உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் – 04

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

திருச்சிற்றம்பலம்

 

            ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

            தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

            நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

            மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

            சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

            ஆராத இன்பம் அருளும் மலை போற்றி      (16)

 

          பொழிப்புரை : ஈசனின் திருவடிகளை புகழ்கின்றேன். 

          என் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைப் புகழ்கின்றேன். தேசன் திருவடிகளை புகழ்கின்றேன். 

          சிவந்த ஒளிகளால் நிறைந்த எம் சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்கின்றேன். 

          எம் அன்பின்பால் நிற்கின்ற மும்மலங்களை வென்ற இறைவனின் திருவடிகளைப் புகழ்கின்றேன். 

          எதன் காரணமாக மனிதப் பிறப்பு அமைகிறதோ, அந்த மாயப் பிறப்பின் வேர்களை அறுத்தொழிக்கின்ற அரசனின் திருவடிகளைப் புகழ்கின்றேன்.

          பெருமை மிகுந்த பெரிய வழியின் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இறவா நிலை அடைந்த தேவனின் திருவடிகளைப் புகழ்கின்றேன்.

          எமக்குத் தெவிட்டாத இன்பத் தேனைக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய பிரணவ மலையைப் புகழ்கின்றேன்.

          ஞான மெய்ப்பொருளுரை : அடி என்றால் சான்றோர்களும் ஆன்றோர்களும் சமயப் பெரியவர்களும் அறிஞர்களும் நமது பாதத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்.  ஆனால், மாணிக்கவாசகரும் சமயக் குரவர்களும் சித்தர்களும் பிரம ஞானிகளும் குறிப்பிடுவது அடி என்றால் அது திருவடி, அதாவது நமது இரு கண்கள் ஆகும்.  திருவாசகம் முழுக்க எந்த இடத்தில் மாணிக்கவாசகர் அடி என்றோ, திருவடி என்றோ பாடுகிறாரோ அந்த இடத்திலெல்லாம் வாசகர்கள் நமது இரு கண்களை நினைவிற்கு கொண்டு வந்துவிடவேண்டும்.

            ஈசன், எந்தை, தேசன், சிவன், நிமலன், மன்னன், தேவன் என்ற சிறப்புப் பெயர்களெல்லாம் நம் திருவடிகளுக்குள் குடியிருக்கும் இறைவன் ஒருவனையே குறிக்கிறது.  எல்லோருக்கும் இறைவன் ஒருவனே. 

            மலனுக்கு எதிர்ச்சொல் நிமலன்.  மலங்களை வென்றவனே நிமலன் என அழைக்கப்படுவான்.  யார் மலங்களை வென்றவன்? மலங்கள் என்றால் அது மும்மலங்களைக் குறிக்கும்.  ஆணவம், மாயை, கன்மம் என்பவைகளே மும்மலங்கள்.  ஆனால், அருட்பிரகாச வள்ளலார் ஐந்து மலங்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்.  அவை 1.ஆணவம், 2.மாயை, 3.மாமாயை, 4.மகாமாயை, 5.கன்மம் என்பவைகளாகும்.  இந்த மலங்களை எவர் ஒருவர் அழித்தொழிக்கிறார்களோ, அவர்களே நிமலன் என்று அழைக்கப்படுவார்கள்.  இறைவனே ஐந்து மலங்களை அழித்தொழித்தவன் என்பதால், மாணிக்கவாசகர் இறைவனை நிமலன் என அழைத்தார். 

            இந்த மும்மலங்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரிந்தால்தான் அம்மலங்களை எப்படி அழிக்கலாம் என கணக்கிட முடியும்.  அவை நமது திருவடிகளாம் கண்களின் மேலே அமைந்துள்ளன.  கண்களின்மீது மூன்று மெல்லிய சவ்வுகள் அமைந்துள்ளன என விஞ்ஞானம் இன்று கூறுகிறது.  மாணிக்கவாசகர் இதை அக்காலத்திலேயே மும்மலங்களானது திருவடிகளின்மீதுதான் அமைந்துள்ளன என எப்படி அழைத்தார் என்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

            கண்களின்மீது அமைந்துள்ள மும்மலங்களில் மாயையானது இருள் நிலையைக் கொண்டதாகும்.  அந்த இருள்நிலையால்தான் மனிதன் பிரம ஞானத்தை அடையாமல் அஞ்ஞானத்திலேயே உழன்று கொண்டு துன்புறுகிறான். 

            அஞ்ஞானத்திற்கு காரணமான இருட்டை ஒழித்து அழித்தால்தான் மனிதன் இம்மாயையால் உண்டாகும் பிறப்பை அறுத்தெடுக்க முடியும் என்பதால், “மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி” எனப் பாடினார். 

            பெருந்துறை என்பது பெரிய மற்றும் பெருமை பொருந்திய வழி எனப் பொருள்படும்.  இறைவனை அடைவதற்கு கண்டிப்பாக ஒரு பெருமை வாய்ந்த சிறப்பான வழி ஒன்று இருந்தாக வேண்டுமல்லவா.  அவ்வழிதான் திருவடி எனப்படும் பெருந்துறையாகும்.  திருவடிதான் பெருந்துறை, இத்திருவடியின் வழியேதான் ஒளியினை கொண்டுபோய் நம் உயிர் இருக்கும் இடத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.  அவ்வாறு ஒளியானது நம் தேகத்தில் கடந்து செல்ல வேண்டுமென்றால், அதற்கு ஒரு பாதை, வழி இருக்க வேண்டுமல்லவா.  அவ்வழிதான் திருவடிகள் எனப்படும் பெருந்துறை வழியாகும்.  இறைவனை அடைய பெருந்துறை வழி காரணமாக இருப்பதால், மாணிக்கவாசகர் திருவடிகளை “சீரார் பெருந்துறை நம்தேவன்” எனப் பாடினார்.

            அவ்வாறு ஒளியினைக் கொண்டு இறைவன் இருக்கும் இடத்திற்கு நாம்  போய்ச் சேர்ந்தால், அங்கே வற்றாத இன்பம் பொங்குவதை கண்டு கண்டு, உணர்ந்து உணர்ந்து இன்புற்றுக் கொண்டிருக்கலாம். அந்த இடத்தில்தான் தெய்வீக சத்திகளும் தெய்வங்களும் உறைந்துள்ளன. பிரமஞானத் தவத்தின் சத்தியால் சாதகர்கள் அவ்விடம் சென்று பார்ப்பதால், அவர்களின் தேகத்திற்குள்ளே தெவிட்டாத இன்பத்தை ஒரு பொருள் அருளிக் கொண்டிருப்பதைக் கண்டிடலாம். அதுதான் பழம்பொருள், அதுவே நம் சிவப்பொருள். அதுதான் பிரணவ மேருவாகும்.  இந்த பிரணவ மேருவைத்தான், “ஆராத இன்பம் அருளும் மலை” என்று பாடினார் மாணிக்கவாசகர்.

 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!