
சீவ முத்தி நிலை – பிரம முத்தி நிலை
சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவு நிறைந்தோங்கும் – சித்துஎனுமோர்
ஞான வடிவும்இங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டு இயற்றத் தான் (வள்ளலார்)
சிவபரம்பொருள் எம்மை இந்த தலைப்பில் உரையாற்ற பணித்த காரணத்தினால், இதை குருவிடம் வேண்டி நின்றபோது, சற்குருவும் குருவும் இதற்கு சம்மதம் தெரிவித்த காரணத்தினால் இன்று உங்களோடு எது சீவன் முத்தி? எது பிரமமுத்தி? என்ற தலைப்பில் உங்களோடு யாம் அனுபவித்த உண்மை மெய்யுணர்வுகளை பகிர்ந்து கொள்ள வந்திருக்கின்றேன்.
தூல தேகம் சன்மார்க்கச் சார்பினால் வான்வடிவ சித்தியுற்றுக் கடவுள் மயமாகும் ஒளிநெறியை, “என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்தானே” என்று ஓங்கி ஒலிக்கச் சொன்ன வள்ளற்பெருமானின் தீரத்தை எப்படித்தான் பாராட்டி நிற்பது? இறப்பை வென்றிருக்காமல் இப்படி தைரியமாக பேசிவிட முடியுமா, சொல்லுங்கள். அந்த ஞான உணர்வில் எமக்கு இதுகாறும் கிடைத்திட்ட ஞான அனுபவங்களைக் கொண்டும் எம் குருவின் வாழ்நாளில் யாம் பார்த்து அனுபவித்து வியந்துபோன பிரமஞானங்களில் ஒருசிலவற்றைப் பற்றி இங்கே இத்தளத்தைப் பயன்படுத்திச் சொல்லிக் கொள்கிறேன்.
இதற்கு எமது தாயாகிய புவனேஸ்வரியும் எமக்கு கட்டி அணைத்து ஆலிங்கனம் செய்திட்ட பாலா தாயும் மீனாட்சி தாயும் அதன்பின்னே என்னை தன் பிள்ளையாக வளர்த்தெடுத்து பிரமஞானத்தை அணுஅணுவாக என் உயிரில் ஒளிரவிட்ட குரு, ஆதித் தமிழ்ச் சித்தர்களான காகபுசண்டர், திருமூலர், அகத்தியர், போகர், சமயக் குரவர்கள் நால்வர், சதுரகிரிச் சித்தர்கள், பொதிகைமலைச் சித்தர்கள், பிரமஞானிகள் ஆகிய அனைவரின் பொன் திருவடித் தாள்களில் கொன்றை மலர் சூடி, மல்லிகை மணம் பரப்பி வணங்கிடும் நாயினும் கடையேனாகிய அணுவிலும் சிறியேனாகிய மெய்யடியார்க்கும் அடியேனாகிய இந்த ருத்ர ஷிவதா ஆகிய எம்மை ஆசிர்வதித்து அனுக்கிரகித்து அருள வேண்டுமென்று பணிந்து நிற்கின்றோம். அனைத்து பிரமஞானச் சித்தர்களும் ஆசிர்வதிப்பார்களாக.
நல்லது, நாம் தலைப்பிற்குள் செல்லலாம்.
இந்த தூலத் தேகம் நரை, திரை, மூப்பு, பிணியால் ஆட்படாமலும், பிணம் ஆகாமலும், அந்தத் தூலத்தோடே முத்தியை அடைவதுதான் உண்மையான முத்தி நிலையாகும். அதுவே பிரம முத்தி நிலையாகும்.
“பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்” என்று உலகில் சொல்லப்படுகிறது.
“மாற்றிப் பிறக்க வகை அறிந்தாய் இல்லை” என்று அகத்தியர் சொல்கிறார்.
இறந்து போனவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்றால் அவர்கள் இந்த உடம்பைப் பிணமாகத் தானே விட்டுச் சென்றிருப்பார்கள். அது உண்மையான முத்தி நிலையா? இதைப் பற்றி திருமந்திரத்தில் சரீர சித்தி உபாயம் என்ற பகுதியில் இவ்வாறு சொல்லப்பட்டதை இங்கே நாம் ஒப்புநோக்க வேண்டும்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (தி.ம.724)
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பின் உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே (தி.ம.725)
பெற்றெடுத்த உடம்பை பேதலிக்க விடாமல், பிரமஞானத்தால் கட்டி வைத்தால், பெறாத பேரின்பப் பேறும் கைக்குள் வந்து சிக்கிவிடாதா, என்ன. முத்தி நிலையை அடையும் மார்க்கத்தை பின்வரும் திருமந்திரம் சொல்கிறது.
மூன்று மடக்குடைப் பாம்பு இரண்டுஎட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம்தான்
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடம்பு அழியாதே (தி.ம.728)
இப்பாடலைப் பற்றி முழு விளக்கமும் நாம் எழுதிக் கொண்டிருக்கும் மறைந்திருக்கும் திருமந்திர ரகசியங்கள் என்ற நூலில் விரிவாக செய்முறைகளோடு சொல்லியிருக்கின்றோம். காணொளி தளத்திலும் பேசியுள்ளோம்.
இவ்வாறு இறந்து பிறந்து உழலும் ஆன்மாக்கள் ஒருகாலத்தில் முத்தி அடைய வேண்டுமல்லவா? இறப்புக்கும் முத்திக்கும் பேதம் இருக்கின்றதா? இல்லையா? இந்த இரண்டு நிலைகளிலும் நாம் உடலை பிணமாகத்தானே விட்டுச் செல்கிறோம். இவ்வாறு உடம்பை விட்டு உயிர்பிரிந்து முத்தியடையும் என்ற எண்ணம்தான் உலகோர்கள் பலர் முத்தியின் உண்மையான நிலையை அறிய இயலாது அலட்சியப் படுத்தியதற்கு காரணங்களாக அமைந்துள்ளன.
இன்று இவ்வுலகில் நல்ல உன்னத நிலையில் வாழ்ந்தோர்களை அவர்கள் இறந்தபின், “சிவலோகப் பதவி அடைந்தார் – வைகுண்டப் பதவி அடைந்தார் – ஐக்கியமானார் – அதுவானார் – காலமானார்” என்ற உபசார வார்த்தைகளைக் கேட்கிறோம் அல்லவா. இவ்வார்த்தைகள் எல்லாம் இறந்தவரை கௌரவப்படுத்தவே சொல்லப்பட்டவைகள். இதை எந்த பிரமஞானியும் சித்தரும் ஞானப் பெரியோர்களும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் தானே.
பிரமஞானத் தவத்தில் திளைத்திருப்போர், சித்தாந்த சந்தான குரவர்கள், ஞானச்சாதனை செய்வோர்கள், வித்துவப் பெரியோர்கள் அனைவரும் புண்ணியம் செய்தோர்கள்தான். அவர்கள் கிட்டத்தட்ட அனைத்து படிகளையும் கடந்திருப்பார்கள்.
எத்தகைப் பெரிய மாயா சத்திகளையும் ஒருவர் அடைந்திருந்தாலும், “புற்றுமாய் மரமாய்ப் புனல்காலே உண்டியாய்” (திருவாசகம் – செத்திலாப்பத்து-2), “துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை”யராய் வற்றிப் பாம்புகள் போலவும் ஔவால்கள் போலவும் 1000 வருடக் கணக்காகக் கிடப்போரும் தூங்கிக் கொண்டிருப்போரும் எம்பெருமானால் அருந்தல், பொருந்தல், அனந்தல்கள் அமையப் பெற்று பிரமஞானிகளாய் உலகத்தார்போல வாழ்ந்து தேகம் அள்ளூர் ஆக்கையாய் சூக்குமமாகக் கரையப் பெற்றால் ஒழிய, அவர் முத்தி அடைவது முடியாத அசாத்தியமாகும்.
உடம்பை வாட்டித் தவம் புரிந்தால் உண்மை முத்தி நிலையை அடைய மாட்டார் என்பதைத் திருவாசகத்தில் திருவண்டப்பகுதி அகவலிலும், “அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்” எனவும், “எளியவாறு செய்வார் எங்கள் ஈசனை” எனவும் திருமந்திரத்தில் சொல்லப்பட்டதை இங்கே நினைவுக்கு கொண்டு வர வேண்டும்.
புலால் துருத்தியாக இருக்கும் இந்த தூல தேகத்தை திருப்பூந்துருத்தி தேகமாக அதாவது அமல தேகமாக ஆக்க வேண்டும். அது எப்படியென்றால், ஒரு வண்ணான் அழுக்கான உடைகளை அழுக்கில்லாமல் ஆக்குவதற்காக காரமான பொருட்களை போட்டு பஞ்சீகரணித்து அழுக்கை அகற்றுவதைப் போலத்தான், குரு அருளால் சரீர நிறைகொண்டு அருந்தி வந்தால் நாம் அருந்தியது உடலில் பொருந்தி நிற்கும். அவ்வாறு அருந்தியது தேகத்தில் பொருந்தி வந்தால், அழியும் தன்மையுடைய இந்த புலால் துருத்தியில் இறப்பைத் தரும் மும்மலங்கள் அணுஅணுவாக நீற்றுப்போய் தேகம் நித்தியமடையும். அதனால் இந்தத் தூல உடல் மாறுதலையடைந்து திருப்பூந்துருத்தியாக அமைந்துவிடும். இதற்கு ஆதாரமானப் பாடல்கள் அப்பர் சுவாமிகளின் பலவகைத் திருத்தாண்டகத்திலும், திருமாற்பேறு திருக்குறுந்தொகையிலும், திருமூலரின் எட்டாம் தந்திரத்திலும் பல பாடல்களால் உண்மை முத்திநிலையை மறைவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தமது தூலம் பிணி, மூப்புகளால் பழுதடைந்து பிணமாகாதவாறு சாதக யோகங்களால் அதனை மறுத்த அதாவது மாற்றிய அப்பர் பெருமானை யானை கொல்ல வந்தபோது, அந்த யானை அப்பரைப் பார்த்ததும் அவரை வணங்கி வலம் வந்து நீங்கிப் போனது. அவரை சுண்ணாம்புக் களவாயில் தூக்கிப் போட்டும் அவர் மேனி எரிந்து போகாமல் குளிர்ச்சியாகவே இருந்தது. கடலில் தூக்கிப் போட்டும் அவர் தேகம் அழியவேயில்லை. இவையெல்லாம் அப்பர் பெருமான் உண்மை முத்தி நிலையை அடைந்திருந்தார் என்பதையே காட்டுகிறது.
சத்தும் சித்துமாகிய உடலுயிர்கள் ஒன்றோடு ஒன்று சத்துருத்துவம் அமைந்து பிரிந்து போகாமல், சற்குருவின் அருளால் காட்டிக் கொடுக்கப்படும் பிரமஞானத் தவங்களால் அஞ்ஞானத் தத்துவங்கள் இருள்நீங்கி, ஞானத் தவத்தால் உயிருக்குள் ஒளி பெருகி, உடலும் உயிரும் ஒன்றோடு ஒன்று மித்துருத்துவம் அடைந்து சூரிய, சந்திரக் கலைகள் கூடிக் குழைந்து, அள்ளூராக்கையாகிச் சூக்குமமாய், அருளாய் சிவமாகவே மாறுவதற்கு தேவையான அனுட்டானங்களைக் கூறுகின்ற, வேத நூல்களோ, உபநிடதங்களோ இவ்வுலகில் இதுவரையிலும் எந்த மொழியிலும் சொல்லப்படவில்லை. நம் ஆருயிராம் தமிழ் மொழியில் மட்டுமே இதுபற்றி எண்ணற்ற ஞானக் குறிப்புகளும், ரகசியங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. “பத்தியால் அடையும் அங்கலிங்க ஐக்கியம் பகர்ந்திடும் உபநிடம் இன்றாம்” என்று சுத்தசாதகத்தில் நான்காம் பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தசாதகத்தைப் பாடியவர் குமாரதேவர் ஆவார்.
“தூலம் தோன்றிய முறையே சூக்குமமாய் அருளாய் ஒடுங்கிச் சிவாங்கமாதலே உண்மை முத்திநிலை” ஆகும்.
“தூலம் பழுதடைந்து பிணமாகப் பூமியில் விழப்படுமாயின் அது பிறவி நெறியே அன்றி, முத்தி நெறி அன்று”. தூல, சூக்கும, காரணங்கள் தம்மில் பிரிந்து வெவ்வேறாக நிற்கமாட்டாது. முத்தியடைவோர் உலகினர் காணும்படியே தூலத்தோடு மறைவார்கள் என்று சுத்த சாதகத்தில் மிகவும் வற்புறுத்திக் கூறப்பட்டிருக்கிறது.
சைவம் என்பது பிற உயிர்களை கொன்று அருந்தாமல் இருப்பதைப் போலவே, தம் உயிரையும் நரை, திரை, மூப்பு, பிணியால் கொல்லப்படாமல் சாதக யோகங்களால் நித்தியத்துவம் அடைவதுதான் உண்மையிலேயே சைவ நெறியாகும். நீங்களும் விலங்குகளைப் போல, பறவைகளைப் போல செத்தொழிந்தால் நீங்கள் சைவர்கள் அல்ல ; அசைவர்கள்தான்.
மனித உடல் அமலநிலை அடைவதற்கு உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பிரமஞானிகளும் சித்தர்களும் சொல்லியவகைப்படி உணவுகளை எடுத்துக் கொண்டால், இந்த தேகம் நித்தியத்துவத்தை நோக்கித் திரும்ப ஆரம்பிக்கும்.
தூலம் பழுதடைந்து பிணமாக விடப்பட உயிரானது பிரிந்துபோய் முத்தி அடையும் என்று குமாரதேவர் உட்பட பிரமஞானிகள் யாரும் இக்கூற்றைச் சொல்லி இருக்கவில்லை. பிரமஞானத் தவத்தைத் தவறாமல் அமுதக்காற்று காலங்களில் நித்தமும் செய்து வருகின்ற மெய்யடியார்களும் ஞானச் சாதகர்களும் தனது தூல உடலை பிணி, மூப்புகளால் பழுதடைந்து பிணமாகாதவாறு அதனையே சூக்குமத் தேகமாக ஆக்கி, நித்திய நிலையை அடைந்ததை நாம் அனைவரும் நன்றாக உற்றுநோக்க வேண்டும்.
இப்போது சொல்லப்போகும் திருவாக்குகள் தூலம் அள்ளூர் ஆக்கையாய் அருளாய்க் கரைந்து சிவாங்கமாதலே உண்மை முத்தி நிலை என்பதைப் பசுமரத்தாணி போல காட்டுவதைக் கேளுங்கள்.
பொய்யாயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்சின்ற மெய்ச்சுடரே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே (சிவபுராணம், திருவாசகம்)
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி
உருகுவது உள்ளங்கொண்டு ஓர்உருச் செய்து ஆங்குஎனக்கு
அள்ளூர்ஆக்கை அமைத்தனன் (திருஅண்டப்பகுதி)
என்ற திருவாசக வரிகளை இங்கே உள்ளே வாங்கிக் கொள்ளுங்கள்.
ஊன் கெட்டு உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்
நான் கெட்டவா பாடி (திருத்தெள்ளேணம் – 18)
செத்தே போனால் சிரியாரோ (கோயின் மூத்த திருப்பதிகம்-8)
தூக்கி முன்செய்த பொய்அறுத்து துகள்அறுத்து எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே
செந்தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங்
கண்டாமே (அதிசயப்பத்து – 8)
செடிசேர் உடலைச் சிதையாது எத்துக்குஎங்கள் சிவலோகா (குழைத்தபத்து-2)
ஊசலாட்டும் இவ்வுடல் உயிராயின இருவினை அறுத்துஎன்னை
ஓசையால் உணர்வார்க்கு உணர்வரியவன் உணர்வு தந்து ஒளியாக்கி
பாசமானவை பற்றுஅறுத்து உயந்ததன் பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்து அடியார்அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே
(அற்புதப்பத்து – 8)
அப்பர் சுவாமிகள்
ஒளியான நெய்த்தான் அத்தானனைத் தொண்டராயித்
தொழுவார் சுடர்வாணரே (திருநெய்த்தானம் – திருக்குறுந்தொகை 4)
சுந்தரமூர்த்தி நாயனார்
ஊன்உயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே
(திருநொடித்தான் மலை)
திருமந்திரம்
அழிகின்ற சாயா புருடனைப் போல
கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயிற் கற்பூரத்தை ஒக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போமப்புரத்தே (விசுவக்கிராசம்)
நம்மாழ்வார் திருவாய்மொழியில்
களிப்புக் கவர்வும் அற்று பிறப்புப் பிணிமூப்பும் அற்று
ஒளிக்கொண்ட சோதியாய் உடன்கூடுவது என்று கொலோ
(2ம் பத்து 3ம் திருமொழி 10)
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழ சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர்உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே
(5ம் பத்து – எங்ஙனேயோ பத்து)
முத்துத்தாண்டவர்
மாணிக்கவாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்
கட்டையில் வைத்துச் சுட்டுவிடாதே கள்ளக்குழியில் புதைத்துவிடாதே
பொற்பூமாரி இமையோர் சொரிந்திடப் பொன்னூசல் ஆடும்
திருவாதிரை நாளில், கற்பூரதீபம்போல் எந்தன் உடலைக்
கனகசபையிற் கலந்து கொள்வாயே
இந்த முத்துத்தாண்டவரின் வேண்டுதல் நம் அனைவருக்குள்ளும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உள்வாங்கிக் கொண்டே இருந்துவிடுங்கள். கற்பூரத் தீபம் போல என் உடலை இறைவா, உன் கனகசபையில் கலந்து கொண்டுவிடு. எம் விருப்பம் அது ஒன்றே என்று அனுவரதமும் உங்கள் பிரமஞானத் தவத்தின்போது திருவடியின் மெய்ப்பொருளுக்குள் நின்று சொல்லிக் கொண்டே வாருங்கள். வாராத மெய்ந்நெறி ஓடிவந்து உங்கள் மெய்ப்பொருளை முத்தமிட்டுத் தொட்டுகொண்டு உறவாடி ஆரம்பித்துவிடும். அந்த ஆனந்தத்தை யாம் நித்தமும் அனுபவித்துக் கொண்டே இருக்கின்றோம். நீங்களும் அனுபவித்து மெய்யின்பத்தில் மூழ்கி திக்கி முக்காடிப் போக வேண்டாமா. வாருங்கள் உயர்ஆன்மாக்களே.
ஔவை ஞானக்குறளில்
ஐம்பதும் ஒன்றும் அழல் போலத் தான்நோக்கில்
உம்பர் ஒளியாய் விடும்
எல்லையில் இன்னமுதம் உண்டுஆங்கு இனிதிருக்கில்
தொல்லை முதல்ஒளியே ஆம்
நம்முடைய தாயுமானவ சுவாமிகளும் இந்த மிகப்பெரிய உண்மை முத்தி நிலையை அடையவே முயன்று தவறிப் போனதால், அவரின் ஆற்றாமையைப் பற்றிச் சடம் பொய் என்று கூறினார். ஆனாலும் தூலதேகட்ம பிணமாக விழுந்து, அதன்பின் உயிர் முத்தியடையும் எனக் கூறுபவர்களை மறுத்து, “உலகநெறி போல் சடலம் ஓய உயிர் முத்தி இலகும் எனில் பந்த இயல்போ பராபரமே” என்றும் “தேகம் யாதேனும் ஒரு சித்தி பெறச் சீவன்முத்தி ஆகுநெறி நல்லநெறி ஐயா பராபரமே” (பராபரக்கண்ணி – 358, 357) எனவும் கூறியுள்ளதால், தேகம் அமலநிலை அடைந்து தேகத்தோடு மறைதலே உண்மை முத்திநிலை எனக் கருத வேண்டியுள்ளது.
இப்படித்தான் வேதத்தின் சாரமாகச் சொல்லப்படுகின்ற திருவாசகத்தையும், திருக்கோவையையும் சிதம்பரம் நடராசர் சன்னதியில் கண்டு, அவ்வோலைகளைப் படித்த தில்லைவாழ் அந்தணப் பெருமக்கள் பொருள் புரியாது திகைத்து நின்றார்கள். இந்த வேதாகமப் பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம், “எம்பெருமான் கைப்பட எழுதிய இம்மறையின் பொருள் யாது?” எனக் கேட்டபோது, மாணிக்கவாசகர் அவர்களை யெல்லாம் நடராஜர் சன்னதிக்குள் இருக்கும் சிவத்தை கைவிரலால் சுட்டிக்காட்டி, “இதோ இதுதான் திருவாசகத்தின் மெய்ப்பொருள்” என்று அச்சந்நிதியில் பலரும் கண்டு போற்றும்படியாக தூல தேகத்தோடு ஒளியாக மாறி மறைந்தருளினார். இவ்வாறு தூல தேகத்தோடு மறைந்து சிவாங்கமாதல்தான் உண்மை முத்தி நிலை என்பது திருவாசகம், திருக்கோவை, திருமந்திரம் முதலிய ஞான நூல்களில் வெளிப்படையாகக் கூறியிருப்பதை நன்றாக நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
சத்தும் சித்துமாகிய உடல் உயிர்கள் அள்ளூராக்கையாகி சூரிய, சந்திரக் கலைகள் ஒன்றோடு ஒன்று கூடிக் குழைந்து நிற்பதுதான் உண்மை முத்தி நிலைக்கு சாட்சிகளாகும். தூலம் சூக்குமமாக அருளாய்க் கலந்து சிவாங்கமாதல் என்பதுதான் உண்மை முத்தி நிலையாகும்.
இதற்கு ஆதாரங்களாக நந்தனாரும், சேந்தனாரும், முத்துத்தாண்டவப் பெருமானும் பலரும் கண்டுகொண்டிருக்கும்போதே நடராஜர் சந்நிதியில் தூல தேகத்தோடு ஒளியாக மறைந்து போனார்கள். திருவரங்கர் சன்னதியில் ஆண்டாள் இவ்வாறு ஒளியாக அரங்கனோடு கலந்து மறைந்து போனார். இத்தனைக்கும் அவர் ஒரு பெண்பிள்ளை. இளம்வயது. இந்த ஒளிதேகக் கட்டமைப்பு அவருக்கு எப்படி சாத்தியமாயிற்று? சற்றே சிந்தித்துப் பாருங்களேன். இளம்வயது பெண் ஒளியாக மாறி இறைவனோடு கலந்திடும்போது, நம்மால் முடியாதா என்ன, சொல்லுங்கள்.
ஔவைத் தாய் அவர்கள் மூன்று இடங்களில் மூன்று முறை ஒளிதேகத்தைப் பெற்று இறைவனோடு ஒளியாக மறைந்து போனார்.
அதுமட்டுமா, திருமணஞ்சேரியில் திருஞான சம்மந்தரின் திருமண வைபவத்தைக் காணச் சென்ற மக்கள் அனைவரும் ஒரு நாய் உட்பட கருவறையில் உள்ள சிவத்தோடு தோன்றிய ஒரு பெருஒளிப்பிழம்பில் உள்நுழைந்து ஒளியாகி மறைந்தார்களே, இதை என்னவென்று சொல்வது.
வேத ரகசியம் இவ்வாறு இருக்கும்போது, இதை உணராமல் சமய ஆச்சாரியர்களும் ஆதினக்கர்த்தாக்களும் தூலத்தோடு மறைவது இயற்கை முறை என்பதை அறிந்து கொள்ளாமல், தூலத்தோடு மறைதல் ஒருவகை சித்தி, பதமுத்தி, கற்பிதநிலை என்று துணிந்து அறியாமையில் பேசுவதைத்தான் சீரணிக்க இயலவில்லை. தூலத்தோடு மறைதல் என்பது எல்லாம் திருவருட் செயல் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்நிலைதான் மீண்டும் வாரா நெறி, பிறவாநெறி, இறவா நெறி, சிவநெறி, குருநெறி ஆகும்.
“உடலும் உயிரும் ஒருங்கிக் கிடக்கும் பயிரும் கிடந்து உள்ளப் பாங்கு அறியாரே” என்று கூடா ஒழுக்கத்தில் 12வது பாடல் சொல்கிறது.
நான்றவிழ் முட்டை இரண்டையும் கட்டியிட்டு
ஊன்றி இருக்க உடல் அழியாதே (சரீரசித்தி உபாயம் திருமந்திரம் 728)
என்று பலவாறாக திருமந்திர வாக்குகள் உடலும் உயிரும் அழியாமை பற்றியும் அவை பிரியாமல் பிரிந்து ஒன்றாய் நிற்பதைப் பற்றியும் சொல்லியுள்ளன.
நமது தேகமானது எப்போது அர்த்தபாகத்தை அதாவது அர்த்தநாரீஸ்வர நிலையைப் பெறுமோ அப்போதுதான் நமது தேகத்தில் இறப்பு என்பது அழிவுற்று சீவன் சதாசிவமாய் சிவமாக மாறி நிற்கும். திருவாசகத்தில் மாணிக்கவாசகர், “ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே” என்று கூறி, ஓங்காரத்து உட்பொருளையும் அதனை அடைவதற்கேற்ற பிரமஞானத் தவங்களை திருப்பெருந்துறை குருநாதனால் உபதேசிக்கப்பட்ட அப்பெருமான் அவற்றையே தாரகமாகக் கொண்டு பிரமஞானத் தவத்தில் படியேற்றம் அடைந்து அனுபவித்த சிவானுபவக் காட்சிகளைத்தான் திருவாசகமாக அருளிச் சென்றார். மாணிக்காவசகர் இந்த பிரமஞான சிவானுபவக் காட்சிகளை தன் உயிர்மெய்யுக்குள் கண்டு, கண்டு, விண்டு, விண்டு பாடியபோது, ஓலையில் அவைகளை எழுதினால், எங்கே அவரின் பிரமஞான சிவானுபவங்கள் கெட்டுவிடுமோ என்று அஞ்சியே சிவபெருமானே அழகிய சிற்றம்பலமுடையானாக அவர் முன்னே அமர்ந்து அவர் கைப்பட திருவாசகத்தை பதித்து முடித்தார். இதைவிட திருவாசகத்திற்கும் மாணிக்கவாசகத்திற்கும் என்ன பெருமை, புகழ் வேண்டும் ! நித்திய வேதாகமத்தின் ஒட்டுமொத்த சாறுதான் திருவாசகம் என்னும் உயிர் மலரும் வேதம்.
ஒருமுறை உமாபதி சிவாச்சாரியார் பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தி கொடுத்துப் பின் தாமும் தேகத்தை விட்டு முத்தியடைந்தார். பெற்றான் சாம்பானும் முள்ளிச் செடியும் அருட்சோதி வடிவாய் உண்மை முத்தி நிலையை அடைந்தது.
பிறவி வலைப்படுகின்ற சீவர்களுக்கு உரிய அஞ்ஞான பௌதிக உடலாகிய மருளுடம்பே பிணமாகப் பூமியில் விடப்படும். சீவன்முத்தர்க்குரிய பிரணவ உடலம் அருளாய்க் கரைந்து அருவமாகிவிடும். எனவே, பிணமாக விழுந்த மருளுடம்புகளை அருள்வடிவாகக் கொள்ளுதல் இயற்கை விரோதம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மருளுடம்புக்கும் அருளுடம்புக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரியது.
இதுவரை கூறியவைகளிலிருந்து தூல தேகத்தோடு மறைதலே உண்மை முத்தி நிலை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். தூலம் பழுதடைந்து பிணமாக விழ இறத்தல் பிறவி நெறியே என்பதேயாகும்.
வேதங்களிலும், ஆகம சாத்திரங்களிலும், சமய, மத சாத்திரங்களிலும் சீவன்முத்தி என்ற முத்திநிலையை பற்றி சொல்லப்பட்டுள்ளது. அது எப்படி என்றால், உலகத் தளைகளில் மனிதனாகிய சீவன் கட்டுப்பட்டிருக்கிறான். இந்த தளைகளிலிருந்து விடுபட்டவன்தான் முத்தன். சீவன்முத்தன் என்பவன் உடற்கூற்றில் கட்டுப்பட்டவன் போல காட்சியளிப்பான். ஆனால், உண்மையிலேயே அவன் பாச, பந்தத் தளைகளை அறுத்திருப்பான். ஆனாலும், ஒருநாள் அவன் செத்துத்தான் போவான். ஆனால், அவ்வாறு செத்துப்போன இவனை சீவன்முத்தன் என்றும் விதேக முத்தியை அடைந்துவிட்டான் என்றும் நாம் சொல்லலாமா, நீங்களே சொல்லுங்கள். அதாவது நம்முடைய கர்மவினைகள் அனைத்தும் ஒழிந்தபிறகு உடல் தானாகவே கழன்றுகொள்ளும். இந்நிலையில் அவனுக்கு உடல் இறக்கிறது, இறந்து கொண்டிருக்கிறது என்பதுகூட தெரியாது. அவனது சீவான்மா விதேக முத்தியை அடையும் என்பார்கள் அறியாமை ஞானிகள். உடல் கழல்கிறது என்றால் அது இறப்பாகிய சாதலே தவிர, முத்திப்பேறு என்று சொல்வதிற்கில்லை. என்றால், இந்த இறப்பை கைவல்ய முத்தி என்கிறார்கள்.
இதைத் தாயுமானவர் அடியோடு மறுக்கிறார்.
உலகவர்போல் சடலம் ஓய, உயிர் முத்தி
இலகும் எனல் பந்த இயல்பே பராபரமே
எல்லோரையும் போல உடல் ஓய்ந்து விழுந்து பிணமானபின், அந்த உடலைப் பிரிந்த உயிர் தனித்துச் சென்று முத்தியடையும் என்று கூறுவது பந்தங்களின் இயல்புதான் என்றே மறுக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத சமய, மதவாதிகள் “இந்தத் தேகம் சடந்தானே ; இது விழுந்தே தீரும். இத்தேகத்தில் பக்குவப்பட்ட ஆன்மா இத்தேகம் நழுவும்போது இதை விடுத்துச் சூக்கும தேகத்தில் நின்று முத்தியடையும்” என்றே அடம்பிடிக்கிறார்கள்.
இப்ப நாம் ஒரு முக்கிய பிரம இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் போகிறோம். நம்மிடம் ஐந்து வகையான அவத்தைகள் உண்டு. இந்த அவத்தைகளை அனுபவிக்காத மனிதர்களே இல்லை. அவத்தை என்றால் துன்பம் என்று பொருள். இந்த ஒவ்வொரு அவத்தையிலும் நம்முடைய உயிரானது ஒவ்வொரு இடத்திற்குச் சென்று, அவ்விடத்திலேயே ஊன்றி நிற்கும். அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். ஐந்து அவத்தைகள் என்பது, நனவு (சாக்கிரம்), கனவு (சொப்பனம்), சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பவைகளாகும்.
- உயிர் பதினாக்கு கரணங்ளோடு புருவ மத்தியில் நிற்கும்போது நமது தூல தேகம் செயல்வடிவில் இருக்கும். இது நனவு நிலை. சாக்கிரம்.
- கனவு (சொப்பனம்) நிலையில் உயிரானது நான்கு கரணங்களோடு நமது கண்டத்தில் நின்று கொண்டிருக்கும். அப்போது உடலானது சூக்கும வடிவில் காணப்படும்.
- சுழுத்தி நிலையில் உயிரானது இரண்டு கரணங்களோடு (மனம், புத்தி) இருதயத்தில் நின்று கொண்டு, கரு உடம்பாக காட்சியளிக்கும்.
- துரிய நிலையில் உயிரானது உந்திக்கமலத்தில் நின்றுகொண்டு, உடல் கஞ்சுக உடம்பாக அதாவது நுண்ணுடம்பாக இருந்து கொண்டிருக்கும்.
- துரியாதீத நிலையில் உயிரானது காரண உடம்பில் நமது உயிரின் மூலாதாரத்தில் நின்று கொண்டிருக்கும்.
இப்படி புருவ மத்தியிலிருந்து மூலாதாரம் வரை கீழே இறங்குவதும் படிப்படியாக மேலேறிப் புருவ நடுவிற்கு வருவதுமாக நமது ஆன்மா இயங்கிக் கொண்டிருக்கும். புருவ மத்தியிலிருந்து மூலாதாரம் வரை உள்ள இடங்கள் எல்லாம் நமது திருவடிகளாகிய கண்களுக்குள் இருக்கிறது. யோக சாத்திரங்கள் சொல்லும் கீழ் ஆதாரங்களை இங்கே எடுத்துக் கொள்ளக் கூடாது. மேல் ஆதாரங்களை பிரமஞானத்தை கொடுக்கக் கூடியவைகளாகும்.
நமது தேகத்தில் ஜீவனாகிய உயிர் இருக்கும் இடங்கள் ஐந்தாகும். அதில் இரண்டு இடங்கள் மிகவும் முக்கியமானவை என்கிறார் வள்ளற்பெருமான். 1. சிரசு, 2.கழுத்து. கழுத்தில் இருக்கும் ஜீவன் இறந்து போய்விடும். ஆனால், சிரசில் இருக்கும் ஜீவன் இறக்காமல் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கும். இந்த சிரத்தில் அதாவது நமது தலைக்குள்ளே சிரநடுவுள்ளே அண்ணாக்கு மேலே இருக்கும் பிணியல் சுரப்பி இருக்கும் இடத்தில் இருக்கின்ற உயிர்க்கூட்டை நோக்கித்தான் நம்முடைய அனைத்து செயற்பாடுகளும் பிரயத்தனங்களும் சதா இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதாவது நமது பிரம்மாஸ்திரத்தை இந்த சிரநடுவுள்ளே இருக்கும் உயிர்க்கலையை நோக்கியே எய்து கொண்டிருக்க வேண்டும். இதுதான் ஆதித் தமிழ்ச்சித்தர்கள் கற்றுக் கொடுத்த பிரமஞானத் தவம் என்பது.
மண்மேல் யாக்கை விழுமாறும் வந்து உன்கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமைசால அழகுடைத்தே
என்றார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில்.
சமய, மதவாதிகள் பலபேர் பரமுத்தி நிலையில் தூலத்தை விட்ட ஆன்மா, சூக்கும தேகம், காரண தேகம் போன்ற உடம்புடன் சிவனடியைச் சேர்ந்துவிடும் என்று அறியாமையில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். பிறவிக்கு ஏதுவாகாத நிலையில் மலம் அழிந்து போய்விட்டால், பிறகு ஆன்மா நம் தேகத்தைவிட்டு பிரிந்து போகாமல் தேகத்திற்குள்ளேயே தங்கிவிடும். பிரிந்தது என்றால் அந்த தூலத் தேகத்தை பிணம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.
ஆன்ம லாபம் என்பது உண்மை முத்தி நிலையில் கிடைக்கும் மிகப்பெரிய சிவானுபவம். ஆன்ம ஞானசித்தியும், சுத்த ஞான சித்தியும் கைவரப்பெற்ற பெரியோர்கள் சிவத்துவத்தை அடைந்து பேரின்ப உணர்வு கொண்டு சிவானுபவத்தில் திளைத்து நின்ற அனுபவங்களை முழுமையாக சொல்ல முடியாது, தம்மோடு உடன் இருப்பவர்களிடம் ஒருசிறிது விளக்கி நிற்பார்கள்.
ஒருமுறை வடலூரில் தருமச்சாலையை வள்ளற்பெருமான் அமைத்து சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது தம்முடன் அருகில் இருந்த ஆடூர் சபாபதி குருக்களை நோக்கி, “சுத்த ஞானிக்கு அடையாளம் என்ன?” என்று கேட்க, குருக்களே விடைதெரியாது முழிக்க, உடனே அடிகள் சாலையை விட்டு வெளியே வெயிலுக்கு வந்து தான் போர்த்தியிருந்த மேல் வேட்டியைக் களைந்து விட்டு நின்றார். அப்போது அவரின் உடலின் நிழல் தரையில் விழவில்லை. அந்நிழல் விழாததைக் காட்டி, “இதுவே சுத்த ஞானியின் அடையாளம்” என்றார். இதுதான் பிரம முத்தி நிலை.
மற்றொரு சமயம் வள்ளற்பெருமான் தருமச்சாலையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, யாரோ அடையாளம் தெரியாத புது மனிதர்கள் பிரசங்கத்தை மிகவும் உருக்கமாகக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ணுற்ற வேலாயுத முதலியார் அவர்கள் பிரசங்கம் முடியும் தருவாயில் அந்நாளில் சிறுவராக இருந்த வீராசாமி ரெட்டியாரைச் சுவாமிகளிடம் அனுப்பி, வந்தவர்கள் யார் எனக் கேட்கச் சொன்னார். இதை உணர்ந்து கொண்ட வள்ளற்பெருமான், “ஏன் காணும் ! முதலியாரப்பா கேட்கச் சொன்னாரா? முன்புறம் நின்று கொண்டிருந்தவர்கள் யோக சித்தர்கள், பின்புறம் நின்று கொண்டிருந்தவர்கள் ஞானச் சித்தர்கள். இவர்கள் எல்லாம் குளிகை மணி கொண்டு ககனமார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார்கள். சுத்த ஞானியின் சந்நிதானத்தில் இவர்களின் குளிகை மணிக்கு ஆற்றல் இல்லாமல் போய்விட்டது. அதனால் அவர்கள் இங்கு வந்து விடைபெற்றுச் சென்றார்கள்” என்றார். “அவர்கள் இப்போது எங்கே?” என்று வீராசாமி அவர்கள் கேட்க, வள்ளற்பெருமானோ, “இந்நேரம் அவர்கள் காசியைத் தாண்டியிருப்பார்கள்” என்றார்.
இவையெல்லாம் வள்ளற்பெருமான் அவர்தம் வாழ்நாளில் அனுபவித்த சுத்த சன்மார்க்க சத்திய ஞான அனுபவங்களாகும். மற்றவர்களிடம் இந்த ஞான அனுபவங்கள் இல்லாமைக்குக் காரணம் அவர்கள் வள்ளற்பெருமான் அடைந்த பிரமமுத்தி நிலையை அடைந்திருக்கவில்லை என்பதால்தான்.
இந்த பிரமமுத்தி நிலைகளில் நம் தேகம் என்ன நிலைகளை அடையும் என்றால், நமது அசுத்த பூதகாரிய உடம்பானது பிணமாகாமல் சுத்த பூதகாரிய சுத்த உடம்பாக மாறிவிடும். எலும்பால் இந்த தேகம் பொன் உருவமாக, சுத்த தேகமாக, நித்திய தேகமாக மாறிவிடும். நரை, திரை, மூப்பு முதலிய அசுத்தங்கள் நம்மை தீண்டாது. மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களினால் நமது தேகத்திற்கு அழிவு ஏற்படாது. இப்படிப்பட்ட சுத்த தேகம்தான் அடுத்த கட்டமைப்பான பிரணவ தேகமாக மாறும்.
அப்போது அந்த பிரணவ தேகத்தை கண்களால் பார்க்கலாமே தவிர, அத்தேகத்தை நம் கைகொண்டு பிடித்துவிட இயலாது. இதைத்தான் ஓமயத் திருவுரு என்றும் அருள் உருவம் என்றும் நம் முன்னோர்கள் அருளியுள்ளார்கள். இதற்கு வான்வடிவம் என்றும், இன்புருவம் என்றும் பெயராகும். ஆகாயம் போன்று கண்களுக்குப் புலப்படாது இறைவடிவத்தோடு, இறையொளியோடு நம் தேகம் கலந்து கரைந்துவிடும். இந்த முத்தி நிலையைத் தான் பிரம முத்திநிலை என்றும் வான் கலத்தல் எனவும் கூறப்படும். இந்நிலைதான் கடவுள் மயமாகுதல் எனும் பிரமமுத்திப் பேறு.
வள்ளற்பெருமான் தவம் செய்து மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றார் என்பதற்கு ஆதாரமான பாடல்கள், அவர் திருவாயால் பாடியது இதோ.
திருவருட்பா 6ஆம் திருமுறை
106. சுத்த சிவநிலை
- கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் – பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து. - பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் – காலும்
தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
நிலையும் கொடுத்தான் நிறைந்து. - நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் – ஊனே
புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து. - ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு
நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் – நன்றேமெய்ச்
சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி
பத்திஎலாம் பெற்ற பலன். - சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார
நித்த வடிவும் நிறைந்தோங்கு – சித்தெனும்ஓர்
ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்
தானவிளை யாட்டியற்றத் தான். - நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் – நானே
அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு. - சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற்காட்ட நேராவே – நேத்திரங்கள்
சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணம் என்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து.
மரணமிலாப் பெருவாழ்வு
ஞான சரியையின் முதற்பாடல் :
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்து அரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே
இந்த ஞானசரியை நெறியைக் கைக்கொண்டபோது, இறைவன் தமக்கு மரண சுவை தவிர்க்கும் கற்பத்தைக் கொடுத்தருளினான் என்கிறார். நினைத்தலும், உணர்தலும், நெகிழ்தலும், அன்பே நிறைதலும் கரணங்களின் காரியங்கள். இவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. அத்துடன் ஒன்றால் ஒன்று விளையக் கூடியவையாக உள்ளன. இவை முகிழ்த்த நிலையில் திருவடிகளாகிய கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாகப் பெருகிக் கொண்டு ஓடிவரவேண்டும். கார்பூத்த கனமழைபோல் கண்ணீர் கலுழ வேண்டும். கண்ணீர் பெருகிக் கால் வழிந்தோட வேண்டும். இது ஆன்ம காரியமாகும்.
இந்நிலைப்பாடு தேகத்தில் திருவடிகளில் நடந்து கொண்டிருக்கும்போது, அங்கே திருவடிகளுக்குள் மெய்யுணர்வு பிறக்க ஆரம்பிக்கும். நன்றாக கவனிக்க வேண்டும். மெய்யுணர்வுகள் என்பது எப்படி இருக்கும் என்றால், உடலெங்கும் பூப்பூத்ததைப் போல மலர் மணம் வீசுவதைப் போல, தென்றல் தேகத்தை மிருதுவாக, மென்மையாக வருடியதைப் போல வருடிக்கொண்டு மயிர்க்கூச்செறியும் உணர்வு சிலிர்த்துக் கொண்டே வரும். அதுதான் மெய்யுணர்வு. இது பிரமஞானத் தவத்தின்போது சாதகனுக்குள் நிகழக்கூடிய ஞான அனுபவங்களாகும். இந்நிலையின்போதுதான் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து உடலை நனைக்க ஆரம்பிக்கும்.
நம் தேகத்திற்குள் மெய்யுணர்வுகள் கொஞ்சம், கொஞ்சமாக பெருகிக் கொண்டே வந்து, ஒருகட்டத்தில் அவை இடது திருவடியின் அமுதக்கலைகள் வலது திருவடியின் காந்தக் கலையோடு ஒன்றோடு ஒன்று கலந்து, கலந்து, இணைந்து, இணைந்து, கலப்புறுதல் நடைபெற ஆரம்பிக்கும். அப்போது திருவடிகளில் சொக்கிப் போய் விக்கித்து, அந்த இன்பத்திலிருந்து மீளமுடியாமல் விழிகளை மூட முடியாமல் பார்வை நிலைக்குத்திப்போய் மெய்ப்பொருளையே சாதகன் உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பான். இதைத்தான் இறைவனோடு புணர்தல் என்றார்கள் பிரமஞானிகள்.
இறைவனோடு புணராமல் இறைவனின் அருட்கலைகளை அள்ளிப் பருகவே முடியாது. நீங்கள் இறைவனோடு புணரும்போதுதான் அருட்கலைகள் நம் உயிருக்குள்ளிலிருந்து வெளிப்படும். அவ்வாறு இறைவனின் திருவருட்கலைகள் ஒளியாக வெளிப்பட்டு, நாம் பரவச மயிர்க்கூச்செறியும் உணர்வில் திளைத்துக் கொண்டு இருந்தோமல்லவா, அந்த மெய்யுணர்வுக் கலைகளோடு புணர ஆரம்பிக்கும். இவை தானாக நடக்கும் திருக்கூத்து. திருக்கல்யாணம்.
பிரமஞானத் தவத்தை மிகச் சரியாக செய்து வந்தீர்களென்றால், இப்புணர்தல் கண்டிப்பாக ஒவ்வொருக்கும் நடந்தே தீரும். அவ்வாறு இறை அருட்கலைகளை மெய்யுணர்வுக் கலைகளோடு இணைத்து புணர வைத்துவிட்டால், இந்த இறை அருட்கலைகள் நம் தேகத்திற்குள் காரியப்பட்டு நம் பூத உடம்பை பொன்னுடலாக்கி பொலிய வைத்துவிடும். உடலின் ஒவ்வொரு செல்களையும் பிரமஞானத் தவத்தினால் ஒளியாக, ஒளி அணுக்களாக மாற்றிக் கொண்டே வர வேண்டும் என்பதுதான் பிரமஞானிகள் சொல்லியுள்ளார்கள்.
ஆனால், எம் குரு பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியோ இமயமலையில் இத்தவத்தில் அடியேன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, மேற்கண்டவாறு இறைவனோடு புணர்தலைச் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இதை நன்றாக எம் குரு கண்ணுற்றார். பின் தவத்தில் எழச் செய்யாமல், “மகனே, நான் சொல்வதைக் கேள். ஆனால், எழுந்துவிடாதே. தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்து கொண்டே செல். இப்போது உனக்குள்ளாக உன் உயிரானது உம்முடைய இறைவனோடு புணர ஆரம்பித்துள்ளதா?” என்றார்.
எம் உயிருணர்வானது எம் குருவுக்கு தனித்துப் பதில் சொல்ல ஆரம்பித்தது. “சரி மகனே, இப்போது அந்த பரவச மெய்யுணர்வுகள் எங்கே கிளம்புகின்றன என்பதை நன்றாக பிரமநாடிக்குள் உற்றுப்பார்” என்றார். யாமும் சுடராழித் தவத்தை நுணுக்க ஆரம்பித்தேன். அப்போது திடீரென்று ஒரு பெரு ஒளி தோன்றி வட்டவடிவாகவும் அதற்குள் தள, தளவென்று ஒரு பொன்னிற சோதி ஆடாமல் அசையாமல் சுடர் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். களிப் பேருவகை கொண்டேன். இந்த பெருஞ்சோதிக்கு மேலிருந்து ஒரு வெண்ணிற ஒளியானது கொஞ்சம், கொஞ்சமாக கீழிறங்கி, கீழிறங்கி வர ஆரம்பித்தது.
குருவிடம் எம் உயிர் பேச ஆரம்பித்தது. “அந்த வெள்ளொளியும், பொன்னொளியும் கலக்கிறதோ, அதன் ஆரம்பப் புள்ளியை நன்றாக உற்றுப்பார்த்து வா” என்றார். அவ்வளவுதான் அதை உற்றுப் பார்க்க ஆரம்பிக்க அந்த இரு ஒளிகளும் எம் முகத்தை நோக்கி பாம்பு படமெடுப்பதைப் போல தலையை தூக்கிப் பார்க்க ஆரம்பித்தன. உள்ளுக்குள் பயமில்லை, ஆனந்தப் பரவசம் அதிகமாகிக் கொண்டே போய்க் கொண்டிருந்தது. “இந்த உயிரொளியையும் சிவவொளியையும் சதா கலந்து புணர்ந்து கொண்டே வரவேண்டும். அங்கேயே நிலைத்து நின்றுவிடு” என்றார். நேரம் கடந்து கொண்டே இருந்தது.
கிட்டத்தட்ட 7 மணி நேரம் இருக்கும். தவத்திலிருந்து எழவே இல்லை. அப்போது திடீரென்று எமக்குள் மூச்சடங்கி, இதயத்துடிப்பு குறைந்து ஒரு மயக்க நிலையை அனுபவிக்க ஆரம்பித்தேன். இது கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஆகியிருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வளவுதான். எம் உயிர் எமக்குள் ஆனந்தக் கூத்தாடி தோம், தோம் என்று ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. வேறெந்த நினைவும் இல்லை. அங்கே யாமும் எம் உயிரும் மட்டும்தான் இருந்தோம்.
சிவவொளியானது சிறிதுநேரத்தில் எம் உயிரோடு வந்து இரண்டறக் கலக்க ஆரம்பித்தது. நான் கரைந்து போக ஆரம்பித்தேன். உருகிக் கொண்டிருந்தேன். எமக்குள் சிறிது சிறிது குளிர்வெப்பம் பரவுவதை எம் தேகத்தின் தொடுவுணர்கள் உணர்த்திக் கொண்டிருந்தன. மெல்ல மெல்ல சுவாசம் தேகத்திற்குள் அடங்க ஆரம்பித்தது. அப்போது சிவவொளியிலிருந்து ஒரு சத்தம், நாதம் எம் உயிரை ஆலிங்கம் செய்ய ஆரம்பித்தது. அது மகாமந்திரத்தின் ஓசை. உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் எம் உயிர் அந்த மகாமந்திரத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அதுவும் மகாமந்திரத்தில் மூழ்கித் திளைக்க ஆரம்பித்தது. அவ்வளவு தான்.
இனி வீடென்ன, காடென்ன, பதவியென்ன, ஆசையென்ன, காமமென்ன, மோகமென்ன, அதுவென்ன, இதுவென்ன எல்லாம் தேவையில்லை எல்லாம் தேவையில்லை எல்லாம் தேவையில்லை என்று உயிர் சொல்ல ஆரம்பித்தது. எம் உயிருக்கோ ஆனந்தத்திலும் பேரானந்தம். அப்போது பட்டென்று எம் உச்சந்தலையில் யாரோ அடித்தது போலிருந்து. அவ்வளவுதான் இந்த அத்தனை பேரானந்தமும் சட்டென சூரியனைக் கண்ட பனிநீரைப் போல மறைந்து போனது. பார்த்தால் எம் முன்னால் குரு. “ஏண்டா பையா, உன்னை யாருடா சமாதி நிலைக்குப் போகச் சொன்னது, போனியே ஏண்டா வெளியே வரல” என்றார்.
“குரு, நான் எங்க சமாதிக்குப் போனேன். இறையோடு கலந்து கொண்டிருந்தேன் குருவே” என்றேன். இது 11 ஆண்டுகள் ஆகின்றன.
அப்போதுதான் குரு எம்மிடம், “மகனே, இதுதான் சமாதி நிலை, நீ சமாதியையும் தாண்டி நிர்விகல்பகத்திற்குள் மூழ்க ஆரம்பித்துவிட்டாய். உனக்கு சமாதியிலிருந்து உள்ளே போகவும் தெரிய வேண்டும், வெளியே வரவும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் தேகம் கரைந்துவிடும். அதென்ன உனக்கு நான் சமாதியைக் கற்றுக் கொடுக்கவே இல்லையே. பின் எப்படி நீ உள்ளே சமாதிக்குள் ஆழ்ந்தாய்?” என்றார்.
“குருவே, மன்னித்து அருளுங்கள். உங்களை கேட்காமல் நான் எதை இதுநாள் வரை செய்தேன். ஒன்றுமில்லையே. ஆனால், தெரியவில்லை குரு. இந்த இறைப்புணர்தல் என்னை என்னமோ செய்துவிட்டது. அதனால்தான் என்று நினைக்கிறேன்.” உடனே எம் உயிர் குருவிடம் பேச ஆரம்பித்துவிட்டது. “இல்லை அய்யா, சிவநேசன் சமாதிக்குள் வரவில்லை. அவன் சமாதிக்குரிய இலக்கணங்களை கற்றுவிட்டான். ஆனால், அவைகள் சமாதியின் இலக்கணங்கள் என்று அவனுக்குத் தெரியாது. நீங்கள் அருகில் இருக்கிறீர்கள் என்ற காரணத்தால் நான்தான் இவனை சமாதிக்குள் ஆழ்த்தினேன். வேறொன்றுமில்லை. ஆனால், கரும்புத் தின்ன கூலியா என்பதைப் போல ரொம்பத்தான் சுவைக்க ஆரம்பித்துவிட்டான்” என்றது.
இதைக்கேட்ட குரு “இனி அவ்வாறு நிகழக் கூடாது. சமாதியில் ஆட்படும்போது உடன் ஒருவர் கண்டிப்பாக துணைக்கு இருக்க வேண்டும். தேகத்தைக் காப்பாற்றுவதற்காக. நான் சதுரகிரி மலையில் சமாதியில் ஆளும்போதெல்லாம் இவன்தான் உடனிருந்து ஒரு தாயைப் போல, பூதகணங்களைப் போல என் தேகத்தைக் காத்து நின்றான். இவனுக்கு அப்படியொரு சீடன் கிடைக்கும்போது அதைப்பற்றி பார்த்துக் கொள்ளலாம். இனி சமாதி என்று இவனை நீ சமாதி ஆக்கிவிடாதே. இது என் ஆணை” என்றாரே பார்க்கலாம். எம் உயிர் அப்படியே ஒடுங்கிக் கொண்டு “அப்படியே ஆகட்டும் அய்யா” என்றது.
இதைப்போல எண்ணற்ற விசயங்கள் எமக்குள் குருவுக்கும் இடையே நடந்துள்ளது. பிரமமுத்தி என்ற தலைப்பை இங்கே நாம் எடுத்தக் காரணத்தால் மேற்கண்ட நிகழ்வைச் சொல்ல வேண்டியதாயிற்று. எல்லோரும் சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறாக இறை அருட்கலைகள் நமது மெய்யுணர்வுகளோடு புணரும் சமயத்தில், அந்த அருட்கலைகள் நம் தேகத்தில் காரியப்பட்டுப் பூதவுடம்பு பொன்னுடலாகிப் பொலியும் ; ஒளி உடம்பாக ஓங்கும் ; சுத்த தேகமாக மாறும் ; சுவர்ண தேகமாக ஒளிரும் ; நித்திய தேகமாக நிலைக்கும் ; அன்புருவாக அமையும். இத்தேகம் நழுவாமல் நித்தியமாக என்றும் நின்று நிலவிக் கொண்டிருக்கும். அதன்பின் ஓமயத்திரு உருவமாக மாறிடும். அதற்குமேல் ஞானதேகமாக, வான் வடிவமாக, இன்புருவாக மாறிக் கடவுள் வடிவிற் கலந்து அம்மயமாகி கடவுள் மயமாகும். இதுவே ஒப்பற்ற பெருவாழ்வு. இதுவே உண்மையான பிரம முத்திநிலை.
இதற்கெல்லாம் மூலமாக உள்ளது கரணங்களின் திறம் என்பதைத்தான்,
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே (தி.அ.6, 1-1327)
எனவே, நமது பொற்சபையில் புகுந்து, சிற்சபையில் கண்டு, பொற்சபையையும் சிற்சபையையும் சேர்த்துவித்து, நம் உயிருக்குள்ளே இருக்கும் கனகசபை எனப்படும் சிவப் பழம்பொருளை கண்டுவிட்டால், ஆனந்தக் கள் ஊறிவரும். அந்த கள்ளைக் குடித்து பேரின்பம் கொள்ள வேண்டும். இக்கள் என்றும் இறவாத நிலையில் இருத்தும் கள்ளாகும். இக்கள்ளை உண்டால் என்ன நடக்கும் என்றால்,
கள்ளுண்டான் எனப்புகன்றார் கனகசபை நடுவே
கண்டதுண்டு சிற்சபையில் உண்டு அமுதுண்டு அடிநான்
எள்ளுண்ட பலவிடயத் திறக்குங்கள் என்றே
என்றும் இறவாநிலையில் இருத்துங்கள் (தி.அ.6, 82-12)
எனவே, வள்ளற்பெருமான் அவர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்க நிலையனுபவம் பெற்று உண்மை பிரம முத்திநிலையை அடைய வேண்டியே பொற்சபைக்கும் சிற்சபைக்கும் வந்து சேருங்கள் என அழைத்தார். இதுவரை சுத்த சன்மார்க்கத்தில் ஆன்மாவானது, தூல தேகத்தில் நின்று இந்திரிய ஒழுக்கத்தாலும், கரண ஒழுக்கத்தாலும், ஜீவ ஒழுக்கத்தாலும், ஆன்ம ஒழுக்கத்தாலும் பக்குவப்பட்டு, அவனருளால் திருவடிகளில் இருக்கும் மும்மலத் திரைகள் நீங்கப் பெற்று, தூலதேகம் சுத்த தேகமாகி, உயிர் அனுபவமுற்று, அருள் அமுதம் உண்டு பிரணவ தேகத்தில் நின்று, அருள் அனுபவத்தை பெற்றுக் கொண்டு, அருட்சத்தியால் உயிருக்குள் இருக்கும் சிவப்பழம்பொருளைப் புணர்ந்து, சிவானுபவத்தில் திளைத்துப் பேரின்பப் பெருவாழ்வில் ஞான தேகம் சித்திக்க, திருவடியின் மெய்ப்பொருள் புணர்ந்து, சிவமாகி சிவ வல்லப சித்தி உடையதாய் விளங்கி சிவானுபவச் செல்வமாகி, சுத்த சிவதுரியாதீதத்தே என்றும், எங்கும், சுத்த சிவமயமாய், அருட்பெருஞ்சோதியாய் நிறைந்திருக்கும் நிலையே சுத்த சன்மார்க்க முத்திப்பேறு. இதுவே ஒப்பற்ற மகாகாரணமான பிரம முத்திநிலை ஆகும்.
வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும் கொல்என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல் என்நந்தியை
நான்நின்று அழைப்பது பிரமஞானம் கருதியே (தி.ம.30)
பூமிக்கு மழைநீர் அவசியம். அதை வா என்று அழைத்தால் வந்துவிடாது. மழை பொழிய வேண்டுமென்றால், முதலில் மேகங்கள் உண்டாக வேண்டும், பின் அம்மேகங்கள் கருக்க வேண்டும். அதன்பின்னே மழையை வருவிக்க முடியும். அதுபோல இறைவனை வா என்று அழைத்தால் வரமாட்டான். அவன் அருளைப் பெறுவதற்கு மனிதர்கள் தயங்கியபடியேதான் இருக்கிறார்கள். பாலை உண்ண பசிக்காக கன்றுக்குட்டி ம்மா……. என்று தாய்ப்பசுவை அழைத்ததும், எப்படி தாய்ப்பசு குட்டியை நோக்கி ஓடி வருகிறதோ, அதைப்போலவே பக்குவப்பட்ட ஆன்மாக்கள் இறைவனின் பிரமஞானப் பெறுவதற்காக தவத்தில் நின்று அழைக்கும்போது, தாய்ப்பசுவாக, வான்மழையைப் போல இறைவன் ஓடோடி வந்து நமக்கு பிரமஞானத்தை நல்கிடுவான் என்று சொல்லி, இப்பேருரையை இனிதாய் முடித்து இந்த ஞானவுரையை கேட்ட அனைத்து ஆன்மாக்களும் பிரமமுத்தி நிலை அடைந்து இறையோடு ஒளியாக கலந்து ஞான ஒளியுடலைப் பெற்றிட வேண்டும் என்று எம் சற்குருவையும் குருவையும் வேண்டிக் கொண்டு, ஆசிர்வதித்தும் வாழ்த்தியும் அமைகின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
திருச்சிற்றம்பலம்


