
இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!
இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.
அடுத்த வரி குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இது பொருள் என (22) என்பது.
ஔவைத் தாயின் முதல் வார்த்தையே விநாயகப் பெருமான் குரு வடிவாகி வந்து தன்னை ஆட்கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறார். என்றால், ஒரு குரு என்பவர் யார்? யாரை குரு என்று சொல்லலாம்? அவரின் தகுதிகள் என்னென்ன? என்பதைப் பற்றிய சிறிது சிந்திக்கலாம் வாருங்கள் ஞான உள்ளங்களே.
குருவின் பங்கு
குரு கீதை (சுலோகம் 17) குருவை “இருளை விரட்டுபவர்” (கு -விலிருந்து “இருள்” மற்றும் ரு-விலிருந்து “அதை விரட்டுவது”) என்று பொருத்தமாக விளக்குகிறது. ஓர் உண்மையான, இறை-ஞானம் பெற்ற குரு, தன் சுய-மேம்பாட்டை அடையும் போது எங்கும்-நிறைந்த பரம்பொருளுடனான தனது அடையாளத்தை உணர்ந்தறிந்திருக்கும் ஒருவர் ஆவார். அத்தகைய ஒருவர் முழுநிறைவை நோக்கிய சாதகரின் அகப் பயணத்தை வழிநடத்த தனிச்சிறப்புமிக்க தகுதிவாய்ந்தவர் ஆவார்.
“குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது,” என்றார் பரமஹம்ஸர். “இறைவனை அறிந்த ஒரு குரு மட்டுமே அவனைப் பற்றி மற்றவர்களுக்குச் சரியாகக் கற்பிக்கலாம். ஒருவருடைய தெய்வீகத்தை மீட்க ஒருவருக்கு அத்தகைய ஓர் ஆசானோ அல்லது குருவோ இருக்க வேண்டும். ஓர் உண்மையான குருவை விசுவாசத்துடன் பின்பற்றுபவர் அவரைப் போலவே ஆகிறார், ஏனெனில் குரு சீடரைத் தன் சொந்த அனுபூதித் தளத்திற்கு உயர்த்த உதவுகிறார்.”
குரு-சிஷ்ய உறவே நட்பின் உன்னத வெளிப்பாடு, ஏனெனில் அது நிபந்தனையற்ற தெய்வீக அன்பையும் ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அது எல்லா உறவுகளிலும் மிகவும் மேன்மையானது மற்றும் புனிதமானது. கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் மெய்ப்பொருளில் ஒன்றாக இருந்தனர், அதே போலவே இறைவனின் தெய்வீக அன்பெனும் பொதுவான பந்தத்தின் காரணமாக என் குருதேவரும் [சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்] நானும் மற்றும் என்னுடன் இசைந்திருப்போரும் இருக்கிறோம்….இந்த உறவில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒருவர் விவேகத்தையும் சுதந்திரத்தையும் அடையும் வழியில் செல்கிறார்.
தெய்வீகத் தேடலில் வெற்றிக்கு, வாழ்வின் மற்ற ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளது போல, இறைவனின் விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஒரு பள்ளியில் உள்ள சமதர்ம அறிவைப் புரிந்துகொள்ள, நீங்கள் அதை அறிந்த ஒரு ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதைப் போல ஆன்மீக உண்மைகளைப் புரிந்துகொள்ள ஓர் ஆன்மீக ஆசானோ, அல்லது குருவோ, அல்லது இறைவனை அறிந்த ஒருவரோ தேவை.
நீங்கள் பார்க்கும் திறனற்றவராக வாழ்வெனும் பள்ளத்தாக்கில், இருளில் தட்டுத்தடுமாறி, சென்று கொண்டிருக்கும் போது, உங்களுக்கு கண்களுள்ள ஒருவரின் உதவி தேவை. உங்களுக்கு ஒரு குரு தேவை. ஞான ஒளி பெற்ற ஒருவரைப் பின்பற்றுவதே உலகில் உருவாக்கப்பட்டிருக்கும் மாபெரும் குழப்பத்திலிருந்து விடுபட்டு வெளியேறும் ஒரே வழி. என்னில் ஆன்மீகம்சார்ந்த அக்கறை கொண்ட மற்றும் என்னை வழிநடத்த ஞானம் கொண்ட என் குருதேவரை நான் சந்தித்த வரை நான் உண்மையான மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் காணவில்லை.
உங்கள் இதயத்தினுள் இறைவனுக்காக இடைவிடாது கூக்குரலிடுங்கள். அவனுக்கான உங்கள் ஆசையைப் பற்றி இறைவனை நம்பவைத்துவிடும் போது, அவன் ஒருவரை—உங்கள் குருவை—அவனை எப்படி அறிவது என்று கற்பிக்க அனுப்பிவைப்பான். இறைவனை அறிந்த அவரால் மட்டுமே அவனை எப்படி அறிவது என்று மற்றவர்களுக்குக் காட்ட முடியும். அத்தகைய ஒருவரை, என் குருதேவர் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வரை, நான் கண்ட போது, இறைவன் மறைபொருளின் வாயிலாக அல்ல, ஆனால் ஞான ஒளி பெற்ற ஆன்மாக்களின் வாயிலாக போதிக்கிறான் என்று உணர்ந்தறிந்தேன். இறைவன் கட்புலனாகதவன், ஆனால் அவனுடன் இடைவிடாத தொடர்பில் இருக்கும் ஒருவரின் அறிவுத்திறனின் மற்றும் ஆன்மீக உணர்வின் வாயிலாக புலப்படுகிறான். ஒருவரது வாழ்வில் பல ஆசான்கள் இருக்கக்கூடும், ஆனால் ஒரே ஒரு குரு மட்டுமே இருக்கிறார். இயேசு ஞானஸ்நானகன் யோவானைத் தன் குருவாக ஏற்றுக்கொண்ட போது அவருடைய வாழ்விலும் கூட மெய்ப்பித்துக் காட்டப்பட்டது போல, குரு-சிஷ்ய உறவில் ஒரு தெய்வீகத் தேவை நிறைவேற்றப்படுகிறது.
இறை-அனுபூதி பெற்ற மற்றும் ஆன்மாக்களை மீட்க இறைவனால் ஆணையிடப்பட்டிருக்கும் ஒருவரே குரு. தான் வெறுமனே நினைப்பதால் மட்டுமே ஒருவரால் ஒரு குருவாக இருக்க முடியாது. இயேசு, “என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது,” என்று கூறிய போது உண்மையான குரு இறைவனின் விருப்பத்தால் மட்டுமே செயற்படுகிறார் என்று இயேசு காண்பித்தார். அவர் எல்லாப் புகழையும் இறைவனின் சக்திக்கே அளித்தார். ஓர் ஆசான் அகந்தையின்றி இருந்தால், அவருடைய உடல்-கோவிலில் இறைவன் மட்டுமே உறைகிறார்; மற்றும் நீங்கள் அவருடன் இசைந்திருக்கும் போது நீங்கள் இறைவனுடன் இசைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியலாம். இயேசு தன் சீடர்களுக்கு நினைவுபடுத்தினார்: “என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை மட்டுமல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார்.”
மற்றவர்களின் போற்றுதலைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளும் ஆசான் வெறுமனே தன் சொந்த அகந்தையை வழிபடும் ஒருவராவார். ஒரு பாதை உண்மையா என்று கண்டறிய, எத்தகைய ஆசான் அதற்குப் பின்னால் உள்ளார், அவர் வழிநடத்தப்படுவது இறைவனாலா அல்லது தன் சொந்த அகந்தையாலா என்று அவருடைய செயல்கள் காண்பிக்கிறதா என்பதற்கேற்ப வேறுபடுத்திப் பாருங்கள். அனுபூதி அடையாத ஓர் ஆசானால், அவரைப் பின்பற்றும் கூட்டம் எத்துணை பெரியதாக இருந்தாலும் சரி, இறைவனின் இராஜ்ஜியத்தை உங்களுக்குக் காண்பிக்க முடியாது. எல்லாத் தேவாலயங்களும் நல்லதைச் செய்திருக்கின்றன, ஆனால் விடாப்பிடியான சமயக் கோட்பாடுகளில் கொண்ட குருட்டு நம்பிக்கை மக்களை ஆன்மீகரீதியாக அறியாமையிலும் தேங்கிய நிலையிலும் வைத்திருக்கிறது. பலமுறை நான் இறைவனின் நாமத்தைப் பாடும் மிகப்பெரிய கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இறைவன் வெகுதூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல அவர்களுடைய உணர்வுநிலையிலிருந்து வெகுதூரத்தில் இருந்தான். வெறுமனே தேவாலயத்திற்குச் செல்வதன் மூலம் ஒருவரும் காப்பாற்றப்பட முடியாது. சுதந்திரத்திற்கான மெய்யான வழி யோகத்தில், அறிவியல்பூர்வ சுய-ஆய்வில், மற்றும் இறையியல் எனும் காட்டைக் கடந்திருக்கும் மற்றும் உங்களைப் பாதுகாப்பாக இறைவனிடம் வழிநடத்திச் செல்ல முடிகின்ற ஒருவரைப் பின்பற்றுவதில் இருக்கிறது.
உண்மையின் ஒரு வாழும் வடிவம்
தனிநபர்களின் ஆழ்ந்த பிரார்த்தனைகளுக்கு மறுமொழியளிப்பதில் அவர்களுக்கு உதவ இறைவனால் ஆணையிடப்பட்ட அத்தகைய ஒரு குரு ஒரு சாதாரண ஆசான் அல்ல; ஆனால் ஒரு மனித வாகனம்; அவருடைய உடல், பேச்சு, மனம், ஆன்மீகம் ஆகியவற்றை இறைவன் வழிதவறிய ஆன்மாக்களை ஈர்த்து தன் அமரத்துவ வீட்டிற்கு மீண்டுவர வழிகாட்டும் ஒரு மார்க்கமாக இறைவன் பயன்படுத்துகிறான். உண்மையை அறிவதற்கான நமது தெளிவிலா ஆசையின் வாயிலாக ஆரம்பத்தில் நாம் பல்வேறு ஆசான்களைச் சந்திக்கிறோம். ஆனால் ஒரு குரு என்பவர் சாத்திர உண்மையின் ஒரு வாழும் வடிவம் மற்றும் பருப்பொருளின் தளையிலிருந்து விடுபடுவதற்காகச் செய்த ஒரு சாதகரின் ஓயாத விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்க இறைவனால் நியமிக்கப்பட்ட முக்தியின் முகவர் ஆவார்.
மாயை நல்ல கூட்டுறவால், மகான்களின் கூட்டுறவால், மற்றும் இறைத் தூதர்களுக்கான பக்தியால் அழிக்கப்படுகிறது. மகான்களைப் பற்றிய எண்ணமே கூட மாயையை அகற்ற உங்களுக்கு உதவும். இறைத் தூதருடனான தனிப்பட்ட தோழமையைக் காட்டிலும் அவருடனான எண்ணத்தின் ஒத்திசைவே மாயையை அழிக்கிறது. ஓர் உண்மையான குருவிற்குத் தன்னை மற்றவர்களின் இதயங்களில் வைக்கும் ஆசை கிடையாது, ஆனால் மாறாக அவர்களுடைய உணர்வுநிலையில் இறைவனின் உணர்வுநிலையை விழித்தெழச் செய்யவே அவர் விரும்புகிறார். குருதேவர் [சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்] அதைப் போன்றவர்: அவர் ஒருபோதும் தன் மகத்துவத்தை வெளிக்காட்டாமல் எங்களுள் ஒருவராக இருந்தார். ஆசிரமத்தில் எவரேனும் அங்கீகாரத்தையோ அல்லது அதிகாரமிக்க ஓர் உயர்ந்த பதவியையோ விரும்பினால், குருதேவர் அந்தப் பதவியை அவருக்கு வழங்கிவிடுவார். ஆனால் நான் குருதேவரின் இதயத்தை, அவரிடமிருந்த தெய்வீக உணர்வுநிலையை, விரும்பினேன்; மற்றும் அதன் விளைவாக, அவர் என்றென்றைக்கும் இங்கே என் இதயத்தில் வீற்றிருக்கிறார். நீங்கள் விரும்புவது மகான்களுடனான அந்த ஒத்திசைவைத்தான்
என் குருதேவர் என்னிடம் கூறினார்: “நீ கீழான மனத்தளத்தில் இருந்தாலும் சரி அல்லது உன்னத ஞானத்தளத்தில் இருந்தாலும் சரி, இப்போதிருந்து சாசுவதம் வரை நான் உனக்கு நண்பனாக இருப்பேன்.நீ தவறிழைத்தாலும் கூட நான் உன் நண்பனாக இருப்பேன், ஏனெனில் அப்போது மற்ற எந்த நேரத்தை விடவும் அதிகமாக உனக்கு என் நட்பு தேவைப்படும்.”
என் குருதேவரின் நிபந்தனையற்ற நட்பை நான் ஏற்றுக்கொண்ட போது, அவர் கூறினார்: “நீ அதே நிபந்தனையற்ற அன்பை எனக்கு அளிப்பாயா?” அவர் குழந்தையைப் போன்ற நம்பிக்கையுடன் என்னைப் பார்த்தார்.
“குருதேவா, நான் உங்களை நித்தியமாக நேசிப்பேன்!”
“சாதாரண அன்பு சுயநலமிக்கது, ஆசைகளிலும் மனநிறைவுகளிலும் இருளாக வேரூன்றியது. தெய்வீக அன்பு நிபந்தனையற்றது, எல்லையற்றது, மாற்றமற்றது. தூய அன்பின் ஊடுருவி நிற்கும் ஸ்பரிசத்தில் மனித இதயக் கழிவு என்றென்றைக்குமாக வெளியேறிவிட்டது.” அவர் பணிவாக மேலும் கூறினார், “எப்போதாவது நான் இறை-அனுபூதி நிலையிலிருந்து வீழ்வதை நீ கண்டால், என் தலையை உன் மடிமீது வைத்து நாம் இருவரும் வழிபடும் பேரண்டப் பேரன்பனுக்கு திரும்பக் கொண்டுவர உதவுவேன் என்று வாக்குறுதியளிக்க வேண்டுகிறேன்.”
இந்த ஆன்மீக ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிறகுதான் ஒரு சீடருக்கான குருவின் முக்கியத்துவத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் என்னை நிபந்தனையற்ற விசுவாசத்துடனும் என் குருவின் தெய்வீக உணர்வுநிலைக்கான பக்தியுடனும் இசைவித்துக் கொள்ளும் வரை நான் முழுமையான மனநிறைவு, ஆறுதல், இறைத்தொடர்பு ஆகியவற்றை ஒருபோதும் காணவில்லை.
கொடையாளிகளில் மிகச் சிறந்தவர்கள்
இறைவன் உலகத்துடன் தன் ஞான ஒளி பெற்ற பக்தர்கள் வாயிலாக மட்டுமே பேசுகிறான். ஆகவே, உங்கள் ஆன்மாவின் ஆசைக்கு ஒரு மறுமொழியாக இறைவனால் அனுப்பப்பட்ட குருவின் இச்சாசக்தியுடன் இசைவித்துக் கொள்வதே எல்லாச் செயல்களிலும் மிகவும் விவேகமானதாகும். சுயமாக-அறிவித்துக் கொள்வதாலேயே ஒருவர் குருவாக இருக்க முடியாது; மற்றவர்களைத் தன்னிடம் திரும்பக் கொண்டுவருமாறு இறைவனால் கேட்டுக்கொள்ளப் பட்ட ஒருவரே குரு. ஒரு சிறிது ஆன்மீக ஆசை இருக்கும் போது, இறைவன் உங்களுக்கு மேலும் உத்வேகமூட்ட புத்தகங்களையும் ஆசான்களையும் அனுப்புகிறான்; மற்றும் உங்களுடைய ஆசை வலுவடையும் போது, ஓர் உண்மையான குருவை அவன் அனுப்புகிறான்.
தம்மைப் பின்பற்றுவோர் உடனடியாகக் கீழ்ப்படியத் தயாராக, தாம் அழைத்தவுடன் வரத் தயாராக எப்போதும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆசான்கள் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்றால், ஆசான் கோபப்படுகிறார். ஆனால் இறைவனை அறிந்த மற்றும் ஒரு குருவாக இருக்கும் ஓர் ஆன்மீக ஆசான் தன்னை ஒரு ஆசானாகவே ஒருபோதும் நினைப்பதில்லை. அவர் இறைவனின் இருப்பை எல்லோரிடமும் தரிசிக்கிறார், மற்றும் சில மாணவர்கள் தன் விருப்பங்களைப் புறக்கணித்தால் சினம் கொள்வதில்லை. ஓர் உண்மையான குருவின் ஞானத்துடன் இசைந்திருப்போர் குரு அவர்களுக்கு உதவுவதைச் சாத்தியமாக்குகின்றனர் என்று இந்து மறைநூல்கள் உரைக்கின்றன. “(ஒரு குருவிடமிருந்து) அந்த ஞானம் பெறுவதினால், அர்ஜுனா! நீ மீண்டும் மாயையில் விழ மாட்டாய்.”
குருவிற்கும் சீடருக்கும் இடையேயுள்ள நட்பு நிலைபேறானது. ஒரு சீடர் குருவின் பயிற்சியை ஏற்றுக்கொள்ளும் போது, முழுமையான அடைக்கலம் உள்ளது, யாதொரு வலுக்கட்டாயமும் இல்லை.
என் குருதேவருடன் நான் கொண்டிருந்த உறவைவிடவும் பெரிய ஒன்று இவ்வுலகில் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. குரு-சிஷ்ய உறவு அன்பின் உச்சபட்ச வடிவமாகும். என்னால் இறைவனை இமயமலைகளில் அதிக வெற்றிகரமாக நாட முடியும் என்று நினைத்தவாறு, நான் ஒருமுறை அவருடைய ஆசிரமத்தை விட்டுச் சென்றேன். நான் தவறாகக் கருதினேன்; மற்றும் நான் தவறு செய்து விட்டிருந்ததாக விரைவில் அறிந்தேன். இருப்பினும் நான் திரும்பி வந்தபோது, நான் ஒருபோதும் விட்டுச் செல்லவில்லை என்பது போல என்னை நடத்தினார். அவருடைய வரவேற்பு அத்துணை இயல்பாக இருந்தது; என்னைக் கண்டிப்பதற்குப் பதிலாக, அவர் அமைதியாக குறிப்பிட்டார், “இந்தக் காலை வேளையில் நம்மிடம் சாப்பிட என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.”
“ஆனால் குருதேவா,” நான் கூறினேன், “விட்டுச் சென்றதற்கு என்மீது உங்களுக்குக் கோபமில்லையா?”
“நான் ஏன் கோபப்பட வேண்டும்?” அவர் பதிலளித்தார். “நான் மற்றவர் களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை, ஆகவே அவர்களுடைய செயல்கள் எனது விருப்பங்களுக்கு எதிராக இருக்க முடியாது. நான் உன்னை என் சொந்தப் பலன்களுக்காகப் பயன்படுத்த மாட்டேன்; நான் உன் சொந்த உண்மையான மகிழ்ச்சியில் மகிழ்ச்சியடைகிறேன்.”
அவர் அதைச் சொன்ன போது, நான் அவருடைய பாதங்களில் வீழ்ந்து கதறினேன், “முதன்முறையாக என்னை உண்மையாக நேசிப்பவர் இருக்கிறார்!”.
நான் இறைவனை நாடி ஆசிரமத்தை விட்டு ஓடிச் சென்றாலும்கூட, எனக்கான அவருடைய அன்பு மாறாமல் இருந்தது. அவர் என்னைக் கண்டிக்கக் கூட இல்லை. என்னிடத்தில் அத்துணை அக்கறை கொண்ட ஒருவர் இருக்கமுடியும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை. அவர் எனக்காகவே என்னை நேசித்தார். அவர் எனக்காக முழுநிறைவை விரும்பினார். நான் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். அதுவே அவருடைய மகிழ்ச்சி. நான் இறைவனை அறிய வேண்டுமென; என் இதயம் யாருக்காக ஏங்கியதோ, அந்தத் தெய்வ அன்னையுடன் நான் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார்.
அவர் வெளிப்படுத்தியது தெய்வீக அன்பில்லையா? நன்மையும் அன்பும் கொண்ட பாதையில் எனக்கு இடைவிடாது வழிகாட்ட விரும்பியது? அந்த அன்பு குருவிற்கும் சீடருக்கும் இடையே வளர்ச்சியடையும் போது, சீடருக்கு குருதேவரிடம் சூழ்ச்சி செய்யும் எந்த ஆசையும் இருப்பதும் இல்லை, குருதேவர் சீடரின் கட்டுப்பாட்டை நாடுவதும் இல்லை. உன்னதமான பகுத்தறிவும் நியாய உணர்வும் அவர்களுடைய உறவை ஆட்சி செய்கின்றன; இதைப் போன்ற அன்பேதும் கிடையாது. மேலும் அந்த அன்பை என் குருதேவரிடமிருந்து நான் சுவைத்தேன்.
குரு என்பவர், சீடரில் உறங்கிக்கொண்டிருக்கும் இறைவனை விழித்தெழச் செய்யும், விழிப்புணர்வடைந்த இறைவன் ஆவார். கருணையின் மற்றும் தொலைநோக்குப் பார்வையின் வாயிலாக, ஓர் உண்மையான குரு உடல்ரீதியாக, மனரீதியாக மற்றும் ஆன்மீகரீதியாக ஏழையாக இருப்போரில் இறைவன் வேதனையடைவதைக் காண்கிறார், மற்றும் அதனால்தான் அவர்களுக்கு உதவுவது தன் ஆனந்தமயக் கடமையாக அவர் உணருகிறார். அவர் கைவிடப்பட்டோரில் பசித்த இறைவனுக்கு உணவளிக்க, அறியாமையில் இருப்போரில் உறங்கும் இறைவனை அசைக்க, எதிரியில் மயக்க நிலையில் உள்ள இறைவனை நேசிக்க, மற்றும் ஏங்கும் பக்தரில் அரைத் தூக்கத்தில் உள்ள இறைவனை எழுப்ப முயற்சி செய்கிறார். மேலும், அன்பின் ஒரு மென்மையான ஸ்பரிசத்தால், அவர் மேம்பட்ட சாதகரில் ஏறத்தாழ முழுமையாக விழித்தெழுந்த இறைவனை உடனடியாக எழுப்புகிறார். குருவே எல்லா மனிதர்களிலும் உள்ள கொடையாளிகளில் ஆகச் சிறந்தவர். இறைவனைப் போலவே, அவருடைய பெருந்தகைமைக்கும் எல்லையே இல்லை.
குருதேவரின் வாக்குறுதி
அக ஆன்மீக உதவியை உண்மையிலேயே நாடி யோகதா சத்சங்க சொஸைடிக்கு வந்திருப்போர் இறைவனிடமிருந்து அவர்கள் எதை நடுகிறார்களோ, அதைப் பெறுவர். அவர்கள், நான் உடலில் இருக்கும் போதோ, அல்லது அதற்குப் பின்னாலோ வந்தாலும், இறைச்சக்தி ஒய் எஸ் எஸ் குருமார்களுடைய தொடர்பின் வாயிலாக அதைப் போலவே பக்தர்களுக்குப் பாயும் மற்றும் அவர்களுடைய முக்திக்கு வித்தாகும்….
பிரமஞானத் தவப் பயிற்சியில் வழக்கப்படியும் விசுவாசமாகவும் இருக்கும் சாதகர்கள் தமது வாழ்க்கைகள் தூய்மையடைவதையும் நிலைமாற்றமடைவதையும் காண்பர். தமது விடாமுயற்சி, நிலைமாறா உறுதி ஆகியவற்றால் இப்பாதையின் உண்மையான சாதகர்கள் முக்தியைக் காண்பர். ஒய் எஸ் எஸ் உத்திகளிலும் போதனைகளிலும் ஒய் எஸ் எஸ் குரு பரம்பரையின் உதவியும் அருளாசிகளும் அடக்கம். தமது வாழ்க்கைகளை ஒய் எஸ் எஸ் கோட்பாடுகளின்படி நடத்துவோர் ஒய் எஸ் எஸ் குரு பரம்பரையின் மறைவான மற்றும் வெளிப்படையான இயக்கத்தால் ஆசீர்வதிக்கப்படுவர். என்றும்-வாழும் பாபாஜி எல்லா நேர்மையான சாதகர்களின் முன்னேற்றத்தையும் பாதுகாத்து வழிகாட்டும் வாக்குறுதியை அளித்திருக்கிறார். தமது பூத உடலை நீத்திருக்கும் லாஹிரி மகாசயர் மற்றும் ஸ்ரீ யுக்தேஸ்வர், மற்றும் நானும், உடலை விட்டுச் சென்ற பிறகும் கூட—எல்லோரும் நேர்மையான ஒய் எஸ் எஸ் சாதகர்களை என்றும் பாதுகாத்து வழிகாட்டுவர்.
இறைவன் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளான், மற்றும் நான் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டேன். நான் சென்றுவிட்ட பிறகும் கூட, உலகமெங்கும் உள்ள சாதகர்களுக்கு, அவர்கள் இசைந்திருந்தால், என் உதவி வழங்கப்படும். நான் உங்களுடன் பூதவுடலில் இல்லாதிருக்கும் போது, நான் வேறு வகையில் உங்களுடன் இல்லை என்று ஒரு கணம் கூட ஒருபோதும் நினைக்காதீர்கள். நான் இப்போது போலவே இந்த உடலில் இனி இல்லாத போதும் உங்களுடைய ஆன்மீக நலத்தில் அதே அளவு ஆழமான அக்கறையுடன் இருப்பேன். நான் எப்போதும் உங்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருப்பேன், மற்றும் ஓர் உண்மையான சாதகர் தன் ஆன்மாவின் மௌன ஆழங்களில் என்னைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், நான் அருகில் இருப்பதை அவர் அறிவார்.
ஆசற்ற சற்குரு யார்?
‘அறிவிக்க அறிதல்’ என்பது சைவ மரபில் ஒரு கருதுகோள். அதன் அடிப்படை என்னவென்றால், அறியாதவர் ஒருவர், ஒரு பொருளைத் தெளிவாக அறிய வேண்டுமானால், அதை அவருக்கு அறிவிக்க, அறிந்தவர் ஒருவர் வேண்டும். கற்பிக்கிறவர் இல்லாமல் கல்வி சாத்தியமில்லை, குரு இல்லாமல் அறிதல் சாத்தியமில்லை என்னும் கருதுகோள், சைவ நூலாகிய திருமந்திரத்தில் உள்ளது; அறிதல் செயல்பாட்டில் குருவின் பங்கை முதன்மைப்படுத்திப் பேசுகிறது. குருவைக் கடவுளுக்குச் சமமாகப் போற்றுகிறது.
ஆனால், திருக்குறளைப் போன்ற ஒரு பொதுநூல், கல்வியைப் பற்றியும் அறிவைப் பற்றியும் பேசுகிறதே தவிர, கற்பிக்கும் ஆசிரியரைப் பற்றியோ, அறிவுண்டாக்கும் குருவைப் பற்றியோ சிறப்பாக ஒன்றும் பேசவில்லை. கல்வி என்பது, பிறர் முயற்சியால் அல்ல, தன் முயற்சியால் தானே அடைவது என்ற அடிப்படையிலேயே திருக்குறள் பேசுகிறது.
கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)
என்கிறது வள்ளுவம். உறுதி நூல்களைத் தானே கற்றுத் தெளியவில்லை என்றாலும், அவற்றின் பொருட்களைக் கற்று அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க. அவ்வாறு பெற்றுக்கொண்ட அறிவு, ஒருவர் தளர்ச்சி அடையும் காலத்தில் ஊன்றுகோல் உதவுவதுபோல உதவும்.
தானே முயன்று கற்றுக்கொள்வது என்பது முதல்நிலை; அப்படிக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால் கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொள்ளவாவது வேண்டும் என்பது இரண்டாம் நிலை.
திருக்குறளில் குரு வழிபாடு ஏன் இல்லை
ஆசிரியரை மறுதலித்துப் பேசவில்லை திருக்குறள்; அவ்வாறு பேசவும் முடியாது. ஆனால், திருக்குறள் ஒற்றை ஆசிரியரைக் குருவாக நிறுத்திப் பேசவில்லை. குரு, குருவின் குரு என்று வரும் குரு மரபைக் குறித்துப் பேசவில்லை. குரு என்பவர் இன்னார், அவருக்கான இலக்கணம் இது என்று குருவை வரையறை செய்கிற வேலையை அது செய்யவில்லை. யார் யாரெல்லாம் அறிவுடையவர்களோ அவர்களிடமெல்லாம் அறிவைப் பெற்றுக்கொள்க என்று பொதுமையாகத்தான் பேசுகிறது.
திருக்குறள் சமயச் சார்பற்ற பொது நூல். ஆகவே, குருவுக்குப் பொட்டிட்டுப் பூச்சூட்டிப் பூசிக்கிற வேலையைச் செய்யாமல், அறிவின் முதன்மையை உணர்த்தி, அதைப் பெறுவது உன் கடமை என்று சுட்டிக்காட்டிவிட்டு அமைதியாகக் கடந்து போகிறது.
ஆனால், திருமந்திரம் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில், திருமந்திரம் சைவம் என்கிற சமயச் சார்பு நூல். அது வழங்கக் கருதுவது பொதுவான அறிவை அல்ல; சைவ மரபு கருதுகிற சிறப்பு அறிவை! சைவ மரபின் சிறப்பு அறிவைக் குரு என்று சொல்லிக்கொள்கிற யார் வேண்டுமானாலும் வழங்கிவிட முடியாது. சைவ மரபை அறிந்து, தெளிந்து, உணர்ந்தவர்கள் மட்டுந்தான் வழங்க முடியும்.
சைவ சமயத் தனி நாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுஉண்டு;
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துஉய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே (திருமந்திரம். 1567)
சைவ சமயத்தின் தனிமுதல் தலைவனாகிய இறைவன், உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உய்வு அடைவதற்காக வகுத்து வைத்த குரு நெறி ஒன்று இருக்கிறது. அந்த நெறி சிவ நெறி. சன்மார்க்கம் என்கிற சைவ அறிவு நெறி.
அறிவை வேண்டுகிறவன் அறிவு இருக்கிறவனிடம் போய்ப் பெற்றுக்கொள்ளலாம் என்று பொதுமைப்படுத்திவிட்டால் அதில் சிக்கல் இல்லை. அரசாங்கப் பள்ளியே போதுமானது. ஆனால், சிறப்பு அறிவு வேண்டும் என்றால் அதற்குரிய தனிப் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து சிறப்புப் பயிற்சி பெற வேண்டியிருக்கிறது இல்லையா?
பணிவில்லாதவன் பரநிந்தை செய்வோன்
குருவைத் தேர்ந்தெடுக்கிற விவகாரத்தில் யாரும் அப்படிச் சங்கடப்பட்டுவிடக் கூடாது என்பது திருமூலரின் எண்ணம். ஏனென்றால், குருவைத் தேர்ந்துகொள்வதில் விடுகிற பிழை ஒரு பிறப்பையே வீணாக்குகிற பிழை. ஆகவே, சற்குரு யார், அசற்குரு யார் என்று தெளிவாக விளக்கம் சொல்கிறார் திருமூலர்.
உணர்வுஒன்று இலாமூடன், உண்மை ஓராதான்,
கணுஇன்றி வேதஆகம நெறி காணான்,
பணிவுஒன்று இலாதோன், பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே. (திருமந்.2044)
அறிவு இருந்தாலுங்கூட, உணர்வும் ஈடுபாடும் இல்லாதவன், உண்மையை அதன் அகல நீளங்களுடன் அறிந்திராதவன், மூல நூல்களைத் திரும்பத் திரும்ப ஓதித் தலைகீழ் மனப்பாடமாக அறிந்திருந்தாலும், அவை சொல்கிற நெறி என்ன, அவற்றின் மையப் பொருள் என்ன என்பதை ஊடுருவிக் காணத் தெரியாதவன், பணிவு இல்லாதவன், தன் நெறியே பெரிது என்று பேசிப் பிற நெறிகளை ஏசுகிறவன், ஆணவத்தைக் குணமாகக் கொண்டிருப்பவன், இத்தகையவனே பொய்மைக் குருவாகிய அசற்குரு என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர்.
சரி, அப்படியென்றால் உண்மைக் குருவாகிய சற்குரு யார்?
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்,
ஆசற்ற சற்குரு ஆவோன்; அறிவுஅற்றுப்
பூசற்கு இரங்குவோன் போதக் குருஅன்றே (திருமந்திரம்-2052)
அறிவைப் பெற வேண்டும் என்கிற விருப்பத்தோடு தன்னை நாடி வருகிற எளியவர்கள் உலகியல் வாழ்வின்மீது கொண்டிருக்கிற பெரும்பற்றை நீக்குகிறவன்; இறைவனை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காமல் தன்னையும் ஆராய்ந்து கொண்டிருப்பவன்; அந்த ஆராய்ச்சி முறைமையைத் தன்னை நாடி வருகிறவர்களுக்கும் மிக்க அன்போடு கற்றுத் தருகிறவன்; அவர்களின் அழுக்குகளை இனி மீண்டும் சேர்ந்துவிடாதவாறு முற்றிலுமாக அகற்றுகிறவன்; ஆசு அற்றவன், அதாவது, எதன்மீதும் ஆசை அற்றவன் எவனோ அவனே சற்குரு
வெளிவேடங் காட்டி, வாய்ப் பேச்சால், வலுத்த குரலால், வாதம்-எதிர்வாதத்தால் தன்னுடைய தரப்பை நிறுவிவிட முடியும் என்று கருதுகிறவன் எவனும் அறிவுள்ள குரு அல்லன் என்று உண்மையான சற்குருவையும் பொய்ம்மையான போலிக் குருவையும் அடையாளம் காட்டுகிறார் திருமூலர். இருக்கட்டும்.
கேவியட் எம்ட்டார்—Caveat emptor—என்று பழைய ஒப்பந்தச் சட்டத்தில் ஒரு கூறு உண்டு. விற்கப்படுகிற சரக்கின் தரத்துக்கு விற்பனையாளர் உறுதி (warranty) வழங்க மாட்டார்; வாங்குகிறவர்தான் எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டும் என்பது அதன் பொருள் (let the buyer beware). இதில் நடக்கிற ஏமாற்று வாணிகத்தை உணர்ந்து, அரசுகள் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலமாக, விற்கப்படுகிற சரக்கின் தரத்துக்கு விற்பனையாளர் உறுதி வழங்க வேண்டும் என்று ஒழுங்கு செய்துவிட்டன.
இவ்வாறு ஒழுங்கு செய்த பின்னாலும் இந்த ஏமாற்று தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. வகைவகையான சரக்குகளை எந்தவிதமான தர உறுதிப்பாடும் இல்லாமல் விற்பனையாளர்கள் விற்பதும் அவற்றை நாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்குவதும் இந்த அடிப்படையிலானதுதான்.
நல்லது. தர உறுதி இல்லாத சரக்கு விற்பனைக்கும் குருமார்களுக்கும் என்ன தொடர்பு என்றால், போலிக் குருமார்கள் எந்தவிதமான தர உறுதிப்பாடும் இல்லாமல் அறிவை விற்கிறார்கள். ஒருவேளை வாங்குகிறவர்கள்தான் உறுதியாக இருக்க வேண்டுமோ? திருமூலர் சொல்கிறார்:
ஞானம் இலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானம் உண்டாக்குதல் நலம்ஆகும் நாட்டிற்கே (திருமந்.242)
மெய்யறிவே இல்லாத ஏமாற்றுக்காரர்கள், சடையும் தாடியும் அணியும் ஆடையுமாக வேடமிட்டு, ஞானிகள்போல நடிக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே ஞானிகள்தாமா என்று உண்மையான ஞானிகளைவிட்டு அரசாங்கம் பரிசோதிக்க வேண்டும். அவ்வாறு சோதித்து, ஒன்று அந்தப் பொய் ஞானிகளுக்கு உண்மை ஞானத்தை உண்டாக்க வேண்டும்; அல்லது அந்தப் பொய் ஞானிகளை நம்புகிற ஏமாளிகளுக்குப் போலிக் குருவின் பொய் வேடம் பற்றிய ஞானத்தை உண்டாக்க வேண்டும். இதைச் செய்தால் நாட்டுக்கு நல்லது என்கிறார் திருமூலர்.
ஞானம் என்பது நுகர்பொருளாக்கப்பட்டால் அதற்கும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்படும் சூழ்நிலைகள்தான் உருவாகும். இது உலகத்திற்கு நல்லதல்லவே.
அதனால்தான், ஒருவர் பிரமஞானத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அத்தகைய உயர் ஆன்மாக்களுக்காக இறைவன் ஒரு தனிப்பிறவியை இப்பூமிக்கு அனுப்பி வைப்பார், அவர் பெயர்தான் குரு – உண்மையான சற்குரு. இதைத்தான் ஔவைத்தாய் விநாயகப் பெருமானை நோக்கி, “குருவடிவாகிக் குவலயம் தன்னில் (21)” என்று பாடி அழைக்கின்றார்.
அடுத்த வரியில் அப்படி வருகின்ற குருவானவர் தன்மீது தன் சிரசின்மீது இருக்கும் ஞான வாசலை திறந்து வைத்திருக்கும் திருவடிகளில் இருக்கும் ஞான இரகசியக் குகையில் இறைவன் மெய்ப்பொருளை மறைத்தே வைத்திருக்கின்றான். இந்த மெய்ப்பொருளை தக்கார்க்கு உரை ; மற்றார்க்கு மறை என்றே இறைவன் சொல்கின்றான். அத்தகைய இறைவனையே மெய்யாகத் தாங்கி நிற்கும் தாமரை மலரைப் போன்ற திருவடிகளாகிய கண்களில் இருக்கும் மெய்ப்பொருளைத் தொட்டுக் காட்டி, இப்பொருளைக் கொண்டு தான் இறைவனை நாமெல்லாம் அடைய முடியும் என்று ஒரு உண்மையான சற்குருவே காட்டித் தருவார் என்பதால், விநாயகப் பெருமானையே ஔவைத்தாய் ஒரு சற்குருவாக எழுந்தருளி வந்து பிரமஞானத்தைத் தந்தருள வேண்டும் என்பதைத்தான், “திருவடி வைத்துத் திறமிது பொருளென (22)” என்று பாடிப் பாடி மகிழ்கின்றார்.
அடுத்த வரிகளுக்குள் செல்லலாம்.
“வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி (23)”
இறைவனுக்கு நாம் எப்போதுமே வாடும் மலரைச் சாற்றக்கூடாது. வாடா மலர்களைத்தான் சாற்றி பூசிக்க வேண்டும். வாடும் மலர் எது? வாடா மலர் எது? பூச்செடிகளிலிருந்து நம் கைகளால் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கே சாற்றினாலும்கூட அம்மலர்கள் 5 மணி நேரத்திலேயே வாடிவிட ஆரம்பித்துவிடும். பூச்செடிகளிலிருந்து பறிக்கப்படும் பூக்கள் உயிரோடு – உயிராற்றலோடு இல்லாத காரணத்தால்தான், அவ்வாறு பறிக்கப்பட்ட மலர்கள் வாடிப் போகின்றன. ஆனால், நம்மிடம்தான் என்றைக்கு வாடிப் போகாத, மலர்ந்தே இருக்கின்ற வாடா மலர்கள் ஐந்து இருக்கின்றன. வலது திருவடி மலர், இடது திருவடி மலர், மகாரத் திருவடி மலர், உயிர் மலர், இறை மலர் ஆகிய ஐந்துதான் அந்த பஞ்சவீர்ய மலர்கள். இந்த ஐந்து மலர்களும் என்றைக்குமே வாடிப் போவதில்லை. காரணம் இம்மலர்கள்தான் என்றைக்கு உயிரோடே இருந்து வருகின்றனவே. நாம் இறந்த பின்னே இம்மலர்கள் எல்லாம் வாடிப் போய் மறைந்து போய்விடும். அப்படியே செடிப் பூக்களை மாலையாக தொடுத்து, நம் தேகத்தில் மாலையாக அணிந்து கொண்டாலும் அம்மலர்கள் வாடக் கூடாது. நம் தேகம் சூடாக வெப்பமாக இருக்கும்வரை, எப்படிப்பட்ட மலர்களும் வாடித்தான் போகும். ஆனால், நம் தேகத்தை குளிர் வெப்பமான தண்வெப்பத்திலேயே வைத்துக் கொண்டால், அணியப்படும் மலர்கள் வாடா மலர்களாக செழுமையாகவும் குளுமையாகவும்தான் இருக்கும். இது அனுபவப்பட்ட உண்மை. நளன்-தமயந்தி வரலாற்றை நீங்கள் படித்திருந்தால், இவர்களின் சுயம்வரத் திருமணத்தில் நடந்து அதிசயத்தை உணர்ந்து கொள்வீர்கள். அதனால், தன் தேகம் எப்போழுதுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடிய பிரமஞானத் தவமுறைகளை விநாயகப் பெருமானே, நீதான் எனக்கு ஆனந்தத்தோடும் மகிழ்வோடும் கற்பிக்க வேண்டும் என்பதைத்தான், “வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளி (23)” என்றார் ஔவைத்தாய்.
அடுத்த வரி “கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே (24)” என்ற வார்த்தைகள்.
கோடாயுதம், கொடுவினை, களைவது. ஔவைத் தாய் சொல்ல வரும் பதில் என்ன தெரியுமா? அப்படி நீங்கள் அனைத்துக் கர்மங்களையும் எரித்து நாசமாக்க வேண்டும் என்றால், அதற்காக ஒரு ஆயுதம் வேண்டுமல்லவா. அந்த ஆயுதத்தின் பெயர்தான் கோடாயுதம் என்கிறார் ஔவைத்தாய்.
கோடாயுதம் = கோடு + ஆயுதம் எனப் பிரித்துப் பொருள் காணலாம்.
கோடு போல இருக்கும் ஆயுதம். அது கண் இமைகளன்றி வேறு எதுவுமில்லை. கண்களுக்கு மை தீட்டும்போது ஒரு கோடுபோல மை தீட்டுவோம் அல்லவா. அந்த மை தீட்டிய கண்களால் பார்க்கும் பார்வை ஒரு ஆயுதத்தைப் போல எதிரிலிருக்கும் நபர்களைத் தாக்கும். மை-க்கு அஞ்சனம் என்றொரு பெயர் உண்டு. அஞ்சனம் தீட்டியக் கண்கள் பிறரை மயக்கும் வல்லமை படைத்ததாக அத்தனைப் புலவர்களும் சித்தர் பெருமக்களும் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி மை தீட்டப்படும் கண்களாகிய திருவடிக் கொண்டு செய்யப்படும் பிரமஞானத் தவத்தால் மட்டுமே நமக்கு கர்மவினைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் கொடுவினைகள் அனைத்தையும் முழுமையாக களைந்தெடுக்க முடியும் என்பதைத்தான், “கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே” என்றார் ஔவைத்தாய்.
அடுத்த வரி “உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி (26)” என்றார்.
இவ்வாறெல்லாம் எனக்குள் இருந்து பிறவிகள்தோறும் என்னைத் துன்பப்படுத்துவதை வழக்கமாகவும் தாரக மந்திரமாகவும் வைத்திருக்கக் கூடிய ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களை எல்லாம் பிரமஞானத் தவத்தால் எரித்து அழிக்கும்படி ஒரு குருவாக நீயே வந்து எனக்கு என் உயிர் மலரக்கூடிய உபதேசங்களை, ஞானங்களை, அமுத மொழிகளை சொல்லிச் சொல்லி என்னை உருவாக்கித் தர வேண்டும். அவ்வாறு நீ கொடுக்கின்ற ஞான மொழிகள் எனக்கு உவட்டாமலும் திகட்டாலும் இருக்கும் பிரமஞான மந்திரங்களாக இருக்குமே என்பதைத்தான், “உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி” என்றார் ஔவைத்தாய்.
நல்லது. திருச்சிற்றம்பலம். இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும்
@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்
www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்
கொடுத்து வருகின்றோம். அங்கு சென்று நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாக அறிந்து உணர்ந்து இன்புறலாம் என்று சொல்லி இப்பேச்சுரையை நிறைவு செய்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து
உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!


