
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார்யாம் ஆர்ஏலோர் எம்பாவாய். (2)
பொழிப்புரை : “செவ்விய அணிகலன்களை அணிந்தவளே! இரவும் பகலும் நாம் பேசும்போது, ‘எப்பொழுதும் என் அன்பு, மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கே என்று சொல்வாய். அப்படிப்பட்ட நீ, எப்பொழுது இம்மலர்கள் நிறைந்த படுக்கையின்மீது விருப்பம் வைத்தாய்’ எனக் கூறுகின்றாயே. உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்த்து விழித்தெழுந்த பெண்கள் இவ்வாறு கூறுகிறார்கள் : “நங்கையர்களே! சீ சீ, நீங்கள் சிரித்துக் கொண்டு பேசும் மொழிகளில் இவையும் இருக்கிறதா. நீங்கள் விளையாடி ஏசுவதற்கு இதுவா சமயம்?” என்றாள். பிற பெண்களோ, “எமது கண்பாவை போன்ற தோழிகளே! இப்படித் தூக்கத்தில் குழறக்கூடாது. விண்ணோர்கள் வழிபட, அவர்களுக்குத் தோன்றாத திருவடிகளை நமக்குத் தந்தருள வந்தருளும் குருவாகிய சிவலோகநாதனாகிய சிற்றம்பலத்தில் ஞானசபையைக் கொண்ட சிவபெருமானுக்கு நம் அன்பு எவ்வாறிருக்க வேண்டும், சொல்லுங்கள்? நாமெல்லாம் யார்? அவனது அடிமைகளல்லவா? நன்றாக சிந்தியுங்கள், நான் சொல்வதைக் கேட்டு உறக்கம் நீங்கி எழுங்கள்” என்றார்கள்.
ஞான மெய்ப்பொருளுரை : பெண்டிருள் உரையாடலாக இப்பாட்டு இயற்றப் பட்டிருக்கிறது. சர்வ பூததமனி, பலப்பிரமதனியை எழுப்பும் முறையாக இருக்கிறது. பாசம்= அன்பு ‘ஆய்’ என்பதைப் பாசம் என்பதனோடும் சேர்த்துவிடுக. கூசுதல் = தோன்றாது மறைதல். ‘அன்பு யார்’ என்பதில் ‘யார்’ எது = எத்தன்மையது? திணை வழுவமைதி. ஓர் = சிந்தி, ஏல் = சொல்லை ஏற்றுக் கொள்.
திருவடிகளுக்குள் இருக்கும் சோதியை மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைத்தான், “பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்” என்றார்.
கண்மணிக்கு ஆபரணமாக இருப்பது திருவடிகள். திருவடிகளுக்கு ஆபரணமாக இருப்பது கண்களின் பார்வை சத்திகள்தான் என்பதை, “நேரிழையாய்” என்றார்.
இராப்பகலில் பேசும் போது என்று மாணிக்கவாசகர் சொல்வது, இரவிலும் பகலிலும் பேசுவது என்று பொருள் கொள்ளக் கூடாது. அது இரவும் பகலும் அல்ல ; இராப்பகலற்ற இடம். இராப்பகலற்ற இடத்தில்தான் இறைவனோடு பேச முடியும். இராப்பகலற்ற இடம் எங்கே இருக்கிறது என்று தெரிந்தால்தானே, அவ்விடத்தில் இருந்து கொண்டு பேச முடியும். அதை உங்கள் சற்குரு காண்பிப்பார். உலக உயிர்களின் ஞான வேட்கைக்காக இங்கே அந்த பிரம ஞான ரகசியத்தை வெளிப்படுத்துகின்றோம். நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் எம் சகோதர, சகோதரிகளே, சான்றோர்களே.
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டும் அவிழ்ந்தவன்பாற்
குராப்புனை தண்டையந் தாடொழல் வேண்டுங் கொடியவைவர்
பராக்கறல் வேண்டு மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்
இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே (கந்தரலங்காரம் செ.74)
என்பது அருணகிரிநாதர் அனுபவ வாக்கு. இதனால் இராப் பகலற்ற இடம் ஒன்று உள்ளது என்பதும், அதனை அடைய வேண்டியது அவசியம் என்பதும், அதனை அடைந்த போதுதான் கடவுள் அருளைப் பெற்று பிரமஞானம் அடைய முடியும் என்பதும், திருவடியைத் தொழ முடியும் என்பதும், ஐம்பொறிகளும் தம்தம் புலன்களில் நிறை முறை இன்றிச் செல்லுதலாகிய பராக்கு அற்று நிறை முறை தழுவி நிற்கும் என்பதும், மனமும் அவச் சலனம் ஒழிந்து சாந்தி பெறும் என்பதும் நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது.
என்புள் இருக்கும் அன்பு உருகிப் பக்குவப்பட்டபோது, அருளோடு கூடிக் குழைந்து நிறை பெற்ற போது அங்கே இறைவனின் கழல் பேசும் காலம் அதுதான். கழல் பேசக் கேட்பதே திருவடி தொழுதல் என்பது. இராப்பகலற்ற இடமாகிய புகலிடம் அடையும்போது விமல தநுவைப் பெற்றபோது கழல் பேசும் காலம் உண்டாகும். இவ்விடத்தில் ஒலிக்கும் நாதமான கிண்கிணி ஓசை ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த ஒலியைக் கேட்பதே “உற்ற ஆக்கையின் உறுபொருள்” ஆகிய திருவடியைக் கண்டு தொழுதல் ஆகும். இத்தகைய கிண்கிணி சிலம்பு வீர கண்டாமணி என்னும் இம்மூன்றும் அசையப் பெற்ற காலமே பேசும் காலமாகும் ; பேசும் நாளாகும். மற்ற நாட்கள் எல்லாம் பேசா நாளே ஆகும். “பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே” (அப்பர் தேவாரம்) என்பதன் பொருள் இதுதான்.
பிரமஞானத் தவத்தைப் பின்பற்றி வரும் ஞானச் சாதகர்களிடம் கழல் பேசாத நாள் இல்லை ; அவர்கள் இறந்து பிறவாதவர்களாதலால் அவர்களிடம் இறைவனின் கழல் பேசிக் கொண்டே இருக்கும்.
இராப்பகலற்ற இடம் என்றால் இருளும் ஒளியும் என்று கூறப்படும். இவற்றை மறப்பு, நினைப்பு எனவும், அறியாமை, அறிவு எனவும், கேவலம், சகலம் எனவும் கூறலாம். அறியாமையாகிய மறப்பும் சீவச் செயலாகிய முனைப்பால் அறிதலாகிய அறிவும் இன்றி சிவ ஞானத்தால் அறியும் ஒன்றே பேரரறிவு என்றும் அந்த பேரரறிவே இராப்பகலற்ற இடத்தில் இருக்கும் என்பதை நாம் இங்கே தெரிந்து கொண்டாக வேண்டும். பிரமஞானிகளுக்கு இந்த பேரரறிவு எப்போதும் இருந்து கொண்டிருக்கும். இருள் இல்லாமல் ஒளி இல்லை ; ஒளி இல்லாமல் இருள் இல்லை. இருள் என்பது அவித்தை ; ஒளி என்பது ஞானம். இவ்விரண்டும் சமம் பெற்றபோது இவை தனித்தனியாக விளங்காமல் ஒன்றுபட்டே நிற்கும். இதுதான் இராப்பகலற்ற இடம் என்பது. இதனைத்தான் மதி சொரூபம் என்பார்கள் நம் முன்னோர்கள். இரவுமல்ல பகலுமல்ல. இவ்விடம்தான் மனமும் மதியும் ஒன்றிய இடம் ; இருவினை சொரூபமாகிய உடலுயிர் இயக்கங்கள் சமம் பெற்ற இடம் ; இருவினை ஒப்பு மலபரிபாகம் வாய்ந்த இடம் என்று அறிக.
அமாவாசை பூரணை யாகும் அவர்க்குச்
சமனாம் உயிருடம்பு காண் (ஔவை ஞானக் குறள் – 297)
அமாவாசை பூரணையாகும் என்பது அமாவாசை பௌர்ணமியாகும் என்க. இருளும் ஒளியும் சமம் பெற்றதை இக்குறள் உணர்த்துகிறது. இருள் ஒளி ; சீத உஷ்ணம் ; உடல் உயிர் இவை சமப்பட்ட இடமே இராப்பகலற்ற இடமாகும்.
சேவடிகள் இரண்டும் வைக்கப்பட்ட இடமும் ; நம்முள்ளே குரு தரிசனம் பெற வேண்டிய இடமும் ; ஞான நேத்திரம் விளங்கும் இடமும் இதுவேயாகும். இவ்விடத்தை நாம் அடைந்தபோது இயற்கையாகவே கீழ்முகம் கொண்ட குண்டொலி மேல்நோக்கி நிற்கும். மனமும் மதியும் ஒன்றாகும்போது இது நடைபெறும். ஞான அனுபவத்தால் அடையும் அனுபவத் தந்திரமாகும்.
இந்த இராப்பகலற்ற இடத்தை அடைந்த பிரமஞானத் தவத்தார்கள் உடலில் அகண்டாகார அமல சொரூபமானது நிறைபெற்று நின்ற அருளாக மாறி அணுஅணுவாக ஆக்கநிலையைப் பெற்று பேரின்பம் அளித்து பிரமஞானச் சாதகர்களின் உடலுயிரை விழுங்கிப் பூரணப்பட்டு நிற்கும். இதுதான் ஜீவன்முக்தி நிலை.
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பு முள்ளும்
வாக்கும் வடிவு முடிவும்இல் லாதஒன்று வந்து வந்து
தாக்கு மனோலயம் தானே தரும்எனைத் தன்வசத்தே
ஆக்கும் அறுமுக வாசொல் லொணாது இந்தஆனந்தமே (கந்தரலங்காரம், செ.73)
இராப்பகல் அற்ற இடமே புகலிடம் எனப்படும். இதுதான் அமல முதற்படி – முத்தி வாயில். விமல தநுவாகிய ரக்ஷக தேகம் இதுவே. இவ்விடத்தில்தான் அருளைப் பெற முடியும். குருவருளால் பெறப்படும் இடமும் இதுதான். இவ்விடத்தை குருவிடம் தீக்கையாகப் பெற வேண்டும். இவ்விடத்தில் நின்று எதை வேண்டினாலும் அப்படியே நடக்கும். இது சத்தியம். அனுபவ உண்மை.
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேன் பருகி
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே (தி.ம.1856)
இரவும் பகலும் என்ற பேதமற்று சாக்கிராதீதத்தே நின்று, வேறு எண்ணமற்று நின்று சிவானந்தத் தேன் பருகி, இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து, இரவும் பகலும் உள்ள அசுத்த மாயை, சுத்தமாயை அகற்றி நின்றேன்.
நாம் வாழும் இவ்வுலகில் இரவும் பகலும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றது.
ஆதலால் இன்பமும் துன்பமும்.பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. மேலும் நினைப்பு மறைப்பு, விழிப்பு தூக்கம், பற்று பற்றில்லாமை, உறவினில் பகைமை.பகைமையில் உறவு போன்ற வேற்றுமையில் ஒற்றுமை. ஒற்றுமையில் வேற்றுமையின் வாழ்க்கை முறைகளாலும் மேலும் சாதி சமய மதங்களினாலும் அகம் கருத்து புறம் வெளுத்து மயக்க நிலையில் ஆன்மாக்கள் சிக்கித் தவித்துக்கொண்டு உள்ளன.
இவ்வுலகில் அறியாமை அஞ்ஞானம் மூட நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து ஆன்மாவின் அருள் தன்மையைத் தெரிய வொட்டாமல் மாயாத் திரைகள் மறைத்துக் கொண்டுள்ளது.
அருள்பெறுவதே ஆன்மாவின் குறிக்கோளாகும்.
ஆன்மா உயிர் உடம்பு எடுத்து வாழ்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருள் பெற்று உயிர் உடம்பை அழிக்காமல் மாயையிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு இரவு பகல் இல்லாத அருள் பெருவெளிக்கு செல்வதே ஆன்மாக்கள் பெறும் ஆன்ம இன்ப லாபமாகும்.
இராப்பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே
நானும் இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே!
இரவு பகல் அற்ற இடத்திற்கு நான் வரவேண்டும் என்று ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்கின்றார் வள்ளலார்.
வெண்ணிலா என்பது இங்குள்ள நிலவைக் குறிப்பது அல்ல!
வெண்ணிலா என்பது வெள்ளை நிறம் உடையது சுத்தமான இடத்திற்கும் வெண்மை என்று பெயர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கும் இடமான அருட்பெருவெளிக்கும் வெண்ணிலா என்று பெயராகும்.
கலவை இல்லாத அருளுக்கும் வெண்ணிலா என்று பெயராகும்.
அருட்பெருவெளி என்பது அருள் நிறைந்த பெருவெளியாகும் அங்கு பஞ்சபூதங்களான ஜட தத்துவங்கள் கிடையாது அங்கு இரவு பகல் என்பது கிடையாது.
அங்கு செல்ல வேண்டுமானால் பொன்மை வெண்மை கலந்த அருள் உடம்பாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அங்கு செல்ல முடியும் என்பதை அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான வள்ளலார் பாடல் :
இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணி யே
இரவும் பகலும் மயங்கி னேனை இனிது நண்ணி யே
அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டியே
அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல்அமுதம் ஊட்டி யே !
மேலும்
இரவும் பகலும் என்னைக் காத்துள் இருக்கும் இறைவ னே
எல்லா உலகும் புகழ எனைமேல் ஏற்றும் இறைவ னே
கரவு நினையா தெனக்கு மெய்ம்மை காட்டும் துணைவ னே
களித்தென் தனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவ னே.
இரவுபகல் அற்ற இடமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான அருட்பெருவெளிக்குள்ளே ஆன்மாக்கள் செல்ல வேண்டிய சொந்த இடமாகும். இரவு பகல் அற்ற இடம்தான் நம் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் கோட்டையாகும்.
ஆன்மாக்கள் அங்கு செல்ல வேண்டுமானால் இங்கு தூங்காமல் இருக்கும் சூக்குமத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். கோட்டையைத் திறந்து உள்ளே செல்லும் சாவியை இங்கே சற்குருவிடமிருந்து பெறவேண்டும்.
தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
ஆக்கமென ஓங்கும் பொன் அம்பலத்தான் – ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
தாங்கினேன் சத்தியமாத் தான்
இரவு பகல் அற்ற இடம் = 12 வது நிலையாகிய துவாதசாந்தப் பெருவெளி – ஆன்ம நிலையம்.
நம் கண் – மனம் – பிராணன் யாவும் இந்த இரவு பகல் அற்ற இடத்தே கவனம் சிதறாமல் இருந்தால், வானமுதம் பருகலும் கூடும்.
இவ்வாறு இரவும் பகலும் ஓயாமல் திருவடிகளின் மெய்ப்பொருளுக்குள்ளே அமர்ந்து கொண்டு பிரமஞானத்தைப் பற்றிச் சிந்திப்பதைத்தான், “இராப்பகல் நாம் பேசும்போது” என்றார் மாணிக்கவாசகர்.
எப்போதும் மனமானது திருவடிகளின் மெய்ப்பொருள்களை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான், “எப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ” என்றார்.
இரு திருவடிகளின் மெய்ப்பொருள்களும் ஒன்றுக்கொன்று இணங்கி இணக்கமாக இருந்தால்தான் ஞானம் உண்டாகும். இல்லையேல் ஞானம் உண்டாகாது. ஆனால், திருவடிகள் ஒழுங்காக இணங்காமல் இருப்பதைத்தான், “நேரிழையீர்” என்றார்.
திருவடிகளின் மெய்ப்பொருள்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணங்கி இருக்கும்போதுதான் ஞானம் உண்டாகும். அவ்வாறு இணங்காமல் தனித்தனியே இருப்பின் ஞானமின்மை தோன்றி, அதனால் துன்பம்தான் நேரிடும் என்பதைத்தான், “சீ சீ இவையும் சிலவோ” என்றார்.
திருவடிகளின் மெய்ப்பொருள்கள் இணங்கி நிற்கும் இடத்தின் பெருமைகளை நோக்கியும், அடிக்கடி பிரமஞானத் தவத்தைப் பயன்படுத்தியும் வெளியே உலவும் சிந்தனைகளால் தமக்குள்ளே ஞானம் கூடி வராமல் இருப்பதைத்தான், “விளையாடி ஏசும் இடம் ஈதோ” என்றார்.
ஞான ஒளிக்கலைகளால் தன் தேகத்தை பிரகாசமாக வைத்திருப்பவனும், சிவலோகமாகிய உயிர் இருக்கும் கூட்டின் சிற்றம்பலத்தில் நடிப்பவனும் ஆகிய சிவத்திற்கு அன்பு நிறைந்த தன்னைத் தவிர வேறு யார் இருக்கின்றார்கள் என்பதை இங்கே சற்றே சிந்திக்க வேண்டும் என்பதைத்தான், “தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பார் யாம் ஆர்” என்றார்.
என்னுடைய இரு மெய்ப்பாவைகளே (pupil of eyes), நீங்கள் இருவரும் இணக்கமாய் நின்று வாழ வேண்டும் என்பதைத்தான், “ஏலோர் எம்பாவாய்” என்றார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!


