
எமபயம் இல்லாமல் செய்யும் திருமந்திரம்

எமபயம் இல்லாமல் செய்யும் திருமந்திரம்
எம் அமுதத் தேனாம் தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம். அனைத்து தமிழ்ச் சான்றோர்களுக்கும் மனித உயிர்களுக்கும் பரிபூரண வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, எம் சற்குருவிடம் நல்லாசி பெற்று திருமந்திர அமுதக்கடலில் அடுத்ததொரு முத்தை எடுக்கிறேன், உங்கள் அனைவருக்காக.
வாருங்கள், அடுத்த அமுதக் குடத்திற்குள் நுழைந்திடுவோம்.
மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே (திருமந்திரம் – 622)
இத்திருமந்திரத்தின் முதல் வார்த்தை மூலநாடி என்பது. ஆன்றோர்களும் சான்றோர்களும் சமயப் புலவர்களும் மூலநாடி என்றால் அது மூலாதாரத்தில் உள்ள நாடி என்பதுதான். மூலாதாரம் என்பது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் நான்கு இதழ்களோடு இருப்பதாகக் கூறியுள்ளார்கள். அனைத்திற்கும் ஆதாரமானதைத்தான் மூலம் என்பார்கள். எல்லா உயிர்களுக்கும் இறைவன் மூலமாக இருப்பதால்தான், அவர் ஆதிமூலம் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கே மூலன் சொல்லும் மூலம் எதுவென்றால், அது சுழிமுனை நாடியைத்தான். சுழிமுனை நாடி என்பது சமயவாதிகள் கூறுவதுபோல, இடகலை, பிங்கலை நாடிகளின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் நாடி என்பதல்ல. சுழிமுனை என்றால் சுழித்துக் கொண்டிருப்பது, அது ஒரு முனையின் உச்சியில் சுழித்துக் கொண்டிருக்கும். அது நமது திருவடியின் மையப்புள்ளியில் இருக்கக் கூடிய மெய்ப்பொருளன்றி வேறில்லை. மெய்ப்பொருளின் உச்சிமுகட்டைப் பாருங்கள், அங்கே வட்டவடிவத்தில் சுழி காணப்படும். எனவே, “மூலநாடி முகட்டலகு உச்சியுள்” என்பது திருவடியின் உச்சிமுகட்டில் உள்ள மையப்புள்ளியில் இருக்கும் சுழிமுனை நாடிதான் என்பது உங்களுக்கு தெளிவுற்றிருக்கும்.
திருமந்திரத்தின் அடுத்த வரி “நாலுவாசல் நடுவுள் இருப்பீர்காள்” என்பது. நான்கு வாசல் என்பது கண், காது, மூக்கு, வாய் என்கிறார்கள் மெத்தப்படித்த மேதாவிகள், புலவர்கள். எல்லா உரைநூல்களிலும் இப்படித்தான் இவைகளைத்தான் நாலு வாசல் என்று சொல்லப்பட்டுள்ளது. பிரம்மஞானத் தவத்தில் கைவல்யம் ஆகாதவர்களின் கூற்று இவைகள். இவைகளை புறந்தள்ளி உண்மையான மெய்ப்பொருள் உரைக்குள் செல்வோம்.
நாலு வாசல் என்பது
- சுழிமுனை வாசல்,
- வஜ்ர வாசல்,
- சித்ரிணி வாசல்,
- பிரம்ம வாசல் என்பவைகளாகும்.

- வெளிப்புற சிவப்பு வட்டம் – சுழிமுனை நாடி வாசல்,
- பச்சைநிற வட்டம் – வஜ்ரநாடி வாசல்,
- மஞ்சள்நிற வட்டம் – சித்ரிணி நாடி வாசல்,
- வெள்ளை வட்டம் – பிரம்மநாடி வாசல்.
இந்த நான்கு நாடிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக உள்கட்டமைப்புடன் கட்டப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஞான வாசல்களாகும். வெளிப்புற வட்டத்தில் அகலமாக சுழிமுனை நாடி வாசல் அமைந்திருக்கும். நன்றாக அதிகாலையில் வரும் அமுதக் காற்றை உறிஞ்சிக் கொள்வதற்காக சுழிமுனை வாசல் அகலமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த இரண்டாவது வாசல் வஜ்ரநாடி வாசல். இது சுழிமுனை வாசலைவிட பாதியளவு குறைவான வாசலாகும். இவ்வாசல் அமுதக்காற்றை திடப்படுத்தி அனுப்பும் வாசலாகும். இது சூரியனின் பிரகாசத்தையும் ரஜோ குணத்தையும் கொண்டது. அமுதக்காற்று இங்கிருந்துதான் வடிகட்டி, வடிகட்டி தூய்மைப்படுத்தி அனுப்பப்படும். அமுதக்காற்றின் திடநிலை அதிகளவு உயர்மின்காந்த ஆற்றல்களை உறிஞ்சி சேமித்துக் கொள்ள உதவியாக இருக்கும். அதற்காகத்தான் வஜ்ரநாடி வாசல் சுழிமுனைக்குள் உள்முகமாய் அமைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த மூன்றாவது வாசல் சித்ரிணி வாசல். இது சத்துவ குணம் கொண்டு வெண்மைநிறத்துடன் காணப்படும். சாதகனுக்கு ஞான சித்தியைக் கொடுக்கும் வாசல் இது. முழுக்க சத்துவ குணத்தால் ஆன இந்நாடி வாசல் வழியே அமுதக்காற்று உள்ளே நுழையும்போது வெண்மை நிறத்தோடு வளைந்து வளைந்து பிரம்மநாடியை நோக்கிப் பயணிக்கும். இதைத்தான் சித்தர்கள் வெண்சாரை பாம்பினைப் போல் அமுதக்காற்று உயர்காந்தப் பிராணனை உயிர் இருக்கும் இடம்நோக்கி எடுத்துச் செல்லும். சித்ரிணி நாடி வாசல் நாதவொலி பிறக்கும் வாசலாகும். இந்த வாசலை அமுதக்காற்று தொடும்போது அங்கே தசவித நாதங்கள் எழும் என்று திருமூலர் மற்றொரு பாடலில் கூறியுள்ளார். அப்பாடல் இதோ :
மணி1 கடல்2 யானை3 வார்குழல்4 மேகம்5
அணிவண்டு6 தும்பி7 வளை8 பேரிகை9 யாழ்10
தணிந்துஎழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே (திருமந்திரம் – 586)
- மணியின் ஓசை,
- கடலின் இரைச்சல் ஓசை,
- யானையின் பிளிறல் ஓசை,
- புல்லாங்குழலின் ஓசை,
- மேகத்தின் முழங்கு ஓசை,
- கையில் அணிந்திருக்கும் வளையலின் ஓசை,
- வண்டின் ரீங்கார ஓசை,
- தும்பி என்ற தட்டானின் ஓசை,
- சங்கின் ஓசை,
- யாழ் இசைக்கருவியின் ஓசை ஆகிய பத்துவித நாதங்களும் சுடராழி தவத்தில் பணிந்து சென்று தன் உயிரை உற்றுப் பார்த்து வருபவர்களை தவிர்த்து மற்றவர்களால் கேட்கவோ,
பார்க்கவோ முடியாது என்பதுதான் திருமூலர் பிரம்மஞானத் தவத்தில் கண்டறிந்த பிரம்மஞானமாகும்.
இந்த தசநாதங்கள் கேட்டபின்புதான், அமுதக்காற்று நான்காவது வாசலான பிரம்மவாசலுக்குள் நுழைய ஆரம்பிக்கும். அப்போது நாம் இருக்கும் இடம் நாலு வாசலின் மையப்புள்ளியில். அதனால் தான் திருமூலர் பிரம்மஞானத் தவத்தில் அமுதக்காற்று பிரம்மவாசலுக்குள் நுழைவதைத்தான் “நாலுவாசல் நடுவுள் இருப்பீர்காள்” என்றார்.
அடுத்த மூன்றாவது வரி “மேலை வாசல் வெளியுறக் கண்டபின்” என்பது. நான்காவது வாசல்தான் மேலை வாசல் எனப்படுவது. இவ்வாசலைத்தான் சொர்க்கவாசல் என்று ஐதீகமாக காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில்தான் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தை நடத்துகிறார்கள். ஏன் மார்கழி மாதத்தில்? மற்ற மாதங்கள் சொர்க்கவாசலுக்கு தகுதியில்லையா? ஏனென்றால், பகவான் கிருஷ்ணன் கீதையில் தான் மாதங்களில் மார்கழி என்று கூறியதாக இருக்குமோ. அதனால் இல்லை.
மார்கழி மாதங்களில்தான் சூரிய மண்டலத்திலிருந்து உயர்மின்காந்த ஆற்றலான அமுதக்காற்று பூமியின் தரைப்பகுதி வரை தாழ்ந்து வந்து தொட்டுக் கொண்டிருக்கும். இந்த அமுதக்காற்றை நாம் எல்லோரும் சுவாசிக்க வேண்டும் ; உறிஞ்ச வேண்டும் ; புசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மார்கழி மாதத்தில் வீட்டு வாசலுக்கு வெளியே வந்து பசுஞ்சாணத்தினால் வாசலைத் தெளித்து அரிசி மாவினால் கோலமிட்டு கோலத்தின் மையப்புள்ளியில் பசுஞ்சாணத்தை பிடித்துவைத்து, அதன்மேல் பூசணிப் பூவை வைப்பார்கள்.
இது முழுக்க முழுக்க பிரம்மஞானத்தை ஒவ்வொரு சக மனிதனும் பெற வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட அறிவியல் ஞானமாகும். இப்போது இதன் உண்மைப் புரியாது இன்றும் கிராமங்களில் மார்கழி மாதங்களில் வாசலுக்கு சாணம் தெளித்து, கோலமிட்டு பூ வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பசுஞ்சாணம் ஒரு கிருமிநாசினி. வாசலில் பசுஞ்சாணத்தை தெளித்து சுத்தப்படுத்தும்போது, சுற்றியுள்ள காற்று மண்டலம் தூய்மையடைந்து விடுகிறது. இப்படி காற்று மண்டலத்தைத் தூய்மைப்படுத்தியபின் பூமிக்கு இறங்கிவரும் அமுதக்காற்றானது விஷமாக மாறாமல் அப்படியே பரிசுத்த அமுதமாக தவழ்ந்து கொண்டிருக்கும். மேலும், பசுஞ்சாணம் அமுதக்காற்றை நன்றாக அதிகநேரம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும். பசுஞ்சாணமும் ஈரம் ; அமுதக்காற்றும் ஈரம். அதாவது இவையிரண்டும் குளிர்ச்சியாக இருப்பதால், ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ஐக்கியமாகிவிடும்.
அதிகாலை 03.00 மணி முதல் அமுதக்காற்றானது இப்பூமியில் எல்லா இடங்களிலும் பரிபூரணமாக நிறைய ஆரம்பித்திடும். அதனால்தான் மார்கழி மாதத்தில் ஆண்கள் அமுதக்காற்றை முழுமையாக கிரகிக்க வேண்டும் என்பதற்காக, பஜனை என்ற பெயரில் உடம்பில் சட்டை இல்லாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடிக்கொண்டு ஊர்முழுக்க பவனி வருவார்கள். நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய ஞானிகள் பாருங்கள்.
மேலும், பெண்கள் திருப்பாவையும் பல ராகங்களைக் கொண்ட கீர்த்தனைகளையும் இந்த மார்கழி மாதத்தில் ஒன்றுசேர்ந்து பாடுவார்கள் ; ஆனந்தக் கூத்தாடுவார்கள். மார்கழி மாதத்தில்தான் அமுதக்காற்று நூறு சதவிகிதம் இப்பூமியை தொட்டுக் கொண்டு கானம் பாட ஆரம்பிக்கும். அமுதக்காற்றுதான் உங்கள் உயிரை வாழ வைக்கும் உணவாகும் என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும் என்பது சந்தேகமாக உள்ளது.
இரண்டு கதவுகளையும் திறந்து வைத்தால்தான், வாசலைத் தாண்டி உள்ளே போகமுடியும். நம் இருவிழி வாசலைத் திறந்தால்தான், சொர்க்க வாசலுக்குள்ளேயே நுழைய முடியும். நம் இருவிழி வாசல் தாண்டிதான் வஜ்ரநாடி வாசலும், சித்ரிணி நாடி வாசலும், பிரம்மநாடி வாசலும் உள்ளது. உங்கள் கதவுகளைத் திறக்காமல் காற்று உள்ளே வரும் என்றால், எப்படி வரும்? வராது. கதவைத் திற காற்று வரட்டும் ; விழியைத் திற அமுதம் பொங்கட்டும்.
அமுதம் பொங்காமல் உயிர் உடலில் நிற்பதில்லை. அமுதம் பொங்க வேண்டும் என்பதைத்தான், மார்கழி மாதத்தில் அமுதக்காற்றை உயிருக்குள் நிறைத்து நிறைத்து வைக்க வேண்டும் என்றும் ; அவ்வாறு நிறைத்து விட்டால், தை மாதத்தில் அமுதமானது பொங்கி வர ஆரம்பித்துவிடும் என்றும் ; இந்நிகழ்வினைத் தான் தை முதல் நாளன்று சூரியனுக்குப் பொங்கல் வைத்து படைத்து நாம் மகிழ்ந்து வருகிறோம். அமுதக்காற்று வருவது சூரிய மண்டலத்திலிருந்துதான். இப்போது புரிகிறதா நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் சொல்லும் பிரம்மஞானம்.
மேலை வாசல் என்பது அண்ணாக்குக்கு மேல் உள்ள வாசல் என்பாரும் உண்டு. இந்த வாசல் பிரம்மரந்திர வாசல் எனப்படும். இவ்வாசல் வழியாகத்தான் அமுதநீரானது தித்திப்புச் சுவையோடு இறங்கிவரும். மேலை வாசல் என்பது பிரம்மரந்திர வாசலல்ல. பரப்பிரம்ம வாசலே மேலை வாசலாகும். அதுவே பரமபத வாசலாகும்.
இவ்வாறு பரப்பிரம்ம வாசலுக்குள் நுழைந்து நம் உயிரை, உயிராற்றலை, உயிரொளியைக் கண்டுவிட்டால் நமக்கு “காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே” என்றாகிவிடும். நம் கனவில்கூட எமன் வரமாட்டான். அதுவே மரணமிலாப் பெருவாழ்வு. ஆதித் தமிழ்ச் சித்தர்கள் கற்றுக் கொடுக்கும் இறவா வாழ்வு – சாகாக் கல்வி.


அமுதக்காற்றை மெய்ப்பொருள் உறிஞ்சுவது அமுதக்காற்றால் உயிரொளி சிவஒளியாவது
ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்
ஞான சற்குரு டாக்டர்.ருத்ர ஷிவதா,
பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!!


