் அணிந்து இருந்த மேகலை முதலான அணிகளின் பாரம் தாங்கமாட்டாமல் இமைகளைத் திறந்து பார்க்க அவளால் முடியவில்லை. இந்நிலையில் இராமனைப் பார்க்கின்ற ஆவல் அவளது உள்ளத்தில் அதிகமாக எழ, மருங்குலின் இடைவெளி வழியாக இராமனின் அழகைக் காண்கின்றாள். இப்பாடலில் வரும் மருங்குல் என்பதற்கு இடுப்பு என்று பொருள்கொண்டால், இடுப்பின் இடைவெளி வழியாக இராமனைக் கண்டாள் என்று பொருத்தமில்லாத நகைச்சுவையான விளக்கம் வருகிறதல்லவா. இந்த உவமானம் சரியாக வருமா? யோசியுங்கள். காரணம், இமைகளையே திறக்க இயலாத நிலையில் அதாவது அருகிலிருக்கும் இமைகள் தாழ்ந்திருக்கும்போது அப்பெண் குனிந்து அவளுக்கு முன்னால் இருப்போரின் இடுப்புகளின் இடைவெளியில் ராமனைப் பார்க்க முடியாது அல்லவா? எனவே இப்பாடலில் வரும் மருங்குல் என்பது இடுப்பினைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. அதனால் மருங்குல் என்ற சொல்லின் பொருள் என்னவென்றால், அது நமது கண்களையும் கண் இமைகளையும் குறிக்கிறது என்பதை நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மருங்கு என்ற சொல்லிற்கான விளக்கம் போதுமென்றே நினைக்கின்றோம்.
மருங்குலும் மின்னலும்:
பெண்களின் இமைகளை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறும் சங்ககாலப் பாடல்களின் வரிகள் சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளலாம்.
மின் நேர் மருங்குல் குறுமகள் – அகநானூறு. 126
முகில் ஏந்து மின் மருங்குல் – சிந்தாமணி : 3/679
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர – கம்ப. சுந்தரகாண்டம்.2/108
மழைஉறா மின்னின் அன்ன மருங்குல் – கம்ப.பாலகாண்டம். 21/9
மின்வயின் மருங்குல் கொண்டாள் – கம்ப. ஆரண்யகாண்டம். 10/67
மின்னலுக்கும் பெண்களின் கண்ணிமைக்கும் என்ன தொடர்பு?. ஏன் புலவர்கள் இவ் இரண்டையும் உவமைப்படுத்திப் பாடியிருக்கின்றனர் என்னும் கேள்விக்கான விடை: ஒளிர்ந்து மறைதல் என்ற வினையால் ஆன உவமம். வானத்திலே மின்னல் வெட்டும்போது அதன் ஒளியினை நாம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தான் பார்க்கமுடிகிறது இல்லையா?. பெண்கள் தமது மையுண்ட இமைகளை மூடித்திறக்கும்போது அதைப் பார்ப்பவர்களுக்கும் இதைப்போன்ற ஒரு அனுபவமே ஏற்படுகிறது. ஒரு பெண் தனது இமைகளை ஒளிரும் பொருட்களைக் கொண்டு அழகு செய்திருக்கிறாள் எனும்போது, அப்பெண் இமைக்கும்பொழுதெல்லாம் மின்னல்போல ஒரு ஒளி அந்த இமைகளில் இருந்து தோன்றி மறையும் இல்லையா! இதனால்தான் புலவர்கள் பெண்களின் மையுண்ட இமைகளை மின்னலோடும் தாவரக் கொடிகளோடும் நூல்களோடும் ஒப்பிட்டுப் பாடியிருக்கின்றனர்.
பெண்களின் கண்ணிமைகள் கொடிக்கு உதாரணப் பாடல்கள்
பெண்களின் மருங்குல் ஆகிய இமையினைத் தாவரக்கொடிகளுடன் உவமைப்படுத்திப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர்.
கொடி மருங்குல் விறலியருமே – புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம். 316
வஞ்சி போல் மருங்குல் – கம்ப.பால.3/9
தாவரக்கொடிகளுக்கும் பெண்களின் கண்ணிமைகளுக்கும் என்ன தொடர்பு? தாவரங்களில் கொடிகள் மட்டுமே அதிக நீளமாகவும் பல வளைவுகளுடனும் ஆங்காங்கே வண்ண வண்ணப் பூக்களை நேர்கோட்டிலும் கொண்டிருப்பதால் பெண்கள் தமது இமைகளின் மேலாகக் கொடிகளையே ஓவியங்களாக வரைந்தனர் எனலாம். பெண்களின் கண்ணிமைகளுக்குக் கொடிகளை உவமையாகக் கூறியதற்கு கொடிகளின் தடிமனும் ஒரு காரணம் ஆகும். அதாவது, கொடிகள் மிக மெல்லியவை என்பதால் கண்ணிமைகளின் மென்மைக்கு அதாவது நுட்பத் தன்மைக்கு ஓர் காட்டாகக் கொடிகளை உவமையாக்கிக் கூறினர் புலவர். தாவரங்களிலேயே கொடிகள் தான் மிக மெல்லியவை என்பதால் தான் புலவர்களின் பாடல்களில் மரக்கிளைகளோ செடிகளோ பெண்களின் இமைகளுக்கு உவமைகளாகப் பாடப்பெறவில்லை.
கண்ணிமைகள் நூலைப் போலிருந்தன என்பதற்கான பாடல்கள் :
நூல் உறு மருங்குல் – கம்ப.பால.10/41
நூல் ஒக்கும் மருங்குலாள் – கம்ப. கிட்.13/46
இழை புரை மருங்குல் – கம்ப. சுந்தர. 3/88
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் – கம்ப. சுந்தர. 3/6
பெண்களின் கண்ணிமைகள் மிக மெல்லியவை என்று முன்னர் கண்டோம். பெண்களின் மெல்லிய கண் இமைகளை மிக மெல்லிய தடிமன் கொண்ட நூலுடன் ஒப்பிட்டும் புலவர்கள் பாடி இருக்கின்றனர். அதாவது ஆடைகளில் காணப்படும் மிக மெல்லிய நூலினைப் போன்ற தடிமனை உடைய மெல்லிய கண்ணிமைகள் என்ற பொருளில் பாடியுள்ளனர்.
இதுவரை கண்டவற்றில் இருந்து மருங்குல் என்ற சொல் கண், கண்ணிமை ஆகிய பொருட்களையும் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகி விட்டது. மருங்குலைப் போலவே கதுப்பு, ஓதி, நுசுப்பு ஆகிய சொற்களும் கண்ணிமையினைக் குறிக்கும்.
அதனால் இங்கே ஔவைத்தாய் வன்னமருங்கில் வளர்ந்து அழகு எறிப்ப என்று பாடியது, அழகாக வளர்ந்திருக்கும் கண்ணின் இமைகளின் வழியே விநாயகனின் அழகானது தொடர்ந்து மேலும் மேலும் நன்றாக வீசிக்கொண்டிருக்கிறது என்பதையேதான். விநாயகப் பெருமானின் கண்களும் கண்ணின் இமைகளும் அவ்வளவு அழகாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது என்பதே இவ்வரி கூறும் மெய்ப்பொருள்.
அடுத்த வரிக்குள் செல்லலாம். பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்.
நமது திருவடியானது இறைவனின் அடிப்பகுதியாகும். அதாவது அடி, முடி என்று சொல்கிறார்களே, அடி முடி காணா இறைவன் என்கிறார்களே, அதில் வரும் அடி என்பது நமது இரண்டு கண்கள்தான். அந்த அழகிய திருவடிகளுக்குள்ளே பிரபஞ்சத்தின் அத்தனை பொக்கிஷங்களும் மறைபொருளாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அத்தனை ஞானப் பொருட்களையும் வைப்பதற்கு ஒரு பெட்டி, பேழை வேண்டுமல்லவா. அந்த பேழையாக, பெட்டியாக இருக்கக் கூடியதுதான் நமது திருவடிகள் என்ற கண்கள்.
கணபதியின் வயிற்றை தொந்தி வயிறாகத்தான் அத்தனை சிற்பிகளும் சிலைகளாக வடித்துள்ளார்கள். இறைவனுக்கு தொந்தி வயிறு இருக்குமா? சற்றே நம் அறிவை சிந்திக்க விட்டுப் பாருங்கள். ஞானப் பொருட்கள் அடங்கிய இடம் திருவடிகள் என்பதாலும், அந்த திருவடிகளாகிய கண்கள் முகத்தில் துருத்திக் கொண்டு முந்திரிப் பழத்தைப் போல முன்னோக்கி நீட்டிக் கொண்டிருப்பது பார்ப்பதற்கு வயிறு துருத்திக் கொண்டு இருப்பது போல இருக்கும். அதனால் இந்த திருவடிகளை தொந்தி வயிறு என்று குறிக்கக் கூடிய பேழை வயிறு என்றார் ஔவைத்தாய். ஞான மெய்ப்பொருளை நேரடியாக சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே, அதனோடு தொடர்புடைய வேறொரு சொற்களில் ஔவைத்தாய் ஞானத்தைப் பாடியருளினார்.
அடுத்த சொல் பெரும்பாரக் கோடு என்பது. பெரும் சுமையைக் கொண்ட தந்தங்கள் என்று புலவர்கள் உரையெழுதினார்கள். இங்கே பெருமை கொண்ட சந்திரனின் பிறை வடிவத்தை ஔவைத்தாய் பெரும்பாரக் கோடு என்றார். விநாயகப் பெருமானின் திருவடிகளானது யானையின் தந்தங்களைப் போல வலிமையானதாக பெருமை கொண்டதாக இருக்கிறது என்கிறார் ஔவைத்தாய்.
அடுத்த வரி வேழ முகமும் விளங்கு சிந்தூரமும் என்பது. சங்கப்பாட்டில் இந்த வேழம் என்ற சொல் நன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேழம் என்னும் சொல் வேழப்புல்லையும், அப்புல்லை விரும்பி உண்ணும் யானையையும் குறிக்கும்.
ஐங்குறுநூறு என்னும் சங்கநூல் தொகுப்பில் உள்ளது ஓரம்போகியார் என்னும் புலவர் பாடிய மருதத்திணைப் பாடல்கள். அவரது 100 பாடல்களில் இரண்டாம் பத்தாக உள்ளது வேழப்பத்து என்னும் பகுதி. இதில் வேழப்புல் பற்றிய குறிப்புகள் உள்ளன. வேழப்புல்லை இக்காலத்தில் கொறுக்கைப்புல் என்றும் கொறுக்கைச்சி என்றும் கூறுகின்றனர்.
வேழமும் செருந்தியும் வயலில் விளையும்
வீட்டில் நட்ட வயலைக்கொடி (வீட்டு வேலியில் உள்ள) வேழத்தில் சுற்றும்.
மராஅம் என்னும் வெண்கடம்ப மரச் சோலையில் வேழ வெண்பூ பூக்கும்.
கொடிப்பூக்கள் வேழத்தில் ஏறிப் படரும்.
வேழம் மூங்கில் போல் துளை கொண்டிருக்கும்.
வேழப்பூ கரும்புப்பூ போல இருக்கும்.
வேழத்துப் பூக்காம்பிலும் துளை உண்டு.
வேழப்பூ குதிரைக் குடுமி போல இருக்கும்.
வேழப்பூ வானில் பறந்தாடும் குருகுப் பறவை போல ஆடும்.
நீராடிய மகளிர் வேழப்புதரை புணர்ச்சிக்கு மறைவிடமாகப் பயன்படுத்திக் கொள்வர்.
அதனால் வயலில் விளையக்கூடிய வேழச் செடியில் பூக்கும் பூவானது கரும்பில் பூக்கும் மலரினைப் போல இருக்கும். கரும்பு என்ற சொல் தவறு. கரும்பூ என்பதே சரியான மெய்ப்பொருள். கரும்பு என்ற சொல்லை பட்டினத்தார் கரும்பூ என்றே அவர் ஞானம் அடைவதற்கு முன் திருவொற்றியூர் கடற்கரையில் நின்று கொண்டு பாடினார். அப்பாடல் உங்களுக்காக.
கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல் அழகியதாம் – தொண்டர்
உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பூ. (பட்டினத்தார் புலம்பல் – 600வது பாடல்)
நமது கண்களானது கண்டத்தைப் போல கருமையாக இருக்கக் கூடியது. அதில் மூன்று கண்கள் உள்ளன. 1.வெண்விழி, 2.கருவிழி, 3.கண்மணி. அண்டம் என்றால் இங்கே முட்டை என்றே பொருள் கொள்ள வேண்டும். முட்டை எவ்வடிவமோ அவ்வடிவம்தான் நமது திருவடிகளாகிய கண்கள். அந்த திருவடிகளை முழுமையாக எடுத்து வெளியோ பார்க்கும்போது, அவ்வளவு அழகாகக் காட்சியளிக்கும். இந்த திருவடிகளைக் கொண்டு ஞான சாதனைகளைச் செய்யும் தவசிகளின் உடலானது தவத்தின் சுத்த உஷ்ணத்தால் உருக ஆரம்பிக்கும். சுத்த உஷ்ணம் உடலில் அதிகமாக, அதிகமாக சிரசிற்குள்ளே இருக்கக் கூடிய அமுதக் குடமானது மெல்ல மெல்ல உருக ஆரம்பிக்கும். அமுதக் குடத்திலிருந்து உருகி வழியக் கூடிய அமுதத் தேனானது தொண்டை வழியே வழிந்தோடும். அதைச் சுவைக்கும் தவசிகள் எப்போதும் பேரின்பப் பரவசத்திலேயே மெய்யுருக திளைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட அமுதத்தைக் கொடுக்கக் கூடிய மூன்று திருவடிகளும் எங்கே இருக்கின்றன என்றால், அவைகள் கடலுக்கு அருகில்தான் இருந்து கொண்டிருக்கும். கடல் என்பது நமது வெண்விழிகளைக் குறிக்கும் ஞானச் சொல்லாகும். கடல் நீர் உப்பாக கரிப்பதுபோல, நமது கண்களிலிருந்து வரக்கூடிய கண்ணீரும் உப்பைப் போலத்தான் கரிக்கும். அதனால் கடல் என்பது வெண்விழியாகும். அந்த வெண்விழியாகிய கடலுக்கு அருகில்தான் கருமை நிறத்தில் பூவாக மலர்ந்திருக்கும் கண்மணி என்ற மெய்ப்பொருள் அமைந்திருக்கிறது.
அதனால் ஔவைத்தாய் வேழ முகமும் என்றது இந்த மூன்று கண்களையும் திருவடிகளில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானே என்பதைத்தான் பாடி அருளியிருக்கிறார்.
இந்த வேழ முகத்திற்கு அடுத்த வார்த்தையாக விளங்கு சிந்தூரமும் என்கிறார். சிந்தூரம் என்பது நெற்றியில் அணியக்கூடிய ஒருவகையான செம்மையான வண்ணப்பொடி என்று பொருள் கொள்ளலாம். வேழ முகமாகிய முவ்வகை கண்களும் அமைந்திருந்திருப்பது நெற்றிப் பகுதியில்தான். அந்த நெற்றியோ செவ்வண்ணத்தில் இருப்பதாகப் பாடுகிறார் ஔவைத்தாய்.
அடுத்த வரி அஞ்சு கரமும் அங்குச பாசமும் என்பது.
இந்த அஞ்சு கரமும் அங்குச பாசமும் என்ன சொல்கிறது என்றால், என்னை வணங்கும் பக்தனே, நீ எதற்கும் அஞ்சாதே, நான் உனக்கு அபயம் கொடுக்கிறேன். என்னிடம் முழுமையாக சரணடைந்து விட்டால் என் அங்குச பாசத்தால் உன்னுடைய கொடுவினைகள் அனைத்தையும் களைந்து உன்னைக் காத்தருள்வேன் என்கிறது.
அப்படி நம்மைக் காக்க வரும் இறைவனை எவ்வாறு வணங்கித் துதிக்க வேண்டும் நாம் சற்று முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டாமா, சொல்லுங்கள். அதற்கு மாணிக்கவாசகரை இங்கழைப்போம். அவரும் வந்து பாடிவிட்டுச் செல்வார்கள். திருவாசகம் – போற்றித் திருவகவலில் சில வரிகளை இங்கு ஒப்புநோக்கினால் சரியாக இருக்கும்.
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அதுபோல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி (80)
அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக் (84)
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி (போற்றித் திருவகவல் 87)
எனக்குள் சிவத்தைக் காணாது இருப்பதனால், என் வலிமையானது குன்றிப் போனது, இறைவனை அறிய வேண்டும் என்கிற மயக்கம் என்னை மேலும் சோதிக்க ஆரம்பித்தது, வீடுபேறுதான் பெரிய ஆச்சரியம் என்று நினைத்துக் கொண்டு கன்றை உடைய பசுவின் மனம்போலக் கூவ ஆரம்பித்தேன், பதறிப் போகவும் செய்தேன்.
சிவத்தைத் தவிர்த்து மற்றொரு தெய்வத்தை நான் கனவிலும் நினைக்கவில்லை, அரும்பெரும் தெய்வமாகிய சிவபெருமானை – உள்ளம்கவர் பரமேசுவரனை இங்கே வந்து குருபரனாகி அருளிய பெருமையைக் குறைவாகப் பேசாமல், அவனுடைய திருவடிகளை எப்போதும் பிரியாத நிழல்போல நான் சேர்ந்து கொண்டே இருந்தேன், அவனோ சிறிதும் கோபமே இல்லாமல் எனக்கு அருள் வழங்கி வரலானான்.
சிவத்தின் அருட்கலைகளால் என் எலும்பு நிறைந்து நைந்து உருகியது, உள்ளம் இளகி ஏங்கியது, அன்பு என்கின்ற ஆறு கரைபுரள ஓடியது, நன்மை செய்கிற ஐம்புலன்களும் ஒன்றாகி, ‘நாதா’ என்று அவனைப் பாடின, சொற்கள் தடுமாறின, ரோமம் சிலிர்த்தது, கைகள் என்னும் மலர்கள் (கரமலர் மொட்டுவித்து) மொட்டுபோல் குவிந்து வணங்கின, இருதயம் மலர்ந்தது, கண் மகிழ்ந்தது, அதில் நுண்ணிய துளிகளாக ஆனந்தக் கண்ணீர் வந்தது.
அப்படித் தளராத அன்பை நாள்தோறும் பெருகச் செய்கிற தாயாக வளர்த்தவனே, சிவமே எம் பரமேசுவரனே, உன்னை நித்தமும் வணங்கிக் கொண்டே இருப்பேன்.
ஞான மெய்ப்பொருளுரை : கடைசியாகச் சொல்லப்பட்ட பத்து ஞான வரிகளும் பிரமஞானத் தவத்தின் அனுபவத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆதாரம், சாட்சியாகும். இதில் சொல்லப்பட்டுள்ள அத்தனையும் பிரமஞானத் தவத்தை செய்யும்போது சாதகனின் தேகத்தில் ஏற்படும் ஞான மெய்யுணர் அனுபவங்களாக மலர்ந்து கொண்டே இருப்பவை. திருவாசகத்தை நன்றாக முழுமையாக பரிபூரணமாக மெய்யுணர்வால் உணர்ந்து பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் – விரும்பினால் அதற்கு நீங்கள் பிரமஞானத் தவத்தைத்தான் தெரிவுசெய்ய வேண்டியிருக்கும்.
அன்பு வெள்ளமானது கரையைத் தொட்டுப் புரண்டு கொண்டு ஓட வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர். அன்பை கண்ணீரால்தான் அளவிட முடியும். திருவடிகளில் இருக்கும் பஞ்சேந்திரியச் சத்திகள் ஆனந்தத்தால் திளைக்கும்போது திருவடிகளிலிருந்து கண்ணீரானது பெருகிக் கொண்டு ஓடிவரும். திருவடிகளுக்கு ஆனந்தம் எப்போது கிடைக்கும் என்றால், அவைகளில் அமுதக்காற்றைக் கொண்டு போய் சேர்க்கும்போது. அமுதக்காற்றை எப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பது? அதற்கு சற்குருவை நீங்கள் முதலில் கண்டறிய வேண்டும். சற்குரு தொட்டுக் காட்டும் மெய்ப்பொருளின்கண் நீங்கள் நின்றுகொண்டு சிவயொளியை கண்ணாரப் பார்த்து கலந்து அங்கு இருந்தீர்கள் என்றால், விண்ணாறாக முதலில் திருவடிகளிலிருந்து கண்ணீர் கரையைத் தொட்டுக் கொண்டு (திருவடிகளின் கீழ்இமைப்பகுதியை) ஓடிவரும் என்பதைத்தான், “அன்பெனும் ஆறு கரையது புரள” என்றார்.
இந்த அன்பு வெள்ளம் பொங்கிக் கொண்டு ஓடும் சமயத்தில் பஞ்சேந்திரியச் சத்திகளும் இந்த வெள்ளத்தில் பொங்கிக் கொண்டு வரும். அப்போது இறைவனை மகிழ்ச்சியில் பலவாறு போற்றி அழைப்பது இயல்பான விசயம்தான் என்பதை, “நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி” என்றார்.
அவ்வாறு இறைவனை அன்பால் அழைக்கும்போது பேசும் வார்த்தைகள் பேசுவதறியாது தடுமாறிக் கொண்டே வரும். தேகத்தின் முடிகள் ஆனந்த மெய்யுணர்வால் பரவசப்பட்டு மயிர்க்கூச்செறியும் அனுபவம் கிட்டும். அப்போது கைவிரல்களால் திருவடிகளில் இருக்கும் பிரணவக் குகையை திறக்கும் ஞானக் கர்மம் நடைபெறும் என்பதைத்தான், “உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப, கரமலர் மொட்டித்து இருதயம் மலர” என்றார்.
பிரணவக் குகை திறக்கும்போது, அங்கே தெரியும் ஞானக் காட்சி கண்டு கண்கள் ஆனந்தமடைந்து, கண்ணிலிருந்து கண்ணீரானது சிறுதுளியாக வெளியேறும். அந்த நீங்காத அன்பினால் சாதகர்கள் தினமும் அந்த சிவானுபவ அன்பிலேயே திளைத்திருப்பார்கள் என்பதைத்தான், “கண்களிகூர நுண்துளி அரும்ப, சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்” என்றார்.
மண் அகத்தான் ஒக்கும் வான்அகத்தான் ஒக்கும்
விண் அகத்தான்ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண் அகத்துஇன் இசை பாடல்உற்றானுக்கே
கண் அகத்தே நின்று காதலித்தேனே (தி.ம.31)
அன்பையும் பாசத்தையும் காட்டுவதில் தாயை மிஞ்சிடும் ஒரு உயிர் இவ்வுலகில் இல்லை என்பதால், இறைவனே தாயாக வந்து தன்னை பிரமஞானத்தில் வளர்த்து வருவதால், அவனை போற்றிப் புகழ்கின்றேன் என்பதைத்தான், “தாயே ஆகி வளர்த்தனை போற்றி” என்றார்.
வேதியர்கள் வளர்க்கும் யாகக் குண்டத்தில் அக்கினித் தோன்றுவதைப் போன்று, திருவடிகளாகிய அக்கினிக் குண்டத்தில் சுடராழித் தவத்தால் சிவாக்னியானது வெளிப்படுவதால், கர்மவினைகள் முற்றாக கெட்டொழியும். அப்போது கைவிரல்களினால் சில ஞானக் கர்மங்களைச் செய்து இறைவனைப் போற்றி புகழ வேண்டும் என்பதைத்தான், “மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக், கைதரவல்ல கடவுள் போற்றி” என்றார்.
வேதித்தல் என்றால் வேக வைத்தல், சூடாக ஆக்குதல் என்று பொருள்படும். மெய்தரு வேதியன் என்பது மெய்ப்பொருளின் உள்ளே பிராண நீர்மேல் இருக்கும் மும்மலத் திரைகளை வேதித்து அதாவது நன்றாக அக்கினியால் வேக வைத்து எரித்தப்பின், திருவடிகளின் கீழே அதோமுகத்திலிருந்து சிவக்கலையான ஒரு உருவெடுத்து மேல்நோக்கிச் செல்லும் பிரமஞானத் தவத்தைச் செய்பவர்களைத்தான் வேதியன் என்றார்.
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலும் ஆமே (தி.ம.801)
பிரமஞானத் தவத்தில் சந்திரக் கலையையும் சூரியக் கலையையும் இடம் மாற்றி வைக்கும் தவத்தைச் செய்து, இவ்விரு கலைகளின் ஆற்றல்களை துதிக்கை என்ற அக்கினிக் கலைக்குள் கொண்டு போய்ச் சேர்த்து, அங்கு சூரிய, சந்திர, அக்கினிக் கலைகள் ஒன்றாகும்போது, அங்கே மூன்றாம் திருவடிக்குள் ஒரு ஒளிவெடிப்பு உண்டாகி, மூன்றாம் கண் நம் முன்னே வந்து நிற்கும். அந்த மூன்றாம் கண்ணில் தோன்றும் கலைகள் சிவக்கலைகளாகும். இந்த சிவக்கலைகளை உள்ளே உயிருக்கும் இடத்தில் பிரமநாடிக்குள் சேர்க்கும்போது, அங்கு அமுதமானது உருகி வழிந்து வரும். இந்த அமுதத்தை உண்டுவிட்டால், அவன் உடல் தளர்ந்து போகாது. உறக்கம் நீங்கி ஞான மெய்யுணர்விலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை உண்டாகி, இப்பூமியில் என்றும் நித்தியமாய் மரணமற்று சிரஞ்சீவியாய் வாழ்ந்திடுவான்.
அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம்உரைத் தானே (தி.ம.1089)
நடுவிரல் அக்கினித் தத்துவத்தைக் குறிக்கும். சிறுவிரல் நிலத் தத்துவத்தைக் குறிக்கும். வந்த வழிமுறை மாறி என்பது நிலத்தில் உண்டாகும் சற்குரு சுட்டிக் காட்டிய வாயுக் கலைகளை அக்கினிக் கலைகளோடு கொண்டு போய்ச் சேர்க்கும் தந்திர முறையைக் குறிக்கிறது. இது பிரமஞானத் தவத்திற்கு மற்றுமோர் ஆதாரம், சாட்சியாகும். பிரமஞானத் தவத்தில் ஒருபகுதியான சுடராழித் தவத்தில் இந்த தந்திர முறையைத்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் காலம் முதல் இன்றுவரை சித்த ஞானிகளால் கற்றுக் கொடுக்கப்பட்டு வரப்படுகிறது. சுடராழித் தவத்தில் முதலில் அதோமுகத்திலிருக்கும் அபான வாயுவை அமுதக்காற்றைக் கொண்டு சூடாக்கி, சூடாக்கி ஆவிநிலைக்கு மாற்ற வேண்டும். ஏனென்றால், அபான வாயுவின் குணம் எப்போதும் கீழ்நோக்கியே செல்லும் தன்மை கொண்டது. இது வாயுத் தன்மையாக இருந்தாலும் சற்று திடத்தன்மை கொண்டிருப்பதால், இதனால் மேல்நோக்கி பயணிக்க முடியாது. அதனால் அபானனை அமுதக்காற்றால் மோதி, மோதி சூடாக்கி ஆவிநிலைக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு இலேசான அபான வாயுவை சுடராழித் தவத்தால் அப்படியே 900 க்கு செங்குத்தாக உள்ள பிராணக் கலையிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அப்போது அபானன் பிராணனோடு இரண்டறக் கலக்க ஆரம்பித்து, அங்கே ஒரு பெரு வெளிச்சம் உண்டாகிவிடும். காரணம் அபான வாயு இணைவதால்தான். பிராணன் ஒளித்தன்மையோடு இருந்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒளிவாயுவாகும். இந்த பிராண ஒளி பிரகாசித்து பெருவொளியாக மாற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக அபான வாயுவின் துணை கண்டிப்பாகத் தேவை. இந்த அபான, பிராண வாயுக்களின் கலப்பானது மெய்ப்பொருள் இருக்கும் பிரணவ மேருவில் நடக்கும் ஒரு வைபவம். இந்த வைபவம் நடக்காவிட்டால், நம்மால் இறையோடு புணர முடியாது, நமக்குள் திருக்கல்யாணமும் நடவாது. இது அனைத்திற்கும் மூலவேராக, மூலக் காரணமாக இருப்பது பிரமஞானத் தவம் ஒன்றே. இத்தவத்தாலன்றி இறைவனை நம்மால் பெறவே முடியாது என்பது ஆதித்தமிழ்ச் சித்தர்களின் துணிவான முடிவாகும்.
பெரு விரல் – ஆகாயம், ஆள்காட்டி விரல் – வாயு, நடுவிரல் – அக்கினி, மோதிர விரல் – நீர், சுண்டுவிரல், சிறுவிரல் – நிலத்தையும் குறிக்கிறது.
வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெறித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரலிரண்டு உள்புக்குப் பேசே (தி.ம.1094)
சிறுவிரல் – நிலம் ; அணிவிரல் – நீர். சுட்டு விரல் – வாயு. நெடிது நடுவே – அக்கினி. பெரு விரல் – ஆகாயம். சுடராழித் தவத்திற்கு மற்றுமோர் சிறந்த ஆதாரம், சாட்சி இப்பாடல். ஐந்து விரல்களிலும் பஞ்சபூதச் சத்திகள் நிறைந்திருக்கின்றன. இந்த பஞ்சபூதங்கள்தான் அண்டத்திலும் இருக்கிறது. பிண்டமாகிய அண்டத்திலும் இருக்கிறது. பிண்டத்தில் இருக்கும் அண்டம் தான் நமது இரு திருவடிகளாகிய கண்கள். கண்கள் அண்டம்போல உருண்டையாக இருப்பதால் இப்படி மறைபொருளாகச் சித்தர்களால் சொல்லப்பட்டது. இந்த பஞ்சேந்திரியச் சத்திகளும் ஒருங்கே ஓரிடத்தில் இருக்கும் இடம்தான் மெய்ப்பொருளாகிய கண்மணிகள். இந்த கண்மணிக்குள் அமுதக்காற்றின் மின்காந்தக் கலைகளை கொண்டுபோய்ச் சேர்க்கும் ஞானத் தந்திரம்தான் பிரமஞானத் தவத்தின் சுடராழித் தவமுறை. இந்த மெய்ப்பொருளுக்குள் அமுதக்காற்றினை உட்புகும்படி செய்யும் சாதகத்தைச் சாதகன் செய்து கொண்டிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நமது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞானங்களை கடந்த 3 ஆண்டுகளாக பிரமஞானப் பொற்சபை குருகுலம் என்ற அமைப்பை உண்டாக்கி, உலக மக்களின் ஞான விடுதலைப் பேற்றிற்காக டாக்டர் ருத்ர ஷிவதா மற்றும் விதைக்குள் விதை என்ற வலையொளி தளத்திலும் பிரமஞானப் பொற்சபை.காம் என்ற வலைப்பூத் தளத்திலும் பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும் கொடுத்து வருகின்றோம். அங்கு சென்று நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாக அறிந்து உணர்ந்து இன்புறலாம் என்று சொல்லி இப்பேச்சுரையை நிறைவு செய்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!


