
ஒளிதேகம் பெற்ற
மகா சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களின்
பிரமஞான ஆசியுரை
கைலாச பருவம், இமயமலை
சதுரகிரி மலை. கிழக்கே ஆதவன் மலர ஆரம்பித்துவிட்டான். கீழ்வானம் சிறுவெளிச்சம் காண ஆரம்பித்தது. குயிலினங்கள் அதன் அழகு குரலிசையால் இறைவனைக் கூவி அழைக்க ஆரம்பித்தன. பறவைகள் தன் சிறகுகளை விரித்துக் கொண்டு வானை அளக்க வட்டமிட்டுப் பறக்க ஆரம்பித்தன. மயில்கள் அதன் நீள்தோகைகளை விரித்து பெண் மயிலை ஆட்டம் போட அழைத்துக் கொண்டிருந்தன. அருவிகளின் நீரோடும் சலசலப்பு சத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தன. கருங்குருவி முதல் கானத்தை இசைக்க ஆரம்பித்துவிட்டது. மேகங்கள் இல்லா வானம் செம்மையாக – பொன்னிறமாக காட்சிக் கொடுக்க ஆரம்பித்தன. அடர்ந்த காடு. நெருங்கி ஓங்கி வளர்ந்த மரங்கள். சூரிய வெளிச்சத்தைப் புறந்தள்ளும் அளவுக்கு நெருக்கம் காட்டி நின்ற அம்மரங்கள், அவ்வப்போது சிறிது சூரிய வெளிச்சத்தை உள்வாங்கவும் செய்தன.
அதிகாலையின் அழகுகளை இரசித்துக் கொண்டு ஒரு இளைஞன் ஒரு பானையில் அருவியில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து, என் தலைமீது வார்க்க ஆரம்பித்தான். அதன்பின் சந்தன மகாலிங்கத்தின் திருமேனிமீது நீர் வார்த்தான். அந்நீர் போதாதென்று பலமுறை என்மீதும் அவ்லிங்கத்தின்மீது நீரை ஏதோ ஒரு மந்திர சுலோகத்தை உச்சரித்த வண்ணம் கொட்டிக் கொண்டிருந்தான். நீர் கொட்டி முடிந்ததும் என் உடலை ஒரு வேட்டித் துணியால் நன்றாக துடைத்து விட்டும், அடுத்து அவ்லிங்கத்தை வேறு வேட்டித் துணியால் நன்றாகத் துடைத்துவிட்டும் சந்தனக் கட்டையில் தேய்த்து எடுத்த நறுமணம் கமழும் சந்தனத்தை கைவிரல்களால் வாரியெடுத்து, மூன்று பட்டையாக என் நெற்றிமீதும் அத்திருமேனி மீதும் போட்டு முடித்து, நடுவே குங்குமப் பொட்டு வைத்து, காட்டு மலர்களைப் பறித்து வந்து என் தலைமீதும், அவ்லிங்கத்தின் தலையுச்சியிலும் வைத்து அழகு பார்த்து நின்றான். பின் அருகிலிருந்து நெய் தீபத்தை ஏற்றி வைத்து என்னைப் பார்த்து கண்மணிப் பதிகத்தையும் சந்தன லிங்கத்தைப் பார்த்து சிவபுராணத்தையும் திருப்பள்ளியெழுச்சியும் பாட ஆரம்பித்தான்.
அதன்பின் அவன் சில பழ வகைகளை இருவருக்கும் நிவேதனமாகக் கொடுத்து விட்டு பிரமஞானத் தவத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். எம் திருவடிகளைத் தொட்டு வணங்கியபடி நிற்க, யாமும் அவ்விளைஞனை பரிபூரணமாக ஆசிர்வதித்து, பிரமஞானத் தவத்தின் சூக்குமங்களை நாள் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அவனின் உயிருக்குள் விதைத்து வர ஆரம்பித்தோம். இது தினந்தோறும் நிகழ்ந்து வரும் ஞான நிகழ்வுகளாகும். முதலில் யாம் அவனுக்கு திருவாசகத்தின் மெய்ப்பொருளைத்தான் போதிக்க ஆரம்பித்தோம். அடுத்து திருமந்திரத்தையும் ஸ்ரீ வித்தை மார்க்கத்தையும் போதித்து அவற்றில் சித்தி பெற வைத்தோம்.
அவனின் தீராத வேண்டுகோளுக்கிணங்கவே இத்திருவாசகத்தின் அற்புதமான ஞானங்களை உங்களுக்காக உலக உயிர்களின் நன்மைகளுக்காக உயர் ஆன்மாக்களின் ஞானப் பசிக்காக வெளியிடத் துணிந்தோம். திருவாசகத்தின் ஞானத்தை ஒருவர் உணர்ந்து படிக்க ஆரம்பித்தாலே போதும், அவர் பிரமஞானத்தை அடைந்துவிட. அந்தளவுக்கு உயர் ஞான இரகசியங்களை அள்ளி அள்ளி இவன் கொடுத்திருக்கின்றான். எனக்குத் திருவாசகம் நிரம்பப் பிடிக்கும் என்பதாலும் அது என் கனவு நூல் என்பதாலும் இவன் ஆற்றிய குருதொண்டு சொல்லில் வடித்துவிட முடியாது. இதற்காக அவன் தன் சொந்த வாழ்க்கையையே பணயம் வைத்தான். அதில் அடைந்த துன்பங்கள், காயங்கள், வலிகள் அவனுக்கு யாம் வைத்த பரிட்சைகளாகும். அதில் அவன் கொஞ்சம்கூட கருணையே இல்லாமல் வென்று காட்டிவிட்டான். இனி அவன் விரைவில் எம்மிடம் வந்து சேர்வான். எங்கள் குருபரம்பரையின் அத்தனை குருமார்களும் அந்த அளவுக்கு பரிபூரண பூரணாபிசேக ஆசிர்வாதத்தை இவனுக்கு வழங்கிவிட்டார்கள். அவன்தான் என் சீடர்களில் தலைசிறந்த சீடனான ருத்ர ஷிவதா, இந்நூலின் ஞான உரையாசிரியன்.
யானே பொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்து உறுமாறே.
(திருச்சதகம்-90வது பாடல்)
வினைகளைக் கொண்ட மனிதர்கள் இறைவனை வேண்டி அழுதால் அவனைப் பெறலாம் என்கிறார், மாணிக்கவாசகர். வினைகளைக் களைந்தெடுக்க மனிதன் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொடுக்க எவரும் தக்க குருவைத் தேடிக் கண்டடைவதும் இல்லை. அப்படியிருக்க மனிதன் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி மாயா வலைகளில் அகப்பட்டுக் கொண்டே செத்துக் கொண்டிருப்பானோ?
மேலே உள்ள பாடலைப் படித்தீர்களா? நன்றாக உள்வாங்கினீர்களா? திருவாசகத்தின் ஒவ்வொருப் பாடலும் பிரமஞானத்தை மறைத்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. ஆனால், அவற்றைக் கண்டெடுக்கும் கண்கள்தான் நமக்கில்லாது போயிற்றே. காரணம் நமது கண்கள் அத்தனையும் மும்மலங்களில் தோய்ந்துபோய் காணப்படுவதால்தான். கண்கெட்டப் பின் சூரிய உதயம் என்பார்கள் நம் முன்னோர்கள். கண் கெட்டுப் போனபின், சூரியன் உதயமானால் என்ன? ஆகாவிட்டால் என்ன? சூரியன் என்பது நமது உயிரொளி. உயிரையும் அதன் ஒளியையும் பார்க்க முடியாவிட்டால் நாம் அனைவரும் குருடர்கள்தான். உங்கள் உயிரைப் பார்க்காத – பார்க்க வைக்காத கல்வி இப்புவியில் இருந்தென்ன லாபம், சொல்லுங்கள். அதனால் மாணிக்கவாசகர், யானே பொய் என் நெஞ்சும் பொய் என்அன்பும் பொய் என்றார். ஆனால், வினைகளை உடைய நான் உன்னை நினைத்து அன்பால் உருகி நின்று அழுதுவிட்டால் உன்னைப் பெற்றுவிடலாமே என்றார்.
அன்பால் உருகி உருகி நின்று பிரமஞானத் தவத்தைச் செய்யும்போதுதான் இந்த எலும்பும் உருகிப் போகும் மடைமாற்றம் நிகழ ஆரம்பிக்கும். ஓ வென்று ஒப்பாரி வைத்து அழும் அழுகையை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. தவத்தால் அழுவதைச் சொல்கிறார். இது குருவல்லால் உங்களால் கண்டறிய முடியாது என்பதுதான் இக்காலத்தின் கொடுமையாக இருக்கிறது. காரணம் குருகுலம்தான் அழிக்கப்பட்டுவிட்டதே. அதன் விளைவுதான் இத்தனை வன்மங்கள், கொடூரங்கள், ஆசைகள், மோகங்கள், காயங்கள், வலிகள், துன்பங்கள், ஒழுக்கக் கேடுகள் எல்லாமே.
திருவாசகம் எம் சீடன் சொல்லியிருக்கும் நடையழகும் சொல்லழகும் உவமை அழகும் எடுத்துக்காட்டான திருமந்திர அழகும் இவனின் ஞானத்தை நமக்கெல்லாம் ஞானத்தின்பால் ஒரு ஈர்ப்பை உண்டாக்கிவிடுகிறது. திருவாசகத்தின் கருப்பொருளை மட்டுமே யாம் இவனுக்குப் போதித்தோம். இவனையும் அறியாமல் அதற்கான ஒவ்வொரு திருவாசகப் பாடலுக்கும் தக்க திருமந்திரப் பாடல்களை இவன் எடுத்து வந்து மலர வைத்திருப்பது திருவாசகக் கிரீடத்திற்கு மலர்மாலையைச் சூட்டியதைப் போலவே இருக்கிறது. திருவாசகமும் திருமந்திரமும் எமது இரு கண்கள் என்பதை இவன் உணர்ந்ததின் விளைவுதான் இவனின் அச்சாணி இவ்வாறு அமைந்திருக்கிறது. காலத்தால் திருமந்திரம் முன்னே தோன்றினாலும் திருவாசகம் அதற்குச் சளைத்ததல்ல என்பதை இவன் நமக்கு இந்த ஞானவுரையில் நிரூபித்திருக்கிறான்.
திருவாசகத்தின் ஞான மெய்ப்பொருளுரையை முதலில் பார்த்தவர் எமது ஞான சற்குருவான மகா அவதார் பாபாஜி அவர்கள்தான். இவன் இவ்வுரையை எழுத கடந்த பதினாறு வருடங்களாக எம்மிடம் யாசித்துக் கொண்டே இருந்தான். இந்நூல் பதினாறு வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. யாம்தான் அனுமதி மறுத்தோம். இதைப்பற்றி ஒருநாள் மாலை வேளையில் பாபாஜி அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது பேச்சு வந்தது. அப்போது அக்கூட்டத்தில் பதினொரு பிரமஞானிகள் அமர்ந்திருந்தார்கள். பேச்சு பிரமஞானத்தைத் தொட்டுக் கொண்டு திருவாசகத்தில் வந்து நின்றது. சிவத்தின் ஆணைக்கிணங்க அங்கே அந்த திருக்கூட்டம் பாபாஜி அவர்களின் தலைமையில் நடந்து கொண்டிருந்தது. அங்கே மாணிக்கவாசகப் பெருமானும் உடனிருந்தார். முடிவாக திருவாசகத்தின் கருப்பொருளை ஆதாரத்துடன் இவ்வுலகுக்கு வழங்கிட பாபாஜி அவர்கள் சித்தம் கொண்டார்கள்.
யார் திருவாசகத்திற்கு ஞானவுரையைச் செய்வது என்ற பேச்சு பல கேள்விகளாகப் போய்க் கொண்டிருந்தது. அப்போது யாம் திருவாசகத்தை உயிராகக் காதலித்துக் கொண்டிருந்தது பாபாஜியின் கவனத்திற்கு வர ஆரம்பித்தது. அவர் என்னிடம் கேட்டார்,
“என்ன சுந்தரானந்தா, நீ இதை செய்துவிடுவாயா? ஒளி தேகம் பெற்றுவிட்ட காரணத்தால் இதை மறுக்க மாட்டாயே?” என்றார்.
உடனே நான், “தங்கள் சித்தம் என் பாக்கியம் குருவே. ஒரு சிறு விண்ணப்பம்” என்றேன்.
“அப்படியா, ஆகா நல்லா சொல்லு சுந்தரானந்தா, என்ன சேதியை உள்ளே வைத்திருக்கிறாய்?” என்றார் பாபாஜி.
“சற்குருவே, ஒளிதேகத்தின் காரணமாக எழுதுகோல் எடுத்து எழுதுவது சிரமமான காரியம்தான். இருந்தும் இச்செயலை யாம் செய்து முடிப்போம். தாங்கள் அனுமதித்தால் என் மாணவனை வைத்து இதை நிறைவேற்றிவிடுவேன்” என்றேன்.
“என்னது, பிரமஞானத்தை அவன் அறிந்திருக்கின்றானா? தவம் செய்கிறானா? நித்திய விதிகளைத் தவறாது பின்பற்றி வருபவனா? உன் அருளுக்கும் நம்பிக்கைக்கும் பாத்தியப்பட்டவனா?” என்று பாபாஜி அவர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்.
யாமோ, “சற்குருவே, அகத்தியப் பெருமானும் அவனை நன்கறிவார். ஔவைத் தாயும் நன்கறிவார். இவர்கள் இருவரும் அவனுக்கு ஆசியை வழங்கி அவர்களின் ஞானத்தையும் அருளியிருக்கிறார்கள். எம்முடன் அவன் வாழ்ந்த இடங்களில் இத்தேகம் கல்பமாக எம் சுவாசமாக இருந்து குரு சேவை செய்தவன். அவனை இதற்கு பரிபூரணமாகப் பயன்படுத்தலாம். பொருத்தமாக இருப்பான்” என்றேன்.
பாபாஜியோ, “அப்படியா, உன் மாணவர்களில் ஒருவருக்கு குருபீடத்தை வழங்கினோமே, அவனையா சொல்கிறாய் சுந்தரானந்தா?” என்றார்.
“ஆமாம் குருவே, அவன்தான். நம் ஆதித்தமிழ்ச் சித்தர்களின் குருகுலத்தில் தலைசிறந்த மாணவன் பரமேசுவரன் என்கின்ற ருத்ர ஷிவதா” என்றேன்.
அந்நேரம் அங்கே ஒரு நிசப்தம் தோன்ற ஆரம்பித்தது. இளந்தளிர்களும் பூச்செடிகளும் காற்றின் வேகத்திற்கு ஏற்றபடி அசைந்தாடின. மெல்லிய மலைமாருதம் வீச அதன் நறுமணத்தில் நாங்கள் அனைவரும் ஜவ்வாதும் தாழம்பூவும் கலந்த ஒரு சுகந்தமான நறுமணத்தை உணர ஆரம்பித்தோம். ஒரு பொன்னிறப் பட்டாம்பூச்சி எங்கிருந்தோ பறந்து வந்து பாபாஜி மீது அமர்ந்தது. வண்டுகளும் தேனீக்களும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது யாரோ வேத விற்பன்னர்கள் அன்னை புவனேசுவரியின் பீஜாட்சரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருந்ததைப் போல இருந்தது. சற்றுத் தொலைவில் யானைகளின் பிளிறல் ஓசை கேட்க ஆரம்பித்தது. ஒரு ஞானி, “சிவு வருகிறான். அவனிடம் கேட்கலாம் குருவே” என்று பாபாஜியைப் பார்த்து மெல்ல தன் கருத்தை பதிவிட்டார் அவ்ஞானி. சிவு என்பது பழங்குடி மக்களிடையே வசித்து வரும் பாசமிகு ஆண் யானை. அம்மக்கள் அந்த யானை சிவு என்றும் சிவ் என்றும்தான் அழைப்பது வழக்கம்.
ஞானிகளின் கூட்டத்தின் நடுவில் சிவு மெல்ல மெல்ல நடந்து வந்து துதிக்கையைத் தூக்கி பாபாஜிக்கும் மற்ற ஞானிகளுக்கும் அதன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டது. சிவுவிடம் திருவாசகத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி யாரை அப்பணிக்குப் பணிக்கலாம்? என்று கேட்கப்பட்டது. சற்றுநேரம் அதன் முறம்போன்ற காதுகளை இடமிருந்து வலமாக நன்றாக ஆட்டிவிட்டு, அந்த ஞானிகளைச் சுற்றி வந்து ஓரிடத்தில் நின்றது. அனைவரும் சிவுவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஔவையின் கைகளை ஒரே சுழற்றில் சுழற்றி, என் மடியில் வைத்து விட்டு, என் முதுகை முன்நோக்கித் தள்ளிவிட்டது.
அப்போது அகத்தியப் பெருமானை பாபாஜி கடைக்கண்ணால் பார்க்க அவர் புன்முறுவல் பூத்தது, அதற்கு அனுமதியை அளித்ததைக் காட்டியது. இதனால் பாபாஜியும் மனமகிழ்ந்து ஔவையைப் பார்த்து, “அம்மா, தங்கள் கருத்தைச் சொல்லலாம்” என்றார்.
ஔவை, “அவன் கர்வமில்லாத சீடன். தன்னைக் குருவாக நினைத்துக் கொள்ளாத எளியன். தான் கற்றதை உலக உயிர்களுக்கெல்லாம் அப்படியே கொடுத்துவிட நினைக்கும் தயாள குணம் கொண்டவன். தன் உயிரோடு தினமும் பேசி வாழ்ந்து வரும் அரியவன். எம் பாடலுக்கு முதன்முதலாக உரையெழுதி எம்மைக் குளிர வைத்தவன். அவன் திருவாசகத்தின் கருப்பொருளை இவ்வுலக ஆன்மாக்களுக்கு ஏற்றபடி மிகச்சரியாக வெளியே கொண்டு வருவான். அவனை நீங்கள் இத்தெய்வப் பணிக்குப் பணிக்கலாம்” என்றார்.
பிரமஞானிகளும் இதற்கு ஒப்புதல் கொடுக்கவே கடந்த 2019 ஆம் ஆண்டு இப்பணியை இவனிடம் யாம் ஒப்படைத்தோம். இந்நூல் முடிவடைவதற்குள் நான்கு நூல்கள் வெளி வந்து விட்டன. இது ஐந்தாம் நூலாக உங்கள் கரங்களில் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த தெய்வப் பணியை அவனிடம் 2019 ஆம் ஆண்டு ஒப்படைத்தபோதுதான், உலகமெங்கும் கொரோனா என்ற உயிர்க்கொல்லி உலக மக்களின் உயிரோடு விளையாட வந்தது. இப்பணியை தன்னால் எப்படி செய்ய இயலும்? அதற்கான ஞானத்தைத் தான் இன்னும் அடையவில்லையே என்றே இவன் மறுக்க ஆரம்பித்தான். மாணிக்கவாசகர் எவ்வளவு பெரிய பிரமஞானி. தான் ஒரு சாதாரணன். உலகப் பற்றுகளிலிருந்து இன்னும் மீண்டுவராதவன். தான் எப்படி ஒரு பிரமஞானியின் பாடல்களுக்கு உரை காண இயலும்? என ஒப்புக் கொள்ள மறுத்தான்.
அப்போது என் எண்ணத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தேன். “மகனே, இது என் வாழ்நாள் கனவு என்பது உனக்குத் தெரியாதா?” என்றேன்.
“பொறுத்துக் கொள்ளுங்கள் குருவே, திருவாசகத்திற்கு நான் போய் எவ்வாறு உரை காண்பது? அது அறிவீனமல்லவா. வான் பற்றி நின்று மறைபொருளைப் பாடிய ஞானப் பாடல்களுக்கு ஊன் பற்றி நின்று வாழும் எம்மால் எவ்வாறு உரை செய்ய இயலும்?” என்றான்.
இவன் பதில் கேட்டு வியந்தேன். நானோ, “ஏண்டா, எதற்கு திருமூலரை வம்புக்கு இழுக்கிறாய்?” என்றேன்.
“குருவே, நான் எங்கே அவரை இழுத்தேன்?” என்றான்.
“இந்த வான் பற்றி நின்ற மறைபொருளும், ஊன்பற்றி நின்ற வார்த்தை யாருடையது என்பதை அறிவாயா?” என்றேன்.
அவன் பதில் தெரியாது நின்றான். “அது திருமூலராகிய நமது குலகுருவினுடையது. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின், ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே என்று பாடியிருப்பதை இங்கே எதற்கு நினைவு கூர்ந்தாய்” என்றேன்.
அவனோ, “எமக்குத் தெரியாது குருவே, சில நேரங்களில் இப்படித்தான் வாழ்வின் நிகழ்வுகளுக்கு ஏற்றபடி சில பாடல்கள் நினைவுக்குள் வந்து நின்று விடுகிறது. இது அனிச்சையாகவே நடக்கிறது. யாம் அதை நினைப்பதில்லை. அதுவாகத்தான் வருகிறது. என்னால் இதைத் தடுக்க முடியவில்லை” என்றான்.
“அதன் பேர்தான் ஞானம் மகனே. ஞானத்தை யாரும் கடினப்பட்டு, பிரயாசைப்பட்டு, தவம் செய்தெல்லாம் அடைய முடியாது. ஞானம் தானாகவே பூக்கும் ஒரு மலர். அவ்வளவுதான். ஞானம் பூக்கும் நிகழ்வுகள், உன் உயிருள் நிகழ்ந்துவிட்டால் பூப்பது தானாகவே நடந்தேறிவிடும் மகனே. அதற்கு நீ எப்போதும் விழிப்புணர்விலேயே இருந்தாலே போதும்” என்றேன்.
“விழிப்புணர்வில் இருந்தால் திருவாசகத்திற்கு உரை காண இயலுமா குரு?” என்றான்.
“ஆம்” என்றேன்.
“அப்படியென்றால் உங்கள் கனவை யாம் நிறைவேற்றுகிறோம் குருவே, அதற்கான ஞானத்தை எம் உயிரில் விதைத்திடுங்கள். நீங்களும் மாணிக்கவாசகரும் மகா சற்குரு மகா அவதார் பாபாஜி அவர்களும் மற்ற பிரம ஞானிகளும் எம் உயிருக்குள் அந்த ஆற்றலை – ஞானத்தை விதைத்தால் அப்பணியை எம்மால் சிறப்புடன் செய்துவிட முடியும். உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் ஞானமுமில்லாமல் எம்மால் தனித்துச் செயல்பட இயலாது குருவே” என்றான்.
அவனுக்கு விழிப்புணர்வைப் பற்றி சிறிது வகுப்பெடுத்தேன். இது நிகழ்ந்தது பொதிகை மலையில். “மகனே, உனது உடல் குறித்து நிறைகவனத்தோடு முதலில் இருக்க வேண்டும். இதுதான் விழிப்புணர்வின் முதற்படி. கொஞ்சம் கொஞ்சமாக நீ உனது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும் ; கொள்ள முடியும். மேலும், இப்படி நீ விழிப்புணர்வுடன் வாழக் கற்றுக் கொண்டுவிட்டால், உனக்குள் ஒரு அதிசயம் பூக்க ஆரம்பிக்கும். இதற்கு முன்புவரை நீ செய்து வந்த நிறைய காரியங்கள் வெறுமனே மறைந்து போகும். உனது உடல் ஓய்வுடன் இருக்கும். உனது உடல் ஒத்திசைந்து விடும். உனது உடலில் ஒரு ஆழ்ந்து அமைதி நிலவ ஆரம்பித்துவிடும். உனது உடலில் ஒரு மெல்லிய சங்கீதம் இழையோடி உன்னை ஒருவித தாளகதியில் துடிப்போடு இருக்க வைக்கும்”.
“அதன்பின் உனது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வேடு இருக்க ஆரம்பித்து விடு. நீ உனது உடல்மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உனது எண்ணங்களின்மீது செலுத்த ஆரம்பி. உனது எண்ணங்கள், உனது உடலைவிட மிகவும் கண்ணுக்கும் புலப்படாத புலன்களில் கலந்துவிட்ட ஒன்று. அதனால் அவை அபாயத்தைத் தரக்கூடியதாகவே இருக்கும். மேலும், நீ உனது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வைப் பெற்றுவிட்டால், அதன்பின் உனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து நீயே ஆச்சரியம் கொள்வாய் மகனே. எந்த நேரத்திலும் உன் மனதில் ஓடும் எண்ணங்களை எழுத ஆரம்பித்தால், உனக்கு அது மிகப்பெரிய ஆச்சரியத்தை வழங்காமல் விட்டுவிடாது. இதுதான் எனக்குள் நடந்து கொண்டிருக்கிற விசயங்களா? என்ற கேள்வி உன்னை ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடும்”.
“பிரமசாந்தித் தவத்தில் நீ இதைத்தான் பரிபூரணமாகக் கடைப்பிடித்து வரவேண்டும். இது ஏற்கனவே உமக்குக் கற்றுக் கொடுத்த தவமுறைதான். இருப்பினும் இங்கு கொஞ்சம் சொல்ல விழைகிறேன். வெறும் பத்து நிமிடங்கள் வரை உனக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்ற என்று வெறுமனே குறித்து வைத்துக் கொள். அப்போது உமக்குத் தேவைப்பட்டால், யாரும் உள்ளே வராதபடி நீ அமர்ந்திருக்கும் இடத்தின் கதவினை மூடித் தாழிட்டுக் கொண்டுவிடு. அப்போது நேர்மை உணர்வோடு உனக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுத ஆரம்பி மகனே. தொடர்ந்து எழுதி முடித்ததும் நீ எழுதிய தாள்களை அங்கே தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஒரு நெருப்பையும் அங்கே உருவாக்கி வைத்திரு. உன்னைத் தவிர யாரும் அத்தாள்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலாது. எவ்வளவு நேர்மை உணர்வோடு, உனக்குள் என்னென்ன எண்ணங்கள் வருகின்றனவோ, அவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் எழுதிவிட வேண்டும். அங்கே பொய்யோ, திரித்தலோ இருக்கக் கூடாது. உன் எண்ணங்களை அப்படியே நிர்வாணமாகவே எழுத வேண்டும். அவ்வளவுதான்”.
“அதன்பிறகு பத்து நிமிடங்கள் கழித்து, நீ எழுதியவற்றைப் படித்துப் பார். அப்போது நீ, உனக்குள் ஒரு பைத்தியக்கார மனம் ஒன்று நமக்குள் ஒரு அடி நீரோட்டம் போல ஓடிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற எண்ணம் வர ஆரம்பிக்கும். அது உனது வாழ்க்கையின் முக்கியமான விசயங்களை பாதிக்கும். அதுமட்டுமா, அது எல்லாவற்றையும் பாதிக்கத்தான் செய்யும். ஆனால், இதுதான் உனது ஒட்டுமொத்த வாழ்வாகவும் இருந்து வருவதை நன்றாக ஆராய்ந்து பார் மகனே”.
“எனவே, இந்த பைத்தியகாரத்தனங்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். மேலும், விழிப்புணர்வின் அற்புதம் என்ன தெரியுமா, நீ விழிப்புணர்வுடன் இருப்பதைத் தவிர, வேறு எதுவும் நீ செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான். நீ அதைக் கவனிக்கிற அந்த விசயமே, அதை மாற்றிக் கொடுத்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக உனது எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் விழ ஆரம்பித்துவிடும். அதன்பின், அவைகளில் எந்தவிதக் குழப்பங்களும் இருக்காது. குழப்பங்களே இல்லாத இந்த உலகம் போல் அவை ஆகிவிடும். எனவே, மீண்டும் அங்கே ஒரு ஆழ்ந்த அமைதி நிலவ ஆரம்பித்துவிடும்”.
“இவ்வாறு உனது உடலும் மனமும் அமைதியில் ஆழ்ந்துவிட்டால், அப்போது அவை இரண்டும் ஒன்றோடொன்று ஒத்திசைந்து செல்வதை நீ காணலாம். அங்கே ஒரு இணைப்புப் பாலம் உருவாகிவிடும். அதனால் உனது உடலும் மனமும் வெவ்வேறு திசைகளில் ஓட வாய்ப்பேயில்லை. முதல்முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போய்விடும். அவைகளின் இந்த ஒத்துப்போகும் செயலானது, நீ அதற்கடுத்த மூன்றாவது படிக்குச் செல்ல அதிகளவில் உதவிக் கொண்டிருக்கும்”.
“மூன்றாவதாக நீ உனது உணர்வுகள், மனக்கிளர்ச்சிகள், மனநிலைகள் ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த உணர்வுகள்தான் உனக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதேசமயம் மிகவும் கடினமானதொரு அடுக்கு ; ஆனால், நீ உனது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியுமெனில், அதன்பின், இது இன்னும் ஒரேயொரு படிதான் அதிகம். உனது மனநிலையை, உனது மனக்கிளர்ச்சியை, உனது உணர்வுகளை பிரதிபலிக்கும் போது, நீ கொஞ்சம் தீவிரமாக விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்”.
“இப்படி நீ இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருக்கப் பழகிவிட்டால், அவைகள் எல்லாம் ஒரே விசயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து செயலாற்ற ஆரம்பித்து விட்டால், ஒன்று சேர்ந்து செயலாற்ற ஆரம்பித்து விட்டால், ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், உன்னால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் அது கொடுக்கும் நாதத்தையும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். அங்கே ஒரு இசைக்குழு உருவாகிவிடும். அதன்பின் நான்காவது விசயம் நடக்க ஆரம்பிக்கும். இந்த நான்காவது விசயத்தை நீ ஏதாவது செய்து கொண்டுவர முடியாது. அது தானாகவே நிகழக்கூடியது, ஒரு மொட்டு மலர்வதைப் போல. அது பூரணத்தின் வரம். இந்த மூன்றையும் சிறப்பாகச் செய்துவிட்டால் அதுதான் விழிப்புணர்வு கொடுக்கும் வெகுமதி”.
“இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான், உன்னை ஞானம் அடைந்த ஒருவனாக ஆக்கும். அப்போது நீ, உனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வோடே இருப்பாய். இதுதான் நான்காவது படி. அது, ஒருவரை புத்தராக ஆக்கிவிடும் ; ஞானம் அடைந்தவராக ஆக்கிவிடும். மேலும், இப்படி ஒருவர் விழிப்படைந்தால் மட்டுமே உயிரோடு திருக்கல்யாணம் செய்ய முடியும். உயிரோடு திருக்கல்யாணம் எப்போது நடைபெறுகிறதோ, அப்போதுதான் இறைவன் அவனின் அருட்கலைகளை வெளிப்படுத்தி ஆனந்த நடனமிட்டு வெளியே வந்து உனக்குக் காட்சி கொடுப்பார் மகனே. உன் உடல் அறிவது சுகம். மனம் அறிவது சந்தோசம். உள்ளம் அறிவது மகிழ்ச்சி. உயிர் அறிவதுதான் சத் சித் ஆனந்தம். அதுவே பேரானந்தம். எனவே, நீ சதா அந்த பேரானந்தத்திலேயே திளைத்துக் கொண்டு இந்த திருவாசகத் தேனை அள்ளி அள்ளி சுவைத்துக் கொண்டே திருவாசகமாகவே மாறிப் போய்விடு மகனே. உன்னை உன்னில் கரைக்க இதுவே தாரக மந்திரமாகும். விழிப்புணர்வு அதற்கான ஞானப்பாதையை உனக்கு அடிபோட்டுக் கொடுக்கும்”.
“ஞான மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது குருவே” என்று நன்றாகக் கட்டிக் கொண்டு அழுதான். அவனுக்காக பிரமஞானத்தை அவன் உயிரில் மேலும் விதைத்தோம். திருவாசகப் பாடலின் அத்தனை வார்த்தைகளையும் (சீர்களையும்) அவன் அனுமனைப் போல கடித்துப் பார்த்துச் சுவைத்தேதான் எழுதியிருக்கிறான். இதை நீங்கள் படிக்கும்போது நன்றாக உணர்வீர்கள். இன்றைய மாயா உலகில் மக்களை பிரமஞானத்தின் பக்கம் மீட்டெடுக்க வந்த பரம்பொருளால் அனுப்பப்பட்ட ஞானப் பிள்ளை இவன். மாணிக்கவாசகர் பாடியிருக்கும் ஞானப்பொருள் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும்? பக்தி, இலக்கியம், வேதாந்தம், சைவ சித்தாந்தம் என்ற அளவில்தான் புரிந்திருக்குமே அல்லாது, ஞானத்தின் ஞானப் பொருளாக எவருமே இதுகாறும் உணர்ந்திருக்கவில்லை. உணர்ந்த சிலரும் அதை வெளிப்படுத்தவும் முன்வரவில்லை. காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட பிரமஞானப் பொக்கிசம்தான் இத்திருவாசகம். இறைவனின் ஆணைக்கிணங்கவே இங்கே இப்போது பிரமஞானிகளின் சம்மதத்தோடு இந்த ஞானமெய்ப்பொருளுரை மலர்ந்திருக்கிறது.
ஒன்று கிடைக்க நாம் மற்றொன்றை இழக்க வேண்டும். அதுதான் இயற்கை விதி. உங்களுக்கு இந்த பிரமஞானம் கிடைக்க இவன் தன் வாழ்வை பணயம் வைத்தான். இவையெல்லாம் முன்னரே இவனுக்குச் சுட்டிக்காட்டி பிரமஞானத்தை உலகிற்குக் கொடுக்க முயற்சி செய்யாதே. யார் யார் தகுதியுடையோர்களோ அவர்களுக்கு யாரோ ஒருவர் கொடுத்துக் கரையேற்றுவார் என்றோம். ஆனால், இவனோ, “குருவே, யாரோ வருவார் வருவார் என்று எத்தனை கோடி ஆன்மாக்கள் இந்த பிரமஞானத் தவத்தை அறிந்திடாது வாழ்வில் சின்னாபின்னமாகி வருகிறார்களோ, அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை தனித்தனியாக கரையேற்றுவது என்பது எத்தனை கோடி ஆண்டுகளில் நடக்கின்ற விசயம்? எமக்கு உங்கள்மூலம் தெரியப்படுத்திய பிரமஞானத்தை ஞானப்பசியால் துடித்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்களுக்கு தரவேண்டுமே. அதற்கு அனுமதியைக் கொடுங்கள் குருவே” என்று கடந்த பதினாறு ஆண்டுகளாக இறைஞ்சிக் கேட்டுக் கொண்டே இருந்தான்.
இவன் வேண்டுகோளுக்கிணங்க இறையும் மகா அவதார் பாபாஜி அவர்களும் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானிகளும் இவனின் ஞானம் கண்டு இசைந்திடவே, இப்போது உங்கள் கைகளில் பிரம்மாஸ்திரத்தைத் தாங்கி நிற்கிறது, இந்த உயிர் மலரும் தமிழ் வேதமான திருவாசகம் என்னும் அமுதத்தேன் குடம்.
மகா அவதார் பாபாஜி அவர்கள் இவனிடம் ஒரு கேள்வியை கேட்டார். “ஒருவழியாக நீதான் இத்திருவாசகத்திற்கு பிரமஞான உரையை எழுத அனுமதித்துள்ளோம். இத்திருவாசகத்திற்கு அடைமொழியாக ஒரு பெயர் வைத்து எழுத முடியுமா?” என்றார்.
இவன் சற்றும் யோசிக்காமல், “மகா சற்குருவே, உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் என்ற பெயரை என் உயிர் சொல்கிறது குருவே” என்றான். பாபாஜி அவர்கள் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டார்.
பாபாஜி அவர்கள் என்னைப் பார்த்து, “என்ன சுந்தரானந்தா, இவன் என்ன இப்படி இருக்கிறான், கேட்டவுடனே இப்படியொரு அமுதப் பெயரைச் சொல்வான் என்று நினைக்கவில்லையே. என்னவொரு அற்புதமான பெயர் இது – உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம். இவன் எழுதப் போகும் ஞான மெய்ப்பொருளுரையை யாரெல்லாம் படிக்கும் பாக்கியத்தை – புண்ணியத்தைப் பெறுகிறார்களோ, அவர்கள் அனைவரும் பரிபூரண பிரமஞானத்தை அடைவார்கள். இது சத்தியம். அந்த அளவுக்கு இந்த உரை இவ்வுலகிற்கு மிகப்பெரும் ஞானக் கொடையாக இருக்கப் போகிறது சுந்தரானந்தா. சந்தோசம். இவன் பிரமஞானத்திற்கு மிக மிகச் சரியான ஆன்மாதான். மகனே, ருத்ர ஷிவதா, உன்னை ஆனந்தமாக ஆசிர்வதித்து மகிழ்கிறோம்”.
“திருவாசகம் இருக்கும்வரை உன் ஞான மெய்ப்பொருளுரையும் சேர்ந்தே இருக்கும். மாணிக்கவாசகரைப் படிப்போர்கள் உம்மையும் உம் ஞானவுரையையும் படித்தறிவார்கள். இந்த பிரமஞான உலகில் உம் பெயர் இன்றுமுதல் பதிவு செய்யப்படுகிறது. இப்பணி முடித்து அடுத்து திருமந்திரத்தையும் நீ ஞானவுரை காண வேண்டும். அதன்பின் எம்மிடம் வந்து விடுவாய். யாம் உம்மை எங்கள் உலகோடு இணைத்துக் கொள்வோம். உன்மூலமாக இந்த நித்தியத்துவமான அமுதத்தேனான பிரமஞானத் தவம் உலகெங்கும் ஞானம் அடையத் துடித்துக் கொண்டிருக்கும் ஆன்மாக்களுக்குப் போய்ச் சேர்ந்து அவர்களை பிரமஞானம் அடைய வைக்கட்டும். பரிபூரண நல்லாசிகள்” என்றார்.
இவனைப் பெற்ற பெற்றோர்கள் இன்றுமுதல் புண்ணிய கதியை அடைவார்கள். இந்நூலைப் படிப்போரும் நித்திய கதியை இறைநிலையை அடைவார்கள். பிரமஞானம் அடைவார்கள். அனைத்திற்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். இவன் கொடுத்த விலை என்ன தெரியுமா? இவனின் சந்தோசம், குடும்ப உறவுகள், ஆசைகள், நிம்மதி, அமைதி, ஆயுள். இத்திருவாசகத்திற்கு உரை எழுதி முடிப்பதற்குள் இவன் சந்தித்த துன்பங்கள், குடும்பத்தில் ஏற்பட்ட பல நிம்மதியற்ற குழப்பங்கள், பிரச்சினைகள், உயிர் விடும் சூழல்கள், மனித உறவுகளால் ஏற்பட்ட விசயங்கள் இவை அனைத்துமே அவனை சதா நெருப்பாற்றின்மீதே பயணம் செய்யும்படி வைத்திருந்தன.
அத்தனை துன்பங்களையும் இத்திருவாசகத்திற்காகவும் இதன் ஞானம் அத்தனை மக்களையும் சென்றடைய வேண்டுமென்றால் தான் நெருப்பின்மீது அமர்ந்தே உரை எழுதுகிறேன் குருவே, அனுமதி மட்டும் கொடுங்கள் என்ற இவனின் மனவுறுதி கண்டு நாம் உண்மையிலேயே மெய்சிலிர்த்துப் போனோம். அத்தனை துன்பங்களை பிரமஞானிகள் இவனுக்கு ஏற்படுத்தினார்கள். எமக்கு இவைகளெல்லாம் முன்கூட்டியே தெரிந்திருந்தும் தடுக்கக்கூடாது என்ற பாபாஜி அவர்களின் உத்திரவுக்கிணங்க அமைதி காத்தோம், இவனுக்கு துன்பங்கள் நேரும்போது. இவன் பட்ட மன உளைச்சல்கள், மனத்துன்பங்கள், உடற்துன்பங்கள் சொல்லி மாளாது. அதனால்தான் இன்றைக்கு உங்கள் திருக்கரங்களில் திருவாசக மலர் தவழ்கிறது.
எம் வாழ்நாள் கனவை நிறைவேற்றிவிட்டான் எம் சீடனான இந்த ருத்ர ஷிவதா. இதைவிட வேறென்ன குரு காணிக்கையாக இவன் தந்துவிட முடியும் ! இதுதான் மெச்சத் தகுந்த குரு காணிக்கை, குரு சேவை. எம்மையே கதியாகக் கிடந்த இவனுக்கு, இனி உலக உயர் ஆன்மாக்கள் கதியாக வந்து சேரும். இனியும் நீங்கள் வாளாவிருக்காமல் பிரமஞானத் தவத்தைக் கற்று உங்கள் உயிரையும் அதற்குள் இருக்கும் இறைவனையும் கண்டடைய பரிபூரண ஆசிர்வாதத்தை வழங்கி அமைகிறோம். அனைத்து ஆன்மாக்களும் பிரமஞானத்தை அடைவீர்களாக !
திருச்சிற்றம்பலம் !
பூரண ஆசிகளுடன்
பரமஹன்ச சுந்தரானந்தா


