இறைவனோடு சிற்றம்பலத்தில் சேரும் திருமந்திரம்

இறைவனோடு சிற்றம்பலத்தில் சேரும் திருமந்திரம்

எம் அமுதத் தேனாம் தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம். அனைத்து தமிழ்ச் சான்றோர்களுக்கும் மனித உயிர்களுக்கும் திருவடியில் நின்று வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, எம் சற்குருவிடம் நல்லாசி பெற்று திருமந்திர அமுதக்கடலில் அடுத்ததொரு முத்தை எடுக்கிறேன், உங்கள் அனைவருக்காக.

வாருங்கள், அடுத்த திருஅமுதக் குடத்திற்குள் நுழைவோம். நாம் இங்கே எடுத்திருக்கும் திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரத்தில் தியானம் என்ற தலைப்பிற்குள் வருகிறது. திருமந்திரம் இதோ :

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்து கொண்டேனே (திருமந்திரம் – 2770)

நெற்றியில் உற்று நோக்கினால் பற்றாக இருக்கும் சிற்றம்பலத்தோடு சேர்ந்து கொள்ளலாம் என்பதுதான் திருமூலர் இங்கே சொல்ல வரும் முடிவு. முதலில் நாம் இத்திருமந்திரத்தில் மறைந்துள்ள தேவ ரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதும் திருமூலர் சொல்லியிருக்கும் ரகசியப் மெய்ப்பொருளுக்கான சாவி நமக்கு கிடைக்கும். சாவி கிடைத்துவிட்டால், பூட்டைத் திறந்து ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.

திருமூலர் முதல் வரியில் நெற்றிக்கு நேராக இருக்கும் புருவத்து இடைவெளி எனக் குறிப்பிடுகிறார். திருமூலர் குறிப்பிடும் சிற்றம்பலத்தை திறந்து கொள்வதற்கான சாவி இந்த புருவத்து இடைவெளியில்தான் இருக்க வேண்டும். அப்படியென்றால் எந்த இடம் புருவ மத்தி என்பதை முதலில் தெரிந்து கொண்டாக வேண்டும்.

நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் அனைவரும் ஞானிகள் உட்பட அனைவரும் புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் ; தவமாற்றுங்கள் என்கிறார்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு சமய மடங்களும் ஆசிரமங்களும் ஆதினங்களும் ‘புருவமத்தியில் கவனம் வையுங்கள் ; இறைவனைப் பாருங்கள்’ என்கிறார்கள். அது எந்த இடம் என்று கேட்டால் தினமும் இரு கண்களுக்கும் இடையில் பொட்டு, திலகம் வைக்கின்றோமே அந்த இடம்தான் புருவ மத்தி என்று வழங்கப்பட்டு வருகிறது. இது முற்றான தவறு என்று சித்தர்கள் கூறுவதை இங்கே சிறிது செவிமடுப்போமா.

சரி, எந்த இடம் புருவமத்தி? சித்தர்களுக்கெல்லாம் தலைவராகிய அகத்தியர் அய்யாவிடம் கேட்போம்.


“கண் நிறைந்த சோதியடா புருவமத்தி
அலையாதே புருவமத்தி துளை என்றெண்ணி
அப்பனே மூக்குநுனி அந்தம் ஆச்சே” (அகத்தியர்)

“நில்லென்ற இடம் அதுதான் பரமும் ஆச்சு
நேத்திரத்தில் சூடினது சிவமும் ஆச்சு
வில்லென்ற புருவநடு மையம் ஆச்சு
விளையாத பொருளதுதான் விண்ணில் ஆச்சு
செல்லவழி மனதறிவால் ஞானக்கண்ணைத்
திறந்தனடா சுழிமுனையிற் கண்டுகொள்ளே” (அகத்தியர்)
அடுத்து நமது ஆதித் தமிழ் குருவான காகபுசண்டர் அய்யா அவர்களிடம் கேட்போமே.

பாரடா புருவமத்தி ஏது என்றாக்கால்
பரப்பிரம்மம் ஆனதோர் அண்ட உச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனைஎன்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்துஐந்து பூதமும்தான் ஒன்றாய்ப் போமே.
(காகபுசண்டர் ஞானம் – 80 : 11வது பாடல்)

எது புருவமத்தி என்பதை வள்ளற்பெருமான் கூறுவதையும் கேட்கலாம்.

“கையற விலாத நடுக்கண் புருவப்பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடுநாட்டு”
என்று புருவமத்தி இருக்கும் இடத்தை வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.

வள்ளற்பெருமான் தான் எவ்வாறு பெருந்தவத்தைச் செய்தேன் என்பதை அவர் திருவாயாலேயே சொல்வதை கேட்போமா. “என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்” தன் கண்ணில்தான் பெருந்தவமாகிய பிரம்மஞான தவத்தைச் செய்தேன் என்று வள்ளலாரே குறிப்பிடுவதை மனித சமுதாயம் நன்றாக விசாரம் செய்து மெய்ப்பொருளை உள்வாங்கிக் கொண்டு இறைவனைக் காணும் மெய்வழிப் பாதையில் செல்வார்களாக.

இப்படி அநேக சித்தர்களின் பாடல்களிலிருந்து இறுதியான முடிவுக்கு நாம் வந்தது இந்த புருவமத்தி என்பது பொட்டு வைக்கும் இடத்தில் இல்லை என்பதும் ; புருவத்தின் மத்தியில் உள்ள கண்ணைத்தான் புருவமத்தி என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார் என்ற முடிவுக்கு வர முடிகிறது. எனவே, எந்த இடத்தில் புருவமத்தி என்ற வார்த்தையைப் படித்ததும் நமக்கு நினைவுக்கு வரவேண்டிய இடம் கண்தானே தவிர, பொட்டு வைக்கும் இடமல்ல. இதை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம்தான் பொட்டு வைக்கும் இடம். புருவ மத்தி என்பது ஒற்றை புருவ மத்தியாகும் ; அவ்விடம் கண் என்ற திருவடி.

எனவே, காகபுசண்டர் பாடலிலிருந்து புருவமத்தி எதுவென்றால், அது அண்ட உச்சியாகும். அண்டம் என்றால் உலகம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அண்டம் உருண்டை வடிவத்தில் இருக்கும். நமது கண்களும் உருண்டை வடிவத்தில்தான் இருக்கிறது. நமது கண்கள்தான் அண்டம், அந்த கண்ணின் உச்சி (அண்ட உச்சி) தான் நமது இரு கண்மணிகள். அண்டத்தின் உச்சி என்பது நுனிப்பகுதியாகும். நமது கண்களின் உச்சியில் இருப்பது கண்மணிதான் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். எனவே, புருவ மத்தி என்பது அண்டத்தின் உச்சியாகிய கண்மணிகள்தான் என்பதுவே திருமந்திரம் சொல்லும் மறைக்கப்பட்ட ரகசியம்.

இந்த கண்மணியின் வழியாகத்தான் நாம் பிரம்மஞானத் தவத்தில் இமை கொட்டாமல் கண்மணியின் மத்திய பகுதியை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான் திருமூலர், “உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்” என்றார். ஒளிவிடும் மந்திரம் என்பது கண்மணியின் வழியாகத்தான் ஒளி ஆற்றலானது உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்து கொண்டிருப்பதுதான். பிரம்மஞானத் தவத்தில் கண்மணியின் வழியே உள்ளே நுழையும் ஒளியால் நமது திருவடியை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு இமை மூடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டும் தவம் செய்தால், அங்கே இறைவன் அமர்ந்திருக்கும் இடத்தைக் கண்டுவிட முடியும் என்பதைத்தான், திருமூலர் “பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திடம்” என்றார். பற்றே இல்லாமல் சுழன்று கொண்டிருக்கக் கூடிய கண்மணியின் உள்ளே இறைவன் உறைந்திருந்து நம் உயிரை பற்றிக் கொண்டிருப்பதால் பற்றுக்குக் பற்றாய் என்றார் திருமூலர்.

சித் + அம்பலம் = சிற்றம்பலம். சித் என்றால் அது நம் உயிர். அம்பலம் என்றால் வெட்டவெளிச்சமாக சொல்லப்படுவது. நம் உயிர் இருக்கும் இடத்தை பகீரங்கமாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்பட்டுள்ளதால், அந்த உயிர் இருக்கும் இடத்தைத்தான் சித் அம்பலம் சிற்றம்பலம் என்று திருமூலர் ரகசியமாகக் குறிகாட்டியுள்ளார். திருமூலர் எதை இங்கே அம்பலப்படுத்தியுள்ளார் என்பதை அவர் திருவாயாலே கேட்போம்.


அம்பல மாவது அகில சராசரம்
அம்பல மாவது ஆதிப் பிரான்அடி
அம்பல மாவது அப்புத் தீமண்டலம்
அம்பல மாவது அஞ்சு எழுத்துஆமே. (திருமந்திரம் – 2775)

இறைவன் இங்கே நமக்கு அம்பலப்படுத்தியிருப்பது உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஆதி இறைவனின் திருவடிகளையும் நீர் மண்டலத்தையும் நெருப்பு மண்டலத்தையும் அஞ்ச எழுத்தாகிய நமசிவாய என்ற மந்திரத்தின் உட்பொருளையும்தான். இறைவனின் திருவடிகள் நமது உயிர்க்கூட்டுக்குள் சோதிப் பிரகாசமாக வீற்றிருக்கிறது. நமது கண்களில் கண்ணீர் என்ற நீரும் உண்டு ; அக்னி என்ற நெருப்பும் உள்ளது. கண்மணியின் வழியே செல்லும் ஒளி வெப்பமாகத்தானே இருக்கும். அதனால்தான் இவ்விடத்தை திருமூலர் அம்பலம் என்பது நீரும் நெருப்பும் கொண்ட மண்டலம் என்றார். அவ்வாறு தொடர்ந்து நேத்திரம் (கண்களின் வழியே) வழியே ஒளியை உட்செலுத்திப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பதைத்தான் கீழ்வரும் திருமந்திரத்தில் சென்ற பதிவின்போது முழுமையாக கண்டோம்.

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே (திருமந்திரம் – 600)

எனவே, இறைவன் இருக்கும் சிற்றம்பல வீட்டைக் காண வேண்டுமென்றால், புருவமத்தியாகிய கண்மணியின் வழியே ஒளியால் உற்று நோக்கி பார்த்து பிரம்மஞானத் தவம் செய்து வந்தால், நாம் அந்த சிற்றம்பல வீட்டை அடைந்து நாமும் சிற்றம்பலமாம் சிவமாவோம் என்பதுதான் இத்திருமந்திரப் பாடல் சொல்லும் மறைக்கப்பட்ட ரகசியம்.

ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்
ஞான சற்குரு டாக்டர்.ருத்ர ஷிவதா,
பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!!