தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

            அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை

            மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்

            திருவா சகம்என்னும் தேன்

பொழிப்புரை : மனித வாழ்வில் பிறப்பினால் ஏற்படும் இன்னல்கள் மனித தேகத்தை எப்பொழுதும் வேலியில் படரும் கொடி போன்றே என்றும் சூழ்ந்தே காணப்படுகிறது.  இதன் காரணம் பிறவிப் பெரும்பாடு. அத்தகைய மனிதப் பிறப்பினால் ஏற்படும் விலங்காகிய தடைகளை நீக்கியும் துன்பங்களை ஒழித்தும் (அறுத்தும்) மனிதனுக்கு ஆனந்த வாழ்வை அருளிக் கொண்டிருக்கும் மீண்டும் பிறவாமல் இருப்பதற்கான பிரம ஞானத்தை (மருவா நெறி) அருளும் வாதவூரில் இருக்கக் கூடிய எம் தலைவன் வாசம் செய்யும் இடமாகிய மணிவாசலைப் பற்றிக் கூறும் ஆனந்த நூல்தான் இந்த மணிவாசகரால் பாடப்பட்ட திருவாசகம் என்னும் தேன்.

ஞான மெய்ப்பொருளுரை : மனிதனுக்குத் தொல்லைகளையும் தடைகளை யும் கொடுப்பது அவன் ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கும் இரும்பிறவிதான்.  பிறவி எதனால் ஏற்படுகிறது?  அவனின் எண்ணப் பதிவுகளால்.

எண்ணப் பதிவுகள் இருவகையாகும்.  ஒன்று நல்ல எண்ணங்களை சுமந்து கொண்டிருக்கும் நல்வினைப் பதிவுகள்.  மற்றொன்று தீய எண்ணங்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் தீவினைப் பதிவுகள். பதிவுகள் என்றாலே அது சிந்தனைகள் மற்றும் எண்ணங்களின் உச்சம்தான்.

பதிந்தவைகள் தொடர்ந்து எண்ணங்களாக மலர்ந்து கொண்டே இருக்கும்.  எண்ணங்கள் மலர மலர புதுப்புது சிந்தனைகள் மனிதனுக்குள் பூத்துக் கொண்டே இருக்கும். பூப்பதை நிறுத்தாமல் யாக்கையின் பிறப்பை தடுக்கவே முடியாது.  மனிதன் தனக்குள் மலராமல் இருப்பதால்தான் அவன் இப்பிறவியிலாவது மலர்ந்து மணம் வீசிவிட வேண்டும் என்று ஒவ்வொரு பிறவியையும் எடுத்துக் கொண்டு, தனக்குள்ளே போராடிப் போராடி தன் வாழ்நாட்களை தொலைத்துக் கொண்டே இருக்கின்றான்.

இந்த மனித தேகம் சென்ம சென்மமாய் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் யாக்கைக்கு பழம்பொருள் என்ற பெயருண்டு. அந்த பழம்பொருளில் ஒரு உறுபொருள் இருக்கிறது.  அதுதான் சிவப்பழம்பொருள்.  இந்த சிவப்பழம்பொருளே மனிதனுக்கு ஞானத்தையும் பிரணவ தேகத்தையும் பிராண தேகத்தையும் ஞான தேகத்தையும் இறுதியாக ஒளி தேகத்தையும் வழங்கக் கூடியது.

அந்த சிவப்பொருள் பழமையாய் நம் தேகத்திற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் காணும் வழியை – மார்க்கத்தை – தந்திரத்தைக் கற்றுக் கொடுப்பதுதான் பிரமஞானம்.

பிரமஞானச் செல்வங்களை அடைய வேண்டுமென்றால் அதற்கு அவன் அருளாலே அவன் தாள்களை வணங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி வணங்குவதற்கு தடைகளாக இருக்கக் கூடியது, ஞானத்தை மறைத்துக் கொண்டிருக்கக் கூடிய மணிவாசலில் திரைகளாக மூடியிருக்கும் மும்மலங்களே.

மணி வாசல்தான் ஞான வாசல். ஞான வாசலில்தான் ஞான மணிக்கான இரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இறை வாசம் செய்யும் ஞான மணி வாசலை அகத்தில் நின்று பாடியதால், இந்நூல் மணிவாசகம் என்றும் திருவாசகம் என்றும் அழைக்கப்படலாயிற்று. கடவுள் கேட்க மனிதன் பாடியதுதான் இத் திருவாசகம் என்னும் தேன். மனிதன் தன்னை மறந்த கதைதான் இத்திருவாசகம்.  மலைத் தேன் உடலை வளர்க்கும் ; திருவாசகத் தேன் உயிரை வளர்க்கும்.

தனக்குள் தன்னைத் தேடி முத்தெடுக்கும் தன்னிரிகல்லா ஞானக் கல்விதான் திருவாசகம் என்னும் பிரம ஞானம்.

திருவாசகத்தை பத்தி நூலாகவோ தோத்திர நூலாகவோ பார்க்காமல் அதை ஞான நூலாகப் பார்த்து பயன் அடைய வேண்டும்.

            “கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

                                                                     நற்றாள் தொழாஅர் எனின்”                                (திருக்குறள் – 02)

            “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

             தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

             தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

                                           தன்னையே அர்ச்சிக்கத் தான்இருந் தானே”      (தி.ம.2355)

நல்லது, இனி திருவெம்பாவை பாடலுக்குள்ளும் அது சொல்ல வந்த பிரமஞானத்திற்குள்ளும் நாம் குளித்து வரலாம் வாருங்கள்.

மார்கழி 1 – 16.12.2024 – திங்கட்கிழமை

திருவெம்பாவை – பாடல் 1

  1. திருவெம்பாவை

‘எம்பாவாய்’ என்று ஒவ்வொரு பாசுரங்களும் முடிவடைவதால் இப்பாசுரங்களின் தொகுதிக்கு, ‘திருஎம்பாவை’ என்பது பெயராயிற்று. இவ்வாறு வரக்கூடிய பாடல்கள் ‘பாவைப் பாட்டு’ எனப்பட்டன.  பாடல்களின் முடிவினில் வரும் பெயராக  இப்பாசுரங்கள் அமைந்துள்ளதால், ‘திருஎம்பாவை’  எனப்பட்டது. ‘எம்பாவாய்’ என்ற வார்த்தைக்கு முன்னால், ‘ஏலோர்’ என்ற வார்த்தையைச் சேர்த்து, “ஏலோர் எம்பாவாய்” என முடிக்கப்பட்டுள்ளது, இப்பாவைப் பாடல்கட்குரிய மரபாகும்.

கண்களின் சூக்கும ஆற்றல்களை வியந்து போற்றுதல்

இந்த திருவெம்பாவையில் கண்களின் சத்திகள், பெருமைகள், அதிலிருந்து வெளிப்படும் சூக்கும சத்திகளின் பெருமைகள், சிவம் நம்மில் வெளிப்படும் வழிமுறைகள், அந்த கண்ணின் சத்தியைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானகர்மங்கள், அதனால் நமக்குள் ஏற்படும் ஞான அனுபவங்கள் இவற்றைப் பற்றி மிகத் தெளிவாக மாணிக்கவாசகரின் அவரின் பிரமஞானத் தவத்தின் அனுபவங்களாக உயிர் உருகும் வண்ணம் பாடி அருளியிருக்கிறார்.

(வெண்தளையான் வந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா)

            ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

                        சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

            மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

                        மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

            வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

                        போதுஆர் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்

            ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

                        ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய்.         (1)

பொழிப்புரை : எம்மோடு நட்பு பாராட்டும் ஒப்பற்ற பாவையே, ஒளி பொருந்திய நீண்ட கண்ணை உடைய பெண்ணே ! முதலும் முடிவுமில்லாத பார்ப்பதற்கு அரிய பெருமை கொண்ட ஒளியாக இருப்பவனை நாங்கள் பாடுகிறோம். அதைக் கேட்டும் இன்னும் நீ உறங்குகின்றாயோ? நான் சொல்வதை உன் செவிதான் கேளாத வலிய செவியாக இருக்கிறதோ?  மகா தேவனாகிய சிவத்தின் நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள்  வாழ்த்திப் பாடியபோது, அந்த வாழ்த்தின்  ஓசைகள் இந்தத் தெரு முழுவதும் பரவியுள்ளதே. அதனைக் கேட்ட அளவிலேயே ஒருத்தி  பொருமிக் கொண்டு அழுது, உடல் இருப்பதை மறந்து, மலர் நிறைந்த படுக்கை யிலிருந்து கீழே சரிந்து விழுந்து விட்டாளே. இந்நிலத்தின்மீது ஒன்றுக்கும் இந்நிலத்தின் மீது ஒன்றிற்கும் ஆகாதவள் போல் மயக்குமுற்று கிடக்கின்றாள்.  இந்த நிலையை என்னவென்று பார். அவள் செயல் அவ்வாறிருக்க, எங்கள் தோழியாகிய நீ இன்னும் கண் விழித்து  எழாதிருக்கின்றாயே இது என்ன செயலோ? என்ன ஆச்சரியம் ! என்ன ஆச்சரியம் ! எமது கண்ணின் பாவை போன்றவளே! நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளேன்.

குறிப்புரை: தம்முள் தோழமை கொண்ட பல பெண்கள், தங்கள் தோழியாகிய ஒருத்தியை உறக்கத்திலிருந்து எழுப்பும் பொருட்டுக் கூறிய பாட்டாக இப்பாசுரங்கள் தோன்றுகின்றது. திருவண்ணாமலையில், மார்கழி மாதத்தில், விடியற் காலை நேரத்தில் குளத்தில் குளிக்கச் செல்லும் பெண்கள், தம் தோழியர்களை அழைத்துச் செல்ல விரும்புவதாகவும், தம்முள் பேசிக் கொள்ளுவதாகவும் இப்பதிகம் இயற்றப் பட்டதாகக் காணப்படுகிறது. தத்துவ ஞானங்களைப் பேசும் ஒரு பிரிவினர், மனோன்மணி, சர்வ  பூததமனி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, இரௌத்திரி, சேட்டை, வாமை என்னும் ஒன்பது  சத்திகளுள், முன்னால் இருப்பவர் பின்னால் நிற்பவரை உறக்கத்திலிருந்து  எழுப்புவதாகவும், இவர்கள் அனைவரும்கூடி இறைவனை  துதிக்கும் பொருட்டுத் தம்முள் பாடுவதாகவும், சொல்லப்பட்ட இப்பாடல்களின் தொகுதிதான் இத் திருவெம்பாவை ஆகும். சத்திகளின் இயக்கத்தால், அனந்தர் வாயிலாக மாயைக்குக் கீழ்ப்பட்டவற்றின் படைப்பு நிகழும்.  வளருதியோ = கண் வளருதியோ = தூங்குகின்றாயோ. ஏல் ஓர்  என்பதை அசையாகவும் கொள்வார்கள். இப்பாட்டு மனோன்மணி, சருவ பூத தமனியை உறக்கத்திலிருந்து எழுப்பி அதனை இயக்கநிலைக்குக் கொண்டு வருவதை உணர்த்துகிறது.

ஞான மெய்ப்பொருளுரை : பிரமஞானத் தவத்தைச் செய்வதற்கு சில அத்தியாவசியப் பொருள்கள் தேவை.  அதில் முக்கியமான நித்தியப் பொருள்தான் மெய்ப்பொருள்.  திருவடிகளில் இருக்கும் கண்மணிதான் மெய்ப்பொருளாகும்.  அந்த கண்மணியிலிருந்துதான் பார்வையின் சத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இதன் வழியாகத்தான் மனிதனைத் தெய்வமாகவும் ஞானியாகவும் சித்தனாகவும் மாற்றக் கூடிய அமுதக்காற்று உள்ளே பிரவேசித்துச் செல்லும். மனித உயிர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்காக பார்வதி தேவி திருவடியின் தென்கிழக்கு மூலையில் அமர்ந்திருக்கின்றாள்.  இந்த பார்வதி அம்மையை உபாசனை செய்வோர் ஞானத்தை எளிதாக அடைவார்கள்.  உபாசனை என்றால் பூசை, புனஸ்காரம் என்றெல்லாம் யோசிக்கக் கூடியது.  உகாரத் திருவடியில் நின்று மெய்ப்பொருளில் பார்வதி சத்தியைக் காண்பதாகும். சந்திரக் கலையில் செய்யப்படும் சுடராழித் தவம்தான் வாலைத் தவமாகும். வாலைத்தாய் தான் சிவத்திற்கு முன்பு வந்து சாதகனை ஞானியாக்குவாள். இவையெல்லாம் அனுபவத்தால் வரக்கூடியது.  தவம் செய்யாது இவைகளை உங்களால் புரிந்து கொள்ள இயலாது.  அதனால்தான் அந்த சிவமே சதாகாலமும் பிரமஞானத் தவத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்.  தவத்தில் இருக்கும் சிவத்தை நமக்குள் வெளிக்கொண்டுவர நாமும் தவம்தானே செய்ய வேண்டும். அர்ச்சனைகள், பூசைகள், அபிசேகங்கள், நாமாவளி தோத்திரங்கள், யாகங்கள், ஓமங்கள், கிரிவலங்கள் மற்றும் பல புறவழிபாடுகளிலெல்லாம் சிவம் அசைந்து கொடுப்பதே இல்லை.  அவனைப் பற்ற வேண்டுமென்றால், அவன் செல்லும் வழிகளைத்தான் நாமும் பற்றிக் கொள்ள வேண்டும். குருவைப் பிடிக்க வேண்டுமென்றால், அவர் செல்லும் வழியைப் பின்பற்ற வேண்டுமல்லவா.

            கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்

            கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்

            கண்காணி யாகக் கலந்துஎங்கு நின்றானைக்

                                    கண்காணி கண்டார் களவுஒழிந் தாரே                (தி.ம.2067)

என்று திருமந்திரம் சொல்வதைக் கவனிக்கவும்.

வாள் – பிரகாசம் ; கண் மாது – கண்ணின் சத்தி ; வளருதல் – தூங்குதல் ; வார்கழல் – மலத்தால் மூடப்பட்ட திருவடி ; போதுஆர் அமளி – மலரின் படுக்கை.

திருவடிகள் அசைவோடு இருப்பின் அதனால் ஒரு பயனும் இல்லை என்பதைத்தான், “அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்கன் ஏதேனும் ஆகாள்” என்றார்.

திருவடிகளில் இருக்கும் கண்மணி பாப்பாவைத்தான், “ஓர் எம்பாவாய்” என்றார்.

திருவடிகளில் கண்மணி மையத்தில் பொருந்தி இருப்பதைத்தான், “ஏல்” என்றார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!